விஜயவாடா ஒரு காலத்தில் மலைகள் நிறைந்த பகுதியாக இருந்தது. இவை கிருஷ்ணா நதியின் போக்கை தடுத்துக்கொண்டிருந்தன. மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். கண்ட கண்ட இடங்களில் வெள்ளம் புகுந்தது. அவர்கள் இத்தல துர்க்கையிடமும், சிவனிடமும் முறையிட்டனர். இறைவன் அந்த மலையைக் குடைந்து நதிக்கு வழிவிட்டதால் இந்த பகுதி பெஜ்ஜவாடா என அழைக்கப்பட்டது.பெஜ்ஜம் என்ற தெலுங்கு வார்த்தையின் பொருள் குகை. பின்பு விஜயவாடா என திரிந்து விட்டது. இந்த நதிக்கரையில் மருத்துவ குணமுடைய மூலிகை செடிகள் வளர்ந்ததால் பிஜபுரி என்றும் அழைக்கப்பட்டது.
பிரார்த்தனை
அன்னை கனக துர்காவை வணங்கினால் அவளது ஆசியால் பொன்மழையே பொழியும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
அன்னைக்கு தங்க அரளியால் மாலை சாற்றி வழிபாடு செய்கின்றனர்.
தலபெருமை:
ஆந்திராவின் காவல் தெய்வமாக விஜயவாடா கனக துர்கா விளங்குகிறாள். துர்கா தேவி மகிஷாசுரனை அழித்த சந்தோஷத்தில் இத்தலத்தில் தங்க மழை பொழிய செய்ததால், கனக துர்கா என்ற பெயர் பெற்றாள். சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில் நவராத்திரி மிகச்சிறப்பாக கொண்டாடப் படுகிறது. கனக துர்காதேவியின் எட்டு கைகளில் எட்டு ஆயுதங்கள் உள்ளன. நவராத்திரி இங்கு கோலாகலமாக கொண்டாடப்படும். பாலதிரிபுர சுந்தரி, காயத்ரி, அன்னபூரணி, மகாலட்சுமி, சரஸ்வதி, லலிதா திரிபுரசுந்தரி, துர்கா தேவி, மகிஷாசுர மர்த்தினி, ராஜராஜேஸ்வரி ஆகிய அலங்காரங்களில் அன்னை காட்சி தருவாள்.விஜயதசமி அன்று அன்னையை அன்னப்படகில் கிருஷ்ணா நதியில் பவனி வரச் செய்வார்கள். இந்த விழாவிற்கு நவுக விஹாரம் என்று பெயர்.
தல வரலாறு:
கீலா என்ற அசுரன் துர்க்கையின் அருள் வேண்டி தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த துர்க்கை காட்சி கொடுத்து, வேண்டும் வரம் கேள் என்றாள். அன்னையே! நீ எப்போதும் என் இதயத்திலேயே வாசம் செய்ய வேண்டும், என வரம் கேட்டான். கீலாவின் வேண்டுகோளை ஏற்ற துர்க்கை, மகனே! நீ கிருஷ்ணா நதிப்படுகையில் மலையாக உயர்ந்து நில், அரக்கர்களை அழித்த பின் நான் உன் இதயத்தில் இருப்பேன், என வரமளித்தாள்.துர்க்கையின் ஆணைப்படி, கீலா மலையாக மாறினான். அன்னை துர்கா, மகிஷாசுரன் என்ற அரக்கனை வதம் செய்தபின், கீலா மலைமீது அஷ்டகரங்களுடன் மகிஷாசுரமர்த்தினி என்ற திருநாமத்துடன் வாசம் செய்தாள். இந்த மலை மீது கோடான கோடி சூரியன்கள் பிரகாசிப்பதைப் போன்று, அன்னை துர்கா பொன்னாக ஜொலித்தாள். தங்க மழையும் பொழியச்செய்து அத்தலத்தை செழிப்பாக்கினாள். அன்று முதல் கனக துர்கா என்ற பெயரில் தேவர்கள் அவளைப் பூஜித்து வந்தனர். இத்தலத்தின் புனிதத்தை அதிகரிக்க அஸ்வமேத யாகம் நடத்தப்பட்டது. பிரம்மா இத்தலத்தில், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தார். அவருக்கு மல்லேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. அர்ஜுனன் இத்தலத்தில் தவம் செய்து, சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தை பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:அம்மனின் 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. ஆதிசங்கரர் இத்தலத்திற்கு விஜயம் செய்து அம்பாள் சன்னதியில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்திருப்பது சிறப்பு.