பதிவு செய்த நாள்
29
மார்
2013
04:03
அரசே! என்னை கங்கன் என்று அழைப்பார்கள். நான் தர்மருடன் வனவாசத்தில் இத்தனை நாட்களும் கழித்தேன். அவர் தற்போது அஞ்ஞான வாசம் செய்வதால், அவரை விட்டு பிரிய வேண்டியதாயிற்று. இவ்வுலகில் எது சிறந்த நாடு என விசாரித்த போது, உமது நாடே உயர்ந்ததென கேள்விபட்டு இங்கு வந்தேன், என்ற தர்மரிடம், ஆஹா! பாக்கியவான் ஆனேன். தாங்கள் எங்கள் நாட்டில், நீங்கள் விரும்பும் வரையில் தங்கலாம், என்றான் விராட மன்னன். சிலநாட்கள் கழித்து, ஆஜானுபாகுவான ஒருவன் அரண்மணைக்கு வந்தான். மகாராஜா! என் பெயர் பலாயனன். பீமராஜாவிடம் சமையல் காரனாக வேலை செய்தவன். சமையல் கலை எனக்கு கை வந்த கலை. எந்த காய்கறியாக இருந்தாலும், அதில் ஐந்து வகை சமைப்பேன். ஆனால், அதில் அறு சுவை இருக்கும். தேவலோகத்தில் கூட அப்படி ஒரு சாப்பாடு கிடைக்காது, என்று ஒரு போடு போட்டான்.
அங்கே வந்தது யார் தெரியுமா? நமது சாப்பாட்டு ராமன் பீமன் தான். ஆண்கள் சமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பெண்கள் தான் சமையலுக்கு உரியவர்கள் என ஒதுக்கி அவர்களை அடுக்களை தவளைகளாக மாற்றி, அடக்கி வைத்து விட்டதாக சந்தோஷப்படக்கூடாது. ஒரு ஆபத்தான கட்டத்தில், அந்தப்பணி தான் பீமனுக்கு உதவியது. நமக்கும் கூட அவ்வகை கைத்தொழில்கள் சமயத்தில் கை கொடுக்கும். மனைவி ஊருக்குப் போய்விட்டால் கூட, சுத்தமான சாப்பாட்டை வீட்டிலேயே சமைத்துக் கொள்ளவும், அதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தவும், உடலை பாதுகாத்துக் கொள்ளவும் உதவும்.
பீமன் சமைத்தும் காட்டினான். அப்படியொரு சாப்பாட்டை விராட ராஜா அதுவரை சாப்பிட்டதே கிடையாது. மகிழ்ச்சியில் பலாயனா! இனிமேல், நீ தான் இந்த அரண்மனையின் தலைமை தவசுப்பிள்ளை, (சமையல்காரர்) என சொல்லி விட்டான். நமது புராணகாலத்து சமையல்காரர்களில் நளனும், பீமனும் அரசகுடும்பத்தில் இருந்தாலும் சமைக்கத் தெரிந்தவர்கள். நளனின் கைபட்டால் சமையல் ருசிக்கும். பீமனின் பார்வை பட்டாலே சமையல் ருசித்து விடும். இதனால் தான் நளபாகம், பீமபாகம் என்று சமையலில் இருவகையாக சொல்லி வைத்தார்கள். மறுநாள், ஒரு பேடி அங்கு வந்தாள். பேடி என்றால் ஆணும் அல்லாத, பெண்ணும் அல்லாத அரவாணி இனத்தைச் சேர்ந்தவர். அவள் விராடனிடம், மகாராஜா என் பெயர் பிருகந்நளை. நான் -- , சாஸ்திரமும் தெரிந்தவள். அர்ஜுனனின் அவையிலே இருந்த பெண்களுக்கு அதைக் கற்றுக் கொடுத்தேன். இப்போது, தங்கள் நாட்டுக்கு வந்துள்ளேன். தாங்கள் அனுமதித்தால் அதை செய்கிறேன், என்றாள்.
அவ்வாறு அரவாணி வேடமிட்டு வந்தது அர்ஜுனன். முன்பொரு முறை, ஊர்வசியை மகிழ்ச்சிப்படுத்த மறுத்த அர்ஜுனன் பேடியாகும்படி சாபம் பெற்றிருந்தான். இந்திரனின் சிபாரிசால், அவன் எப்போது நினைக்கிறானோ அப்போது இந்த வடிவை எடுக்கலாம் என்ற சாப விமோசனம் பெற்றிருந்தான். அந்த சாபத்தை இப்போது பயன்படுத்திக் கொண்டான் அர்ஜுனன். அங்கேயே, அவளுக்கு வேலை கொடுத்தான் விராடமன்னன். இன்னும் சில நாட்கள் கடந்து நகுலம் அரண்மனைக்குள் வந்தான். அவன் விராடமன்னனிடம், அரசே! என் பெயர் தாமக்கிரந்தி. நான் குதிரை ஓட்டுவதில் வல்லவன். ரதங்களில் பூட்டுகின்ற குதிரைகளை தரம் பார்த்து வாங்குவதில் கைதேர்ந்தவன். நமது அரண்மனைக்கு நல்ல நிறமும், மணமும், குரலும் கொண்ட குதிரைகளை வாங்கித்தருகிறேன். அவற்றை நன்றாக பராமரிக்கவும் செய்வேன். எங்கள் என்னை வலையில் சேர்த்து கொள்ள வேண்டும் என்றான். அவருக்கு அங்கு வேலை கிடைத்தது.
அடுத்த சில நாட்களில் சகாதேவன் அங்கு வந்தான். அன்னா! என்னை திரிபாலன் என்று அழைப்பார்கள். நான் சகாதேவனிடம் பசுக்களை காப்பவனாக பணிபுரிந்தேன். அவர் காட்டிற்கு சென்ற போது பிழைப்பிற்கு வழியின்றி பல இடங்களுக்கு செல்வேன். ஆனால் உரிய வருமானம் கிடக்கவில்லை. எனவே தாங்கள் எனக்கு வேலை தர வேண்டும். அரண்மனை பசுக்கூட்டத்தை நான் பாதுகாக்கிறேன், என்றான். விராடன் அவனுக்கு ஏராளமான பசுக்களை கொடுத்து பணியில் சேர்த்துக்கொண்டான். இதையடுத்து விரதசாரிணி என்ற பெயரில்,திரவுபதி அங்கு வந்தாள். அவளுடைய அழகு அங்குள்ள பணிப்பெண்களைக் கவர்ந்தது. அவள் விராடராஜனின் மனைவி சுதேஷ்ணையை சந்தித்தாள். மகாராணி! நான் பாஞ்சாலிக்கு அலங்காரம் செய்யும் பணியில் இருந்தேன். அவன் காட்டிற்கு போய்விட்டதால் என்னால் தொடர்ந்து பணிசெய்ய இயலவில்லை. என்னிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. நான் எந்த மனிதருடைய முகத்தையும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன். கந்தவர்கள் முதலானோர் கூட எனது கற்புக்கு தீங்கிழைக்க முடியாது. இந்த அரிய குணத்தைக் கொண்ட நான் தங்களுக்கு பணி செய்ய விரும்புகிறேன். உங்களுக்குரிய எல்லாவித அலங்காரங்களையும் இன்று முதல் நானே செய்கிறேன். எனக்கு பணி தாருங்கள், என்றாள்.
இதைக் கேட்ட சுதேஷ்ணை மிகுந்த மகிழ்ச்சியுடன் பணியில் சேர்த்துக் கொண்டாள். இப்படியாக பாண்டவர்கள் ஐவருக்கும், திரவுபதிக்கும் விராடனின் அரண்மனையிலேயே வேலை கிடைத்துவிட்டது. ஒருநாள் வாசமல்லன் என்ற மற்போர் வீரன் விராடனின் அரசவைக்கு வந்தான். தன்னைவிட மற்போரில் சிறந்தவன் இந்த பூமியில் யாரும் இல்லை என்று தோள் தட்டினான். உங்கள் நாட்டில் அப்படி ஒரு வீரன் இருந்தால் என்னோடு போர் செய்யலாம் என்றும் சவால் விட்டான். விராடராஜன் தனது நாட்டிலுள்ள மல்லர்களை எல்லாம் வரவழைத்து வாசவமல்லனுடன் போரிடச் செய்தான். ஆனால் எல்லாருமே அவரிடம் தோற்றுவிட்டனர். அவமானப்பட்ட விராடராஜன் வேறு வழியின்றி வாசவமல்லனுக்கு பரிசுகளை வழங்கினான். அப்போது கங்கன் என்ற பெயரில் மாறுவேடம் தரித்திருந்த தர்மர், மன்னா! கவலை வேண்டாம். உன்னிடம் பணி செய்யும் சமையல் காரனான பலாயனனை இவனுடன் சண்டை செய்யச் சொல்லுங்கள். அவன் வாசவமல்லனை நிச்சயம் மற்போரில் ஜெயிப்பான் என்றார். பலாயனன் என்ற பெயரில் அங்கு வசித்த பீமன், இடுப்பில் தங்கக் கச்சை ஒன்றை கட்டிக்கொண்டு கதாயுதத்துடன் ராஜசபைக்கு வந்தான். வாசவமல்லனுக்கும் பீமனுக்கும் கடும் போர் நடந்தது. இரண்டு மலைகள் மோதியது போன்ற காட்சியைக் கண்டு மக்கள் திகைத்து நின்றனர். வெற்றி தோல்வி யாருக்கு என்று சொல்ல முடியாத நிலைமை. வாசவமல்லனின் கையே அவ்வப்போது ஓங்கியது.