சஷ்டியும் கார்த்திகையும் மாத விழாக்கள் அபிஷேக பூஜைகளுடன் காலவேளையில் நடைபெறுகின்றன. வருட விழாக்கள் வைகாசி விசாகம், தைப்பூசம், சூரசம்ஹாரம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகும். இதில் பங்குனி உத்திரம் முக்கிய பெருவிழாவாகும். கொடியேற்றத்துடன் துவங்கி திருவீதிஉலா (உட்பிரகாரத்தில்) திருக்கல்யாணம், திருத்தேர் மலையைச் சுற்றி நடைபெறும், கொடுமுடியிலிருந்து தீர்த்தக் காவடி எடுத்து வந்து அதில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும் நிகழ்வு என 10 நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவாகும். திருத்தேரில் மலர் அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேதராய் அசைந்து அசைந்து ஆடிவரும் அழகு கண் கொள்ளாக் காட்சியாகும். இத்தேர் ஓட்டம் மலையைச் சுற்றி வலம் வரும். இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து பெரும் அளவில் பக்தர்கள் கலந்து கொள்வர்.
தல சிறப்பு:
முதலில் சிவன்கோயிலாக இருந்த இத்தலம் 1949 ஆம் ஆண்டு நடந்த ஜீரணேத்தாரத்தின் போது முத்துக் குமார சுவாமியை மூலவராகவும் மற்றும் வள்ளி தெய்வானை திருமேனிகளை தனிச் சன்னிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கல்வெட்டுக் குறிப்பு கோயில் வளாகத்தில் உள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
முத்து குமார சுவாமி கோவில் ,
வட்டமலை 638701
அவினாசிபாளையம் புதூர் அஞ்சல்
காங்கேயம்
திருப்பூர் மாவட்டம்
போன்:
+91 99762 18099
பொது தகவல்:
மிகத் தொன்மைவாய்ந்த இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் கோயில் கட்டப்பெற்று திருப்பணி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மண்டப வெளிப்புற சுவற்றில் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால் இச்செய்தி நிரூபணமாகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் கொங்கு நாட்டிலுள்ள சிவன்கோயில்களுக்குச் சென்று வழிபட்ட போது இத்தலத்திற்கும் வந்துள்ளார். அதனை நினைவுகூறும் வகையில் அவரது சிலை வாத்திய மண்டபத் தூணில் வடிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய குன்றின் மீது மேற்கு நோக்கி அமைந்துள்ளது இக்கோயில். கோயிலை அடைய சுமார் 100 படிகளைக் கொண்ட படிப்பாதையும் வாகனங்கள் மேலே செல்ல மலைப்பாதையும் உள்ளன. மலைப்பாதையில் மகா கணபதி மற்றும் இடும்பன் சன்னிதிகள் உள்ளன.
ராஜகோபுரத்தின் எதிரே மயில் மண்டபமும், கொங்கு நாட்டு வழக்கப்படி கோயிலுக்கு வெளியே தீபஸ்தம்பத்துடன் கூடிய மண்டபமும் உள்ளன. 3 நிலை ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளளே சென்றால் வசந்த மண்டபத்தில் விநாயகர், பலிபீடமும், கொடிக்கம்பம், மயில் மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். அடுத்து 12 தூண்களைக் கொண்ட வாத்திய மண்டபத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிலையும் இக்கோயிலை நிர்மாணித்த மன்னன் சிலையும் உள்ளன. முதலில் சிவன்கோயிலாக இருந்த இத்தலம் 1949 ஆம் ஆண்டு நடந்த ஜீரணேத்தாரத்தின் போது முத்துக் குமார சுவாமியை மூலவராகவும் மற்றும் வள்ளி தெய்வானை திருமேனிகளை தனிச் சன்னிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கல்வெட்டுக் குறிப்பு கோயில் வளாகத்தில் உள்ளது. உள் பிராகாரத்தில் மண்டப வெளிப்புற சுவற்றிலும் தூண்களிலும் யோக நரசிம்மர், அனுமன், விஷ்ணு, பத்திரகாளியம்மன், ராமர் போன்ற புடைப்புச் சிற்பங்கள் காணப்படுவது சைவ, வைணவ பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்தனர் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் உள்ளது. அர்த்த மண்டப தென் பகுதியில் உள்ள வெளிப்புற சுவற்றில் அழகிய வடிவமைப்புடன் கூடிய வீரபத்திரரின் புடைப்பு சிற்பத்தைக் காணலாம். நான்கு தூண்களைக் கொண்ட மகா மண்டபத்தின் தென் மேற்கு பகுதியில் ஈசன் லிங்க வடிவில் பார்வதி தேவியோடு அருள்பாலிக்கின்றார். மண்டபத்தின் வடக்கு பகுதியில் உள்ள தனிச் சன்னிதியில் வள்ளி தெய்வானை ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். எதிரே தனி வாசலும் அமைந்துள்ளது. தற்சமயம் கும்பாபிஷேகத்திற்காக கோயில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது இத்தலம்.
பிரார்த்தனை
இத்தலத்தில் முத்துக்குமார சுவாமியை என்ன வேண்டினாலும் அது கைகூடும் என்பது நிதர்சனம்.
நேர்த்திக்கடன்:
செவ்வாய் கிழமைகளில் செவ்வரளி மாலை சுற்றி அபிஷேக ஆராதனைகள் செய்து வேண்டினால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது இவ்வட்டார மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
தலபெருமை:
கொங்கு மண்டபத்திலுள்ள முருகன் வீற்றிருக்கும் தலங்களில் இத்தலம் சிறப்பு வாய்ந்ததாகும். முருகன் அருகே ஆதிஷேசன் திருமேனியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வேறு எந்த முருகன் கோயிலிலும் காண முடியாத அம்சமாகும். இத்தலத்தில் ஒரு பெரிய நாகம் ஒன்று வலம் வந்து முருகனை வழிபட்டதால் இம்முருகனுக்கு அருகே சிலை அமைத்ததாகக் கூறுகின்றனர். இன்றும் நாகம் ஒன்று கோயிலுக்குள் வருவதாகவும் பக்தர்கள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை எனத் தெரிவிக்கின்றனர். மகா மண்டபத்தின் மையத்தில் தாமரை மலர்ந்து விரிந்த நிலையில் உள்ளது போல் மகன்யாச பீடம் அமைக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத்தன்று இப்பீடத்தின் மீது தீர்த்தம் நிரம்பிய கலசம் வைக்கப்பட்டு சுவாமியை ஆவாஹனம் செய்து ஹோம பூஜைகள் நிறைவடைந்த பின்பு, சுவாமிக்கு இத்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படும். இப்பீடம் தெய்வாசம் பொருந்திய சக்தி வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. கோயிலின் தென்மேற்குப் பகுதியில் 16 கால் மண்டபம் உள்ளது. ஆதி காலத்தில் சுவாமியின் திருக்கல்யாண உற்சவம் இங்கு தான் நடந்து வந்தது. தற்போது கோயிலிலேயே நடத்தப்படுகிறது. அடிவாரத்தில் சரவண தீர்த்தம் என்ற சுனை உள்ளது. இதில் ஊறும் நீர் சுவையான நீராகும். இடி விழுந்து உண்டான ஊற்று ஆனதால் இதனை நீரடி நெருப்படி சுனை எனக் கூறுவர். இத்தலத்தில் சிவ ஆகமப்படி கால சந்தி மற்றும் சாயரட்சை என இரு கால பூஜைகள் நடந்து வருகின்றன.
தல வரலாறு:
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருக்கும் தலம் என்பதற்கேற்ப இம்மலைக்கோயில் முருகன் எழுந்தருளி முத்துக்குமார சுவாமி எனும் திருநாமத்தில் அருளாட்சி புரிகின்றார். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திலிருந்து பழநி செல்லும் வழியில் உள்ளது. இப்பகுதி ஆதியில் சின்னக் காடையூர் என வழங்கப்பட்டது. இம்மலைக்கு அருகில் வசித்த கொங்கணச் சித்தர் வழிபட்டு தவம் மேற்கொண்டதால் கொங்கணகிரி எனவும் பின் வட்டமலை எனவும் தற்போது வழங்கப்படுகிறது. கருவறையில் அழகுடன் எழிலாக சதுர்புஜ நாயகனாக திரிசூலம், சட்கோணம், அங்குசம் மற்றும் அபய ஹஸ்த முத்திரை தாங்கி நின்ற கோலத்தில் முத்துக் குமார சுவாமியாக அருள்புரிகின்றார்.
படம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:முதலில் சிவன்கோயிலாக இருந்த இத்தலம் 1949 ஆம் ஆண்டு நடந்த ஜீரணேத்தாரத்தின் போது முத்துக் குமார சுவாமியை மூலவராகவும் மற்றும் வள்ளி தெய்வானை திருமேனிகளை தனிச் சன்னிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கல்வெட்டுக் குறிப்பு கோயில் வளாகத்தில் உள்ளது.
இருப்பிடம் : திருப்பூர் மாவட்டம் காங்கயத்திலிருந்து பழநி செல்லும் பாதையில் 8வது கிலோமீட்டரில் கோயில் அமைந்துள்ளது. இவ்வழித்தடத்தில் செல்லும் அனைத்து பேருந்துகள் மூலமும் கோயிலை அடையலாம்.