கிள்ளையில் தோப்பு நிறைந்த பகுதியில் திருவிழா நடந்ததால் திருநாள் தோப்பு என்றாகியதாவும், கிள்ளை நகருக்கு சிறப்பு சேர்க்கும் நோக்கில் திருஎன்ற அடைமொழியால் வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆடி கடை வெள்ளி- சுமங்கலி பூஜை, தை கடைவெள்ளி திருவிளக்குப் பூஜை, ஆனிமாதம் தீமிதி திருவிழா, மாதம் தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி வழிபாடு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தல சிறப்பு:
சித்திரை முதல் வாரத்தில் அம்மன்மீது சூரியஒளி விழு கிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சிந்தமணியம்மன் திருக்கோயில்,
கிள்ளை மற்றும் அஞ்சல்,
சிதம்பரம் வட்டம்,
கடலூர்-608102.
போன்:
+91 97900 47495
பொது தகவல்:
கிழக்குப் பக்கம் வாயில் அமைந்துள்ளது, விமானத்தில் ஒரு கலசம், நுழைவு வாயில், முன் உள்ள மண்டபத்தில் 100 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். பலிபீடம், பலிபீடத்தில் சிம்மம் அருகில் சூலம் உள்ளது. இடபக்கம் வேல் முருகன், வலப்பக்கம் விநாயகர், கிழக்குப் பக்கம் பார்த்து பேச்சியம்மன் தனி சன்னிதியிலும், காத்தவராயன், சிவப்பழகி, கருப்பழகியுடன் தனி சன்னிதியிலும் அருள்பாலிக்கின்றனர். தலா ஒரு கலசம் உள்ளது. மகா மண்டபத்தில் கருவறை நுழைவு வாயில் முன் மேலே கஜலட்சுமி இரு பக்கமும் யானை தாமரை மலர்கள் மற்றும் நீர் ஊற்றும் நோக்கில் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட நான்கு கரத்துடன் கூடிய அம்மன் ஐந்தடி திருவாட்சிக்கும் நடுவில் சிரித்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். வெளிப்பிரகாரத்தில் நுழைவு வாயில் முன் பகுதியில் பிரதான அம்மன், இடபக்கம் விநாயகர், சிம்மம், வலப்பக்கம் வேல்முருகன், சிம்மம் பூதகனங்கள் சிமெண்ட் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. 2001 மற்றும் 2013 இல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
பிரார்த்தனை
புத்திரபாக்கியம், திருமணத்தடை, விவசாய அபிவிருத்திக்கும், தீராத நோய்களுக்கும் சிறந்த கோயிலாக திகழ்வதால் இங்கு பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
அங்கபிரதட்சணம், பால்குடம் எடுத்தல், செடல் போடுதல், சுதை சிற்பங்கள், ஆடு, கோழி, புறா உயிருடன் மற்றும் தானியங்கள் காணிக்கையாக தந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர்.
தலபெருமை:
குல தெய்வ வழிபாடு, சிதம்பரம் நடராஜர், தில்லை காளி மற்றும் கீழத்தெரு மாரியம்மன் கோயில் அருகில் உள்ளது. முழுக்குத்துறை தீர்த்தவாரி ஆற்றிற்கு சிதம்பரம் நடராஜர், பின்னத்தூர் பெருமாள், வளையமாதேவி பெருமாள், ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி இந்த கோயில் வழியாக செல்வது இக்கோயிலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
தல வரலாறு:
சிதம்பரம் அருகே கிள்ளை, இடப்பாளையம், தைக்கால் பகுதியை சேர்ந்தவர்கள் தற்போதும் பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம், பூராசாமி மானியம் உள்ளிட்ட பல்வேறு மானிங்களில் குடி இருந்து வருகின்றனர். மேலும் கிழக்குப் பக்கம் சென்றால் வனத் துறைக்கு சொந்தமான இடங்களும் உள்ளது. இந்த இடை வெளியில் உள்ள சிறு பகுதிகள் தனியாருக்கு சொந்தமான இடங்கள் ஆகும். இந்த இடத்தில் மனியம் பூராசாமிப்பிள்ளையும் அவரது உறவினரான நாராயணசாமி பிள்ளைக்கும் சொந்தமான நிலத்தில் மானாவாரியாக மணிலா சாகுபடிக்கு நிலத்தை உழுதனர்.
அப்போது பூராசாமிபிள்ளை கனவில் ஒரு பெண் உருவம் தோன்றி, இப்பகுதியில் உப்பு தண்ணீர் சூழ்வதால் மேனி கருத்து விடுகிறது எனக்கு நிழல் கொடுங்கள் என கூறி மறைந்துள்ளது. அதே உருவம் சில தினங்களில் நாராயணசாமி பிள்ளை கனவிலும் தோ ன்றி தெரிவித்துள்ளது. இருவரும் கூடிப்பேசிய போது இருவர் கனவிலும் தோன்றி கூறியதை உணர்ந்தவர்கள் காலம் கடத்தினர். சிலதினங்களில் நிலத்தை உழுத போது அங்கு ஒரு கல் தென்பட்டது. அந்த கல் உருவமும், கனில் தோன்றி பெண் உருவமும் ஒன்றாக இருந்ததால் கோயில் கட்டமுன் வந்தவர்கள் முதலில் கீற்றுக் கொட்ட கையில் கோயில் கட்டினர். படிப்படியாக சுதை வேலை பாடுகளுடன் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர். தற்போது கிராம கோயிலாக இருந்தாலும், பூராசாமிப்பிள்ளை, பாவாடை சாமி பிள்ளை குடும்பத்தினர்கள் பராமரித்து வருகின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சித்திரை முதல் வாரத்தில் அம்மன்மீது சூரியஒளி விழு கிறது.
இருப்பிடம் : கிள்ளை பஸ் நிலையத்தில் இருந்து முழுக்குத்துறை சாலையில் 1 கி.மீ., வனத்துறைக்கு சொந்தமான மூலிகை தாவரங்கள் நிறைந்தப் பகுதியில் கோயில் அமைந்துள்ளது.