இத்தலம் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று. மேலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. இங்குள்ள மூலவர் சுயம்புவாகத் தோன்றியவர். அம்மன் ஈசனின் இடப்பாகம் பெற்ற தலம்.
திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
பரிவார மூர்த்திகள் பைரவர், பிள்ளையார், நந்தி, பாண்டவர்கள், கண்ணன், ஆதிசங்கரர், மாருதி, ஈசாணிஸ்வரர் விஷ்ணு, கார்த்திகேயன், அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். யாத்திரைக்கு ஏற்ற காலம்: இக்கோயில் வருடந்தோறும் ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் போது (அதாவது புத்தாண்டு தினத்தன்று) பொது ஜன தரிசனத்திற்காக திறப்பார்கள். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கோயில் திறந்திருக்கும். அதன் பின்னரே தீபாவளியை ஒட்டி கோயில் நடை அடைக்கப்படுகின்றது. பின்னர் ஆறு மாத காலம் இமயமலையின் கடும் குளிர் காரணமாக இக்கோயில் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுவிடும். எனவே, பொதுவாக கேதார் யாத்திரை புறப்படும் முன்னர் அங்குள்ள சீதோஷ்ணம், கோயில் திறப்பு போன்ற விபரங்களை நன்கு தெரிந்த பின்னர் யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.
கேதார்நாத் திருக்கோயில் தீபாவளியை ஒட்டி, கோயில் மூடப்படும் முன்னர் கோயிலுக்குள் மிகப்பெரிய நெய் விளக்கு ஏற்றப்படும். பின்னர் நடை மூடப்படும். அதன் பின்னர் ஆறு மாதங்கள் கழித்து ஏப்ரல் மாதத்தில் பனிக்கட்டிகளை அகற்றி கோயிலை திறக்கும் பொழுது கோயிலில் உள்ள விளக்கு அணையாமல் எரிந்துகொண்டிருக்கும். இந்த அற்புதக்காட்சிகளை காண ஏராளமான அளவில் பக்தர்கள் கேதார்நாத் நோக்கி வருவது வழக்கம். இக்கோயில் சம்பிரதாயப்படி ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மனிதர்களுக்காகவும், பனி மூடியிருக்கும் காலத்தில் தேவர்கள் வழிபடுவதாகவும் ஐதீகம். முன்பு கேதாரநாதம் நமது நாட்டின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் வடகோடி இமயமலையில் இருந்த நந்ததேவி சிகரத்தில் சுமார் 3583 மீட்டர் (11750 அடி) உயரத்தில் உள்ளது. சிவபெருமான் விரும்பியிருக்கும் புனித தலம். தற்போது புதிய உத்ராஞ்சல் மாநிலத்தில் உள்ளது.
பிரார்த்தனை
பிரார்த்தனை நிறைவேற இங்கு வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
சிவபெருமான் விரும்பியிருக்கும் புனிததலம் கேதார்நாத். கவுரி குண்ட்-ல் உள்ள அக்னி குண்டத்தில் (வெந்நீர் ஊற்று) நீராடிய பின்னரே 14 கி.மீ. மலைப்பாதையில் பயணிக்க வேண்டும். கார், பஸ், வேன்கள் யாவும் கவுரி குண்ட் வரை மட்டுமே செல்ல முடியும். திருமால் நரநாராயணராக இங்கே தவம் செய்து சிவபெருமானை ஜோதிர்லிங்கமாக இத்தலத்தில் எழுந்தருளச்செய்தாராம். இது அத்தகைய புனித தலம். ஸ்ரீஆதிசங்கரர் இக்கோயிலை திருப்பணி செய்து உலகறிய சிறக்கச்செய்துள்ளார். ஆதிசங்கரர் சுவாமிகள் கேதார்நாத் தரிசனம் செய்து முடித்த பின்னர் தான் வாழ்ந்தது போதும் என்று முடிவுசெய்து, இங்கு சிவபெருமானை வேண்டிக்கொண்ட பின்னர் தன்னை இனிமேல் யாரும் பின்தொடர வேண்டாம் என்று இக்கோயிலின் பின் வழியாக உள்ள இமயமலையின் சிகரம் வழியாக சொர்க்கத்தை (இறைவனடி) அடைந்தார் என்று கூறப்படுகின்றது.
அதுபோல இங்குதான் பாண்டவர்கள் பிறந்து வளர்ந்ததாகவும், சில காலம் வாழ்ந்ததாகவும் கேதார்நாத் கோயிலின் பின்புறம் உள்ள வழியில் பாண்டவர்கள் திரௌபதியுடன் சொர்க்கம் சென்றதாகவும் கூறுகின்றனர். அர்ச்சுனன் தவம் செய்து சிவபெருமானிடம் பாசுபதாஸ்வரம் பெற்றதும் இத்தலமே. இராவணன் தவம் செய்து கயிலாய மலையை தூக்க முயன்று முடியாமல் உயிர்பிழைத்து தப்பிய இடம் இத்தலமே ஆகும்.
இமயமலை - கேதார்நாத்தில் சிறு ஓடையாக உருவாகும் மந்தாகினி என்ற நதியும், பத்ரிநாத்தில் உருவாகும் அலக்நந்தா என்ற நதியும், ருத்ர பிரயாக் என்ற இடத்தில் கலந்து பல்வேறு நதிகளை இணைத்து, ஹரித்துவாரில் கங்கையாக ஓடுகின்றது. புனித கங்கா என்ற ஒரு பெயரில் இந்தியாவில் கவுரி குண்ட் -டிலிருந்து கேதார்நாத் வரை செல்லும் 14 கி.மீ. மலைப்பாதையில் பசுமையான காடுகளும், நீர் வீழ்ச்சிகளும் மற்றும் ஆல்பைன் மரங்களும் நிறைந்து காணப்படுகின்றது. பல நீரோடைகளும் நதிகளும் கேதாரிலிருந்து மந்தாகினி நதியாக பெருக்கெடுத்து ஓடுகின்றது. சிவ அஷ்டோத்திரம், சிவநாமாவளி, சிவசகஸ்ர நாமம் ஆகியவை நடத்தலாம். பூஜைக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. தரிசனம் செய்ய கட்டணம் ஏதும் இல்லை. இது தவிர பக்தர்கள் மூலவருக்கு நெய் அபிஷேகம் செய்து கேதார்லிங்க வடிவில் உள்ள சிவனை வணங்கி தழுவிக்கொள்கின்றனர்.
இமயமலையில் இத்தலம் உள்ளதால் யாத்திரை செய்யவும், இறைவன் தரிசனத்திற்கும் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இமயமலையில் யாத்திரை செய்யும்போது மக்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. இங்குள்ள கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டது. பாண்டவர்கள் வைணவர்கள். வைணவர்கள் சிவன் கோயில் கட்டி சிவபெருமானை வழிபட்டது. மத ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக் காட்டு ஆகும். இத்தலத்தில் சிவலிங்கம் மற்றெந்தத் தலத்திலும் இல்லாத ஒன்றாக, முற்றிலும் மாறுபட்டதாக ஒரு முக்கோண வடிவில் உள்ள பாறை. சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. ஜோதிர்லிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர். கேதார் நாத் கோயிலில் பல சிற்பங்கள் உள்ளன. பக்தர்கள் அதனைத் தரிசித்து மகிழ்ச்சி அடைகின்றனர். ஆதி சங்கராச்சாரியார் இக்கோயிலைத் திருப்பணி செய்து சிறக்கச் செய்துள்ளார். அவரது கோயிலும் இங்கே உள்ளது. கேதார் நாதம் போகும் வழியில் பல புண்ணியத் தலங்களும், புனிதத்தீர்த்தங்களும் உள்ளன. அவைகளைத் தரிசனம் செய்தவர்கள் புனிதம் அடைகின்றார்கள். இங்கே பல அடி உயரத்தில் பனிபடர்ந்த மலையில் இரண்டு வெந்நீர் ஊற்றுக்கள், பக்தர்களுக்காகவே உண்டாக்கியதுபோல இருப்பது மிகவும் அதிசயமான ஒன்றாகும். ஆதிசங்கரரும் இவ்வழியே தான் சுவர்க்கம் சென்றார். அவர் தாபித்த சக்திபீடம் இங்கே உள்ளது என்கின்றனர்.
இராவணன் தவம் செய்து, கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமல் உயிர் பிழைத்து தப்பிய இடம் இத்தலமே ஆகும். இத்தலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஓர் இடத்தில் பரசுராமருடைய கோடாலி உள்ளது. பொதுவாக இமயமும், வனப்பகுதியும் பக்தர்கள் மனங்கவரும்படியாகவும், அவர்கள் பக்தியுணர்வை மேலும் வளர்க்கக் கூடியதாகவும் உள்ளது.
பிரம்ம கமலம் எனும் அபூர்வ தாமரைப் பூக்களைக் கொண்டு இவருக்கு அர்ச்சனை செய்வது விசேஷமான ஒன்று! யாத்திரீகர்கள் கங்கோத்ரியில் இருந்து கங்கை நீரையும், யமுனோத்ரியில் இருந்து யமுனை தீர்த்ததையும் கொண்டு சென்று கேதாரநாதருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
தல வரலாறு:
மகாபாரத போரில் பல்வேறு வீரர்களைக்கொன்று குவித்து வெற்றி பெற்ற பாண்டவர்கள் பாப விமோசனம் பெறுவதற்காக சிவபெருமானை வேண்டி வாரணாசி செல்கின்றனர். அங்கே அவர் இல்லையென்றும் இமயமலையில் வாழ்வதாகவும் கேள்விப்பட்ட பின்னர் இமயமலையை நோக்கி வருகின்றனர். அப்போது இமயமலை காடுகளில் சிவபெருமானை தேடி பாண்டவர்கள் அலைகின்றனர். பின்னர் இளைப்பாறும்போது சிவபெருமான் அசரீரி வாயிலாக தான் மனித உருவிலோ அல்லது தெய்வமாகவோ காட்சிதரமுடியாது என்றும், முடிந்தால் தன்னை கண்டுபிடிங்கள் என்றும் சிவபெருமான் கூறி மறைந்தார். பின்னர் மிக உயரமான கேதார் சிகரத்தின் காடுகளில் திரிந்தபோது காட்டில் ஏராளமான எருமைகள் மேய்வதை பாண்டவர்களில் பலசாலியான பீமன் கண்டார். அதில் ஒரு எருமையின் முன் கால்களில், ஒரு காலில் மட்டும் சலங்கை கட்டியிருந்ததை கண்டு, அந்த எருமை தான் சிவபெருமானாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து ஓடிச்சென்று எருமை உருவில் இருந்த சிவபெருமானை தொட்டு வணங்கினார். ஆனால் சிவபெருமான் எருமை உருவத்திலிருந்து பூமிக்குள் நுழைந்தார். பீமன் எருமையை தொட்டு நிறுத்தியதால் எருமை உருவின் முதுகு பகுதி மட்டும் பூமியின் மேல் பகுதியில் அசையாமல் நின்று விட்டது. எனவே கேதார்நாத்தில் எருமை உருவில் சிவபெருமானின் முதுகு பகுதியை மட்டும் தரிசிக்கலாம். பின்னர் அசரீரி மூலம் கேதார்நாத்தில் தனது முதுகு பகுதியை இங்கு தரிசிக்கலாம் என்றும், பஞ்ச பாண்டவர்கள் மோட்சம் பெற நேபாளில் உள்ள பசுபதி நாத்தில் பஞ்சமுகங்களுடன் காட்சியளிப்பதாகவும் கூறி மறைந்தார். பின்னர் பாண்டவர்கள் பசுபதி நாத்தில் சிவபெருமானை தரிசித்த பின்னர் கேதார்நாத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு கோயிலாக கட்டி உலகிற்கு அர்ப்பணித்தனர். தற்போதுள்ள கேதார்நாத் கோயில் முதல் முதலாக பாண்டவர்களால் கட்டப்பட்டது என்றும், அதன் பின்னர் ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் திரௌபதியுடன் பாண்டவர்கள் கேதார் தரிசனத்திற்கு பின்னர் இமயமலை வழியாக சுவர்க்கம் நோக்கி சென்றனர் என்று வரலாறு கூறுகின்றது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தலம் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று. மேலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. இங்குள்ள மூலவர் சுயம்புவாகத் தோன்றியவர்.
இருப்பிடம் : திருச்சி - சென்னை-315 கி.மீ., சென்னை - டெல்லி- 2184 கி.மீ., டெல்லி - ஹரித்துவார்- 205 கி.மீ., ஹரித்துவார் - ரிஷிகேஷ்- 24 கி.மீ., ரிஷிகேஷ் - கவுரிகுண்ட்- 215 கி.மீ., கவுரிகுண்ட் - கேதார்நாத்- 14 கி.மீ. (மலை வழி) இமயமலையில் உள்ள கேதார் நாதத்திற்கு வாயிற்படிபோல அமைந்த ஹரித்வார், ரிஷிகேசம் வழியாகச் செல்ல வேண்டும். ஹரித்வாரிலிருந்து கேதார் நாதம் மலைமேல் 260 கி.மீ. ரிஷிகேசிலிருந்து கேதார் நாதம் 230 கி.மீ. தூரம் உள்ளது. இதில் 216 கி.மீ. உள்ள கவுரி குண்டு என்று கூறப்படும் இடம் வரையே பேருந்து சாலை. கவுரி குண்டிலிருந்து 14 கி.மீ. மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். மட்டக் குதிரையில் செல்லலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
ரிஷிகேஷ்
அருகிலுள்ள விமான நிலையம் :
டெல்லி
தங்கும் வசதி :
கேதார்நாத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்குச் செல்லலாம்.