Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நாக குமார காவியம் பகுதி-1
முதல் பக்கம் » நாக குமார காவியம்
நாக குமார காவியம் பகுதி-2
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2013
05:03

நயந்தரன் அறிவுரையால் சீதரன் மனை புகுதல்

85 நயந்தரன் சென்று உரைப்பான் நல்லறிவு இன்றி நீயே
செயந்தனில் ஒருவன் கையில் சேனைதன் மரணம் கண்டும்
நயந்து அறியாத நீயே நன்மனை புகுக என்றான்
பயந்துதன் சேனை யோடும் பவனத்தில் சென்ற அன்றே.

நாககுமாரன் தேவிமாரோடு தன் தோழன் வியாளனின் ஊருக்குச் செல்லுதல்

86 தந்தையால் அமைச்சன் சொல்லத் தானும் தன்தாய்க்கு உரைத்து
தந்திமேல் மாதர் கூடத் தோழனும் தானும் ஏறி
நந்திய வியாளன் நன்ஊர் மதுரையில்புக்கு இருந்து
அந்தம்இல் உவகைஎய்தி அமர்ந்துஇனிது ஒழுகும் நாளில்.

மதுரையில் வீணைத் தலைவன் குழுவுடன் எதிர்ப்படல்

வேறு

87 மன்னவ குமரனும் மன்னனும் தோழனும்
அந்நகர்ப் புறத்தினில் ஆடல் மேவலின்
இன்இசை வீணைவேந்து இளையர் ஐஞ்நூற்றுவர்
அன்னவர்க் கண்டுமிக்கு அண்ணல் உரைத்தனன்.

88 எங்குஉளிர் யாவர்நீர் எங்குஇனிப் போவதுஎன்று
அங்குஅவர் தம்முளே அறிந்துஒருவன்சொலும்
தங்கள்ஊர் நாமமும் தந்தைதாய் பேர்உரைத்து
இங்குஇவர் என்கையின் வீணைகற்பவர்களே.

வீணைத் தலைவன் சொன்ன காம்பீர நாட்டுச் செய்தி

வேறு

89 நந்துகாம் பீரநாட்டின் நகரும் காம்பீரம் என்னும்
நந்தன ராசன்தேவி நாமம் தாரணியாம் புத்திரி
கந்தம்ஆர் திரிபுவனாரதி கைவீணை அதனில் தோற்று
என்தமரோடும் கூட எங்கள்ஊர்க்கு ஏறச்சென்றோம்.

திரிபுவனாரதியை வீணையினால் வென்று நாககுமாரன் நன்மணங் கொள்ளல்

90 வெற்றிவேல் குமரன் கேட்டு வியாளனும் தானும் சென்று
வில்புரு வதனத்தாளை வீணையின் வென்று கொண்டு
கற்புடை அவள்தன் காமக் கடல்இடை நீந்து நாளில்
உற்றதுஓர் வணிகனைக்கண்டு உவந்துஅதிசயத்தைக் கேட்டான்.

வேற்றுநாட்டு வணிகன் சொன்ன அற்புதச் செய்தி

91 தீதுஇல்பூந் திலகம் என்னும் சினாலயம் அதனின் முன்னில்
சோதிமிக் கிரணம் தோன்றும் சூரியன் உச்சி காலம்
ஓதிய குரலன் ஆகி ஒருவன்நின்று அலறுகின்றான்
ஏதுஎன்று அறியேன் என்றான் எரிமணிக் கடகக் கையான்.

வணிகன் சொன்ன சினாலயத்தை நாககுமாரன் சேர்ந்திருத்தல்

92 குன்றுஎனத் திரண்ட தோளான் குமரனும் கேட்டுஉவந்து
சென்றுஅந்த ஆலயத்தில் சினவரன் பணிந்து நின்று
வென்றுஅந்த விமலன் மீது விரவிய துதிகள் சொல்லி
முன்அந்த மண்டபத்தின் முகமலர்ந்து இனிது இருந்தான்.

வேடனின் மனைவியை நாககுமாரன் மீட்டுத்தருதல்

93 பூசல்இட்டு ஒருவன் கூவப் புரவல குமரன் கேட்டு
ஓசனிக்கின்றது என்ன ஒருதனி நின்ற நீயார்
ஆசைஎன் மனைவி தன்னை அதிபீம அசுரன் கொண்டு
பேசஒணா மலைமுழஞ்சுள் பிலத்தினில் வைத்துஇருந்தான்.

94 இரம்மிய வனத்துள் வாழ்வேன் இரம்மிய வேடன் என்பேன்
விம்முறு துயர்சொல் கேட்டு வீரன்அக் குகைகாட்டு என்னச்
செம்மையில் சென்று காட்டச் செல்வனும் சிறந்து போந்து
அம்மலைக் குகைவாய் தன்னில் அண்ணலும் உவந்து நின்றான்.

வியந்தரதேவன் நாககுமாரனுக்கு வாள் முதலியன கொடுத்தல்

95 வியந்தர தேவன் வந்து வந்தனை செய்து நிற்ப
விந்தநல் கிராதன் தேவிதனை விடுவித்த பின்புச்
சந்திரகாந்தி வாளும் சாலமிக்கு அமளி தானும்
கந்தநல் காமம் என்னும் கரண்டகம் கொடுத்தது அன்றே.

வேடன் உரைத்த மலைக்குகை நாலாயிரவர் நாககுமாரனுக்கு அடிமையாதல்

96 அங்குநின்று அண்ணல் போந்து அதிசயம் கேட்ப வேடன்
இங்ந்குஉள மலைவாரத்தில் இரணிய குகைஉண்டு என்னக்
குங்குமம் அணிந்த மார்பன் குமரன்கேட்டு அங்குச் சென்றான்
அங்குள இயக்கி வந்து அடிபணிந்து இனிது சொல்வாள்.

97 இனிஉனக்கு ஆளர் ஆனோம் ஈர்இரண்டு ஆயிரவர்
எனஅவள் சொல்ல நன்றுஎன்று இனிஒரு காரியத்தின்
நினைவன்யான் அங்கு வாஎன் நீங்கிநற் குமரன் வந்து
வனசரன் தன்னைக் கண்டு அதிசயம் கேட்பச் சொல்வான்.

வேடன் சொற்படி வேதாளத்தை வதைத்தல்

98 வாள்கரம் சுழற்றி நிற்பான் வியந்தரன் ஒருவன் என்னக்
காலினைப் பற்றி ஈர்ப்பக் கனநிதி கண்டு காவல்
ஆள்எனத் தெய்வம் வைத்து அருகன்ஆலையத்துள் சென்று
தோள்அன தோழன் கூடத் தொல்கிரிபுரத்தைச் சேர்ந்தான்.

கிரிகூடபுரத்தில் நாககுமாரன் கணைவிழியை மணத்தல்

99 அந்நகர்க்கு அதிபன் ஆன வனராசன் தேவிதானும்
மன்னிய முலையினாள்பேர் வனமாலை மகள்நன் நாமம்
நன்நுதல் கணைவிழியை நாகநல் குமரனுக்குப்
பன்அரும் வேள்வி தன்னால் பார்த்திபன் கொடுத்தது அன்றே.

புண்டரபுரத்தை வனராசற்கு அளித்தல்

100 தாரணி வனராசன்குத் தாயத்தான் ஒருவன் தன்னைச்
சீரணி குமரன் தோழன் சிறந்துஅணி மாமன் கூடப்
பார்அணி வெற்றி கொண்டு புண்டர புரத்தை வாங்கி
ஏர்அணி வனரா சன்கு எழில்பெறக் கொடுத்த அன்றே.

நாடிழந்த சோமப்பிரபன் நற்றவம் செய்தல்

101 சொல்அரும் நாடு இழந்து சோமநல் பிரபன் போகி
எல்லையில் குணத்தின் மிக்க எமதரர் அடிவணங்கி
நல்லருள் சுரந்துஅளிக்கும் நற்றவ முனிவன் ஆகி
ஒல்லையின் வினைகள் தீர யோகத்தைக் காத்து நின்றான்.

நான்காம் சருக்கம்

சுப்பிரதிட்ட மன்னன் செயவர்மன் பரம முனிவரைப் பணிந்து வேண்டுதல்

102 சுப்பிரதிட்டம் எனும்புரம் ஆள்பவன்
செப்பு வன்மை செயவர்மராசன்தன்
ஒப்புஇல் பாவையும் ஓவியம் போல்செம்பொன்
செப்பு நேர்முலையாள்நல் செயவதி.

103 மக்கள் சேத்திஅ பேத்தியர் என்றுஇவர்
மிக்க செல்வத்தின் மேன்மையில் செல்லுநாள்
பக்க நோன்புடை பரம முனிவரர்
தொக்க ராசன் தொழுதிட்டு இறைஞ்சினான்.

104 இருவர் என்சுதர் என்னுடை ராச்சியம்
மருவி ஆளுமோ மற்றுஒரு சேவையோ
திருவுளம் பற்றித் தேர்ந்துஅறிவிக்கஎனத்
திருமுடி மன்ன செப்புவன் கேள்என்றார்.

முனிவர் மன்னனுக்கு உரைத்தவை

105 புண்டிரம் எனும்புரப் புரவலன்தனைக்
கண்திறந்து உந்திடும் காவலன்தனை
அண்டிநல் சேவையார் ஆவராம்எனப்
பண்திறத்தவத்தவர் பண்உரை கேட்டபின்.

செயவர்மன் புதல்வரின் அரசாட்சி

106 மக்கள் மிசைநில மன்னவன் வைத்துஉடன்
மிக்கு நத்துவம் வீறுடன் கொண்டுதன்
நிற்கும் செவ்வினை நீங்க நின்றனர்
தக்க புத்திரர் தாரணி ஆளும்நாள்.

சோமப்பிரபர் வழி அக்குமரர் நாககுமாரன் புகழை அறிதல்

107 நல்அருந்தவச் சோமப் பிரபரும்
எல்லை இல்குண இருடிகள் தம்முடன்
தொல்புகழ்ப்புரம் சுப்பிர திட்டத்தின்
நல்ல காவின் நயந்துஇருந்தார்களே.

108 செயவர்மன் சுதர் சீர்நல் தவர்களை
நயம் அறிந்துசேர் நன்அடியைப்பணிந்து
இயம்பும் இம்முனி இப்ப துறந்ததுஎன்
செயந்தரன்சுதன் சீற்றத்தின் ஆனதே.

செயவர்மன் புதல்வரிருவரும் நாககுமாரனை வந்தடைதல்

வேறு

109 என்றவர் உரையைக் கேட்டு இருவரும் துறந்து போந்து
சென்றுநல் குமரன் தன்னைச் சீர்பெற வணங்கிச் சொன்னார்
இன்றுமக்காளர் ஆனோம் என்றுஅவர் கூற நன்றுஎன்
குன்றுசூழ் வனசாலத்துக் குமரன்சென்று இருந்த அன்றே.

110 அடிமரத்து இருப்ப அண்ணல் அந்நிழல் திரிதல் இன்றித்
கடிகமழ் மார்பன் தன்னைக் காத்துஉடன் இருப்பப் பின்னும்
விடமரப் பழங்கள் எல்லாம் வியந்து நன்துய்த்து இருந்தார்
கொடிமலர்க் காவு தன்னுள் கோமகன் இருந்த போழ்தில்.

ஆலநிழலிருந்தபோது ஐந்நூற்றுவர் வந்து குமரனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ளல்

111 அஞ்சுநூற்றுவர்கள் வந்தே அடிபணிந்து இனிய கூறும்
தஞ்சமாய் எங்கட்கு எல்லாம் தவமுனி குறிஉரைப்ப
புஞ்சிய வனத்துஇருந்தோம் புரவலன் நின்இடத்தின்
நெஞ்சிலில் குறியன் காணாய் எமக்குநீ இறைவன் என்றார்.

கிரிநகரில் குணவதியை நாககுமாரன் மணத்தல்

112 அரியநல் உரையைக் கேட்டு அவ்வணம் களிசிறந்து
உரியநல் அவர்களோடும் உவந்துஉடன் எழுந்து சென்று
கிரிநகர் தன்னைச்சேரக் கேட்டுநன் நகரைச் சென்றான்
அரிவரன் எதிர்க்கொண்டு ஏக அவன்மனை புகுந்துஇருந்தான்.

113 அரிவர ராசன் தேவி அருந்ததி அனைய கற்பின்
மிருகலோசனைஎன் பாளாம் மிக்கநன் மகள்தன் பேரும்
சுரிகுழல் கருங்கண் செவ்வாய்த் துடிஇடைக் குணவ தீயைப்
பிரவிச் சோதனன் இச்சித்துப் பெருநகர் வளைந்தது அன்றே.

114 நாகநல் குமரன் கேட்டு நால்படையோடும் சென்று
வேகநல் போர்க்களத்தில் வெற்றிகொண்டு அவனை ஓட்டி
நாகநல் எருத்தின் வந்து நகர்புகுந்து இருப்ப மிக்க
போகம்மிக் குணவ தீயைப் புரவலன் கொடுத்தது அன்றே.

நாககுமாரன் குணவதியுடன் கூடிப் போகந் துய்த்தல்

115 வேல்விழி அமிர்துஅன்னாளை வேள்வியால் அண்ணல் எய்திக்
கால்சிலம்பு ஓசை செய்யக் காமனும் ரதியும் போலப்
போனமும் போகம் எல்லாம் பருகிஇன்புற்று நாளும்
நூல்நெறி வகையில் துய்த்தார் நுண்இடை துவள அன்றே.

116 கலைஅணி அல்குல் பாவை கங்குலும் பகலும் எல்லாம்
சிலைஉயர்ந்து இனிய திண்தோள் செம்மலும் பிரிதல் இன்றி
நிலைபெற நெறியில் துய்த்தார் நிகர்இன்றிச் செல்லும் நாளுள்
உலைதல்இல் உறுவலீயான் ஊர்ச்சயந்தகிரிஅடைந்தான்.

நாககுமாரன் சயந்தகிரியடைந்து சினாலயம் தொழுதல்

117 வாமன் ஆலையத்து மூன்று வலம்கொண்டு உட்புகுந்து இறைஞ்சி
தாமம்ஆர் மார்பன் மிக்க தக்கநல் பூசை செய்து
சேமமாம் முக்குடைக்கீழ் இருந்துஅரியாசனத்தின்
வாமனார் துதிகள் சொல்ல வாழ்த்துபு தொடங்கினானே.

முக்குடைக்கீழ் விளங்கும் மூர்த்தியை வாழ்த்துதல்

வேறு

118 முத்துஇலங்கு முக்குடைக்கீழ் மூர்த்தி திருந்துஅடியை
வெற்றியுடன் பணிந்தவர்கள் விண்உலகம் ஆண்டுவந்து
இத்தலமும் முழுதுஆண்டு இருங்களிற்று எருத்தின்மிசை
நித்தில வெண்குடைக்கீழ் நீங்காது இருப்பவரே.

119 கமலமலர் மீதுஉறையும் காட்சிக்கு இனிமூர்த்தி
அமலமலர்ப் பொன்சரணை அன்பாய்த் தொழுபவர்கள்
இமையவர்கள் உலகத்து இந்திரராய்ப் போய்உதுதித்து
இமையவர்கள் வந்துதொழ இன்புற்று இருப்பாரே.

120 அரியாசனத்தின்மிசை அமர்ந்த திருமூர்த்தி
பரிவாக உன்னடியைப் பணிந்து பரவுவர்கள்
திரிலோகமும்தொழவே தேவாதி தேவருமாய்
எரிபொன் உயிர்விளங்கி இனியமுத்தி சேர்பவரே.

வில்லாளன் ஒருவனின் தூதுச் செய்தி

121 இணைஇலா இறைவனை ஏத்திஇவ்வகையினால்
துணைஇனிய தோழன்மார் சூழ்ந்ந்து உடன்இருந்தபின்
கணைசிலை பிடித்துஒருவன் கண்டுஒர்ஓலை முன்வைத்து
இணைகரமும் கூப்பிநின்று இனிதுஇறைஞ்சிக் கூறுவான்.

122 வற்சைஎனும் நாட்டின்உள் வான்புகழும் கௌசம்பி
செற்றவரினும்மிகு சூரன்சுபசந்திரன்
வெற்புநிகர் கற்பினாள் வேந்தன்மகா தேவியும்
நற்சுகாவதிஎனும் நாமம்இனிது ஆயினாள்.

123 அன்னவர்தம் புத்திரிகள் ஆனஏழு பேர்களாம்
நன்சுயம்பிரபையும் நாகசுப்பிரபையும்
இன்பநல் பிரபையும் இலங்குசொர்ணமாலையும்
நங்கைநல் பதுமையும் நாகதத்தை என்பரே.

124 வெள்ளியின் மலையில் மேகவாகனன்துரந்திடக்
கள்அவிழ் மாசுகண்டன்அவன் வந்துஉடன்
கிள்ளைஅம் மொழியினாரைக் கேட்டுஉடன் பெறுகிலன்
வெள்ளைஅம் கொடிநகர வேந்தனை வதைத்தனன்.

125 வேந்தனுக்கு இளையன்உன்னை வேண்டிஓலையேதர
சேர்ந்தவன் அளித்தஓலை வாசகம் தௌபிந்தபின்
நாந்தக மயிற்கணை நலம்பெறத் திரித்துஉடன்
போந்தவனைக் கொன்றனன் பூஅலங்கல் மார்பனே.

நாககுமாரனின் வெற்றியும் நங்கையர் பலரை மணத்தலும்

126 அபிசந்திரன்தன்புரம் அத்தினாகம் ஏகியே
சுபமுகூர்த்த நல்தினம் சுபசந்திரன் சுதைகளும்
அபிசந்திரன் தன்மகளாம்சுகண்டன் சுதையுடன்
செபமந்திர வேள்வியால் செல்வன்எய்தி இன்புற்றான்.

127 நங்கைமார்கள் தன்உடன் நாகநல் குமரனும்
இங்கிதக் களிப்பினால் இசைந்துஇனிப் புணர்ந்துஉடன்
பொங்குநகர்ப் புறத்தினில் பூவளவன் மேவியே
திங்கள்சேர் செய்குன்றினும் சேர்ந்துஇனிது ஆடுநாள்.

அவந்திநாட்டு மேனகியை நாககுமாரன் அடைதல்

128 அவந்திஎன்னும் நாட்டினுள் ஆனஉஞ்சை நீள்நகர்
உவந்தமன்னன் நாமமும் ஓங்கும்செய சேனனாம்
அவன் தனன் மனைவியர் ஆனநல் செயசிரீந்யாம்
சிவந்தபொன் நிறமகள் சீருடைய மேனகி.

129 பாடலீ புரத்துஇருந்த பண்புமாவியாளனும்
நாடிவந்து இருந்தனன் நன்குஉஞ்சை நகர்தனில்
சேடிகண்டு மேனகிக்குச் செப்பவந்து கண்டுஅவள்
நாடிஅவள் போயினள் நன்நிதிப் புரிசையே.

130 அந்நகர்விட்டு ஏகினன் ஆனமாவியாளனும்
சென்றுதன் தமையனைச் சேவடி பணிந்தபின்
நன்றுடன் வணங்கினன் நாகநல் குமரனை
இன்றிலன்தான் யார்என என்தம்பிஅவன் என்னலும்.

131 மின்னின்இடை நேர்இழை மேனகி எனஒரு
மன்மதனை இச்சியாள் மாவியாளன் சொல்லலும்
அந்நகரில் செல்லலும் அரிவையர் தரித்திட
மன்னன்அம்பு வேள்வியால் மன்னிநல் புணர்ந்தனன்.

மதுரையில் சிரீமதியை இசைப்போட்டியில் வென்று நாககுமாரன் பெறுதல்

132 மற்றும்ஒன்று உரைத்தனன் மதுரைமா நகரியில்
உற்றுஇருந்த சிரீமதி ஓர்ந்துநாடகம்தனில்
வெற்றிமுழவு ஏழ்இயம்ப வீறுடைய வல்லவன்
பற்றுடன் அவள்பதியாம் பார்மிசைமேல் என்றனன்.

மதுரை வந்த வணிகனிடம் நாககுமாரன் அவன் கண்ட அதிசயம் இயம்பக் கேட்டல்

133 அங்குசென்றுஅவ் அண்ணலும் அவளைவென்று கொண்டனன்
பொங்கும்இக் குழலியர்ப் புணர்ந்துஉடன் இருந்தபின்
வங்கமீது வந்தஓர் வணிகனை வினவுவான்
எங்குஉள அதிசயம் இயம்புகநீ என்றனன்.

வணிகன் பூதிலகமாபுரத்து அதிசயம் கூறல்

134 பொங்கும்ஆழியுள்ஒரு பூதிலகமாபுரம்
புங்கவன்தன் ஆலையம் பொங்குசொன்ன வண்ணமுன்
நங்கைமார் ஐஞ்நூற்றுவர் நாள்தொறும் ஒலிசெய்வார்
அங்குஅதற்குக் காரணம் யான்அறியேன் என்றனன்.

நாககுமாரன் அந்நகரம் சென்று சினாலயம் பணிந்து இருந்தமை

135 தனதுவித்தை தன்னையே தான்நினைக்க வந்தபின்
மனத்துஇசைந்த தோழரோடு வள்ளல்தீ பஞ்சுஎன்றுநல்
கனகமய ஆலையங் கண்டுவலங் கொண்டுஉடன்
சினன்அடி பணிந்துமுன் சிறந்துமிக்கு இருந்தனர்.

ஆலயத்தின் முன்வந்து ஐந்நூறு மங்கையர் அலற, அதன் காரணம் குமாரன் வினாவுதல்

136 ஒருநிரையாய் மங்கையர் ஓசைசெய்யக் கேட்டபின்
திருஅலங்கல் மார்பினான் சேரஅழைத்து அவர்களை
அருகன்ஆலையத்துமுன் அலறும்நீங்கள் யார்எனத்
தரணிசுந்தரியவள் அவன்கு இதுஎன்று கூறுவாள்.

ஐந்நூற்றுவருள் தரணி சுந்தரி தங்கள் நிலையெடுத்துரைத்தல்

137 அரியவெள்ளி மாமலை ஆடும்கொடி யேமிடை
பிரிதிவி திலகம்எங்கள் பேருடைய நன்நகர்
வரதிரட்சகன்எமர் தந்தையை மருகனுக்குக்
கருதிஎம்மைக் கேட்டனன் கண்ணவாயுவேகனே.

138 எந்தையும் கொடாமையால் எரிஎன வெகுண்டனன்
எந்தையை வதைசெய்து எங்களையும் பற்றியே
இந்தநல் வனத்துஇருந்தான் என்றவளும் கூறலும்
அந்தவாயுவேகனை அண்ணல்வதை செய்தனன்.

வாயுவேகனைக் கொன்ற நாககுமாரன் நங்கையர் ஐந்நூற்றுவரை மணந்து இன்புறுதல்

139 அஞ்சுநூற்று மங்கையரை அண்ணல்வேள்வியால்எய்தி
நெஞ்சில்அன்பு கூரவே நிரந்தரம் புணர்ந்தபின்
அஞ்சுநூற்றுவர்படர்கள் ஆளர்ஆகி வந்தனர்
தஞ்சமாய் அவர்தொழுது அகமகிழ்ந்து செல்லுநாள்.

கலிங்கநாட்டு அரசகுமாரி மதனமஞ்சிகையை நாககுமாரன் கூடி மகிழ்தல்

140 கலிங்கம்என்னும் நாட்டின்உள் கனகமய இஞ்சிசூழ்ந்து
இலங்குரத்னபுரம் இந்நகர்க்கு மன்னவன்
துலங்குசந்திரகுப்தன் தோகைசந்திரம்மதி
பெலங்கொள்இவர் நன்மகள் பேர்மதனமஞ்சிகை.

141 நாகநல் குமரன் சென்று நன்மந்திர வேள்வியால்
வாகனம் இனிதின்இன்று மதன்மஞ்சிகையொடும்
தாகமிக்கு உடையனாய்த் தான்லயப் பருகினான்
நாகநல் புணர்ச்சிபோல் நன்குஉடன் இருந்துஅரோ.

கங்காளநாட்டு அரசகுமாரி இலக்கணையை நாககுமாரன் பெற்றுப் போகந் துய்த்தல்

142 கங்கைநீர் அணிந்துஇலங்கும் கங்காளநன் நாட்டின்உள்
திங்கள்தவழ் மாடம்நல் திலகபுர மன்னவன்
பொங்குமகுடம் முடி பொற்புவிசையந்தரன்
இங்கித மனைவிபேர் இயல்விசையை என்பளே.

143 இலக்கணை எனும்மகள் இலக்கணம் உடையவள்
மிக்கஅண்ண லும்சென்று மெய்ம்மைவேள்வி தன்மையால்
அக்கணத்து அவன்எய்தி அவள்தன்போகம் துய்த்தபின்
தொக்ககாவு தன்உளே தொல்முனிவர் வந்துஅரோ.

நாககுமாரன் அங்கு வந்த முனிவரைப் பணிந்து தன் மனக் கருத்திற்கு விளக்கம் கேட்டல்

144 ஊற்றினைச் செறித்திடும் உறுதவனுடைச் சாரணை
நாற்றமிக் குமரனும் நன்புறப் பணிந்தபின்
ஏற்றஅறங் கேட்டுஉடன் இருந்துஇலக்கணையின்மேல்
ஏற்றமோகம் என்என இயன்முனி உரைப்பரே.

ஐந்தாம் சருக்கம்

நாககுமாரனின் முந்திய பிறப்பு வரலாறு

145 நாவலந் தீவு தன்னுள் நன்குஅயிராவதத்தின்
மேவுமின் முகில்சூழ் மாட வீதசோகப்புரத்துக்
காவிநன் விழிமாதர்க்குக் காமன்விக்கிரமராசன்
தாவில் சீர் வணிகன் நாமம் தனதத்தன் என்பது ஆமே.

146 மனைவிதன் தனதத்தைக்கு மகன்நாகதத்தன் ஆகும்
வனைமலர் மாலை வேலான் மற்றுஒரு வணிகன் தேவிப்
புனைமலர்க் கோதை நல்லாள் பொற்புடை வசுமதிக்கு
மனையின்நன்மகள்தன் நாமம் இயன்நாகவசுஎன் பாள்இம்.

147 நண்புறு நாகதத்தன் நாகநல்வசுஎன்பாளை
அன்புறு வேள்வி தன்னால் அவளுடன் புணர்ந்து சென்றான்
பண்புறு நல்தவத்தின் பரமுனி தத்த நாமர்
இன்புறும் புறத்தின் வந்தார் இறைவன் ஆலையத்தின் உள்ளே.

148 நாகதத்தன்சென்று அந்த நன்முனி சரண்அடைந்து
வாகுநல் தருமம் கேட்டு அனசன நோன்பு கொண்டான்
போகபுண்ணியங்கள் ஆக்கும் பூரண பஞ்சமீயில்
ஏகநல் தினத்தின் நன்று இடர்பசி ஆயிற்று அன்றே.

149 தருமநல் தியானம் தன்னால் தன்னுடை மேனி விட்டு
மருவினான் அசோத மத்தின் வானவன் ஆகித் தோன்றி
வருகயல் விழியாள் நாக வசுவும்வந்து அமரனுக்கு
மருவிய தேவி ஆகி மயல்உறுகின்ற அன்றே.

150 அங்குஐந்து பல்ல மாயு அமரனாய்ச் சுகித்து விட்டு
இங்குவந்து அரசன் ஆனாய் இனிஅந்தத் தேவி வந்து
தங்குநின் மனைவி ஆனாள் தவமுனி உரைப்பப் பின்னும்
எங்களுக்கு அந்த நோன்பு இனிதுவைத்து அருள என்றான்.

நாககுமாரன் வேண்ட முனிவர் நாகபஞ்சமி நோன்பினை விளக்குதல்

151 திங்கள் கார்த்திகையில் ஆதல் சேர்ந்தபங்குனியில் ஆதல்
பொங்குஅனல் ஆடி ஆதல் பூரண பக்கம் தன்னில்
அங்குறு பஞ்சமியின் அனசன நோன்பு கொண்டு
தங்கும்ஆண்டு ஐந்து நோற்றான் தான்ஐந்து திங்கள் அன்றே.

152 இந்தநல் கிரமம் தன்னில் இனிமையின் நோன்பு நோற்று
அந்தம்இல் அருகர் பூசை அருள்முனி தானம் செய்தால்
இந்திர பதமும் பெற்று இங்குவந்து அரசர் ஆகிப்
பந்ததீவீனையை வென்று பஞ்சமகதியும் ஆமே.

முனிவர் உரைப்படி நாககுமாரன் பஞ்சமி நோன்புகொள்ள அவன் தந்தை ஏவலால் அமைச்சன் நயந்தரன்வந்து அழைத்தல்

153 என்றுஅவர்உரைப்பக் கேட்டு இறைஞ்சிக் கைக்கொண்டு நோன்பை
சென்றுதன் பவனம் புக்கான் சேயிழையோடு மன்னன்
நன்றுடன் செல்லும் நாளுள் நயந்தரன் வந்துஇறைஞ்சி
உன்னுடைத் தந்தை உன்னை உடன் கொண்டு வருக என்றான்.

நாககுமாரன் தன் நகருக்கு மனைவி இலக்கணையோடும் பிறரோடும் திரும்புதல்

154 அமையும்நன்கு அமைச்சன் சொல்லை அருமணி மார்பன் கேட்டு
சமையும்நால் படையும் சூழச் சாலலக் கணையினோடும்
இமையம்போல் களிற்றின்ஏறி இனியநல் தோழன் மாரும்
இமையவர்க்கு இறைவன் போல எழில்பெறப் புக்க அன்றே.

மகன் நாககுமாரனைத் தந்தை தழுவி வரவேற்றல்

வேறு

155 தாதைஎதிர் கொள்ளஅவன் தாழ்ந்துஅடி பணிந்தான்
ஆதரவினன் நன்மகனை அன்புற எடுத்தும்
போதமிகப் புல்லியபின் போந்தனர் மனைக்கே
ஏதம்இல்சீர் இன்புற இனிதுடன் இருந்தார்.

நாககுமாரன் தான் மணந்த மனைவியரை யெல்லாம் அழைப்பித்து அவருடன் சேர்ந்திருத்தலும், தந்தை அவனுக்கு முடிசூட்டித் துறவு பூணுதலும்

156 வெற்றியுடன் வேள்விசெய்த வேல்விழியினாரை
உற்றுஉடனே மாதரை ஒருங்குஅழைக்க வந்தார்
சித்திரநல் பாவையரைச் சேர்ந்துஉடன் இருந்தான்
பற்றுஅறச் செயந்ந்தரனும் பார்மகன்மேல் வைத்தான்.

157 நாககுமரன்தனக்கு நன்மகுடம் சூட்டிப்
போகஉப போகம்விட்டுப் புரவலனும் போகி
யாகமன் அடைக்குமுனியவர் அடிபணிந்து
ஏகமனம் ஆகியவன் இறைவன் உருக்கொண்டான்.

பிரிதிதேவியும் துறவுபூண்டு நற்பேறு பெறுதல்

158 இருவினை கெடுத்தவனும் இன்பஉலகு அடைந்தான்
பிரிதிவிநல் தேவியும்தன் பெருமகனை விட்டு
சிரிமதி எனும்துறவி சீர்அடி பணிந்து
அரியதவம் தரித்துஅவளும் அச்சுதம் அடைந்தாள்.

நாககுமாரன் வியாளன் முதலிய தோழர்களுக்குத் தேயங்கள்அளித்தலும், தன் மனைவியருள் இலக்கணையைப் பட்டத்தரசி யாக்குதலும்

159 வேந்தன்அர்த்த ராச்சியம் வியாளனுக்கு அளித்தான்
ஆய்ந்தபல தோழர்களுக்கு அவனிகள் அளித்துக்
சேர்ந்ததன் மனைவியருள் செயலக்கணைதன்னை
வாய்ந்த மகாதேவிபட்டம் வன்மைபெற வைத்தான்.

இலக்கணையார் வயிற்றில் புதல்வன் பிறத்தல்

160 இலக்கணையார் தன்வயிற்றில் நல்சுதன் பிறந்தான்
மிக்கவன்தன் நாமமும் மிகுதேவகுமாரன்
தொக்ககலை சிலைஅயில் பயின்றுமிகு தொல்தேர்
ஒக்கமிக் களிறுஉடனே ஊர்ந்துதினம் சென்றான்.

நாககுமாரன் மன்னர் புடைசூழ அரியாசனத்து வீற்றிருத்தல்

161 புரிசைஎழ நிலத்தின்மிசை பொற்புஉற விளங்கும்
அரியஅரியாசனத்தில் அண்ணல் மிகஏறி
எரிபொன்முடி மன்னர்கள் எண்ஆயிரவர் சூழ
இருகவரிவீசஇனி எழில்பெற இருந்தான்.

மகன் தேவகுமாரனுக்கு முடி சூட்டி நாககுமாரன் துறவு பூணவே அவன் தேவி இலக்கணையும் துறவு மேற்கொள்ளல்

162 அரசுஇனிது இயல்பினின் அமர்ந்துஇருக்கும் அளவில்
பரவுமுகில் மாய்ந்திடப் பார்த்திபன் விரத்தி
விரவிமிகு குமரன்மிசை வீறுமுடி சூட்டி
அரியதவம் தாங்கஅவன் அன்புடன் எழுந்தான்.

163 அமலமதி கேவலியின் அடிஇணை வணங்கி
விமலன்உருக் கொண்டனன்நல் வேந்தர்பலர் கூட
கமலமலராள் நிகர்நல் காட்சிஇலக்கணையும்
துமிலமனைப் பதுமைஎனும் துறவர்அடிபணிந்தாள்.

நாககுமாரனும் அவன் தோழர் முதலியோரும் சித்தியும் முத்தியும் பெறுதல்

வேறு

164 நறுங்குழல் இலக்கணையும் நங்கைமார்தம் கூட
உறுதவம் தரித்துக்ந் கொண்டு உவந்துஅவர் செல்லும் நாளுள்
மறுவில்சீர் முனிவன் ஆய நாககுமாரன் தானும்
இறுகுவெவ் வினைகள் வென்று இனிச்சித்தி சேர்ந்தது அன்றே.

165 வியாள மாவியாளர் தாமும் விழுத்தவத்து அனயை என்னும்
நயாஉயிர் தியானம் தன்னால் நால்இரு வினைகள் வென்று
செயத்துதி தேவர் கூறிச் சிறந்த பூசனையும் செய்ய
மயாஇறப் பிறப்பும் இன்றி மருவினார் முத்தி அன்றே.

166 அருந்தவ யோகம் தன்னால் லச்சேத் தியபேத் தியர்தம்
இருவினை தம்மை வென்று இன்புறும் சித்தி சேர்ந்தார்
மருவுநல் தவத்தி னாலே மற்றும் உள்ளோர்கள் எல்லாம்
திருநிறைச் சோதம் ஆதி சேர்ந்துஇன்பம் துய்த்தார் அன்றே.

167 நாகநல் குமரன்கு ஆயு நான்குஆண்டு ஐஞ்நூற்று இரட்டி
ஆகுநல் குமார காலம் ஐந்து முப்பத்து இரட்டி
போகபூமிஆண்ட பொருவில் எண்நூறு ஆண்டு
ஆருநல் தவத்தில் ஆண்டு அறுபத்து நான்குஅது ஆமே.

168 மறுஅறு மனையவர்க்கும் மாதவர் தமக்கும் ஈந்த
பெறும்இரு நிலங்கள் எங்கும் பெயர்ந்து நல்கேவலியாய்
அறமழை பொழிந்த காலம் அறுபத்து ஆறாண்டு சென்றார்
உறுதவர் தேவர் நான்கும் உற்றுஎழு குழாத்தி னோடே.

நூற் பயன்

169 இதன்கதை எழுதி ஓதி இன்புறக் கேட்பவர்க்கும்
புதல்வர்நல் பொருளும் பெற்றுப் புரந்தரன் போல வாழ்ந்து
கதம்உறு கவலை நீங்கிக் காட்சிநல் அறிவு முன்பாய்ப்
பதமிகும் அமர யோகம் பாங்குடன் செல்வர் அன்றே.

உலகிற்கு அறவுரை

170 அறம்இன்றிப் பின்னை ஒன்றும் உயிர்க்குஅரண் இல்லைஎன்றும்
மறம்இன்றி உயிர்க்கு இடர்செய் மற்றுஒன்றும் இல்லை என்றும்
திறம்இது உணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக்கு அஞ்சி
மறம்இதை விட்டு அறத்தில் வாழுமின் உலகத் தீரே.

நாக குமார காவியம் முற்றிற்று.

 
மேலும் நாக குமார காவியம் »
இதன் ஆசிரியரும் ஒரு சமணப் பெண்துறவியே. பெயர் அறியக் கிடைக்கவில்லை. 5 சருக்கங்களில் 170 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar