பதிவு செய்த நாள்
15
மார்
2013
05:03
பொழிலில் தார் மணம்
அவிழுங் காதல ராயர மங்கையர்
பவழ வாயமு தம்பரு கிக்களி
தவழு மென்முலை புல்லத் ததைந்ததார்
கமழு நின்றன கற்பகச் சோலையே 116
பொழிலிற் குளிர்ச்சி
கிளருஞ் சூழொளிக் கின்னர தேவர்தம்
வளரும் பூண்முலை யாரொடு வைகலால்
துளருஞ் சந்தனச் சோலைக ளூடெலாம்
நளிருந் தெய்வ நறுங்குளிர் நாற்றமே 117
வாடையின் வருகை
மங்குல் வாடைமந் தார்வன மீதுழாய்ப்
பொங்கு தாதொடு பூமதுக் கொப்பளித்
தங்க ராகம ளாயர மங்கையர்
கொங்கை வாரிகள் மேற்குதி கொள்ளுமே 118
தழைப் படுக்கை
தேன கத்துறை யுஞ்செழுஞ் சந்தனக்
கான கத்தழை யின்கமழ் சேக்கை மேல்
ஊன கத்தவர் போகமு வந்தரோ
வான கத்தவர் வைகுவர் வைகலே 119
பாறையில் மகரந்தப்பொடி
மஞ்சு தோய்வரை மைந்தரொ டடிய
அஞ்சி லோதிய ராரள கப்பொடி
பஞ்ச ராகம்ப தித்தப ளிக்கறைத்
துஞ்சு பாறைகண் மேற்று தை வுற்றதே 120
பாறையில் அடிக்குறி
மாத ரார்நடை கற்கிய வானிழிந்
தாது வண்டுண வூழடி யூன்றிய
பாத ராகம்ப தித்தப ளிக்கறை
காத லார்தம கண்கவர் கின்றவே 121
அருவிநீரில் மல்லிகை மணம்
ஆகு பொன்னறை மேலரு வித்திரள்
நாக கன்னிய ராடலின் ஞால்கைம்மா
வேக மும்மத வெள்ளம ளாவிய
போக மல்லிகை நாறும்பு னல்களே 122
சேடி நாட்டின் சிறப்பு
பூக்க ளாவன பொன்மரை பூம்பொழில்
காக்க ளாவன கற்பகச் சோலைகள்
வீக்கு வார்கழல் விஞ்சையர் சேடிமே
லூக்கி யமுரைக் கின்றதிங் கென்கொலோ 123
இரதநூபுரச் சக்கரவாள நகரம்
வரையின் மேன்மதி கோடுற வைகிய
திருவ நீளொளித் தென்றிசைச் சேடிமே
லிரத நூபுரச் சக்கர வாளமென்
றுரைசெய் பொன்னக ரொன்றுள தென்பவே 124
வேறு -- வாழையின் மாண்பு
அம்பொன் மாலையார்க ளித்த லத்தெ ழுந்த ரத்தவாய்க்
கொம்பா னார் கொடுத்த முத்த நீர வாய கோழரைப்
பைம்பொன் வாழை செம்பொ னேப ழுத்து வீழ்ந்த சோதியால்
வம்பு பாய்ந்து வந்தொ சிந்து சாறு சோர்வ மானுமே 125
பாக்கு மரங்கள்
வேய்தி ழன்னி லாவி லங்கு வெள்ளி விம்மு பாளைவாய்ப்
பாய்நி ழற்ப சுங்க திர்ப்ப ரூஉம ணிக்கு லைகுலாய்ச்
சேய்நி ழற்செ ழும்பொ னாற்றி ரண்ட செம்ப ழத்தவாய்ப்
போய்நி ழற்பொ லிந்து வீழ்வ போன்ற பூக ராசியே 126
மாடங்களும் மரங்களும்
காந்தி நின்ற கற்ப கந்தி ழற்க லந்து கையறப்
பாய்ந்தெ ரிந்த போல்வி ரிந்து பாரி சாத மோர்செய
வாய்ந்தெ ரிந்த பொன் மாட வாயி லாறு கண்கொளப்
போந்தெ ரிந்த போன்ம ரம்பு றம்பொ லிந்தி லங்குமே. 127
இன்பத்திடையே தென்றல்
மாசில் கண்ணி மைந்த ரோடு மங்கை மார்தி ளைத்தலில்
பூசு சாந்த ழித்தி ழிந்த புள்ளி வேர்பு லர்த்தலால்
வாச முண்ட மாரு தந்தென் வண்டு பாட மாடவாய்
வீச வெள்ளி லோத்தி ரப்பொ தும்பர் பாய்ந்து விம்முமே 128
பலவகை மரங்கள்
ஆந்து ணர்த்த மால மும்ம சோக பல்ல வங்களும்
தாந்து ணர்த்த சந்த னத்த ழைத்த லைத்த டாயின
மாந்து ணர்ப்பொ தும்பர் வந்து வைக மற்ற தூன்றலால்
தேந்து ணர்ச்சு மந்தொ சிந்த சைந்த தேவ தாரமே 129
இன்ப துன்பம்
தெய்வ யாறு காந்த ளஞ்சி லம்பு தேங்கொள் பூம்பொழில்
பௌவ முத்த வார்ம ணற்ப றம்பு மௌவன் மண்டபம்
எவ்வ மாடு மின்ன போலி டங்க ளின்ப மாக்கலால்
கவ்வை யாவ தந்த கர்க்கு மார னார்செய் கவ்வையே 130
சுவலனசடி
மற்ற மாந கர்க்கு வேந்தன் மான யானை மன்னர் கோன்
அற்ற மின்றி நின்ற சீர ழற்பெ யர்ப்பு ணர்ச்சியான்
முற்று முன்ச டிப் பெ யர்சொன் மூன்று லஃகு மான்றெழப்
பெற்று நின்ற பெற்றியான் பீடி யாவர் பேசுவார் 131
சுவலனசடியின் பெருமை
இங்கண் ஞால மெல்லை சென்றி லங்கு வெண்கு டைந்நிழல்
வெங்கண் யானை வேந்தி றைஞ்ச வென்றி யின்வி ளங்கினான்
கொங்கு கொண்டு வண்ட றைந்து குங்கு மக்கு ழம்பளாய்
அங்க ராக மங்க ணிந்த லர்ந்த வார மார்பினான் 132
கல்விநலம் முதலியன
விச்சை யாய முற்றினான் விஞ்சையார்க ளஞ்சநின்
றிச்சை யாய வெய்தினா னேந்து செம்பொ னீண்முடிக்
கச்சை யானை மானவேற் கண்ணி லங்கு தாரினான்
வெச்ச னுஞ்சொ லொன்றுமே விடுத்து மெய்ம்மை மேயினான் 133
அம் மன்னவன்பால் ஒரு குற்றம் - வேறு
வெற்றி வெண்குடை விஞ்சையர் வேந்தவ
னொற்றை யந்தனிக் கோலுல கோம்புநாள்
குற்ற மாயதொன் றுண்டு குணங்களா
லற்ற கீழுயிர் மேலரு ளாமையே 134
அவ்வரசன் ஆட்சியில் நடுங்கியன
செம்பொ னீண்முடி யான்சொரு வின்றலை
வெம்பு வேலவன் விஞ்சையர் மண்டிலம்
நம்பி யாள்கின்ற நாளி னடுங்கின
கம்ப மாடக் கதலிகை போதுமே 135
ஆடவர் மேல் வளைந்த வில்
மின்னு வார்ந்தமந் தாரவி ளங்கிணார்
துன்னு தொன்முடி யானொளி சென்றநாள்
மன்னு மாடவர் மேல்வளைந் திட்டன
பொன்னு னார்புரு வச்சிலை போலுமே 136
உண்ணாத வாய்கள்
வெண்ணி லார்ச்சுட ருந்தனி வெண்குடை
எண்ணி லாப்புக ழானினி தாண்டநா
ளுண்ணி லாப்பல வாயுள வாயின
கண்ண னாரொடு காமக்க லங்களே 137
அந்நகரில் எவருங் கட்டுண்டு வருந்தார்
மாக்கண் வைய மகிழ்ந்துதன் றாணிழல்
நோக்கி வைக நுனித்தவ னாண்டநாள்
தாக்க ணங்கனை யார் தம தாயரால்
வீக்கப் பட்டன மென்முலை விம்முமே 138
கடியவையுங் கொடியவையும்
வடிய வாளவ னாளவும் வாய்களில்
கடிய வாயின கள்ளவிழ் தேமல
ரடிய வாய்ப்பயப் பட்டடங் காவலர்க்
கொடிய வாயின கொங்கவிழ் சோலையே 139
அரசன் மனைவி வாயுவேகை
மாய மாயநின் றான்வரை மார்பிடை
மேய பூமகள் போல விளங்கினாள்
தூய வாமுறு வற்றுவர் வாயவள்
வாயு வேகையென் பாள்வளர் கொம்பனாள் 140
வாயுவேகையின் மேன்மை
பைம்பொற் பட்ட மணிந்த கொல் யானையான்
அம்பொற் பட்ட நறுங்குழ லார்க்கெலாம்
செம்பொற் பட்டஞ் செறிந்த திருநுதல்
அம்பொற் பட்டுடை யாளணி யாயினான் 141
இருவரின் இன்பநிலை
கோவை வாய்குழ லங்குளிர் கொம்பனாள்
காவி வாணெடுங் கண்ணியக் காவலற்
காவி யாயணங் காயமிழ் தாயவன்
மேவு நீர்மைய ளாய்விருந் தாயினாள் 142
அருக்ககீர்த்தி என்னும் மகன் பிறத்தல்
முருக்கு வாயவண் முள்ளெயிற் றேர்நகை
யுருக்க வேந்த னொருங்குறை கின்றநாள்
பெருக்க மாகப் பிறந்தனன் பெய்கழல்
அருக்க கீர்த்தி யென் பானலர் தாரினான் 143
சுயம்பிரபை என்னும் மகள் பிறத்தல்
நாம நள்லொளி வேனம்பி நங்கையா
யேம நல்லுல கின்னிழிந் தந்நகைத்
தாம மல்லிகை மாலைச் சயம்பவை
காம வல்லியுங் காமுறத் தோன்றினாள் 144
சுயம்பிரபையின் அழகுச் சிறப்பு
கங்கை நீரன ஞான்ற கதிரிளந்
திங்க ளாற்றெழப் பட்டது செக்கர்வான்
மங்கை மார்பிறப் பும்மட மாதரிந்
நங்கை யாற்றெழப் பாடு நவின்றதே 145
முகம் , கண், புருவம், இடை ஆகியவை
வண்டு சூழ்மலர் போன்றள கக்கொடி
கொண்டு சூழ்ந்தது குண்டல வாண்முகங்
கெண்டை கண்கிள ரும்புரு வஞ்சிலை
உண்டு கொல்லென வுண்டும ருங்குலே 146
புருவங்கள் துவளுதல்
காதின் மீதணி கற்பகத் தொத்திணர்
ஊது தேனிற கூன்றியி ருத்தொறும்
போது தேர்முகத் தும்புரு வக்கொடி
நோத லேகொல்நொ சிந்துள வாங்களே 147
சுயம்பிரபையின் அழகு
விண்ண ணங்க விழித்துவி ளங்கொளி
மண்ண ணங்குற வேவளர் வெய்திய
பெண்ண ணங்கிது தோன்றிய பின்கொலோ
கன்ன ணங்குறு காரிகை கண்டதே 148
கொங்கு போதரு வான்குமிழ் கின்றன
அங்க ராகம ணிந்ததை யன்றியும்
நங்கை நாகரி கம்பொறை நாண்மதுத்
தங்கு வார்கொடி யிற்றளர் வித்ததே 149
வளருதல்
மங்கு றோய்வரை மன்னவன் றொல்குடி
நங்கை போற்றியென் றேத்தி நறுங்குழல்
மங்கை மார்பலர் காப்ப வளர்ந்துதன்
கொங்கை யாற்சிறி தேகுழை வெய்தினாள் 150
பற்கள் தோன்றுதல்
வாம வாணொடு நோக்கிம டங்கனி
தூம வார்குழ லாடுவர் வாயிடை
நாம நள்லொளி முள்ளெயி றுள்ளெழு
காம னாளரும் பிற்கடி கொண்டவே. 151
சுயம்பிரபை வித்தைகளடைதல்
மஞ்சு தோய்வரை யாரஞ்சு மாண்பினால்
அஞ்சி லோதிநி னைப்பின கத்தவாய்
விஞ்சை தாம்பணி செய்தல்வி ரும்பினன்
எஞ்சி லாவகை யாலிணர் கொண்டவே 152
சுயம்பிரபையின் பிறப்பால் அரசன் சிறப்படைதல்
நங்கை தோன்றிய பின்னகை வேலினாற்
கங்கண் ஞாமல மர்ந்தடி மைத்தொழில்
தங்க நீண்முடி யாற்றலை நின்றனர்
வெங்கண் யானைவி ளங்கொளி வேந்தரே 153
வேறு - வயந்ததிலகை மன்னனிடங் கூறுதல்
நங்கையாள் வளர்ந்து காம நறுமுகை துணர வைத்து
மங்கையாம் பிராய மெய்தி வளரிய நின்ற நாளும்
பைங்கண்மால் யானை யாற்குப் பருவம்வந் திறுத்த தென்றாள்
வங்கவாய்ப் பவழச் செவ்வாய் வயந்தமா திலகை யென்பாள் 154
வேனில் வரவைக் கூறுதல்
தேங்குலா மலங்கன் மாலைச் செறிகழன் மன்னர் மன்ன!
பூங்குலாய் விரிந்த சோலைப் பொழிமதுத் திவலை தூவக்
கோங்கெலாங் கமழ மாட்டாக் குணமிலார் செல்வ மேபோல்
பாங்கெலாஞ் செம்பொன் பூப்ப விரிந்தது பருவ மென்றாள் 155
வண்டுகள் களிப்பு
வேய்ந்திண ரொசிந்த சோலை வேனிலான் வென்றி யோகைத்
தேந்துணர் கொடுப்ப மூழ்கித் தேறல் வாய் நெகிழ மாந்தித்
தாந்துணர் துணையோ டாடிச் சாறுகொண் டூறு மேரார்
மாந்துண ரொசிய வேறி மதர்த்தன மனிவண் டெல்லாம் 156
இசைக்குப் பரிசில்
கடிமலர்க் கணையி னான்றன் கழலடி பரவிக் காமர்
படிமலர்த் தும்பி யென்னும் பாண்படை தொடர்ந்து பாடக்
கொடிவளர் மகளிர் பூங்கட் குடைந்துநீர் குடிமி னென்று
வடிமலர் வள்ளத் தேந்த வாய்மடுத் திட்ட வன்றே 157
தீயிடத்துக் கரியைப்போல் மலரிடத்திலே வண்டுகள் காணப்பெறல்
அஞ்சுடர் முருக்கி னங்கே ழணிமல ரணிந்து கொம்பர்த்
துஞ்சிடை பெறாது தும்பி துவன்றிமேற் றுகைக்குந் தோற்றம்
செஞ்சுட ரிலங்குஞ் செந்தீக் கருஞ்சுடர்க் கந்துள் சிந்தி
மஞ்சுடை மயங்கு கானம் மண்டிய வகையிற் றன்றே 158
வண்டுகள் மயக்கமும் தெளிவும்
அந்தழை யசோகம் பூத்த வழகுகண் டவாவி னோக்கி
வெந்தழற் பிறங்க லென்று வெருவிய மறுவி றும்பி
கொந்தவிழ்ந் துமிழப் பட்ட குளிர்மதுத் திவலை தூவச்
செந்தழற் பிறங்க லன்மை தெளிந்துசென் றடைந்த வன்றே 159
மாமரமும் மனந்திரிந்த செல்வரும்
மாஞ்சினை கறித்த துண்டந் துவர்த்தலின் மருங்கு நீண்ட
பூஞ்சினை முருக்கஞ் சோலைப் பூக்கள்வா யார மாந்தித்
தீஞ்சுவை மிழற்று கின்ற சிறுகுயில் செல்வ ரேனும்
தாஞ்சுவை திரிந்த பிஇன்றைச் சார்பவ ரில்லை யன்றே 160
பொழில்கள் புலம்புதல்
கோவைவண் டூது கின்ற குரவெனுங் குரைகொண் மாதர்
பாவைகொண் டாடு கின்ற பருவத்தே பயின்ற காமன்
ஆவிகொண் டிவளிக் கைவிட் டகலுமோ வென்று தத்தம்
பூவையுங் கிளியுங் கொண்டு புலம்பின பொழில்க ளெல்லாம் 161
அரசன் மனைவிமக்களுடன் மனோவனம் யென்னும் பூம்பொழிலை யடைதல்
வயந்தமாங் குணர்த்தக் கேட்டே மன்னவன் மக்க ளோடு
முயர்ந்ததன் னுரிமை யோடு முரிமைகாப் பவர்க ளோடும்
கயந்தலைக் களிருந் தேரும் வையமுங் கவின வேறி
நயந்தன னகரி னீங்கி னோவன நண்ணி னானே 162
வேறு - அரசனைப் பொழில் வரவேற்றல்
கோமான்சென் றணைதலுமே கொங்கணிந்த மலர்தூவித்
தேமாநின் றெதிர்கொள்ளச் சிறுகுயில்போற் றிசைத்தனவே
வாமான்றேர் மன்னற்கு மங்கலஞ்சொன் மகளிரைப்போற்
றூமாண்ட விளங்கொடிதந் தளிர்க்கையாற் றொழுதனவே 163
மணப்பொடி தூவிச் சாமரைகள் வீசிக் குடை பிடித்தல்
கடிவாச மலர்விண்ட கமழ்தாது கழலவற்கு
வடிவாசப் பொடியாக வனவல்லி சொரிந்தனவே
புடைவாசங் கொள மாலம் பூங்கவரி யெடுத்தெறியக்
குடைமாக மெனவேந்திக் கோங்கம்போ தவிழ்ந்தனவே 164
புகழ் பாடிப் பூவிறைத்தல்
கொடியாடு நெடுநகரக் கோமான்றன் குணம்பரவி
அடிபாடு மவர்களென வணிவண்டு முரன்றனவே
வடிவாய வேலவற்கு மலர்ச்சின்னஞ் சொரிவனபோல்
கொடுவாய கிளிகோதிக் குளிர்நறும்போ துகுத்தனவே 165
தென்றல் வீசுதல்
குரவகத்து குடைந்தாடிக் குளிர்நறவங் கொப்பளித்தார்த்
தரவவண்டின் னிசைபாட வருவிநீ ரளைந்துராய்
விரைமலர்ந்த துணர்வீசி விரைஞாற வருதென்றல்
புரவலன்றன் றிருமுடிமேற் போதலர வசைத்ததே 166
அரசன் பெண்களுக்கு பொழில் வளங்காட்டி விளையாடுதல்
இன்னவா றிளவேனி லெதிர்கொள்ள வெழில்யானை
மன்னவாந் தனிச்செங்கோன் மறவேல்வை யகவேந்தன்
தன்னவா மடவாரைத் தானுவந்து பொழில்காட்டி
மின்னவா மிடைநோவ விளையாட வருளினான் 167
இளவேனிற் பருவம் உங்கள் செல்வம் போன்றது என்றது
எரியணிந்த விளம்பிண்டி யிணரார்ந்த விடமெல்லாம்
பொரியணிந்த புன்குதிர்ந்து பூநாறுந் துறையெல்லாம்
வரியணி ந்து வண்டூத வளர்கின்ற விளவேனில்
புரியணிந்த குழலீர்நுஞ் செல்வம்போற் பொலிந்ததே 168
கைகளும் இடைகளும்
காரணிந்த குழலீர்நுங் கைத்தலங்க டகைநோக்கிச்
சீரணிந்த செழும்பிண்டி தளிரீன்று திகழ்ந்தனவே
வாரணிந்த முலையீர்நும் மருங்குறனின் வகைநோக்கி
ஏரணிந்த குருக்கத்தி யிளங்கொடித்தா யீன்றனவே 169
மாந்தளிர் முதலியவை
மாந்தளிரிங் கிவைநுமது நிறங்கொண்டு வளர்ந்தனவே
ஏந்திளந்தீங் குயிலிவைநுஞ் சொற்கற்பா னிசைந்தனவே
தேந்தளங்கு குழலீர்நுஞ் செவ்வாயி னெழினோக்கித்
தாந்தளிர்மென் முருக்கினிய தாதொடு ததைந்தனவே 170
கண்மலர்
காவியுஞ் செங் கழுநீருங் கமலமுங் கண் விரிந்துநளி
வாவியு மண் டபமுமெழின் மதனனையு மருட்டுமே
தூதுயருங் கிளியன்ன சொல்லினீர் துணையில்லார்
ஆவியுய்ந் துள்ளாராத லரிதேயிவ் விள வேனில் 171
வேறு - அரசன் திருக்கோயிலை அடைதல்
இன்னண மிளையவர் மருள வீண்டுசீர்
மன்னவன் வயந்தமாட் டருளி மாமணிக்
கன்னவில் புரிசையுட் கடவுட் காக்கிய
பொன்னவி றிருநகர் பூவொ டெய்தினான் 172
திருக்கதவம் திறத்தல்
உலமுறை தோளினா னுவகை கூர்ந்தனன்
குலமுறை வழிபடுந் தெய்வக் கோயிலை
வலமுறை வந்தனன் வரலு மாமணிக்
கலமுறை கதிர்நகைக் கபாடம் போழ்ந்ததே 173
சுடர் விளங்குதல்
பிணிநிலை பெயர்ப்பன பிறவி தீர்ப்பன
மணிநிலை விசும்பொடு வரங்க ளீவன
கணிநிலை யிலாத்திறற் கடவுட் டானகம்
மணிநிலைச் சுடரொளி மலர்ந்து தோன்றவே 174
அரசன் கடவுளைப் போற்றத் தொடங்குதல்
மெய்ம்மயி ரெறிந்தொளி துளும்பு மேனியன்
கைம்முகிழ் முடித்தடங் கதழச் சேர்த்தினான்
வெம்மைசெய் வினைத்துகள் விளிய வென்றவன்
செம்மலர்த் திருந்தடி சீரி னேத்தினான் 175
வேறு - வரிப்பாட்டு
எல்லாமாகிய நின்னை உணர்வார் அரியர் என்றல்
அணியாது மொளிதிகழு மாரணங்கு திருமூர்த்தி
கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறையுமே
கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறைந்தாலும்
அணிஞால முடையாயை யறிவாரோ வரியரே 176
படைக்கலந் தாங்காத நின்னை அறிபவர் அரியர் என்றல்
பகைநாறு மயிற்படைகள் பயிலாத திருமூர்த்திறை
இகன்மாற வென்றுயர்ந்த விறைவனென் றறையுமே
இகன்மாற வென்றுயர்ந்த விறைவவென் றறைந்தாலும்
அகன்ஞால முடையாயை யறிவாரோ வரியரே 177
ஒருமருவுமற்ற நின்னை எல்லோரும் உணரார் என்றல்
திருமறுவு வலனணிந்து திகழ்கின்ற திருமூர்த்தி
ஒருமறுவு மிலையென்ப தொழியாம லுணர்த்துமே
ஒருமறுவு மிலையென்ப தொழியாம லுணர்த்துகினும்
அருமறையை விரித்தாயை யறிவாரோ வரியரே 178
வேறு - அரசன் கோயில் வாயிலையடைதல்
இன்னண மிறைவனை யேத்தி யேந்தறன்
சென்னியுட் சேர்த்திய சேடப் பூவினன்
கன்னவி றிருமனிக் கபாடந் தாழுறீஇ
மின்னிய திருநகர் முற்ற முன்னினான் 179
சாரணர்கள் கோயிலையடைந்து போற்றுதல்
ஆரணங் கவிரொளி யெரிய வாயிடைச்
சாரணர் விசும்பினின் றிழிந்து தாதைதன்
ஏரணி வளநகர் வலங்கொண் டின்னணம்
சீரணி மணிக்குரல் சிலம்ப வாழ்த்தினார் 180
வேறு - வரிப்பாட்டு- அச் சாரணர் இறைவனை ஏத்துதல்
விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்
உரைமணந்தி யாம்பரவ வுண்மகிழ்வா யல்லை
யுண்மகிழ்வா யல்லை யெனினு முலகெல்லாங்
கண்மகிழ நின்றாய்கட் காத லொழியோமே 181
இதுவுமது
முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்று
யருகணங்கி யேத்தி யதுமகிழ்வா யல்லை
யதுமகிழ்வா யல்லை யெனினும் பெயராக்
கதிமகிழ நின்றாய்கட் காத லொழியோமே 182
இதுவுமது
மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய்
குணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை
கொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம்
கண்டுவப்ப நின்றாய்கட் காத லொழியோமே 183
வேறு - முனிவர்கள் போற்றுதலைக்கேட்ட உயிர்கள் தீவினை தீர்த்தல்
தீதறு முனிவர்தஞ் செல்வன் சேவடிக்
காதலி னெழுவிய காம ரின்னிசை
யேதமின் றெவ்வள விசைத்த தவ்வள
வோதிய வுயிர்க்கெலா முறுகண் டீர்ந்தவே 184
சமணமுனிவர்கள் அரசனுக்கு அறவுரை பகர விரும்பல்
இறைவனை யின்னண மேத்தித் தந்தொழில்
குறைவிலா முடிந்தபின் குணக்குன் றாயினார்
மறமலி மன்னனை நோக்கி மற்றவற்
கறமழை பொழிவதோ ரார்வ மெய்தினார் 185
சமணமுனிவர்கள் அமர்ந்த இடம்
தென்றலுஞ் செழுமதுத் திவலை மாரியும்
என்றுநின் றறாததோ ரிளந்தண் பிண்டியும்
நின்றொளி திகழ்வதோர் நிலாக்கல் வட்டமும்
சென்றவ ரமர்ந்துழித் திகழ்ந்து தோன்றுமே 186
அரசன் சென்று பணிதல்
வென்றவன் றிருநகர் விளங்கு வேதிகை
மூன்றில்சேர்ந் திருந்தனர் முனிவ ராதலும்
மின்றவழ் விளங்குவேல் வென்றி வேந்தனும்
சென்றவர் திருந்தடி முடியிற் றீட்டினான் 187
முனிவர்கள் அரசனுக்கு வாழ்த்துரை கூறி அமரச் செய்தல்
பாசிடைப் பரப்புடைப் பழன நாடனை
ஆசிடை கொடுத்தவ ரிருக்க வென்றலும்
தூசுடை மணிக்கலை மகளிர் சூழ்தர
ஏசிடை யிலாதவ னிருக்கை யெய்தினான் 188
முனிவர்கள் அரசன் நலத்தை வினாவ அரசன் வணங்குதல்
தாளுயர் தாமரைத் திருவுந் தண்கதிர்
நீளெழி லாரமு நிழன்ற கண்குலாம்
தோளிணை செவ்வியோ வென்னச் சூழொளி
வாளவன் மணிமுடி வணங்கி வாழ்த்தினான் 189
சடியரசன் வணங்கிச் சகநந்தனனை நோக்கிக் கூறுதல்
முனிவருட் பெரியவன் முகத்து நோக்கியொன்
றினிதுள துணர்த்துவ தடிக ளென்றலும்
பனிமலர்த் தாமரைப் பழன நாடனைக்
கனியமற் றின்னணங் கடவுள் கூறினான் 190
தன் கருத்தையுணர்ந்து முனிவர் கூற அரசன் அவரைப் பணிதல்
துன்னிய வினைப்பகை துணிக்குந் தொன்மைசா
லின்னுரை யமிழ்தெமக் கீமி னென்பதாம்
மன்னநின் மனத்துள தென்ன மாமணிக்
கன்னவில் கடகக்கை கதழக் கூப்பினான் 191
வேறு - சாரணர் அறிவுரை - பிறவிகள் அளவிடற் கரியன என்றல்
மெய்யறி விலாமை யென்னும் வித்தினிற் பிறந்து வெய்ய
கையறு வினைகள் கைபோய்க் கடுந்துயர் விளைத்த போழ்தில்
மையுற வுழந்து வாடும் வாழுயிர்ப் பிறவி மாலை
நெய்யுற நிழற்றும் வேலோ யினைத்தென நினைக்க லாமோ 192
நற்சார்பு கிடைக்கும் வரையிலும் உயிர்கள் பிறந்து வருந்தும் என்றல்
சூழ்வினை துரப்பச் சென்று சூழ்வினைப் பயத்தினாலே
வீழ்வினை பிறிது மாக்கி வெய்துற விளிந்து தோன்றி
ஆழ்துய ருழக்கு மந்தோ வளியற்ற வறிவில் சாதித்
தாழ்வினை விலக்குஞ் சார்வு தலைப்படா வளவு மென்றான் 193
அருகக்கடவுள் திருவடிகளே பிறவிப்பிணியை ஓழிக்கும் என்றல்
காதியங் கிளைகள் சீறுங் காமரு நெறிக்குங் கண்ணாய்ப்
போதியங் கிழவர் தங்க டியானத்துப் புலங்கொண் டேத்தி
யாதியந் தகன்று நின்ற வடிகளே சரணங் கண்டாய்
மாதுய ரிடும்பை தீர்க்குஞ் சரணெனப் படுவ மன்னா 194
இரத்தினத் திரயம்
மெய்ப்பொரு டெரிதல் மற்றப் பொருண்மிசை விரிந்த ஞான
மப்பொருள் வழாத நூலி னருந்தகை யொழுக்கந் தாங்கி
யிப்பொருள் ளிவைகள் கண்டா யிறைவனால் விரிக்கப் பட்ட
கைப்பொரு ளாகக் கொண்டு கடைப்பிடி கனபொற் றாரோய் 195
இரத்தினத் திரயத்தின் பயன் வீடுபேறு என்றல்
உற்றடு பிணியு மூப்பு மூழுறு துயறு நீக்கிச்
சுற்றிநின் றுலக மேத்துஞ் சுடரொளி யுருவந் தாங்கிப்
பெற்றதோர் வரம்பி லின்பம் பிறழ்விலா நிலைமை கண்டாய்
மற்ரவை நிறைந்த மாந்தர் பெறப்படு நிலைமை மன்னா 196
அறிவுரை கேட்டோர் மகிழ்ச்சி யடைதல்
அருந்துய ரறுக்கு மாண்பி னாரமிர் தவைகண் மூன்றும்
திருந்தநன் குரைப்பக் கேட்டே தீவினை யிருள்கள் போழும்
விரிந்தநல் லறிவின் சோதி விளங்கலிற் சனங்க ளெல்லாம்
பரிந்தகங் கழுமத் தேறிப் பாவம் பரிந் தவர்க ளொத்தார் 197
அரசன் மெய்யறிவடைதலும் உறவினர் நோன்பு மேற்கொள்ளலும்
மன்னிய முனிவன் வாயுண் மணிகொழித் தனைய வாகிப்
பன்னிய பவங்க டீர்க்கும் பயங்கெழு மொழிக டம்மால்
கன்னவில் கடகத் தோளான் காட்சியங் கதிர்ப்புச் சென்றான்
பின்னவ னுரிமை தானும் பெருவத மருவிற் றன்றே 198
வேறு - சுயம்பிரபை நோன்பு மேற்கொள்ள எண்ணுதல்
மன்னவன் மடமகள் வணங்கி மற்றவ
ரின்னுரை யமுதமுண் டெழுந்த சோதியள்
பன்னியொர் நோன்பு மேற் கொண்டு பாங்கினால்
பின்னது முடிப்பதோர் பெருமை யெண்ணினாள் 199
அரசன் முனிவரை வணங்கிக் கோயிலை வலஞ்செய்து செல்லுதல்
முனிவரர் திருந்தடி வணங்கி மூசுதேன்
பனிமலர் விரவிய படலை மார்பினான்
கனிவளர் பொழிலிடைக் கடவு ணன்னகர்
இனிதினின் வலமுறை யெய்தி யேகினான் 200
அரசன் பொழிலில் விளையாடி நகரத்தை அடைதல்
வாமமே கலையவர் மனத்தில் வார்பொழில்
காமவே ளிடங்கொள வருளிக் கண்ணொளிர்
தாமவே லிளையவர் காப்பத் தாழ்கதிர்
நாமவே னரபதி நகர நண்ணினான் 201
சமண முனிவர்கள் கடவுளை வணங்கி விண்வழியாகச் செல்லுதல்
அகநக ரரைசரோ டரைசன் சென்றபின்
சகதபி நந்தன ரென்னுஞ் சாரணர்
மிகநவின் றிறைவனை வணங்கி விண்ணிடைப்
பகனகு கடரொளி படர வேகினார் 202
சுயம்பிரபை நோன்பினால் மேம்படுதல்
அழற்கொடி யெறித்தொறுஞ் சுடரு மாடக
நிழற்கொடி யதுவென நிறைந்த காரிகைக்
குழற்கொடி யனையவள் கொண்ட நோன்பினால்
எழிற்கொடி சுடர்வதோ ரியற்கை யெய்தினாள் 203
மனநலத்தின் மாட்சி
முகைத்தவார் முல்லையை முருக்கு மெல்லியல்
நகைத்தவார் குழலவ டன்மை யாயினும்
வகுத்தவா றுயர்ந்தன நோன்பு மாசிலா
வகத்துமாண் புடையவர்க் கரிய தில்லையே 204
நோன்பினால் சுயம்பிரபை உடலொளி பெறுதல்
இந்திர வுலகமும் வணக்கு மீடுடைத்
தந்திர நோன்பொளி தவழத் தையலாள்
மந்திர நறுநெய்யால் வளர்ந்து மாசிலா
வந்தர வழற்கொடி யனைய ளாயினாள் 205
நோன்பு முடித்த சுயம்பிரபை அருகக்கடவுளுக்குத் திருவிழாச் செய்தல்
தாங்கருஞ் சுடொரொளி சக்கர வாளமென்
றோங்கிரும் பெயர்கொணோன் புயர நோற்றபின்
றீங்கரும் பனையசொற் சிறுமி தெய்வதக்
காங்கொரு பெருஞ்சிறப் பயர்தல் மேயினாள் 206
சுயம்பிரபை கடவுளைப் போற்றத் தொடங்கல்
தண்ணவிர் நிலாச்சுடர் தவழு மவ்வரைக்
கண்ணவிர் சென்னிமேற் கடவுட் டானமஃ
தண்ணலங் கோமக ளருச்சித் தாயிடை
விண்ணவ ருலகமூம் வியப்ப வேத்தினாள் 207
வேறு - வரிப்பாட்டு - சுயம்பிரபை கடவுளைப் போற்றுதல்
ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை
போதியங் கிழவனை பூமிசை யொதுங்கினை
போதியங் கிழவனை யொதுங்கிய
சேதியஞ் செல்வநின் றிருவடி வணங்கினம் 208
இதுவுமது
காமனைக் கடிந்தனை காலனைக் காய்ந்தனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
மாமலர் வண்ணநின் மலரடி வணங்கினம் 209
ஆரருள் பயந்தனை யாழ்துய ரவித்தனை
யோரரு ளாழியை யுலகுடை யொருவனை
யோரரு ளாழியை யுலகுடை யொருவனை
சீரருண் மொழியநின் றிருவடி தொழுதனம் 210
வேறு - சுயம்பிரபை வழிபாட்டு மலர்களைச் சூடிக்கொள்ளுதல்
கருவடி நெடுநல்வேற் கண்ணி யின்னணம்
வெருவுடை வினைப்பகை விலக்கும் வீறுசால்
மருவுடை மொழிகளாற் பரவி வாமன
திருவடிச் சேடமுந் திகழச் சூடினாள் 211
சுயம்பிரபை தன் தந்தையின் அரண்மனையை அடைதல்
வானுயர் கடவுளை வயங்கு சேவடித்
தேனுயர் திருமலர்ச் சேடங் கொண்டபின்
மானுயர் நோக்கியர் பரவ மங்கைதன்
கோனுயர் வளநகர்க் கோயின் முன்னினாள் 212
சுயம்பிரபை தன் தந்தைக்கு வழி பாட்டுப் பொருள் கொடுத்தல்
வெஞ்சுடர் வேலவர்க் குணர்த்தி மெல்லவே
பஞ்சுடைச் சேவடி பரவச் சென்றுகன்
னஞ்சுடர் மெல்விரல் சிவப்ப வாழியின்
செஞ்சுட ரங்கையிற் சேட நீட்டினான் 213
அரசன் தன் மகளை உச்சிமோந்து சில மொழிகள் சொல்லத் தொடங்குதல்
அல்லியி னரவண் டிரிய வாய்மலர்
வல்லியின் வணங்கிய மகளை மன்னவன்
முல்லையஞ் சிகழிகை முச்சி மோந்திவை
சொல்லிய தொடங்கினான் சுடரும் வேலினான் 214
ஐந்து பாடல்கள் அரசன் தன் மகளைப் புகழ்ந்துரைத்தல்
தேந்துணர் பலவுள வேனுஞ் செங்குழை
மாந்துணர் வயந்தனை மலரத் தோன்றுமே
பூந்துண ரோதிநீ பிறந்து பொன்செய்தார்
வேந்துவந் திறைஞ்சயான் விளங்கு கின்றதே 215
கங்கைநீர் பாய்ந்துழிக் கடலுந் தீர்த்தமா
மங்கணீ ருலகெலா மறியப் பட்டது
நங்கைநீ பிறந்ததற் பின்னை நங்குடி
வங்கநீர் வரைப்பெலாம் வணக்கப் பட்டதே 216
போதுலாந் தாமரை பூத்த பொய்கையைத்
தீதுலாங் கீழுயிர் தீண்டச் செல்லல
மாதுலா மடந்தைநீ பிறந்திம் மண்டில
மேதிலா ரிடைதிற மிகந்து நின்றதே 217
வானகத் திளம்பிறை வளர வையகம்
ஈனகத் திருள்கெட வின்ப மெய்துமே
நானகக் குழலிநீ வளர நங்குடி
தானகத் திருள்கெடத் தயங்கு கின்றதே 218
கண்பகர் மல்லிகை கமழக் காதலால்
சண்பகத் தனிவனந் தும்பி சாருநீ
பெண்பகர் திருவனாய் பிறந்து நங்குடி
மண்பக ருலகெலா மகிழச் செல்லுமே 219
அரசன் தன் மகளை உண்டற்கு அனுப்புதல்
கொவ்வையந் துவரிதழ்க் கோல வாயவட்
கிவ்வகை யணியன கூறி யீண்டுநும்
மவ்வைதன் கோயில்புக் கடிசி லுண்கென
மவ்வலங் குழலியை மன்ன னேயினான் 220
கட்டளையும் மகிழ்ச்சியும்
பல்கலம் பெரியன வணியிற் பாவைத
னல்குனோ மெனச்சிலம் பணிந்து மெல்லவே
செல்கவென் றிருமக ளென்று செம்பொனான்
மல்கிய முடியினான் மகிழ்ந்து நோக்கினான் 221
அரசன் தன் மகளைப் பற்றி மனத்தில் எண்ணுதல்
மண்ணருங் கலமெலாம் வலிதின் வவ்வினும்
விண்ணருங் கலமெலாம் விதியி னெய்தினும்
பெண்ணருங் கலமிது பெறுதன் மானுடர்க்
கெண்ணருந் தகைத்தென விறைவ னெண்ணினான் 222
தன் மகளுக்குரிய கணவன் யாவன் என்று எண்ணுதல்
மையணி வரையின்வாழ் மன்னர் தொல்குடிக்
கையணி நெடுநல்வேற் காளை மார்களுள்
நெய்யணி குழலிவட் குரிய நீர்மையான்
மெய்யணி பொறியவ னெவன்கொல் வீரனே 223
மங்கையர் இயற்கை
பொலங்கலக் குரியவாம் பொருவின் மாமணி
யிலங்கல மென்மை வீயஞ் சேர்த்தினும்
குலங்கலந் தில்வழிக் குரவர் கூட்டினும்
மலங்கலங் குழலிய ரன்றென் கிற்பவோ 224
தாய் தந்தையர் நோக்கப்படி நடப்பர் என்றல்
அந்தைதா முறுவது கருதி யாருயிர்த்
தந்தைதா யென்றிவர் கொடுப்பிற் றையலார்
சிந்தைதா யிலாதவர் திறத்துஞ் செவ்வனே
நொந்துதாம் பிறிதுரை நொடிய வல்லரோ 225
காமமுங் காதலும்
காதலா லறிவது காமங் காதலே
யேதிலா ருணர்வினா லெண்ண லாவதன்
றாதலான் மாதரா டிறத்தி னாணைநூ
லோதினா ருரைவழி யொட்டற் பாலதே 226
அரசர் வாழ்க்கையும் அமைச்சர்களும்
தன்னுணர் பொறிபிறர் தங்கண் கூட்டென
வின்னண மிருவகைத் திறைவர் வாழ்க்கையே
தன்னுணர் பொறிப்புலந் தன்னி னாம்பிறி
தின்னணா மியற்றுகென் றமைச்ச ரேவுவார் 227
அரசர்கள் அமைச்சராற் சிறப்படைவார்கள் என்றல்
தண்ணிய தடத்தவே யெனினுந் தாமரை
விண்ணியல் கதிரினால் விரியும் வேந்தரும்
புண்ணியப் பொதும்பரே புரிந்து வைகினும்
கண்ணிய புலவரா லலர்தல் காண்டுமே 228
அமைச்சர் அறிவுரையால் அரசியல் இனிது நடைபெறும் என்றல்
மாமலர் நெடுங்கடன் மதலை மாசிலாக்
காலமைந் தொழுகுமேற் கரையுங் காணுமே
நூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல்
மேலவ ரொழுக்கமும் வேலை காணுமே 229
உலகம் பலவிதம்
ஒன்றுநன் றென உணர்ந் தொருவன் கொள்ளுமே
லன்றதென் றொருவனுக் கறிவு தோன்றுமே
நின்றதொன் றுண்டினி நீதி நூலினோ
டொன்றிநின் றவருரை யுலக மொட்டுமே 230
ஆயிரங்கண்ணனுக்கும் ஆயிரம் அமைச்சர்கள் உண்டென எண்ணல்
அந்தண ரொழுக்கமு மரைசர் வாழ்க்கையும்
மந்திர மில்லையேன் மலரு மாண்பில
இந்திர னிறைமையு மீரைஞ் ஞாற்றுவர்
தந்திரக் கிழவர்க டாங்கச் செல்லுமே 231
அமைச்சர்களை அழைக்குமாறு கட்டளையிடுதல்
என்றுதன் மனத்தினா னெண்ணி யீண்டுசீர்
நின்றநூற் கிழமையி னீதி மாக்களை
யொன்றிநீர் தருகென வுழைக்குற் றேவலார்
சென்றவர்க் கருளிது வென்று செப்பினார் 232