8. (ஆன்ம அனுபூதி பெற்றவன்) அனைத்தின் உட்பொருளையும் காண்கிறான். அவன் மனத்தை வசப்படுத்தியவன்; அனைத்து அறிவையும் உள்ளடக்கியவன்; யாரையும் சாராதவன். அனைத்துப் பொருட்களின் உண்மை இயல்பை அவன் என்றென்றைக்குமாக அறிந்திருக்கிறான். அவன் ஒளிமயமான, உடம்பற்ற, முழுமையான, தசைகள் இல்லாத, தூய, பாவமற்ற இறைவனை அடைகிறான்.
கவி: என்றால் க்ராந்த தர்சி; அப்பால் காண்பவன் என்று பொருள். காணும் தோற்றத்துடன் மற்றவர்கள் நின்றுவிடுகிறார்கள். ஆனால் ஆன்ம அனுபூதி பெற்றவன், ஒவ்வொரு தோற்றத்திற்கும் பின்னால் ததும்புகின்ற இறையுணர்வைக் காண்கிறான்.
மனீஷி என்றால் மனத்தை வசப்படுத்துவதற்கான புத்தியைப் பெற்றவன். (1. மனஸ ஈசித்ரீ புத்திர்மனீஷா தத்வான் மனீஷீ -ஸ்ரீவேதாந்த தேசிகர்)மனத்தை மனத்தால் வசப்படுத்த முடியாது, அதைவிட ஆற்றல்மிக்க ஒன்று வேண்டும். அதுவே புத்தி. உள்ளுணர்வு என்றும் இது அழைக்கப்படுகிறது. இது எல்லோரிலும் செயல்படத் தொடங்கவில்லை. பிரார்த்தனை, காயத்ரீ மந்திர ஜபம் போன்றவற்றால் இது விழித்தெழுந்து செயல்படத் தொடங்குகிறது.
பரிபூ: என்றால் அனைத்து அறிவையும் உள்ளடக்கியவன். உலகில் எத்தனையோ வகை அறிவுகள் உள்ளன. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு என்பார்கள். நாம் எவ்வளவு அறிந்தாலும் இன்னும் அறிய வேண்டியது எவ்வளவோ இருக்கும்; அவற்றை அறிவதற்கான ஆவலும் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் ஆன்மாவை அறிந்தவன் தன்னில் திருப்தியுற்று நின்று விடுகிறான். அதனால் ஆன்ம அனுபூதி மற்ற அறிவுகளின் நிறைவாக, அனைத்தையும் உள்ளடக்கியதாக, மற்ற அறிவுகளைவிட உயர்ந்ததாகக் (1. வித்யாந்தரவத: ஸர்வானதிக்ரம்ய வர்த்ததே- ஸ்ரீவேதாந்த தேசிகர்)கூறப்படுகிறது.
ஆன்ம அனுபூதி பெற்றவன் தன்னிலும் உலகிலும் இறையுணர்வை உணர்ந்துவிட்டதால் அவன் அதைச் சார்ந்திருக்கிறானே தவிர பொருட்களையும் மனிதர்களையும் சார்ந்து வாழ்வதில்லை. அதனால் அவன் எதையும் சாராதவன் (2. ஸ்வயம்பூ: வன்ய நிரபேக்ஷஸத்தாக: - ஸ்ரீவேதாந்த தேசிகர்) எனப்படுகிறான்.
அனைத்திற்கும் மேலாக, அவன் பொருட்களின் உண்மை இயல்பை அறிந்திருக்கிறான். எவை இறை நெறிக்குத் துணை செய்யும், எவை இறைநெறியில் தடையாக இருப்பவை என்பதை அவன் உணர்ந்திருக்கிறான். (3. பரம புருஷார்த்ததயுபாய தத்விரோதி ப்ரப்ருதீன் ஸர்வான் பதார்த்தான் யதாவத் விவிச்ய ஹ்ருதயேன த்ருதவான்- ஸ்ரீவேதாந்த தேசிகர்) இறைநெறியில் செல்பவனுக்கு இந்த மனத்தெளிவு மிகவும் அவசியமானது. வேண்டாதவற்றை விலக்கி அவனால் விரைந்து முன்னேற முடிகிறது.
ஆன்ம அனுபூதி பெற்ற இத்தகையவன் இறைவனை அடைகிறான். அந்த இறைவனைப்பற்றி இந்த மந்திரம் மூன்று விஷயங்களைக் கூறுகிறது:
1. இறைவன் ஒளிமயமானவர். அவரது ஒளியாலேயே அனைத்தும் ஒளிபெறுகின்றன.
2. இவர் என்று இறைவனை அடையாளம் காட்ட முடியாது. உடம்பற்றவர், முழுமையானவர், தசைகள் இல்லாதவர் என்றெல்லாம் கூறுவது இதைத் தெரிவிக்கிறது.
3. இறைவன் தூயவர். எந்தப் பாவமும் அவரை அணுக முடியாது. உலகனைத்தையும் ஒளியால் விளங்கச் செய்வதன்மூலம் உலகின் கண்ணாக இருப்பவன் சூரியன். ஆனால் யாருடைய பார்வைக் கோளாறோ, பொருட்களின் குறைகளோ அவனைப் பாதிப்பதில்லை. அதுபோல் எல்லோரிலும் விளங்குகின்ற ஆன்மா சுகதுக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை (1. ஸூர்யோ யதா ஸர்வலோகஸ்ய சக்ஷú: ந லிப்யதே சாக்ஷúஷைர் பாஹ்யதோஷை: ஏகஸ்ததா ஸர்வபூதாந்தராத்மா ந லிப்யதே லோகது: கேன பாஹ்ய: - கட உபநிஷதம், 2.2.11)என்கிறது கட உபநிஷதம்.
ஆன்ம அனுபூதி பெற்றவன் இவ்வாறு ஒளிமயமான இறைவனை அடைகிறான்.