பதிவு செய்த நாள்
08
ஜூன்
2013
03:06
இதைத் தானே கிருஷ்ணர் எதிர்பார்த்தார்! உலூகரிடம், துரியோதனன் போர் தான் முடிவு என சொல்லி அனுப்பியிருந்தது. கிருஷ்ணருக்கு தேனாக இனித்தது. உலுகாரிடம் உடனே அர்ஜுனனை தன்னிடம் வருமாறு அனுப்பி வைக்கும்படி சொல்லியனுப்பினார். இதனிடையே துரியோதனன், தனக்கு ஆதரவு கேட்டு, பல நாட்டு அரசர்களுக்கும் தூது அனுப்பினான். துவாரகை மன்னர் கிருஷ்ணரின் ஆதரவு மிக அவசியம் என்பதை அவன் உணர்ந்தான். பரமாத்மாவிடம் தானே நேரில் சென்று ஆதரவு கேட்பதென முடிவெடுத்து, துவாரகைக்கு சென்றான். துரியோதனன் தன்னை நோக்கி வருவதை ஞானதிருஷ்டியால் அறிந்த கிருஷ்ணர், ஏவலர்களிடம், துரியோதனன் என்னைச் சந்திக்க வருகிறான். அவன் வந்திருப்பது குறித்து எனக்கு எந்த முன்னறிவிப்பும் தரவேண்டாம். நேரடியாக அவன் உள்ளே வந்து விடட்டும். யாரும் தடுக்கக்கூடாது, என உத்தரவிட்டார்.
கண்ணன் மாயக்காரன். துரியோதனன் மீது அளவற்ற பிரியம் கொண்டிருப்பது போலவும், தன்னிடத்திற்குள் வந்து செல்ல மிகுந்த உரிமையை அவனுக்கு தந்திருப்பது போலவும் காட்டிக் கொள்ளவே இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்தார். துரியோதனனனும் வந்து விட்டான். அவன் தன்னருகில் வருவதற்குள் தூங்குவது போல நடித்தார் கிருஷ்ணர். அயர்ந்து தூங்குபவர்களை காரணமின்றி எழுப்புவது எவ்வகையிலும் தகாத விஷயம். துரியோதனன், சில விஷயங்களில் நாணயமாக நடந்து கொள்வான். தன் நண்பன் கர்ணன், தனது மனைவி சாவித்திரியின் புடவையைப் பிடித்து இழுத்தபோது, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது போல, இவ்விஷயத்திலும் மிகுந்த நாணயத்துடன் நடந்து கொண்டான்.
கிருஷ்ணர் விழிக்கும் வரை காத்திருக்கலாம் எனக்கருதி, அவரது தலைமாட்டின் அருகே போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்து விட்டான். அர்ஜுனன் வரட்டுமே என்பதற்காக கிருஷ்ணர் காத்திருந்தார். எல்லாரும் பகவானுக்காக காத்திருப்போம். இங்கே, பகவான் ஒரு மானிடனுக்காக காத்திருக்கிறார். ஏனென்றால், அந்த பக்தன் கடமையே கண்ணானவன், நியாயஸ்தன், தைரியசாலி, கடமை, நியாயம், தைரியம் உள்ளவர்களுக்காக ஆண்டவன் காத்திருப்பான். நியாயமின்மை, பேராசை, பொறாமை ஆகிய குணமுள்ளவர்களைக் கண்டால் பகவான் கண்ணைப் பொத்திக் கொள்வார். துரியோதனன் விஷயத்தில் இதைத்தான் பகவான் நிகழ்த்திக் கொண்டிருந்தார். அர்ஜுனன் வந்துவிட்டான். பகவானின் காலடியில் போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தான். நம்ம கண்ணன் சரியான கள்ளன். அர்ஜுனன் வந்தது தெரிந்தும், விழிக்கவில்லலை. துரியோதனன் தவறாக நினைப்பானே! எனவே, சிறிதுநேரம் கழித்தே விழித்தார். எதிரே இருந்த அர்ஜுனனும், தலைமாட்டில் இருந்த துரியோதனனும் ஒருசேர எழுந்து அவரை வணங்கினர். அவரை முன்னால் அர்ஜுனனும், பின்னால் திரும்பிப் பார்த்தபோது துரியோதனனும் நின்றனர்.
நீங்கள் இருவரும் எப்போது வந்தீர்கள்? அடடா உங்களைக் காக்க விட்டேனே, என நாடகமாடிய அந்த நாராயணன், துரியோதனனைக் கட்டித் தழுவிக் கொண்டார். பொதுவாக, நாம் பேசிக்கொள்ளும் ஒரு விஷயம் உண்டு. பாவிகள் பக்கமே பகவான் துணை நிற்கிறார். நாம் எவ்வளவு நல்லது செய்தாலும் எட்டிக்கூட பார்ப்பதில்லை. நமக்கு நல்லதும் செய்வதில்லை என்று. பகவான் ஒரு கெட்டவனைக் அணைத்துக் கொள்கிறார் என்றால், அவன் திருந்துவதற்காக நாள் கொடுத்து பார்க்கிறார். திருந்தாதபோது அப்படியே அந்த அணைப்பே அவனுக்கு எமனாகி விடுகிறது. ஆம்... அப்படியே தண்டித்துக் கொன்று விடுகிறார். துரியோதனன் விஷயத்திலும் அதுதான் நடக்கப்போகிறது. அவர்களிடம் என்ன விஷயமாக அண்ணனும் தம்பியும் வந்திருக்கிறீர்கள்? என்று தெரியாதவர் போல் கேட்டார். கண்ணா! நாங்கள் நடத்தப் போகும் போரில் உன் ஆதரவு எங்களுக்கு வேண்டும், என்று இருவரும் ஒரே சமயத்தில் கேட்டனர். இருவரும் கேட்கிறீர்கள். யாராவது ஒருவருக்குத்தானே என்னால் ஆதரவளிக்க முடியும். நீங்கள் இருவருமே எனக்கு வேண்டப்பட்டவர்கள். அதனால்... என இழுத்த கண்ணனை இடைமறித்த துரியோதனன், கிருஷ்ணா! நான் தான் முதலில் வந்து காத்திருந்தேன். அதனால் எனக்குத்தான் ஆதரவு தர வேண்டும். அதுவே முறையானது, என்றான்.
கிருஷ்ணர் சிரித்தார்.
நீ சொல்வது சரிதான் என்றாலும், முதலில் என் கண்ணில் பட்டவன் அர்ஜுனன் தான். அதனால், அவனுக்கு ஆதரவளிப்பது தான் முறையாக இருக்கும், என்றார் புன்னகை ததும்ப. துரியோதனன் எவ்வளவோ வாக்குவாதம் செய்தும் அவரது ஆதரவைப் பெற முடியவில்லை. போகட்டும் கண்ணா! நீ பாண்டவர்களையே ஆதரித்து விட்டுப் போ! ஆனால், எனக்கும் நீ நான் கேட்பதைத் தர வேண்டும், என்றான். என்ன? என்ற கிருஷ்ணரிடம்! நீ அர்ஜுனனுக்கு ஆதரவாக இருந்தாலும், எக்காரணம் கொண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கக்கூடாது. இதுவே எனக்குப் போதும், என்றதும், சரி அப்படியானால் நான் போர்க்களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை அர்ஜுனனே முடிவு செய்யட்டும், என்றார். அர்ஜுனன் அவரிடம், பரந்தாமா! நீ ஆயுதம் எடுக்க வேண்டாம். அதை உன்னருளால் நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், ஆயுதம் எடுக்கும் எனக்கு நீ சாரதியாக (தேரோட்டுபவர்) இருக்க வேண்டும். அதுபோதும், என்றதும், கிருஷ்ணர் சம்மதித்தார். கடவுளின் நிலை இதுதான். கெட்டவன் கேட்டாலும் கொடுப்பவர், நல்லவன் கேட்டாலும் கொடுப்பார். ஆனால், பலன்கள் எப்படியிருக்கும் என்பது கேட்பவனின் மனநிலையைப் பொறுத்தது. அத்துடன் துரியோதனனிடம், உன்னை வெறுங்கையுடன் நான் அனுப்பமாட்டேன். என் அண்ணா பலராமர் உன் பக்கம் தான் இருப்பார். நீ சென்று அவரைப் பார், என்றார்.