|
சூரியன் வழிபட்ட தலம். வெளிப்பிரகாரத்தில் விநாயகர், ஆறுமுகர் சன்னதிகள் உள்ளன. பக்கத்தில் தலமரமாகிய பனைமரங்கள் மூன்று உள்ளன. அம்பாள் சன்னதியும் கிழக்கு நோக்கியே உள்ளது. நின்ற திருக்கோலம்.
துவாரபாலகியர் சுதையில் உள்ளனர். துவாரகணபதியையும், தண்டபாணியையும் தொழுது உட்சென்று சத்யாம்பிகையைத் தரிசிக்கலாம். நவக்கிரகம் தொழுது, வலம் முடித்து, கொடிக் கம்பம் வணங்கி, வாயில் நுழைந்தால் சுவாமி சந்நிதியை அடையலாம்.
உள்பிரகாரங்களில் விநாயகர், ஆறுமுகர், சனிபகவான், நவக்கிரகம், சூரியன், 63 நாயன்மார்கள், சப்தமாதர்கள், இடபாரூடர், திருமால், கஜலஷ்மி, நால்வர், பிக்ஷடனர், தெட்சிணாமூர்த்தி, பிரம்மா, இலிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர், நடராஜர், சோமாஸ்கந்தர் முதலிய சன்னிதிகள் உள்ளன. இவற்றுள் திருநீலகண்டர் தம்மனைவியுடன் கூடி, இருவருமாகத் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கும் அமைப்பு மிகவும் அரிதான காட்சியாகும்.
பனையைத் தலமரமாகக் கொண்டுள்ள தலங்கள் ஐந்தனுள் இதுவும் ஒன்று. பிறதலங்களினின்றும் வேறுபாடறிவதற்காக- காடுகளால் சூழ்ந்த பகுதியாக இத்தலம் விளங்கியமையின் (புறவு: சோலை, காடு) "புறவார் பனங்காட்டூர்' என்றழைக்கப்பட்டது. முல்லை நிலக் காடுகளால் சூழப் பெற்று இத்தலம் விளங்கியதால் புறவார் பனங்காட்டூர் என வழங்கப்படுகிறது.
சிபிச்சக்ரவர்த்தி தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காத்தற்காகத் தன் கண்களைப் பறித்தளிக்க, இறைவன் அம்மன்னனின் கடமை உணர்வை அறிந்து காட்சிதந்து இழந்த கண்களை மீண்டும் அருளினார். அதனால் இத்தலத்து இறைவனுக்கு கண்பறித்து அருளிய கடவுள் என பெயர் ஏற்பட்டது.
|
|