பொதுவாக படிக்கிற குழந்தைகளுக்கு மறதி பெரிய மைனஸ் பாயின்டாக இருக்கிறது. எவ்வளவு படித்தாலும், மறுநாளே மறந்து விடுகிறார்கள். மகரிஷி அகத்தியர் கூட இத்தலத்தில்தான் கற்ற வித்தைகள் மறக்காமல் இருக்க இறைவனை பிரார்த்தித்தார். எனவே, இங்கு குழந்தைகளை அழைத்து வந்து, படித்த பாடங்கள் மறக்காமல் இருக்க இறைவனை வேண்டலாம்.
மேலும் பிரம்மாவும் சரஸ்வதியும் விஜயம் செய்த தலம் இது. எனவே கல்விக்கு தொடர்பான பிரார்த்தனைகளைச் செய்ய ஏற்ற தலமாக இதைக் கருதுகின்றனர்.
பிரம்மாவும், சரஸ்வதியும் இங்கு தவம் புரிந்து சிவனின் நர்த்தனம் கண்டார். எனவேதான் இத்தல இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். வல்லபேஸ்வரர் மீது சுந்தரர் பதிகம் பாடியுள்ளார். மணிமுத்தாறு, வெள்ளாறு நதிகள் இங்கு கூடுவதால் இத்தலத்திற்கு தட்சிணப்பிரயாகை என்ற பெயரும் உண்டு. எமதர்மராஜாவின் பிரதிநிதியான சித்திரகுப்தருக்கு சன்னதி இருப்பது ஒரு சில கோயில்களில் மட்டுமே. அந்த சிறப்பையும் இக்கோயில் பெற்றுள்ளது.
நவக்கிரகத்திற்கு சன்னதி கிடையாது. தனி சன்னதியில் பொங்கு சனீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஏழரை சனி நடப்பவர்கள் பிரதோஷ காலத்தில் நந்தியையும் பொங்கு சனியையும் தரிசித்தால் தோஷம் குறையும் என்பது நம்பிக்கை.
மகாலட்சுமி அவதாரம்: அகத்தியருக்கு கார்த்தியாயனன் என்ற மகன் பிறந்தான். அவனும் தந்தையைப் போல் மிகப்பெரிய ரிஷி ஆனான். அதன்பின் அகத்தியர் தனக்கு ஒரு மகள் வேண்டும் என இங்குள்ள இறைவனை வேண்டினார். இறைவனின் விருப்பப்படி மகாலட்சுமி இங்கு ஓடும் மணிமுத்தாறு நதியில் இருந்த தாமரை மலர் மீது விளையாடுவதை கண்டார்.
அக்குழந்தையை எடுத்து அம்புஜவல்லி என பெயரிட்டு வளர்த்து வந்தார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்த போது, தன் துணைவி இங்கு அம்புஜவல்லியாக வளர்வதை அறிந்து மணம் செய்து கொண்டார். இங்கு விஷ்ணுவுக்கும் சன்னதி உள்ளது.
|