சக்தியின் வடிவமாகத் திகழும் வேப்ப மரமும், சிவ வடிவமாக விளங்கும் வில்வ மரமும் ஒன்றோடு ஒன்று பிணைந்தபடி காட்சி தருவது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.
திறக்கும் நேரம்:
காலை 5 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு, இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வண்புகழ் நாராயணப் பெருமாள் திருக்கோயில், கண்டரமாணிக்கம்,சிவகங்கை மாவட்டம்.
பொது தகவல்:
இந்த கோயிலில் ஆகாசக் கருப்பர் சன்னதியும் விசேஷம். மேற்கூரை இல்லாமல் ஆகாயத்தைப் பார்த்தபடி வெட்டவெளியில் சன்னதியுடன் காட்சிதரும் ஆகாசக் கருப்பரை வணங்கினால், பில்லி-சூனியம் முதலான ஏவல்களில் இருந்தும், எதிரிகள் தொல்லையில் இருந்தும் விடுபடலாம். மேலும், சக்தியின் வடிவமாகத் திகழும் வேப்ப மரம், சிவ வடிவமாக விளங்கும் வில்வ மரம் ஆகியவை ஒன்றோடு ஒன்று பிணைந்தபடி காட்சி தருவது சிறப்புக்கு உரிய ஒன்று எனப் போற்றுகின்றனர்.
பிரார்த்தனை
இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள், வம்பய்யாப் பெருமாளிடம் வேண்டிக் கொண்ட பின்பே வயலில் விதைக்கின்றனர். அறுவடை ஆனதும் விளைகிற முதல் நெல், காய்கறி என விளைபொருள் எதுவானாலும் அதை வம்பய்யாவுக்குக் காணிக்கையாக வழங்குகின்றனர். புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள இறைவனுக்கு நெல், காய்கறிகளை காணிக்கையாக கொடுத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
பாம்பு, தேள், பூச்சி எனக் கடித்தாலோ அல்லது கடிப்பது போல் கனவு கண்டாலோ வண்புகழ் நாராயணப் பெருமாளை வந்து தரிசித்தால், விஷக்கடி நீங்கும்; விஷப் பூச்சிகள் நம்மை அண்டவே அண்டாது என்பது ஐதீகம். இதுதவிர, இந்தக் கோயிலில் மருந்தும் வழங்குகின்றனர். இதனைப் பத்தியம் இருந்து சாப்பிட, விரைவில் குணமாகும் எனப் பூரிப்புடன் சொல்கின்றனர் பக்தர்கள். செட்டிநாட்டு நகரத்தார், புரட்டாசியில் ஒரே நாளில் ஐந்து பெருமாள் கோயில்களுக்குச் சென்று தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதன்படி அரியக்குடி, திருமயம், திருக்கோட்டியூர், திருப்பத்தூர் மற்றும் கொங்கரத்தி ஆகிய தலங்களுக்குச் சென்று பெருளை தரிசித்தால், தொழில் வளம் பெருகும், இல்லறம் சிறக்கும், கல்வியும் ஞானமும் மேலோங்கும் என்பது நம்பிக்கை!
தல வரலாறு:
சிவகங்கை ராஜா, ஒருமுறை காட்டுக்கு வேட்டையாடச் சென்றபோது, அங்கே சுயம்பு மூர்த்தமாகத் தோன்றிக் காட்சி தந்தாராம் பெருமாள். அதையடுத்து, பெருமாளின் மூர்த்தத்தை எடுத்துவந்து பிரதிஷ்டை செய்து, கோயில் கட்டி வழிபடத் துவங்கினார் என்கிறது தல வரலாறு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சக்தியின் வடிவமாகத் திகழும் வேப்ப மரமும், சிவ வடிவமாக விளங்கும் வில்வ மரமும் ஒன்றோடு ஒன்று பிணைந்தபடி காட்சி தருவது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.