|
மும்மூர்த்தி அம்ச முருகன்: மூலஸ்தானத்தில் முருகன் அசுர மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவரது சிலை திருவாசி, மயிலுடன் ஒரே கல்லில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. உடன் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர்.
கந்தசஷ்டிக்கு மும்மூர்த்தி அலங்காரம்: ஐப்பசியில் சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் காலையில் முருகன் சிவப்பு வஸ்திரம் அணிந்து (சிவப்பு சாத்தி)நடராஜராகவும், மதியம் வெள்ளை (வெள்ளை சாத்தி) வஸ்திரத்துடன் பிரம்மாவாகவும், மாலையில் பச்சை (பச்சை சாத்தி) வஸ்திரம் அணிந்து விஷ்ணு சொரூபமாகவும் காட்சி தருவார்.
மக்களைக் காணும் மகேசன்: விமோசனம் கேட்டு தன்னை வழிபட்ட உச்சைசிரவஸுக்கு, சிவனே பாவ விமோசனம் கொடுத்தருளியிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல் முருகனை வழிபடும் படி அதை அனுப்பி வைத்தார். தன் அம்சமான முருகனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதற்காக சிவன் இவ்வாறு செய்ததாகச் சொல்வர். இதனால் இத்தல முருகனை சிவனாகக் கருதி சிவமுருகன் என்று அழைக்கிறார்கள். சிவனுக்குரிய ஆகமப்படியே பூஜைகளும் நடக்கிறது. கந்தசஷ்டி திருவிழா இங்குவிசேஷம். முருகனுக்கு குதிரை வாகனம் உள்ள விசேஷத்தலம் இது.
சோறூட்டும் வைபவம்: பிறந்த குழந்தைக்கு முதல் அன்னம் ஊட்டும் வைபவம் இக்கோயிலில் அதிகளவில் நடக்கிறது. இந்த சடங்கை நிகழ்த்த வரும் பக்தர்கள், சுப்பிரமணியருக்கு புளிசாதம், வெண்சாதம், சர்க்கரை பொங்கல், உப்பு, புளி, மிளகாய் சேர்ந்த துவையல் என அறுசுவை உணவைப் படைத்து, குழந்தைக்கு ஊட்டுகின்றனர். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு மருங்கில் (நெருங்கி) வந்து அருள்பவர் என்பதால், இவ்வூர் மருங்கூர் என பெயர் பெற்றது. இத்தலத்திற்கு வாசிபுரம் என்றும் பெயருண்டு. வாசி என்றால் குதிரை. பிரகாரத்தில் கன்னி விநாயகர், சண்முகர், குலசேகர விநாயகர், பீட வடிவில் காவல் தெய்வம் பூதத்தான் மற்றும் காசிலிங்கம் சன்னதிகள் உள்ளன. கோயில் எதிரில் முருக தீர்த்தம் உள்ளது. உற்சவர் சண்முகர், கந்தசஷ்டி விழாவின்போது மட்டுமே புறப்பாடாவார். மற்ற நாட்களில் இவரை சன்னதிக்குள் மட்டுமே தரிசிக்க முடியும்.
|
|