மல்லிகார்ஜுனர்: மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா இங்கு கிடைத்த மல்லிகைப்பூவாலும், அர்ஜுனா மலர்களாலும் இறைவனை பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் "மல்லிகார்ஜுனர்' எனப்படுகிறார்.
சிறப்பம்சம்: பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பதில் சந்தேகமில்லை. அவரது அவதார ஸ்தலமான ஸ்ரீசைலம் மனதிற்கு இதம் தரும் மலைப்பகுதியில் உள்ளது.
ஆந்திராவிலுள்ள ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. இங்குள்ள மல்லிகார்ஜுனருக்கு நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம். சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது. அத்துடன் அம்மனின் 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது. குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் 2000 முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது. நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவன் ஆட்சிபுரிகிறார்.
நந்தியை தன் வாகனமாக்கியதும் இத்தலத்தில் தான். இங்குள்ள மிகப்பிரமாண்டமான நந்தி மிகவும் அழகு வாய்ந்தது. இங்கு சிவன் சன்னதி கீழே இருக்க, பிரமராம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது விசேஷமாகும்.
மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால் கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை பார்ப்பவர்களைக் கவரும். பஞ்ச பாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடம் உள்ளது. மலைப்பாறை ஒன்றின் மீது பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளது. சிவன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் என்பதால், மூலவர் விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீசைலம் - பக்தி ஞானம் உலகப்பற்றின்மை ஆகியவற்றிற்கு புகழ் பெற்றது. ஸ்ரீசைலம் வேதாந்திகள், பரமயோகிகள், சித்தி பெற்ற புருஷர்கள், மகாதவசிகள், இருக்கும் தவஸ்தலமே இப்புண்ணிய ஷேத்திரம் இதற்கு தட்சிண கைலாசம் என்ற பெயரும் உண்டு.
கிருதாயுகத்தில் இரணியனும், திரேதாயுகத்தில் அவதாரபுருஷரான ஸ்ரீ ராமரும் துவாபரயுகத்தில் பாண்டவர்களும் கலியுகத்தில் சத்ரபதி சிவாஜியும், ஆதிசங்கரரும், பூஜைகள் செய்த புண்ணிய ஷேத்திரம்.
ஸ்ரீசைல சிகரத்தை தரிசனம் செய்தால் மறுபிறவி இல்லை. இந்த புண்ணிய தலத்திற்கு ஈடானது எங்கும் என்றும் இல்லையென இதன் புகழ் பரவிக்கிடக்கின்றது.
ஸ்ரீபர்வதம், ஸ்ரீநகரம், ஸ்ரீ கிரி, ஸ்ரீ சைலம் என்ற பெயர்களால் அழைக்கப்படும் இந்த ஷேத்திரம் நல்லமல என்னும் மலைக்காட்டு பகுதியில் (ஆந்திரா கர்நூல் மாவட்டத்தின்) கிருஷ்ண நதிக்கரையில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது. ஸ்ரீபிரம்மராம்பா தேவி பதினெட்டு மஹாசக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்குகிறாள். சித்தி பெறுபவருக்கும், சாமான்ய பக்தருக்கும் அபூர்வமான அனுபவத்தை இந்த ஷேத்திரம் கொடுக்கின்றது.
எல்லா கோயில்களிலும் குளித்து கைகால்கள் கழுவி ஒன்றும் சாப்பிடாமல் கடவுளை தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இங்கு எந்த வித நித்திய கர்மங்களையும் செய்யாமல் மல்லிகார்ஜுனரை தரிசனம் செய்யலாம். இதற்கு தூளி தரிசனம் என்பர். தூய்மையான மனதோடு, சாதி, மத பேதமின்றி மூலவரான ஜோதிர் லிங்கத்தின் தலையை தொட்டு வணங்கலாம். வெறும் தரிசனத்தினாலேயே எல்லாவிதமான சுகங்களையும் பக்தர்கள் அனுபவிப்பார்கள் என்ற பெயரும் புகழினை பெற்றிருக்கும் இறைவன் ஸ்ரீமல்லிகார்ஜுனசுவாமி ஆவார்.
மராட்டிய மன்னர் மாவீரன் சிவாஜி ஸ்ரீசைலம் மலைக்காடுகளில் இயற்கை எழிலைக்கண்டு தன்னை மறந்து இங்கேயே தங்கினார். படைவீரர்களை தெற்கு நோக்கி யாத்திரை தொடங்க உத்திரவிட்டான். ஸ்ரீ மல்லிகார்ஜுனேசுவரரை தரிசித்து 10 நாட்கள் உபவாசம் இருந்து தியானத்தில் ஈடுபட்டான். தீவிர பக்தியாலும் தனது வைராக்கிய மனோபாவத்தாலும் மனைவி மக்களை மறந்து இங்கேயே எஞ்சிய வாழ்க்கையில் கழித்துவிட எண்ணினான். அப்போது அவருடன் இருந்தவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அந்நிலையில் ஸ்ரீ பிரம்மராம்பாதேவி பவானி வடிவத்தில் சிவாஜிக்கு காட்சி தந்தருளி திவ்யகட்கத்தை (பெரிய வாள்) அளித்து கடமை உணர்வை போதித்து, பகைவரை அழித்து வெற்றி யாத்திரையை நடத்திட வாழ்த்தினாள். தனது பக்தியின் நினைவாக இத்தலத்தில் வடக்கு கோபுரத்தையும், தியான மந்திரையும் உருவாக்கி அன்று முதல் பல வெற்றிகள் பெற்று சத்ரபதி சிவாஜி என்ற பெயருடனும் பெருமையுடனும் அழைக்கப்படுகிறார்.
|