காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு விநாயகர் திருக்கோயில்
லென்யாடிரி, புனே.
பொது தகவல்:
மலை மீதுள்ள கோயிலுக்குச் செல்ல 307 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். வெண்யாத்ரீ பர்வதத்தில் பதினெட்டு குகைகள் உள்ளன. விநாயகரது கோயில் எட்டாவது குகையில் அமைந்துள்ளது. அவை கணேஷ் குகைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆலயம் ஒரே கல்லில் குடையப்பட்டுள்ளது.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள விநாயகரை வழிபட்டுச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
வெண்யாத்ரீ பர்வதத்தில் பதினெட்டு குகைகள் உள்ளன. விநாயகரது கோயில் எட்டாவது குகையில் அமைந்துள்ளது. அவை கணேஷ் குகைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆலயம் ஒரே கல்லில் குடையப்பட்டுள்ளது. தென் திசையை நோக்கி வாயில் உள்ளது. கர்பகிரகத்தின் முன் சபாமண்டபம் நிறுவப்பட்டுள்ளது. ஐம்பத்து மூன்று அடி நீளமும் ஐம்பத்தியொரு அடி அகலமும் கொண்ட இந்த மண்டபத்தைத் தாங்க ஒரு தூண்கூட அமைக்கப்பட வில்லை என்பது வியப்பான செய்தி ! ஆலய குகைக்குள் பதினெட்டு சிறு அறைகள் தியானத்திற்காக வடிக்கப்பட்டுள்ளன. நடு அறையில் விநாயகர் சிலை உள்ளது. திருமேனி கிழக்கு திசை நோக்கி உள்ளது. பார்வதி தவமிருந்தபோது வைத்த இந்த உருவம், பூமியில் புதைந்த நிலையில் உள்ளது. எனவே பிரதட்சணம் செய்ய இயலாது தலை திரும்பிப் பார்க்கும் நிலையில் ஒரு கண் பக்காவாட்டில் தெரிவதுபோல் வடிவம் அமைந்துள்ளது.
வெண்யாத்ரீ குகடி என்ற நதிக்கரையிலிருந்து சற்று தள்ளி அமைந்துள்ளது. கணேச புராணத்தில் இவ்விடம் வீர்னார்பூர் அல்லது லேக்கன் பர்வதம் என்ற பெயரில் விவரிக்கப்பட்டுள்ளது. பூனேயிலிருந்து சுமார் நூறு கி.மீ. தொலைவில் உள்ளது. பஞ்சாமிர்த பூஜை இங்கு தினந்தோறும் நடத்தப்படுகிறது. அமைதி நிலவும் இடம். தியானத்திற்கு ஏற்ற ஆலயம். மூர்த்தி குகைப்பாறையில் புதைந்திருப்பதால் அலங்கார வழிபாடுகள் இல்லை. மின்விளக்குகள் கிடையாது. உதயம் முதல் அஸ்தமனம் வரை, சூரியனே தன் கிரணங்களால் இக்கோயிலுக்குப் போதுமான ஒளியை அளிக்கிறான் என்பதே, இக்கோயிலின் பெருமைக்கு சான்று.
தல வரலாறு:
பிரபஞ்சத்தின் தலைவியான மாய ரூபிணியும் ருத்ரரின் அழகிய மனைவியுமான கிரிஜா தவமிருந்து இறுதியில் கஜானனைப் புதல்வனாக அடைந்தாள். லோக்நாத்ரி அல்லது லெண்யாத்ரீ பர்வதத்தில் வீற்றிருக்கும் விநாயகரே, உமக்கு எந்து வந்தனங்கள் ! கிரிஜா என்பது பார்வதியின் மறுபெயர். ஆத்மஜ் என்ற சொல் புதல்வனைக் (விநாயகரைக்) குறிக்கும். அஷ்ட விநாயகர் கோயில்களுள் பெரிய மாலையில் அமைந்துள்ள ஒரே வெண்யாத்ரீ கிரிஜாத்மஜ். புத்தர் குகைகளும் அருகில் உள்ளன. மலையில் ஏற 307 படிகள் உள்ளன. படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழிலையும் தன்னகத்தே வைத்து வித்தைகளுக்கும் அதிபதியாகத் திகழும் கஜானனைத் தன் மகனாகப் பெற பார்வதி ஆசைப்படுகிறாள். விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள வெண்யாத்ரீ என்ற பர்வதத்தில் அமர்ந்து பன்னிரண்டு வருடங்கள் கோரதவம் புரிகிறாள். இறுதியில் தேவிக்கு காட்சி அளித்த விநாயகர், அவள் எண்ணம் விரைவில் ஈடேறும் என்று ஆசி அளிக்கிறார். பாத்ரபத சுத்த சதுர்த்தியன்று பார்வதி தன் உடலில் கூடிய புழுதியுடன் மண்கலவையையும் சேர்ந்து தவமிருந்து கண்ட விநாயகரின் வடிவை அமைக்கிறாள். விதிப்படி அந்த விக்ரகத்திற்கு பூஜாபிஷேகங்களை நிறைவேற்றுகிறாள். திடீரென அந்த விக்ரகம் உருப்பெற்று எழுகிறது. உங்கள் விருப்பப்படி உங்கள் மகனாக நான் அவதரித்திருக்கிறேன் என்று கூறி தேவி பார்வதியை விநாயகர் வணங்கினார். பதினோராம் நாள் குணேஷ் என்ற நாமத்தை அந்தப் பாலகன் பெறுகிறான். ஸ்த்வ, தம, ரஜ என்ற மூன்று குணங்களை தன் ஆளுமையின் கீழ் வைத்திருப்பவனே குணேஷ், (கணேஷ்) எவர் ஒருவர் காரியத்தைத் தொடங்கும் முன் கணேசனை தியானிக்கிறாரோ அவர் காரிய சித்தி அடைவார் என சிவபெருமானும் புதல்வனுக்கு ஆசி அளிக்கிறார். பதினைந்து வருடங்கள் விநாயகர் வெண்யாத்ரீ பர்வதத்தில் இருந்து பல லீலைகள் புரிந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவரது ஏழாவது வயதில் கவுதம முனிவர் இவ்விடத்தில் அவருக்கு உபநயனம் புரிவிக்கிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள மூலவர் சிலை ஒற்றை கல்லினால் ஆனது.
இருப்பிடம் : புனே நாசிக் ரோட்டிலிருந்து சக்கன், ராஜகுருநகர், மான்சார் வழியாக லென்யாடிரியை அடையலாம். ஜுன்னரிலிருந்து லென்யாடிரி 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
புனே
அருகிலுள்ள விமான நிலையம் :
புனே
தங்கும் வசதி :
புனேவிலிருக்கும் தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்கு சென்று வரலாம்.