|
சூரியத்தலம்:
நவதிருப்பதி தலங்களில் முதலாவதான இத்தலம் சூரியனுக்குரியது. இங்கு சுவாமி, இந்திர விமானத்தின் கீழ் நின்ற நிலையில் காட்சி தருகிறார். கையில் தண்டம் இருக்கிறது. தலைக்கு மேலே ஆதிசேஷன் குடையாக இருக்கிறார். சுவாமியுடன் தாயார்கள் கிடையாது. பிரகாரத்தில் வைகுந்தவல்லித்தாயார் சன்னதி இருக்கிறது. சித்திரை மற்றும் ஐப்பசி மாத பவுர்ணமியன்று காலையில் சூரிய ஒளி வைகுண்டநாதர் பாதத்தில் விழும். இதற்கு ஏற்றாற்போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடி மரம், பலிபீடம் தென்புறம் விலகியிருக்கிறது. ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
கள்ளனாக வந்த பிரான்: வைகுண்டநாதர் பக்தனான காலதூஷகன் என்ற திருடன், தான் திருடியதில் பாதியை கோயில் சேவைக்கும், மீதியை தான, தர்மங்கள் செய்யவும் செலவிட்டான். ஒருசமயம் மணப்படை என்ற ஊரில், அரண்மனை பொருட்களைத் திருடச் சென்றபோது, அவனுடன் சென்றவர்கள் சிக்கிக் கொண்டனர். காலதூஷகனைத் தேடி அரண்மனை சேவகர்கள் வந்தனர். இவ்வேளையில் இத்தலத்து பெருமாளே, திருடன் வடிவில் அரண்மனைக்குச் சென்றார். மன்னன் முன் நின்றவர், ""மன்னா! நான் திருடியதாக குற்றம் சாட்டுகிறீர்களே! எதற்காக திருடினேன் என்று தெரியுமா? நாட்டில் ஒருவனுக்கு பணப்பற்றாக்குறை இருக்கிறதென்றால், அந்நாட்டு மன்னனின் ஆட்சி சரியில்லை என்றுதான் அர்த்தம். என்னிடம் பொருள் இல்லாததால்தான் நான் திருடினேன். ஆகவே, என்னை என குற்றப்படுத்த முடியாது,'' என்றார். இதைக்கேட்ட மன்னர் திடுக்கிட்டு, ஒரு திருடனால் இப்படி தைரியமாகப் பேச முடியாது எனப்புரிந்து கொண்டு, வந்திருப்பது யார் எனக்கேட்டார். சுவாமி தன் சுயரூபம் காட்டியருளினார். மன்னன் உண்மை அறிந்து மன்னிப்பு வேண்டினான். திருடன் வடிவில் வந்ததாலும், பக்தர்களின் உள்ளங்களை கவரும் அழகுடன் இருப்பதாலும் சுவாமிக்கு, "கள்ளபிரான்' என்ற பெயர் ஏற்பட்டது.
108 போர்வை அலங்காரம்: தை முதல் நாளில் கள்ளபிரானுக்கு, 108 போர்வைகள் அணிவித்து பூஜிப்பர். பின், அவர் கொடிமரத்தைச் சுற்றி வருவார். அதன்பின், ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தைக் கலைப்பர். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களும், இந்நாளில் கள்ளபிரான் வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.
ஆச்சாரியாரின் அழகிய விளக்கம்: நம்மாழ்வார் தனது பாசுரத்தில், ""புளிங்குடி கிடந்து, வரகுணமங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று'' என்று மங்களாசாசனம் செய்துள்ளார்."பசியாக இருக்கும் ஒருவர் சமையல் முடியும்வரையில், படுத்திருந்து காத்திருப்பார். பசி கூடும்போது, ஆர்வத்தில் எழுந்து அமர்ந்து கொள்வார். சமையல் முடிய இன்னும் தாமதமானால் பொறுமையிழந்து எழுந்து நிற்பார். இதைப்போலவே, நம்மாழ்வாருக்கு அருள வந்த பெருமாள், அவர் பக்தியில் உயர் நிலை அடையும் வரையில் முதலில் புளியங்குடியில் கிடந்தும் (படுத்த கோலம்), பின் வரகுணமங்கையில் அமர்ந்தும், இத்தலத்தில் நின்றும் காட்சி தருகிறார்,'' என வைணவ ஆச்சாரியாரான அழகிய மணவாளப்பெருமான், நம்மாழ்வாரின் பாசுரத்திற்கு விளக்கம் சொல்லியுள்ளார்.
நம்மாழ்வார் மங்களாசாசனம்: சித்திரை விழாவின்போது, நம்மாழ்வார் அவரது பிறந்த தலமான ஆழ்வார் திருநகரியிலிருந்து, அத்தலத்து பெருமாள் பொலிந்துநின்றபிரானுடன் இங்கு எழுந்தருளுவார். சுவாமியை மங்களாசாசனம் செய்தபின், அன்ன வாகனத்தில் எழுந்தருளுவார். அவ்வேளையில் கள்ளபிரான், பொலிந்துநின்றபிரான், வரகுணமங்கை வெற்றிருக்கை பெருமாள், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள் ஆகிய நால்வரும் கருட சேவை சாதிப்பர்.
|
|