மகாசிவராத்திரி விழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகின்றன.
தல சிறப்பு:
ராமனால் பூஜிக்கப்பட்ட சுயம்பு மூர்த்தம் என்பது இத்தலத்தின் தனி சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்,
கீசரா குட்டா,
ரெங்கா ரெட்டி,
ஆந்திர மாநிலம்.
பொது தகவல்:
அழகான மலைக்குன்றின் உச்சியில் அமைந்துள்ளது ஆலயம். கம்பீரமாக குன்றின் மேல் காட்சியளிக்கிறது ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஆலயம். முதலில் நம்மை வரவேற்கும் விஸ்வரூப ஆஞ்சநேயரின் கம்பீரத்தையும், விஸ்வரூபத்தையும் அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள்.வடக்கு கோபுரம் வழியாகச் சென்று வலது பக்கம் திரும்பினால் கிழக்கு நோக்கிய ஐந்துநிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது.
கொடிமரம், நந்தி மண்டபத்தைக் கடந்ததும் உற்சவ மண்டபம், அதை அடுத்து கருவறை மண்டபம். வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் நின்றிருக்க, அவர்களுக்கு சற்றுத் தள்ளி வலதுபுறம் விநாயகப் பெருமானும், இடதுபுறம் வள்ளி-தேவசேனா சமேத சுப்ரமண்ய சுவாமி சன்னதியும் அமைந்திருக்கின்றன. கருவறை வெளி மண்டபத்தில் பவானி அம்மனும், சிவதுர்க்கையும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். ஆஞ்சநேயரை சுற்றிலும் அவர் வீசி எறிந்த லிங்கங்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. எங்கு நோக்கினும் குரங்குகள் ஓடி விளையாடுகின்றன.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள ராமலிங்கேஸ்வரரை வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கருவறையில் மூலவர் ராமலிங்கேஸ்வரர் மிகவும் சிறிய லிங்க வடிவினராய்க் காட்சி கொடுக்கிறார். ராமனால் பூஜிக்கப்பட்ட சுயம்பு மூர்த்தம். இங்கு லட்சுமி நரசிம்மருக்கும், சீதை சமேத ராமபிரானுக்கும் தனிச் சன்னதி அமைந்துள்ளது. சிவனும் - திருமாலும் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் இத்திருத்தலத்தை தரிசித்தால் நமது கவலைகள் விலகி, மனம் அமைதி பெறும். நவாப் மன்னரிடம் மந்திரியாக இருந்த அக்கண்ணா, மாதண்ணா என்பவர்களால் இக்கோயில் கட்டப்பட்டது. சிவ தலத்துக்குரிய எல்லா பூஜைகளும், விழாக்களும் நடைபெறுவதுடன் மகா சிவராத்திரி விழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. பதினாறு பேறுகளையும் அள்ளித்தரும் வள்ளல் இந்த ராம லிங்கேஸ்வரர் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
தல வரலாறு:
இலங்கையில் ராவண வதம் முடிந்து சீதையை காப்பாற்றி, லட்சுமணன், அனுமன் சகிதமாக ராமபிரான் அயோத்தி திரும்பும் வழியில், பிராமணனாகிய ராவணனை கொன்ற பாவத்தை தீர்த்து தோஷ நிவர்த்திக்காக எண்ணிய ராமர் வழியில் பசுமை சூழ்ந்த ஒரு பெரிய மலை குன்றில் அமர்ந்து சிவபூஜை செய்ய விரும்பியதும்; அதற்காக லிங்கம் கொண்டு வர அனுமனைப் பணித்ததும்; அவன் திரும்பி வர தாமதம் ஆனதால் ராமனே மணலால் லிங்கம் செய்து பூஜை செய்ததும் அனைவரும் அறிந்தது. ஸ்ரீ ராமரின் தவிப்பை உணர்ந்த சிவபெருமான் தானே நேரடியாக தோன்றி ஒரு சிவலிங்கத்தை கொடுத்து பூஜை செய்யுமாறு சொல்லி மறைந்தார்.
மகிழ்வுடன் அதை பெற்றுக்கொண்ட ஸ்ரீராமரும் சிறப்பாக பூஜையை முடித்தார். அனுமன் வாரணாசியிலிருந்து 101 லிங்கங்களைக் கொண்டு வருவதற்கு முன்பாக ஸ்ரீராமன் தனது சிவபூஜையை முடித்துவிட்டதை அறிந்து அனுமனுக்கு கோபமும் வருத்தமும் ஏற்பட்டது. இதை உணர்ந்து கொண்ட ராமன், ஆஞ்சநேயா வருத்தப்படாதே என்று ஆறுதல் வார்த்தை கூறினார். இருந்தாலும் அனுமன் கோபம் தணியாதவராக தான் கொண்டு வந்திருந்த 101 லிங்கங்களையும் வீசியெறிய அவை பல இடங்களில் விழுந்தன. அதில் ஒன்றுதான் மலைப்பகுதியான சேகரிகுட்டா. அனுமனை ராமன் சாந்தப்படுத்தி, கேசரி புத்திரனான அனுமனே, இந்த மலை இனி வருங்காலத்தில் உனது பெயரால் அழைக்கப்படும் என்று கூற அப்படி அமைந்த மலைக்குன்றுதான் கேசரி குட்டா. பின்நாட்களில் அது மருவி கீசர குட்டா என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையில்தான் ராமன் பூஜித்த ஈஸ்வரன் ராமலிங்கேஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி திருக்கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ராமனால் பூஜிக்கப்பட்ட சுயம்பு மூர்த்தம் என்பது இத்தலத்தின் தனி சிறப்பு.
இருப்பிடம் : ஆந்திர மாநிலம், செகந்திராபாத் ரயில்நிலையத்திலிருந்து சுமார் 35 கி.மீ. துõரத்தில் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் கீசரா மண்டலம் என்ற பகுதியில் இந்த கீசர குட்டா அமைந்துள்ளது. மலையில் கோயில் வரை பஸ் செல்கிறது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
ரெங்கா ரெட்டி
அருகிலுள்ள விமான நிலையம் :
செகந்திராபாத்
தங்கும் வசதி :
ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்குச் செல்லலாம்.