இங்கு சிவாகம முறைப்படி காலசந்தி, உச்சிகாலம் மற்றும் சாயரட்சை என மூன்று கால பூஜைகள் நடந்து வருகின்றன. அன்னாபிஷேகம், நவராத்திரி போன்ற விழாக்கள் கொண்டாடப் பட்டாலும், இத்தலத்தில் நடைபெறும் மகாசிவராத்திரியன்று இரவு 7,11, அதிகாலை 2,4 மணிக்கு நடைபெறும் 4 கால பூஜை ஆராதனை விழா. தலையாய வருடப் பெருவிழாவாகும். சுற்று வட்டார கிராமங்களில் உள்ள மக்கள் பெருந்திரளாக இவ்விழாவில் கலந்து கொள்வர். பிரதோஷ காலத்தில் நந்திகேஸ்வரருக்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளுடன் தரிசிப்பது மிகவும் சிறப்பாகும். அதுவும் இங்கு இரண்டு நந்தி களுக்கு ஒரு சேர நடக்கும் ஆராதனைகள் அதன் தெய்வாம்சத்தை உணரமுடியும்.
தல சிறப்பு:
பொதுவாக அதிகார நந்தி வாசலிலும் அனுகிரஹ நந்தி மகா மண்டபத்திலும் வீற்றிருப்பார். ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக இரு நந்திகளும் மகா மண்டப வாசல் முன்னே வீற்றிருப்பது விசேஷமான அம்சம்.
திறக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
காசி விஸ்வநாதர் கோவில்
கொமரலிங்கம்
மடத்துகுளம் தாலுக்கா
திருப்பூர் மாவட்டம் 642 004
போன்:
+91 93446 09478
பொது தகவல்:
1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் என்பதுடன் இப்பகுதியின் வரலாற்று சின்னமாக விளங்குகிறது. கோயிலின் தொன்மையை சரியாகக் கணித்துக் கூற இயலவில்லை. இந்திய தொல்லியல் துறை ஆய்வில் இருப்பதாகத் தெரிய வருகிறது. கோயில் கிழக்கு வாயிலுடன் அமைந்துள்ளது. ஆனால் பெரிய வாயில் எனப்படும். யானை வாயில் பிரதான வாயிலாக தெற்குநோக்கி அமைக்கப்பட்டுள்ளது. விசாலாட்சி அம்மன் தெற்கு முகமாக அருள் பாலிக்கின்றார். அம்பாளை பூஜித்து வணங்க தொழில் வளம் செழிப்பதுடன் திருமண தடைகள் நீங்குவதாகத் தெரிவிக்கின்றனர். மூலவர், காசி விஸ்வநாதர் கிழக்கு நோக்கி வீற்று அருள்புரிகின்றார். அமராவதி ஆற்றை எதிர்நோக்கி உள்ளது சிறப்பு. பொதுவாக அதிகார நந்தி வாசலிலும் அனுகிரஹ நந்தி மகா மண்டபத்திலும் வீற்றிருப்பார். ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக இரு நந்திகளும் மகா மண்டப வாசல் முன்னே வீற்றிருப்பது விசேஷமான அம்சம். சுந்தர கணபதி, தட்சிணாமூர்த்தி சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், ஆஞ்சநேயர், ருக்மணி சத்யபாமா உடனமர் வேணுகோபாலர், கால பைரவர், சந்திரன் மற்றும் சூரியன் ஆகியோர் தனிச்சன்னிதிகளில் வெளிப்பிரகாரத்தில் வீற்றிருக்கின்றனர். கோயிலின் வடமேற்கு மூலையில் ஸ்தல விருட்சமான நாகலிங்கமரம் உள்ளது. அமராவதி ஆற்றுநீர் தீர்த்தமாக விளங்குகின்றது. பிரகாரத்தில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்குரிய விழாக்கள் கொண்டாப்பட்டாலும் ஈசனுக்கும் விசாலாட்சி அம்பாளுக்கும் உரிய விழாக்களே இங்கு பிரதானமாகக் கருதப்படுகிறது.
பிரார்த்தனை
தொழில் வளம் சிறக்க, திருமண தடைகள் நீங்க, சனிதோஷ பரிகாரம் ஆகியவற்றுக்கு இத்தலம் பிரசித்தி பெற்றுள்ளதால் அதிகமான பக்தர்கள் வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:
சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
பிரதோஷ காலத்தில் நந்திகேஸ்வரருக்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளுடன் தரிசிப்பது மிகவும் சிறப்பாகும். அதுவும் இங்கு இரண்டு நந்திகளுக்கு ஒரு சேர நடக்கும் ஆராதனைகள் அதன் தெய்வாம் சத்தை உணரமுடியும். சனீஸ்வரர் கிழக்கு முகமாக அருள்வதால் மிகவும் சக்தி வாய்ந்தவராக விளங்குகின்றார். திருநள்ளாற்றில் உள்ள சன்னிதியை ஒத்து இருப்பதால் அங்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து பரிகார பூஜைகள் செய்து பலன் பெறுகின்றனர். சனிக்கிழமைகளில் இச்சன்னிதிக்கு பெரும் திரளாக வரும் பக்தர்களே இதற்கு சான்று. இத்தலத்தில் சனிபகவானுக்கு மட்டுமே சன்னிதி உள்ள நிலையில், நவகிரஹங்களுக்கு என தனிச்சன்னிதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சங்க காலத்தில் சைவர்களும் வைணவர்களும் எந்தவித பேதமின்றி சகோதரத்துவத்துடன் வாழ்ந்தனர். என்பதை இத்தல ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலர் சன்னிதி மெய்ப்பிக்கின்றது.
தல வரலாறு:
பழநிமலைத் தொடர்களுள் உள்ளது முதிரமலை எனும் மலை. இம்மலையில் அமைந்த முதிரம் எனும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். குறுநில மன்னரான குமணன். இவர் கடையேழு வள்ளல்களின் காலத்திற்கு பிறபட்டவர் எனவும் கடையேழு வள்ளல்களில் ஒருவர் எனவும் வரலாற்று குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது. பழநிக்கும் உடுமலைப்பேட்டைக்கும் உள்ள பகுதி குமண மங்கலம் என வழங்கப்பட்டது. இப்பெயர் மன்னர் குமணின் பெயரால் விளங்கியது. நல் ஆட்சி நலத்தாலும் தோளாற்றலாலும் செல்வ செழிப்புடன் விளங்கிய அப்பகுதி அமராவதி ஆற்று பாசனத்தால் சுற்றுப்புறமெங்கும் பசுமையான வயல் வெளிகளுடன் செழித்து வளமாகத் திகழ்ந்தது. இப்பகுதியை ஆண்ட மன்னன் குமணன் காசியாத்திரை செல்லும்போது தன்னுடன் வர விருப்பமானவர்களையும் அழைத்துச் செல்வார். அப்படிச் சென்று வந்த பின்பு மன்னன் மனதில் சில கேள்விகள் எழுந்தன. நமக்குப் பிறகு இம்மக்களை யார் காசிக்கு அழைத்துச் செல்வர்? தனக்கு பின் ஆட்சிக்கு வரும் மன்னர்கள் இவ்வாறு அழைத்துச் செல்வார்களா? மகளிர், குழந்தைகள், முதியவர்கள் காசிக்கும் செல்ல வழிவகையில்லையே? என சிந்தித்தார். அமைச்சர் பெருமக்களுடன் ஆலோசனை நடத்தினார். நீண்ட ஆய்வுக்கு பின் காசியில் இருந்து சிவலிங்கத்தைக் கொண்டுவந்து ஓர் கோயில் அமைக்க முடிவு செய்தார். காசியில் உள்ள அமைப்பைப் போன்றே இருக்க வேண்டும் எனத் தெரிவித்து இடத்தைத் தேர்வு செய்ய உத்தரவிட்டார். பல்வேறு இடங்களை பார்வையிட்டு இறுதியில் தற்போது கோயில் இருக்கும் இடத்தைத் தேர்வு செய்தனர். கோயில், ஆறு அதை அடுத்து மயானம் என உள்ளதைப் போன்ற இவ்விடம் காசியில் உள்ளதை ஒத்திருந்ததால் இதனை தேர்வு செய்தனர். காசியிலிருந்து காசி விஸ்வநாதர் சிவலிங்கத்தைக் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. கோயில் கட்டிட பணிகள் ஒரு நல்ல நாளில் பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது. காசியில் உருவாக்கிய லிங்கம் வண்டி மூலம் பயணித்து குமண மங்கலத்தை அடைய ஒரு ஆண்டுகாலம் பிடித்தது. பரிவார தெய்வங்களுக்கும் விசாலாட்சி அம்மனுக்கும் தனிச் சன்னிதிகள் அமைத்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தேறியது. குமணன் காசியிலிருந்து லிங்கத்தை வரவழைத்து பிரதிஷ்டை செய்ததால் இவ்வூரின் பெயர் குமண லிங்கம் என்றாகி பின் காலப்போக்கில் மருவி கொமரலிங்கம் என நிலைபெற்றுவிட்டது.
படம், தகவல்: வி.பி. ஆலால சுந்தரம், கோவை
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பொதுவாக அதிகார நந்தி வாசலிலும் அனுகிரஹ நந்தி மகா மண்டபத்திலும் வீற்றிருப்பார். ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக இரு நந்திகளும் மகா மண்டப வாசல் முன்னே வீற்றிருப்பது விசேஷமான அம்சம்.
இருப்பிடம் : திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து கொழுமம் வழியாகப் பழநி செல்லும் பாதையில் 15 வது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கொமரலிங்கம். உடுமலை மற்றும் பழநியிலிருந்து இவ்வழியாகச் செல்லும் அனைத்து பேருந்துகள் மூலமும் கோயிலை அடையலாம்.