ராமநாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அனுமன் தன்னலமில்லாத வீரனாக, ராம பக்தனாக திகழ்ந்தார். சீதாப்பிராட்டியை மீட்டு வருவதற்காக அவர் ராமரிடம் எந்தவித பிரதிபலனும் எதிர் பார்க்கவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே வாழ்ந்தார். தெய்வீக குணங்கள் அனைத்தும் அவரிடம் நிறைந்து இருந்தன. யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்கும் வல்லமை பெற்றவர். இவரது பலத்தைப்பற்றி இவருக்கே தெரியாது.
அனுமான் தனது பலத்தைப்பற்றியோ, ராமருக்காக தான் செய்யும் தொண்டைப்பற்றியோ யாரிடமும் பெருமை பேசியது கிடையாது. நான் ராமபிரானின் சாதாரண தொண்டன் தான் என்று பணிவாகவே எப்போதும் கூறுவார். ராமருக்காக சேவை செய்யும் போது மரணமடைய நேரிட்டாலும் அதற்காக பெருமைப்படுவேன் என்று அடிக்கடி கூறுவார்.
ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவனும் அவனது ராஜ்ஜியம் திரும்ப கிடைத்தது. அங்கதன் ராஜகுமாரனாக முடிசூட்டப்பட்டான். விபீஷணன் இலங்கையின் அரசனானான். ஆனால் மிகப்பெரிய சாதனைகளை செய்த அனுமானோ ராமரிடம் எதுவுமே கேட்க வில்லை. சீதை தொடுத்த முத்துமாலையை கூட அனுமான் பரிசாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதையெல்லாம் பார்த்த ராமர், ""நீ எனக்கு செய்த உதவிக்கான நன்றிக்கடனை நான் எப்படி திரும்பச்செலுத்துவேன். நீ சிரஞ்சீவியாக வாழ்வாய். என்னைப் போன்றே எல்லோரும் உன்னையும் வணங்குவர். எங்கொல்லாம் எனது கோயில் இருக்கிறதோ, அந்தக்கோயிலில் எல்லாம் முதலில் உனது சிலை வைக்கப்பட்டு, முதலில் உன்னை வணங்கிய பின்னரே என்னை மக்கள் வணங்கட்டும்'' என்று அருளாசி செய்தார்.
இதையெல்லாம் கேட்ட அனுமான் மிகுந்த பணிவுடன், என் தலைவனே, எனது பெயரை யார் உச்சரித்தாலும், எனக்கென யாராவது கோயில் கட்டி என்னை வழிபட்டாலும் அவர்களுக்கும் தங்களே அனுக்கிரகம் புரிய வேண்டும். இதுவே நான் உங்களிடம் கேட்கும் வரமாகும் என்கிறார். ராமரும் அப்படியே ஆகட்டும் என்கிறார். இதனாலேயே "ராமா' என்று யார் சொன்னாலும் , ஸ்ரீ ராமஜெயம் எழுதினாலும் ஓடி அருள்பாலிக்கிறார் அனுமான். இறைவனிடம் பக்தி மட்டுமே செலுத்தி பிரதிபலன் பாராமல் இருந்தவர் அனுமன். இப்படிப்பட்ட அனுமனைப்பற்றி தெரிந்து கொண்டு, அவரை வழிபாடு செய்வது சிறப்பு.
ராமாயணத்தின் நாயகன் ராமனின் வலதுகையாக திகழ்ந்தவர்அனுமான். இவர் அமாவாசை தினத்தில் அவதரித்தார். எனவே இவரை ஆடி அமாவாசை தினத்தில் வழிபட்டால் பல மடங்கு புண்ணியம் நமக்கு கிடைக்கும். அனுமானை சிவனின் அவதாரம் என கூறுவதுண்டு. இவர் வாயுபகவானுக்கும், ஆஞ்சனாதேவிக்கும் பிறந்தவர். இவருக்கு பவனசுதன், பவனகுமார், மகாவீரர், மருத்சுதன், ஆஞ்சநேயன், பஜ்ரங்கபலி என்ற பெயர்களும் உண்டு.
|