பூந்துழாய் முடியாருக்கு பொன்னாழிக் கையாருக்கு ஏந்து நீரிளங் குருகே திருமூழிக் களத்ததாருக்கு ஏந்து பூண்முலை பயந்து என்னினை மலர்கண்கள் நீர் ததும்ப தாம் தம்மை கொண்டகல்தல் தகவன்றென்றுரையீரே.
-நம்மாழ்வார்
திருவிழா:
சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஆறாட்டு. அதற்கு பத்து நாள் முன்பாக கொடியேற்றம். சித்திரை திருவோணத்தை தவிர அனைத்து திருவோணத்திற்கும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. கேரளாவை பொறுத்த வரை ஆடி மாதம் முழுவதும் ராமாயண மாதம் என்பதால் இந்த மாதத்தில் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
தல சிறப்பு:
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 69 வது திவ்ய தேசம்.லட்சுமணனும் பரதனும் சேர்ந்து வழிபட்ட தலமாகும். இத்தலத்திற்கு கோபுரம், மண்டபம் போன்றவற்றை லட்சுமணன் கட்டி பல திருப்பணிகள் செய்துள்ளான்.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில்,
திருமூழிக்களம்-683 572
எர்ணாகுளம் மாவட்டம்,
கேரளா மாநிலம்.
போன்:
+91- 484 - 247 3996
பொது தகவல்:
நான்கு திருக்கரத்துடன் உள்ள இந்த பெருமாள் மேல் இரண்டு கைகளில் சங்கு, சக்கரம், வலது கீழ்க்கையில் கதை, இடது கீழ் கையில் தாமரை மலருடன் இடுப்பில் வைத்த கோலத்தில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரின் விமானம் சவுந்தரிய விமானம். இவரை ஹாரித மகரிஷி தரிசித்துள்ளார். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இங்கு சிவனுக்கு தனி சன்னதி உள்ளது.
பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் திருவோண பூஜை செய்வது சிறந்த பலன் தரும் என்பது நம்பிக்கை. ஒரு வருடத்திற்கு முன்பாகவே திருவோண பூஜைக்கு புக்கிங் செய்ய வேண்டும்.
நேர்த்திக்கடன்:
இவருக்கு சந்தனக்காப்பு செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
கேரளாவின் பிரசித்தி பெற்ற பாரதப்புழா நதிக்கரையில் கோயில் அமைந்துள்ளது. இத்தலம் ஒரு காலத்தில் பெரிய கலாக்ஷேத்திரமாகவிளங்கியிருக்கிறது. "ஸ்ரீஸுஸீக்தி' இங்கு அருளப்பட்டதால் பல வகையான நூல்கள் இங்கு ஆராயப்பட்டன. இதனால் கற்றறிந்த பெரியோர்கள் குழுமியிருந்த கல்வி மாநகரமாகவும், கலை நகரமாகவும் இத்தலம் சிறப்புற்றிருந்தது. ராமன் வனவாசம் செல்லும்போது சித்திர கூடத்தில் தங்க நேரிட்டது. அப்போது அயோத்திக்கே ராமனை மீண்டும் அழைத்து செல்ல பரதன் அங்கு வந்தான். இதைக்கண்ட லட்சுமணன், ராமனுடன் போர் செய்யவே பரதன் வருவதாக நினைத்து, அவனை கொல்ல முயற்சிக்கிறான் . இது தவறு என்பதை உணர்ந்த லட்சுமணன், தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்து பெருமாளிடம் அடிபணிந்து நின்றதாகவும், அப்போது பரதனே வந்து லட்சுமணனை ஆரத்தழுவி இன்சொல் கூறியதாகவும், இதனால் இத்தலம் "திருமொழிக்களம்' ஆனதாகவும் கூறுவர்.
தல வரலாறு:
கிருஷ்ண பகவான் துவாரகையில், ராமன், லட்சுமணன், பரதன், சத்ருகனன் என்ற 4 விக்ரகங்களை பூஜித்து வந்தார். ஒரு முறை இப்பகுதி தண்ணீரில் மூழ்கிய போது, வாக்கேல் கைமல் முனிவர் என்பவரிடம் இந்த விக்கிரகங்கள் கிடைத்தது. அன்றிரவு இவரது கனவில் தோன்றிய பகவான், இந்த விக்கிரகங்களை பாரதப்புழா ஆற்றின் கரையோர தலங்களில் பிரதிஷ்டை செய்ய கூறினார்.
இத்தலங்கள் தான் திருச்சூர் மாவட்டம் திருப்பறையார் ராமர் கோயிலாகவும், இரிஞ்சாலக்குடாவில் பரதன் கோயிலாகவும், பாயமல்லில் சத்ருக்கன் கோயிலாகவும், எர்ணாகுளம் மாவட்டம் திருமூழிக்களத்தில் லெட்சுமணப்பெருமாள் கோயிலாகவும் அமைந்துள்ளது.
கேரளாவில் உள்ள பெருமாள் கோயில்களில் லெட்சுமணப்பெருமாள் என்ற திருநாமத்துடன் அருள்பாலிப்பது இங்கு மட்டும் தான்.
இத்தலம் குறித்து இன்னொரு வரலாறும் உண்டு.
முன்னொரு காலத்தில் ஹரித மகரிஷி என்பவர் இத்தலத்தில் பெருமாளை குறித்து தவமிருந்தார். இவரது தவத்தில் மகிழந்த பெருமாள் வேண்டும் வரம் கேள் என்றார். அதற்கு மகரிஷி,""பெருமாளே! இந்த உலக மக்கள் அனைவரும் உன்னை வந்து அடைவதற்கான எளிய வழிமுறையை கூறுங்கள்,''என்றார்.
அதற்கு பெருமாள்,""மகரிஷியே! மக்கள் அனைவரும் அவரவர்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கேற்ப (வர்ணாசிரம தர்மப்படி) எளிதில் என்னை அடைவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய பூஜை நெறிமுறைகளை போதிக்கும் "ஸ்ரீ ஸுக்தியை' (திருமொழியை) இந்த தலத்தில் உங்களுக்கு வழங்குகிறேன்,'' என்றார்.
எனவே தான் இத்தலம் திருமொழிக்களம் என்றும், பெருமாள் திருமொழிக்களத்தான் எனவும் வழங்கப்படுகிறது. இதுவே காலப்போக்கில் திருமூழக்களம் ஆனது.