திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டுத் தென்கரைத்தலங்களில் இது 50 வது தலம்.
திருவிழா:
ஆவணியில் விதை நெல் தெளிக்கும் விழா.
தல சிறப்பு:
இங்கு சிவன் மேற்கு பார்த்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.ஆண்டுதோறும் பங்குனி 13 முதல் பத்துநாட்கள், மாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படுகிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 13 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
கோயில் எதிரில் சூரிய தீர்த்தம் உள்ளது. இரண்டு பிரகாரத்துடன் ஐந்து நிலை ராஜ கோபுரம். மேற்கு பார்த்த சிவன். கோயிலின் இடது பக்கம் மகா மண்டபம், அர்த்த மண்டம் உள்ளது. இதையடுத்து கருவறையில் நான்கு யுகம் கண்ட பார்வதீஸ்வரர் அருளுகிறார். அம்மன் தெற்கு பார்த்து தனி சன்னதியில் உள்ளார். கோயில் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், மகாலட்சுமி, லிங்கோத்பவர், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நடராஜர், சந்திரசேகரர், சமயக்குரவர்கள், நவகிரகம், பைரவர், சூரியன், சந்திரன், துர்க்கை, அறுபத்து மூவர் ஆகியோர் உள்ளனர். சனிபகவான் தனி சன்னதியில் அருளுகிறார். இத்தல விநாயகர் சம்பந்த விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
ஆண்டுதோறும் பங்குனி 13 முதல் பத்துநாட்கள், மாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது பட்டு பூஜை நடக்கிறது. பார்வதிதேவி காத்யாயன முனிவரின் மகளாக அவதரித்து, இத்தல இறைவனை வழிபட்டு அவருடன் கலந்தாள். பார்வதியம்மை என்றும், "சுயம்வர தபஸ்வினி' என்றும் பெயர் பெற்று, திருமண வரம் தரும் நாயகியாக அருளுகிறாள். சிவபெருமான் இத்தலத்தில் கிராதமூர்த்தி என்னும் பெயரில் வேடன் வடிவில் அருளுகிறார். திருஞான சம்பந்தர் தன் அடியார்களுடன் இப்பகுதிக்கு வந்த போது, வேறொரு மதத்தை சேர்ந்தவர்கள் அவரைத் தடுத்தனர். இதனால் வருந்திய சம்பந்தர், இறைவனிடமே இதுபற்றி முறையிட்டு பாடினார். இறைவனின் கட்டளையால் தடுத்தவர்களின் தலையில் இடி விழுந்தது. ஆனாலும், அவர்கள் திருந்தவில்லை. "சாரிபுத்தன்' என்பவரின் தலைமையில் சம்பந்தருடன் தங்கள் மதமே உயர்ந்தது என்றும், சைவம் தாழ்ந்தது என்றும் வாதிட்டனர். இதை மறுத்து சம்பந்தர் பேசி, அவர்களது வாதத்தை முறியடித்தார். பின்னர் அந்த தரப்பினரும் சைவர்களாக மாறினர்.
அம்பரீஷ ராஜா இத்தல இறைவனை வழிபட்டு குழந்தை பாக்கியம் பெற்றார். இதனால் இத்தல இறைவனுக்கு "ராஜலிங்கம்' என்ற பெயரும் உள்ளது. பல்குணன் வழிபட்டதால் "பல்குணன்' என்றும், சூரியன் வழிபட்டதால் "பாஸ்கர லிங்கம்' என்றும் திருநாமங்கள் உண்டு. இத்தலம் கிருதயுகத்தில் பிரம்மவனம் என்றும், திரேதாயுகத்தில் சமீவனம் என்றும், துவாபர யுகத்தில் ஆனந்தவனம் என்றும், கலியுகத்தில் முக்தி வனம் என்றும் அழைக்கப்படுகிறது.
சோழநாட்டில் சரிவர மழை பெய்யாததால் பஞ்சம் ஏற்பட்டது. மன்னன் இத்தல இறைவனிடம் வேண்டினான். இதையேற்ற சிவபெருமான், பார்வதிதேவியுடன் உழவன் வேடத்தில் வந்து, நிலங்களில் விதை தெளித்துச் சென்றார். பயிர் சிறப்பாக விளைந்து பஞ்சம் நீங்கியது. இறைவனே விதை தெளித்து சென்றதால் இத்தலம் "திருத்தெளிசேரி' ஆனது.
கூவி அழைத்த பிள்ளையார்: சம்பந்தர் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை தரிசித்து விட்டு இத்தலத்தின் வழியாக சென்றார். அவர் இங்கிருந்த கோயிலைக் கவனிக்கவில்லை. உடனே இத்தலத்து பிள்ளையார் சம்பந்தரை பத்து முறை கூப்பிட்டு இங்குள்ள இறைவனை பாடும்படி கூறினார். அதன்பின் சம்பந்தர் பதிகம் பாடினார். பிள்ளையார் பத்து முறை கூவி அழைத்ததால் இத்தலம் "கூவிப்பத்து' எனப்பெயர் பெற்றது. காலப்போக்கில் "கோயில் பத்து' என மாறிவிட்டது.
தல வரலாறு:
சூரியபகவான் தனது துணைவியான சாயா தேவியிடம் அன்பு செலுத்தாத காரணத்தினால், அவள் மிகுந்த வருத்தமடைந்தாள். இதனை நாரதர் மூலம் அறிந்த அவளது தந்தை சூரியனை சபித்து விட்டார். இதனால், சூரியன் தனது ஒளியை இழந்து வருந்தி இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி பார்வதீஸ்வரரை வழிபட்டான். இவனது வழிபாட்டிற்கு மகிழ்ந்த இறைவன் சாபத்தை நீக்கி அருளினார். சூரியன் வழிபட்டதால், இதனை "பாஸ்கரத்தலம்' என்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு சிவன் மேற்கு பார்த்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் பங்குனி 13 முதல் பத்துநாட்கள், மாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படுகிறது.