பதிவு செய்த நாள்
11
நவ
2011
05:11
இரண்டாவது ஊரலருரைத்த பாட்டு
அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை துறத்தல் நாணுத்தக வுடைத்து என யாண்டும் பழிதூற்றுதல் கேட்ட சித்திராபதி அப் பழி பிறந்தமையை வயந்த மாலையை ஏவி மாதவிக்கு அறிவித்த செய்தியைக் கூறுகின்ற செய்யுள் என்றவாறு.
இதன்கண் -விழாவறைந்த வண்ணமே பூம்புகார் நகரம் மக்களால் அணிசெய்யப்பட்டது. உரியநாளிலே இந்திர விழாவும் தொடங்கி நிகழ்வதாயிற்று. இறந்த யாண்டில் இவ் விழாவிற் கலந்து கொண்டு மக்கட்குக் கிடைத்தற்கரிய கலையின்பம் நல்கிய தன் மகள் மாதவி, கோவலனுக்கும் கண்ணகிக்கும் ஊழ்வினை உருந்து வந்தூட்டிய கொடுந்துயர் கேட்டு மணிமேகலையை வான் துயர் உறுக்கும் கணிகையர் கோலம் காணா தொழிகெனக் கோதைத் தாமம் குழலொடு களைந்து போதித்தானம் புரிந்தறங் கொண்டமையாலே இவ் விழாவிற்கு மாதவியும் மணிமேகலையும் வாராமையாலே சித்திராபதி பெரிதும் வருந்தியவளாய் மாதவியின் தோழியாகிய வயந்த மாலையை அழைத்து நீ மாதவியின்பாற் சென்று இம்மாநகரத்து மக்கள் அவளைப் பற்றித் தூற்றாநின்ற பழிச் சொல்லை எடுத்துக் கூறுக; என்று பணித்தமையும் அத்தோழியும் அவள் துறவுக்குப் பெரிதும் வருந்தியிருந்தமையாலே அவ்வாறே சென்று மாதவியிருந்த தவப் பள்ளியில் மலர் மண்டபத்தே சென்று அவள் வாடிய மேனிகண்டு உளம் வருந்தி அந் நகரத்து மாந்தர் எல்லாம் நாடகக்கலை கற்றுத் துறைபோகிய நீ நற்றவம் புரிந்தது நாணுத் தகவுடைத்து என்று தூற்றும் பண்பில்லாப் பழி மொழியை எடுத்துக் கூறித் தனனோடு வருமாறு அழைத்த செய்தியும்
அதுகேட்ட மாதவி தான் உயிரோடிருந்ததே நாணம் அற்ற செயலாம் என்று வருந்துபவள் பத்தினிப் பெண்டிரியல்பு கூறி அவருள் கண்ணகி தலை சிறந்தமையும் கூறி அவள் மகளாகிய மணிமேகலை இழி தகவுடைய நாடகக் கணிகையாகாள், யானும் இத் துறவினின்று மீண்டு வருவேன் அல்லேன் காண் என்றியம்பி அறவண அடிகளார் தனக்கு அறங்கூறி ஒருவா றுய்வித்தலாலே உயிரோடிருக்கின்றேன். யான் இனி இப் பள்ளியினின்று வருவேனல்லேன் எனக் கூறி விடுப்பதும் வயந்தமாலை கையறவுடையளாய் மீண்டு செல்லுதலும் ஆகிய இச்செய்திகள் கூறப்படும்.
நாவல் ஓங்கிய மா பெருந் தீவினுள்
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்
மணிமேகலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பம் தலைத்தலை மேல் வர
சித்திராபதி தான் செல்லல் உற்று இரங்கி
தத்து அரி நெடுங் கண் தன் மகள் தோழி
வயந்தமாலையை வருக எனக் கூஉய்
பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை என
வயந்த மாலையும் மாதவி துறவிக்கு 02-010
அயர்ந்து, மெய் வாடிய அழிவினள் ஆதலின்
மணிமேகலையொடு மாதவி இருந்த
அணி மலர் மண்டபத்து அகவயின் செலீஇ
ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி
பொன் நேர் அனையாய்! புகுந்தது கேளாய்!
உன்னோடு இவ் ஊர் உற்றது ஒன்று உண்டுகொல்?
வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்துக்
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்
பண் யாழ்க் கரணமும் பாடைப் பாடலும் 02-020
தண்ணுமைக் கருவியும் தாழ் தீம் குழலும்
கந்துகக் கருத்தும் மடைநூல் செய்தியும்
சுந்தரச் சுண்ணமும் தூ நீர் ஆடலும்
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும்
காயக் கரணமும் கண்ணியது உணர்தலும்
கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும்
வட்டிகைச் செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும்
கோலம் கோடலும் கோவையின் கோப்பும்
காலக் கணிதமும் கலைகளின் துணிவும்
நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த 02-030
ஓவியச் செந் நூல் உரை நூல் கிடக்கையும்
கற்று துறைபோகிய பொன் தொடி நங்கை
நல் தவம் புரிந்தது நாண் உடைத்து என்றே
அலகு இல் மூதூர் ஆன்றவர் அல்லது
பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி
நயம்பாடு இல்லை நாண் உடைத்து என்ற
வயந்தமாலைக்கு மாதவி உரைக்கும்
காதலன் உற்ற கடுந் துயர் கேட்டு
போதல்செய்யா உயிரொடு நின்றே
பொன் கொடி மூதூர்ப் பொருளுரை இழந்து 02-040
நல் தொடி நங்காய்! நாணுத் துறந்தேன்
காதலர் இறப்பின் கனை எரி பொத்தி
ஊது உலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின்
நல் நீர்ப் பொய்கையின் நளி எரி புகுவர்
நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடு
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து
அத் திறத்தாளும் அல்லள் எம் ஆய் இழை
கணவற்கு உற்ற கடுந் துயர் பொறா அள் 02-050
மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை
திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை
அருந் தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத் தொழில் படாஅள்
ஆங்கனம் அன்றியும் ஆய் இழை கேளாய்
ஈங்கு இம் மாதவர் உறைவிடம் புகுந்தேன்
மற வணம் நீத்த மாசு அறு கேள்வி 02-060
அறவண அடிகள் அடிமிசை வீழ்ந்து
மா பெருந் துன்பம் கொண்டு உளம் மயங்கி
காதலன் உற்ற கடுந் துயர் கூறப்
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக! என்று அருளி
ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி
உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன்
மைத் தடங் கண்ணார் தமக்கும் எற் பயந்த 02-070
சித்திராபதிக்கும் செப்பு நீ என
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி
ஓங்கு திரைப் பெருங் கடல் வீழ்த்தோர் போன்று
மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும்
கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்து என் 02-075
உரை
1-9: நாவல்........உரையென
(இதன் பொருள்) நாவல் ஓங்கிய மாபெருந் தீவினுள் - நாவன் மரம் உயர்ந்து நிற்பதனால் நாவல்தீவு எனப் பெயர் பெற்ற மிகவும் பெரிய இத்தீவின்; காவல் தெய்வம் தேவர் கோற்கு எடுத்த தீவகச் சாந்தி செய்தரு நல்நாள் - முதல் முதலாகச் சம்பாபதி என்னும் காவல் தெய்வமானது பொதுவாக இத்தீவில் வாழ்வோர்க்கு அரக்கர் முதலியோராலுண்டாகும் தீங்கு அகலவும் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் உடையராய் இனிது வாழ்தற் பொருட்டும் அமரர்க்கரசனாகிய இந்திரனுக்குச் செய்த பெருவிழா இவ்வாண்டினும் நிகழ்த்தப் பெற்று வருகின்ற நன்மையுடைய நாளிலே; சித்திராபதி மணிமேகலையொடு மாதவி வாராத் தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வா - சித்திராபதி மானவள் மணிமேகலையும் மாதவியும் வந்து கலந்து கொள்ளாமையாலே வேறெவ்வாற்றானும் தணிக்க வொண்ணாத துன்பம் நினைக்குந்தோறும் ஒருகாலைக்கு ஒருகால் பெருகியே வருதலானே ; செல்லல் உற்று இரங்கி -பெரிதும் வருந்தி அவர் திறத்திலே மிகவும் இரக்கமெய்தி; அரிதத்து நெடுங்கண் தன் மகள் தோழி - செவ்வரி படர்ந்த நெடிய கண்ணை யுடைய தன் மகளாகிய மாதவியின் உசாஅத்துணைத் தோழியாகிய; வயந்த மாலையை வருக எனக் கூஉய் - வயந்த மாலை என்பாளைத் தன்பால் வருக என்று அழைத்து; பயம்கெழு மாநகர் அலர் எடுத்து உரைஎன வயந்தமாலாய் நீ இப்பொழுதே மாதவியின்பாற் சென்று பயன் மிக்க இப்பெரும் நகரத்துள் வாழும் மாந்தர் இடந்தொறும் இடந்தொறும் அவள் திறத்திலே தூற்றுகின்ற பழியை அவள் உளங்கொள்ளுமாற்றால் எடுத்துக் கூறுவாயாக என்று ஏவா நிற்றலாலே; என்க.
(விளக்கம்) காவல் தெய்வம் - சம்பாபதி. தீவகத்தே வாழ்வோரைக் காத்தலே தன் கடமை யாதலின் அவர்கட்குத் தீங்கு வாராமைப் பொருட்டும் நலம் பெருகுதற் பொருட்டும் மருதத்திணைத் தெய்வமாகிய இந்திரனைக் குறித்து முதன் முதலாகத் தொடங்கிய விழா வென்க சோழனாடு மருதவைப்பு மிக்க நாடாதலின் அந்நாட்டுத் தலை நகரத்தில் இவ் விழா வெடுத்தல் பொருத்தமாதலுணர்க.
செய்தருநாள் என்னும் வினைத்தொகை: செய்கின்ற நிகழ்காலங் குறித்து நின்றது. சித்திராபதி, மாதவியின் கலை நல வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்ட நற்றாய் ஆகலானும் மாதவியின் துறவு காரணமாக மாதவியையும் அவள் மகளாகிய மணிமேகலையையும் அவர் தம் கலைச்செல்வத்தையும் ஒருசேர இழந்தவளாதலானும் அவட்கெய்திய துன்பம் தணியாத் துன்பமாய் தலைத்தலை மேல்வர என்றார். தலைத்தலை என்றது நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் எனக் காலத்தின் மேனின்றது. செல்லல் - துன்பம். மாதவி கண்ணழகில் மிகவும் சிறப்புடையள் ஆதலால் அவள்தன்கண்ணே அவள் நினைவின் முன்னிற்றல் தோன்ற, தத்தரி நெடுங்கண் தன் மகள் என்றார். ஆசிரியர் இளங்கோவடிகளாரும் அவளைக் குறிப்பிடுந்தோறும் மறவாமே மாமலர் நெடுகண் மாதவி என்றே இனிதி னியம்புவர். கூஉய்-கூவி; அழைத்து மாதவி வாராள் என்னும் நினைவால் உரைத்து அழைத்து வருதி என்னாது, உரை என்றொழிந்தாள். அவள் பழியஞ்சும் பண்புடையாள் ஆதலின் வருவதாயின் இது கேட்டுவருதல் கூடும் என்னும் கருத்தினால் அலர் எடுத்துரை என்றாள். தன் துயர முதலிய கூறற்க என்பது குறிப்பு.
வயந்த மாலையின் அன்பு
10-15: வயந்த.........வருந்தி
(இதன் பொருள்) வயந்த மாலையும் மாதவி துறவிக்கு அயர்ந்து மெய்வாடிய அழிவினன் ஆதலின் - அவ் வயந்தமாலை என்னும் தோழி தானும் மாதவியின்பால் பேரன்பு கொண்டவளாதலின் அவள் மேற்கொண்ட துறவொழுக்கத்திற்குச் சித்திராபதியினுங் காட்டில் மிகவும் நெஞ்சழிந்து ஊணும் உறக்கமும் அருகி உடல் மெலிதற்குக் காரணமான துன்பமுடையளாதலாலே; மணிமேகலை மாதவியிருந்த அணிமலர் மண்டபத்து அகவயின் செலீஇ- ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள்ளமையாலே புத்தப் படிமத்திற்கு அணிதற்குரிய மலர்மாலை தொடுக்கு மிடமாகிய மண்டபத்திற்குள்ளே புகுந்து; ஆறிய சாயல் ஆய் இலை மடந்தை வாடிய மேனி கண்டு உளம் வருந்தி - பண்டு அசைத்த சாயலையும் அழகிய அணிகலன்களையுமுடைய அயகிய இளையளாயிருந்த அம் மாதவியினுடைய துயரத்தாலும் நோன்பாலும் வாடியிருந்த திருமேனியைக் கண்டு மேலும் வருந்திக் கூறுபவள் என்க.
(விளக்கம்) துறவி- துறவு. மாதவியின்பாற் சென்ற வயந்தமாலை அவளைத் தனியிடத்தேயும் காணலாம்; அவ்வாறன்றி இவள்வாயிலாய் மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள்ளமையின் அதற்கிணங்க மணிமேகலையோடிருந்ததொரு செவ்வியற் காண்பாளாயினள் என்பது குறிப்பு.
ஆடிய சாயல் - அசைந்த மென்மை. மடந்தை - ஈண்டு இளைமை யுடையோள் என்னும் குறிப்புப் பொருள் மேனின்றது. செலீஇ- சென்று.
வயந்தமாலை மாதவிக்குக் கூறுதல்
16-26: பொன்னே.......கணக்கும்
(இதன் பொருள்) பொன் நேர் அனையாய் - திருமகளையே ஒக்கும் நங்காய்; புகுந்தது கேளாய் - உன் செயல் காரணமாக இப்பொழுது நம் மாநகரத்தே நிகழ்ந்ததொரு செய்தியைக் கூறுவேன் கேட்டருள்க; உன்னோடு இவ்வூர் உற்றது உண்டு கொல் நாடக மேத்தும் ஆடலணங் காகிய நின்னோடு இம் மாநகரத்து மரந்தர்க் குண்டான பகைமை ஏதேனும் உளதோ! இல்லையன்றே அங்ஙனமாகவும்; வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து கூத்தும் - பாட்டும் தூக்கும் துணிவும் வேந்தர்க்காடும் கூத்தும் எல்லா மாந்தர்க்கும் பொதுவாக ஆடும் கூத்தும் என்று வகுத்துக் கூறப்படுகின்ற இருவகைப்பட்ட கூத்துக்களின் இலக்கணங்களும், அவற்றிற் கியன்ற பண் வகையும் செந்தூக்கு முதலிய ஏழுவகைப் பட்ட தூக்கு வகையும் தாளவகையும்; பண்யாழ் கரணமும் - பண்ணுறுத்திய யாழ்க் கரணங்களும்; பாடைப் பாடலும் - அகக் கூத்தும் புறக் கூத்துமாகிய இருவகைக் கூத்திற்குமுரிய உருக்கள் எனப்படும் பாடல்களும் தண்ணுமைக் கருவியும் - தண்ணுமை முதலிய தோற் கருவி வாசிக்கும் வகையும்; தாழ் தீங்குழலும் - மந்த இசையினாற் சிறப்பெய்தும் வேய்ங்குழல் வாசிக்கும் வகையும்; கந்துகக் கருத்தும் மடைநூல் செய்தியும் - பந்தாடுதலின்கண் சிறந்த கருத்து வகையும், அட்டில் நூலறிவும் அடிசல் சமைக்கும் தொழில் வகையும்; சுந்தரச் சுண்ணமும் - அழகு தருகின்ற பொற் சுண்ணம் முதலியன செய்தலும்; தூநீராடலும் - தூய நீர்விளையாட்டு வகையும்; பாயல் பள்ளியும் - காதலரோடு இனிதாகப் பள்ளி கொள்ளுதற்கியன்ற கலைகளும்; பருவத்து ஒழுக்கமும் - வேனிற் பருவம் முதலிய அறுவகைப் பருவங்கட்கும் ஏற்ப ஒழுகும் ஒழுக்கமும்; காயக் கரணமும் - உடம்பினாற் கலவிப் பொழுதின் நிகழ்த்தும் அறுபத்துநான்கு வகைத் தொழின் முறைகளும்; கண்ணியது உணர்த்தலும் - குறிப்பறிந்து கொள்ளும் திறமும்; கட்டுரை வகையும் - பொருள் பொதிந்த சொற்களாலே பேசுகின்ற வகைகளும்; கரந்துறை கணக்கும் - பிறர் அறியாவண்ணம் மறைந்து வதியும் முறையும் என்க.
(விளக்கம்) வேத்தியல் - அரசர் பொருட்டுச் சிறப்பாக ஆடும் கூத்து. பொதுவியல் - பொதுமக்கள் எல்லாரும் கண்ட களிக்க ஆடும் கூத்து. இங்ஙனம் கூறுவர்(சிலப்) அரும்பதவுரையாசிரியர். அடியார்க்கு நல்லார், இவையிரண்டும் நகைத்திறச் சுவைபற்றி நிகழும் விதூடகக் கூத்து; எனவும் இவற்றை வசைக்கூத்தும் எனவும் விளக்குவர். பாட்டு - பண். இவற்றியல்பெலாம் சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையில் கண்டுகொள்க.
தூக்கு - தாளங்களின் வழிவரும் செந்தூக்கு மதலைத்தூக்கு துணி புத்தூக்கு கோயிற்றூக்கு நிவப்புத்தூக்கு கழாற்றூக்கு நெடுந்தூக்கு என்னும் ஏழுதூக்குக்களுமாம். துணிவு - தாளம். அவை - கொட்டும், அசையும், தூக்கும், அளவும். இவற்றுள் கொட்டென்பது அரை மாத்திரை; வடிவு க அசையென்பது ஒரு மாத்திரை; வடிவு, எ தூக்கென்பது இரண்டு மாத்திரை; வடிவு உ அளவு என்பது மூன்று மாத்திரை; வடிவு ஃ என்பர். பண்ணியாழ்: வினைத்தொகை. கரணம் - செய்கை. படைப்பாடல் - அகக்கூத்திற்கும் புறக்கூத்திற்கும் இயன்ற இசைப்பாடல்கள். இசைப்பாடல் எனினும் உருக்கள் எனினும் ஒக்கும். இக்காலத்தார் உருப்படி எனலும் காண்க. தண்ணுமை, இதனை அகப்புறவு முழவு என்ப. குழல் - வேய்ங்குழல் கந்துகம் - பந்து மடைநூல் சமையற்கலை பற்றிய நூல். செய்தியும் - மடைநூலும் மடைத்தொழிற் செய்கியும் என்க. பாயற் பள்ளி - இடக் கரடக்கல். பருவம் - வேனில் முதலிய பருவம். மகளிர்க்குரிய பேதை பெதும்பை முதலியனவுமாம். காயக்கரணம்: இடக்கர் அடக்கு. கட்டுரை - சொல்லாட்டம். கரந்துறை கணக்கு - மறைந்து வதிதற்கியன்ற முறை.
இதுவுமது
27-37: வட்டிகை........உரைக்கும்
(இதன் பொருள்) வட்டிகைச் செய்தியும் - எழுதுகோல் கொண்டியற்றும் தொழிற்றிறமும்; மலர் ஆய்ந்து தொடுத்தலும் மலர்களை வண்ணம் வடிவம் மணம் முதலியவற்றால் ஆராய்ந்து அழகாகத் தொடுத்தலும்; கோலங் கோடலும் - உள்வரிக் கோலம் புனைந்து கொள்ளலும்; கோøயின் கோப்பும் - முத்துப் பவழம் முதலியவற்றைக் கோவைப் படுத்தலும்; காலக் கணிதமும் - காலக்கணக்கிய லறிதலும்; கலைகளின் துணிவும் - அறுபத்துநான்கு வகைப்பட்ட கலைகளை அறிந்து தெளிதலும்; நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும் - நாடகமாடும் மகளிர் பயில்வதற் கென்றே அறிஞர்களால் நன்றாக வகுத்து வரையப்பட்ட ஓவியங்களையுடைய செவ்விய நூலில் அவை கிடக்கும் முறையே அறித்தலும் ஆகிய இக் கலைகளை எல்லாம்; கற்றுத் துறைபோய் பொற்றொடி நங்கை - நன்கு ஐயந்திரிபறப் பயின்று அந் நாடகத் துறையில் தலைவரம்பாகத் திகழ்கின்ற பொன்தொடி யணிந்த நாடகமகளிரிற் றலைசிறந்த நாடகக் கணிகை யொருத்தி; நல்தவம் புரிதல் சிறந்த தவவொழுக்கத்தை மேற்கொள்வது; நாண் உடைத்து ஆராயுங்கால் நாணுதற்குரியதொரு செயலாகும் என்று சொல்லி; அலகில் மூதூர் ஆன்றவர் அல்லது - அளவில்லாத மாந்தர் வாழுகின்ற நந்தம் பழைய நகரத்தின்கண்ணுறைகின்ற ஆன்றவிந்தடங்கிய சான்றோரை யல்லதும்; பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி - பிறரும் இடந்தொறும் கூட்டம் கூட்டமாகக் கூடியிருந்து பேசுகின்ற பண்பாடு இல்லாத உண்மையோடு கூடிய பழமொழி; நயம்பாடு இல்லை - நம்மனோர்க்கு அழகுண்டாக்குதல் இல்லை யாகலின்; நாணுடைத்து என்ற - அதனைக்கேட்கும் நம்மனோர்க்கும் நாணந் தருதலைத் தன்பாலுடைய தாகவே உளதுகாண்! என்று கூறிய; வயந்த மாலைக்கு மாதவி உரைக்கும் - வயந்த மாலைக்க மறு மொழியாக அவளை நோக்கி மாதவி கூறுகின்றாள் என்க.
(விளக்கம்) வட்டிகை - எழுதுகோல். கோலம் - உள்வரிக்கோலம்; அஃதாவது பல்வேறு வேடங்களும் புனைந்து கொள்ளும் திறம். காலக் கணிதம் - காலத்தைக் கணிக்கும் தொழில். துணிவு - தெளிவு. ஓவியச் செந்நூல் - நாடகமகளிர்க் கியன்ற நிற்றல் இருத்தல் முதலியவற்றையும் ஒற்றைக்கை இரட்டைக்கை முதலிய அவினய வகைகளையும் ஓவியமாக வரைந்து காட்டப்பட்ட நூல் என்க. அவ்வோவியங்கள் முறைபடுத்திக்கிடத்தப்பட்டு அவற்றின் விளக்கவுரைகளும் வரையப்பட்டிருத்தலும் இந்நூல் நாடக மகளிர் பொருட்டே ஆக்கப்பட்டது என்பதும் தோன்ற நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கை என்று விதந்தோதினார். இப்பழி கூறுதற்குரியோர் ஆன்றவிந்தடங்கிய சான்றோரேயாவர், அவரையன்றியும் ஏனையோரும் தூற்றுகின்றனர் என்பாள் ஆன்றவரல்லது பலர்தொகுப்புரைக்கும் வாய்மொழி என்றாள். பிறர்பழிதூற்றும் மொழி தீயமொழியாதலின் பண்பில் மொழி என்றாள். வாய்தந்தன கூறுகின்றனர் என்பாள் வாய்மொழி என்றாள். அவர்மொழியில் வாய்மையும் உளது என்பாள் அங்ஙனம் கூறினன் என்பதும் ஒன்று. என்னைச் அச் செயல் வாய்மையாகவே நாணுத் தருவ தொன்றே என்பது அவட்கும் உடம்பாடாகலின் என்க.
மாதவி வயந்தமாலைக்குக் கூறும் மறுமொழி
38-48: காதலன்.......பெண்டிர்
(இதன் பொருள்) நற்றொடி நங்காய் காதலன் உற்ற கடுந்துயர் கேட்டே செய்யா உயிரொடு நின்றே - அழகிய வளையலணிந்த நங்கையாகிய தோழியே கேள்! யான் துறவினால் நாணுந்துறந்தேனல்லேன் எளியேன் என் ஆருயிர்க் காதலனாகிய கோவலன் எய்திய பெரிய துயரச் செய்தியைக் கேட்டிருந்தேயும் யாக்கையை விட்டுத் தானே போகமாட்டாத புல்லிய உயிரைத் தாங்கிப் பின்னும் வாழ்வுகந்திருக்கின்றமையால்; பொன் கொடி மூதூர் பொருள் உரை இழந்து - அழகிய கொடியுயர்த்தப்பட்ட இப் பழைய நகரத்துள் வாழும் மாந்தர் எல்லாம் ஒருவாராய் என்னைப் பாராட்டுதற் கியன்ற பொருள் பொதிந்த புகழ் மொழியையும் இழந்து; நாணுத்துறந்தேன் - நாணத்தைக் கைவிட்டவளே ஆகின்றேன் காண்! பத்தினிப் பெண்டிர் - வாய்மையான பத்தினி மகளிரின் இயல்பு கேள்; காதலர் இறப்பின் - தம்மாற் காதலிக்கப்பட்ட தங்கேள்வர் ஊழ்வினை காரணமாக இறந்துபடின்; கனை எரி பொத்தி - மிக் கெரியுமாறு நெருப்பை மூட்டி; உலை ஊது குருகின் உயிர்த்து - கொல்லனுலையில் ஊதப்படுகின்ற துருத்தியின் மூக்குக் கனலோடு உயிர்க்கும் உயிர்ப்புப் போன்று வெய்தாக உயிர்த்து; அகத்து அடங்காது - தம்முள்ளத்தே அடங்க மாட்டாமையாலே; இன் உயிர் ஈவர் - தமதினிய உயிரைக் நீத் தொழிவர்; ஈயாராயின் - அவ்வாறு உயிர் நீத்திலராய விட்டதே; நல்நீரப் பொய்கையின் நளி எரி புகுவர் - குளிர்ந்த நீர்நிலை புகுந்து மாய்ந்தொழிவர்; நளி எரி புகாஅர் ஆயின அன்பரோடு உடனுரை வாழ்க்கைக்கு நோற்று உடம்படுவர் - அவ்வாறு செறிந்த தீயினுள் முழுகி மாயாதவிடத்தே இறந்துபட்ட தம் காதலரோடு மறுமைக்கண் கூடியுறையும் வாழ்க்கையை எய்தும் பொருட்டுக் கைம்மை நோன்பின் மேற்கொண்டிருந்து இம்மை மாறியபொழுது அக் காதலரோடு கூடி வாழா நிற்பர்காண் என்றான் என்க.
(விளக்கம்) வயந்தமாலை கற்றுத்துறை போகிய நங்கை நற்றவம் புரிந்தது நாணுடைத்து என்று ஊர் அலர் தூர்க்கின்றது என்றாளாதலின், மாதவி அங்ஙனம் அலர்தூற்றுதற்குக் காரணம், அவர் தவறு மன்று; நான் தவம் புரிந்ததுமன்று. காதலன் கொலையுண்ட செய்தி கேட்டபின்னரும் யான் நாணம்கெட்டவளாகின்றேன். அவர் தூற்றம் அலரும் இவ்வகையால் வாய்மையை ஆகின்றது. எனவும், வாய்மை யாகவே யான் பத்தினிமகளாயிருந்தால் கடுந்துயர் கேட்டவுடன் என் உயிர் தானே போயிருத்தல் வேண்டும்; அங்ஙனம் போந்துணிவற்ற புல்லுயிர் தாக்கிப் பின்னும் வாழ்வு கந்தருக்கின்றமையாலே புகழையும் இழந்தேன். பழியையும் சுமந்தேயிருக்கின்றேன் என்று தன்னையே நொந்துரைக்கின்ற இம்மொழிகள் அவளுடைய பேரன்பை மிகத் தெளிவாகக் காட்டுதலுணர்க. நற்றொடிநங்காய் என்று விளித்தது இகழ்ச்சிக் குறிப்பு.
கனை எரி - மிக்க நெருப்பு. எரி - உலையின்கண்ணிடப்பட்ட நெருப்பு. இதனைத் துன்பமாகிய தீ மூளப்பட்டு என்பாருமுளர். அவ்வுரை பொருந்தாமை யுணர்க நளி - செறிவு. எரிபுகுவர் என்றது தீயின மூழ்கி இறப்பர் என்றவாறு. உடம்பு அடுவர் எனக் கண்ணழித்து உடம்பை வருத்துவர் என்பாருமுளர்.
இனி, இம்மாதவி கூற்றிற்கு,
ஓருயிராக உணர்க உடன்கலந் தோர்க்(கு)
ஈருயி ரென்ப ரிடைதெரியார்-போரில்
விடனேந்தும் வேலோற்கும் வெள்வளையி னாட்கும்
உடனே யுலந்த துயிர் (புற-வெண்பாமாலை, 268)
என வரும் வரலாற்று வெண்பாவிற் றலைவியும்,
அரிமா னேந்திய அமளிமிசை யிருந்த
திருவீழ் மார்பின் தென்னர் கோமான்
தயங்கிணர்க கோதை தன்துயர் பொறாஅன்
மயங்கினன் கொல்லென மலரடி வருடித்
தலைத்தா ணெடுமொழி தன்செவி கோளாள்
கலக்கங் கொள்ளாள் கடுந்துயர் பொறாஅள்
மன்னவன் செல்வுழிச் செல்க யானெனத்
தன்னுயிர் கொண்டவ னுயிர்தே டினள்போல்
பெருங்கோப் பெண்டு மொருங்குடன் மாய்ந்தனள்
என வரும் நெடுஞ்செழியன் பெருந்தேவியும் காதலர் இறந்தவுடன் இன்னுயிர்ந்தமைக்கும், நன்னரீப்பொய்கையின் நளிபெயரிபுக்கமைக்கு,
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டீமம்
நுமக்கரி தாகுக தில்ல எமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென அரும்பற
வள்ளித ழவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே (புறம்-246)
எனக் கூறித் தன் கணவன் பூதப்பாண்டியன் இறந்துழி தீப்பாய்ந்திறந்த பெருங்கோப்பெண்டு என்னும் புலமையாட்டியும் சிறந்த எடுத்துக் காட்டாவார். மேலும், உடனுறைவாழ்க்கைக்கு நோற்கும் நோன்பினியல்பை,
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டா
தடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிபெய் தட்ட
வேளை வெந்தை வல்சி யாகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிர் (புறம் 246)
எனவரும். அப்பெருங்கோப் பெண்டின் கூற்றே சான்றாதலும் உணர்க.
மாதவி மணிமேகலை நாடகக்கணிகை யாகாளெனல்
48-57: பரப்பு.....படாஅள்
(இதன் பொருள்) பரப்பு நீர் ஞாலத்து அத்திறத்தாளும் அல்லள்-கடல் சூழ்ந்த இந்நிலவுலகத்தேயான் கூறிய அத்தகையபத்தினிப் பெண்டிர் போலவாளும் அல்லள்; எம் ஆயிழை - எங்கள் கண்ணகி நல்லாள்; கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாஅள்-தன் காதலனுக்கு எய்திய பெருந்துன்பத்தைக் கேட்டு நெஞ்சுபொறுக்கொணாத துன்பமுடையளாகி; மணம்மலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக் கண்ணீராடிய கதிர் இளவனமுலை - நறுமண மிக்குக் கமழ்கின்ற தன் கூந்தல் சரிந்து தன் முதுகினை மறைப்பவும்; தன் கண்ணினின்றும் வீழ்ந்த துன்பக் கண்ணீரின் மூழ்கிய ஒளியுடைய அழகிய இளமுலையில் ஒன்றனைத் தன் கையாலேயே; தண்ணிதின திருகி - திட்பமாகப் பற்றித் திருகி வட்டித்து எறிந்து; தீ அழல் பொத்தி - தீயாகிய அழலைக் கொளுவி; காவலன் பேரூர் கனை எரி மூட்டிய - பாண்டிய மன்னனுடைய தலை நகரமாகிய மதுரை முழுவதும் பெரிய தீயை மூட்டிய தெய்வத்தன்மையுடைய; மாபெரும் பத்தினி-மிகப் பெரிய பத்தின்யல்லளோ?; மகள் மணிமேகலை - அக் கற்புத் தெய்வத்தின் மகள் ஆவாள் இம் மணிமேகலை; அருந்தவப் படுத்தல் அல்லது - ஆதலின் அக் கற்புத் தெய்வத்தின் சிறப்பிற் கேற்ப இம் மணிமேகலையை அரிய தவவொழுக்கத்தின் பால் செலுத்துவதல்லது; யாவதும் திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள் - சிறிதும் உளம் திருந்துதற்குக் காரணமாகத் தீய செய்கைகளையுடைய பரத்தைமைத் தொழிலில் ஈடுபடாள் காண் என்றாள் என்க.
(விளக்கம்) தன் அன்புரிமை தோன்றக் கண்ணகியை மாதவி எம்மாயிழை என்கிறாள். எம் மென்னும் பொதுப் பெயர் கோவலனையும் மணிமேகலையையும் உளப்படுத்தியது. திருகுதல் அருமை தோன்றத் திண்ணிதிற்றிருகி என்றாள். எம் மாயிழை ஞாலத்துள்ள யான் கூறிய பத்தினிப் பெண்டிரின் திறத்தினும் மேம்பட்டுப் பேரூர் எரிமூட்டிய தெய்வக் கற்புடையாள். அத்தகைய பத்தினி மகள் மணிமேகலை. ஆதலின் தவப்படுத்தற்கே உரியள் தீத் தொழிலில் ஈடுபடாள் என மணிமேகலையைக் கண்ணகி மகளாகவே கொண்டு கூறினள். என்னை கோவலன் என்னோடு கேண்மை கொண்டிராவிடின் இவள் அவள் திருவயிற்றிலேயே கருவாகிப் பிறந்திருப்பாள் மன்! என்னும் கருத்தால். இப்பொழுது நிலம் இழந்ததேனும் வித்து உயர்ந்ததாகலின் அஃது இந்நிலத்தினும் தனக் கியன்ற விளைவையே செய்யும் என்பாள் தீத் தொழிற் படாள் என்றாள்.
மாதவி அறவணர்பால் அறங்கேட்டு அமைதி கொண்டமை கூறத் தானும் மீளாமையைக் குறிப்பாக அறிவித்தல்
58-63: ஆங்கனம்.......கூற
(இதன் பொருள்) ஆங்கனம் அன்றியும் - அவ்வாறு மணிமேகலை நிலையிருப்பதுமல்லாமல்; ஆயிழை கேளாய் - வயந்தமாலாய் இனி என்னிலைமை இயம்புவேன் கேட்பாயாக; ஈங்கு இம்மாதவர் உறைவிடம் புகுந்தேன் - யான் கணிகையே ஆதலின் காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப் போதல் செல்லாவுயிரொடு நின்றேனாயினும் ஆற்றெணாத் துயருழந்து அதற்கு ஆறுதல் தேடி இங்கு இப் பௌத்த சங்கத்தார் உறைகின்ற இத் தவப் பள்ளியிற் புகுந்தேன் காண் ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளதாதலாற் போலும். இவ்விடத்தே; மறவணம் நீத்த மாசு அறு கேள்வி அறவணவடிகள் அடிமீசை வீழ்ந்து - தீவினையின் நிழலும் ஆடாவண்ணம் அவற்றைத் துவரக் கடிந்தமையால் மாசு அற்ற அறக் கேள்வியையுடைய அறவணடிகள் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற அறவோரைக் காணப்பெற்று அவர் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி; மாபெருந் துன்பம் கொண்டு - மிகப் பெரிய துன்பத்தைச் சுமந்து கொண்டு ஆற்றாமையாலே; உளம் மயங்கி - நெஞ்சழித்து செய்வதறியாமல் மயங்கி அவர்பால்; காதலன் உற்ற கடுந்துயர் கூற - என ஆருயிர்க் காதலன் கொலைக்களப் பட்ட மிக்க துன்பத்தைக் கூறாநிற்றலாலே; என்க
(விளக்கம்) ஆங்கனம் அன்றியும் என்றது மணிமேகலை அவ்வாறு ஆதலன்றியும் இனி என்றிறம் உரைப்பேன் என்பதுபட நின்றது. ஆயிழை: வயந்தமாலை; அண்மைவிளி. எனக்கும் ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளதாதலாற் போலும் ஈங்கு இம்மாதவர் உறைவிடம் புக்கேன் என்பது அவள் கருத்தாகக் கொள்க. மறவணம்-மறத்தின் வண்ணம். தீவினையின் தன்மை நீத்த அறவண அடிகள். மாசறு கேள்வி அறவண அடிகள் எனத் தனித்தனி இயையும் . அறவணன் - அறத்தின் திருவுருவமானவன். எனவே இஃது அச் சங்கத்தாரீப்த சிறப்புப் பெயர் என்பதுணரப்படும்.சாதலில் இன்னாததில்லை ஆகலின் கொலையுண்டமையைக் கடுந்துயர் என்றாள்.
அறவணர் அருவிய அறவுரைகள்
64-66: பிறந்தோர்........அருளினன்
(இதன் பொருள்) பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் - அது கேட்ட அடிகளார் அடிச்சிக்குப் பெரிதும் இரங்கி என் துயரத்திற்கு ஆறுதல் கூறுபவர் அளியோய் வருந்தற்க! உலகின் கண் பிறப்பெடுத்துழலவோர் யாவரேனும் எய்துவது ஒருகாலைக் கொருகால் மிகுத்து வரந்துன்பமட்டுமே காண்; பிறவார் உறுவது பெரும் பேரின்பம் - இன்ப பிறவாநிலை எய்னோர் யாவர் அவர்க்கு மட்டுமே எய்துவதாம் மக்கள் அவாவுகின்ற மாபெரும் பேரின்பம்; முன்னது பற்றின் வருவது - துன்பம் அனைத்திற்கும் பிறப்பிடமாகிய முற் கூறப்பட்ட பிறப்புப் பற்றினாலே வருவதொன்றும்; பின்னது பின்னே கூறப்பட்ட இன்பநிலைகளமாகிய பிறவாமையோ; அற்றோர் உறுவது அறிக - பற்றற்றோர்க்குத் தானே எய்துவதொன்றாம்; அறிக என்றருளி- இவ்வாய்மைகள் நான்கினையும் நன்கு அறிந்து கொள்ளக் கடவாய் என்று முற்பட இவற்றை அறிவித்துப் பின்னர்; ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி - பற்றறுதிக்குக் காரணமான ஐந்து வகைப்பட்ட ஒழுக்கங்களி னிலக்கணங்களையும் நன்கு அறிவுறுத்து; இவை உய்வகை கொள் என்று உரவோன் காட்டினன்-இவையே நீ எய்திய மாபெருந் துன்பக்கடலினின்றும் கரையேறி உறுதியாகக் கடைப்பிடித்துக் கொள்ளக் கடவாய் என்று அப் பேரறிவாளர் திருவாய் மலர்ந்தருளினர் காண் என்றாள் என்க
(விளக்கம்) ஆதலால் யான் ஒருவாறு அம் மாபெருந் துன்பத்தினின்றும் நீங்கி அமைதி பெற்றுள்ளேன் காண் என்பது இதனாற் போந்த குறிப்புப் பொருளாம் என்க.
இப்பகுதியில் புத்தபெருமான் போதி மூலத்துப் பொருந்தியிருந்துழிக் கண்ட மெய்க் காட்சிகள் நான்கும் சுருங்கக்கூறி விளங்க வைத்திருக்கும் தண்டமிழ் ஆசான் சாத்தனார்தம் புலமை வித்தகம் நினைந்து நினைந்து மகிழற்பாலதாம்.
பௌத்த சமயத்தின் உயிராக விளங்குவன இந்த நான்கு வாய்மைகளேயாம். அவை, துன்பம், துன்பந் துடைத்தல், துன்பவருவாய், துன்பம் துடைத்தல் நெறி என்னும் இவையேயாம்.
இவையிற்றுள்-பிறப்பு துன்பங்கட் கெல்லாம் நிலைக்களனாதலின் பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் என முதல் வாய்மை கூறப்பட்டது பிறவாமையே இன்பநிலையம் ஆதலின் பிறவார் உறுவது பெரும் பேரின்பம் என இரண்டாம் வாய்மை இயம்பப்பட்டது. முன்னது என்றது பிறப்பினை; அதற்குக் காரணம் பற்றுடைமை ஆதலின், முன்னது பற்றின் வருவது என மூன்றாவதாகிய வாய்மை துன்ப வருவாய்(வரும் வழி) கூறப்பட்டது. பிறவாமையே துன்பம் துடைக்கும் நெறி ஆகலின் பின்னது-பற்றறுதி. பின்னது அற்றோர் உறுவது என்பதனால் நான்காம் வாய்மை நவிலப்பட்டமை நுண்ணிதின் உணர்க. இவ் வாய்மைகள் நான்கும் உலகிலுள்ள எல்லாச் சமயங்கட்கும் எல்லா நாட்டிற்கும் எக் காலத்திற்கும் பொருந்தும் சிறப்புடையன வாதலும் உணர்க.
இங்ஙனம் துணிபொருள் கூறியவர் அவற்றை எய்துதற்குரிய ஏதுவும் இயம்பினர் என்பாள் ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி அருளினன் என்றாள். சீலம்-ஒழுக்கம். அவையாவன: காமம் கொலைகள் பொய் களவு என்னும் ஐந்து தீவினைகளையும் துவரக் துயந்தொழுகுதலாம். காமத்தைத் துறந்தபொழுதே துன்பம் இல்லையாக; இவ்வாற்றல் யான் ஈண்டு ஒருவாறு துன்பந் துடைக்கும் நெறிநிற்றலால் உயர்ந்திருக்கின்றேன் என்று மாதவி வயந்த மாலைக்குத் தன்னிலை கூறத் தானும் வரமாட்டாமையைக் குறிப்பினால் கூறியபடியாம். தான் உழந்த மாபெருந் துன்பத்தை ஆற்றுவித்த அறவண அடிகளின் அறிவாற்றலின் சிறப்புத் தோன்ற அவரை உரவோள் என்று அறியும் ஆற்றலும் ஒருங்கே உணர்த்தும் பெயரால் கூறினள் என்க.
வயந்தமாலை வறிதே மீண்டுபோதல்
70-75: மைத்தடங்கண்..........திறத்தென்
(இதன் பொருள்) நீ மைத்தடங் கண்ணார் தமக்கும் என் பயந்த சித்திராபதிக்கும் என்னிலைமையைக் கூறுவாயாக என்று ஆங்கு அவள் உரை கேட்டு அவ்விடத்தே மாதவி கூறிய மொழியைக் கேட்டவளவிலே; வயந்த மாலையும் காரிகை திறத்துக் கையற்று-மாதவியை மீட்டுச் செல்லும் கருத்தோடு வந்த அவ் வயந்தமாலை தானும் அம் மாதவி திறத்திலே தான் பின் ஏதும் சொல்லவா செய்யவோ இயலாத கையாறு நிலையுடையளாகி; அரும் பெறல் மாமணி ஓங்கு திசைப் பெருங்கடல் வீழ்த்தோர் போனறு அரிதாகப் பெற்றதொரு மாணிக்க மணியை உயர்ந்த அலைகளையுடைய பெரிய கடலிலே போகட்டுவிட்டவர் போலே; மையல் நெஞ்சமொடு பெயர்ந்தனள்-பெரிதும் மயக்கமுற்ற நெஞ்சத்தோடே வறிதே செல்வாளாயினள்; என்பதாம்.
(விளக்கம்) தன் தோழிமார் தன் கூற்றிற்குப் பொருளுணரார் ஆயினும் அவர்க்கும் கூறுக என்னும் இகழ்ச்சி தோன்ற அவரை மைத்தடங்கண்ணார் என்றாள். என்னை அழகு செய்த புறக்கண்ணேயுடையர் அகக் கண்ணில்லா அவர்க் கெல்லாம் இவை விளங்க மாட்டா என்பதே அவள் கருத்தாதலின் என்க.
இனி இத்துணைத் துன்பத்திற்கும் ஆளாகும் என்னைப் பெற்றமையாலும் அவள் கருதியது நிறைவேறாமையாலும் அவள் தீவினையாட்டியே ஆதல்வேண்டும் என்பது குறிப்பாகத் தோன்றற் பொருட்டு அன்னைக்கு என்னாது தனக்கும் அவட்கும் அயன்மை விளங்கித் தோன்ற எற்பயந்த சித்திராபதி எனத் தன் நற்றாயைக் கூறினள். இதனால் அவட்குப் பற்றறுதி கைவந்தமையும் புலப்படுதலறிக. வயந்தமாலையும் அன்பு பொருளாக அன்றிப் பொருட்பொருட்டே அழைக்கவந்தவள் ஆதலின் அவட்கு மாமணியை இழந்தவர் உவமையாக எடுக்கப்பட்ட நயமுணர்க.
இனி இக்காதையை-நன்னாளில் மாதவி வாராத்துன்பம் மேல்வர, சித்திராபதி இரங்கி வயந்தமாலையைக் கூவி அலரை மாதவிக்கு உரைஎன அவள் சென்று மாதவியைக் கண்டு வருந்தி அனையாய் கேளாய் வாய்மொழி நாணுடைத்து என அவட்கு மாதவி உரைக்கும் துறந்தேன் மணிமேகலை தீத்தொழில் படாஅள் யான் புகுந்து வீழ்ந்து மயங்கிக் கூற உரவோன் அறிகென்று நாட்டி, அருளினன். இதனைக் கண்ணார்க்கும் சித்திராபதிக்கும் நீ சென்று செப்பு என வயந்தமாலையும் கையற்றுப் பெயர்ந்தனள் என இயைத்திடுக.
ஊரலர் உரைத்த காதை முற்றிற்று.