Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

3. அரங்கேற்று காதை 5. இந்திரவிழவூரெடுத்த காதை
முதல் பக்கம் » சிலப்பதிகாரம்
4. அந்திமாலைச் சிறப்புசெய் காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2012
03:01

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது - கோவலன் மாமலர் நெடுங்கண் மாதவிக்கு அவள் பரிசிலாகப் பெற்ற மாலைக்கு நூறுபத்தடுக்கி யெட்டுக் கடை நிறுத்த வீறுயர் பசும்பொன் விலையாகக் கொடுத்து வாங்கிக் கூனிதன்னொடு சென்று அம்மாதவி மனைபுகுந்து அணைவுறுதற்கியன்ற அந்த நாளினது அந்திமாலைப் பொழுது முதலிய கங்குற் பொழுதுகளை (நூலாசிரியர்) கிளந்தெடுத்துப் புனைந்தோதிய பகுதி என்றவாறு.

(விளக்கம்) கோவலனை ஆகூழ்காரணமாகப் பெற்ற மாதவிக்கும், போகூழ் காரணமாகப் பிரியலுற்ற கண்ணகிக்கும் அற்றை நாள் தொடங்கிப் பொழுது கழியுமாற்றை ஆசிரியர் இளங்கோவடிகளார் நம்மனோர்க்கு அறிவுறுத்தக் கருதித் தொடக்க நாளாகிய அந்த ஒரு நாளின் அந்திமாலை தொடங்கி இரவு கழிந்த தன்மையை மட்டும் விதந்தெடுத்துக் கூறுகின்றார். என்னை? ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்னும் நியாயம் பற்றி இக்காவியம் ஓதுவோர் அவர்கள் வாழ்க்கைப் போக்கினை உணர்ந்து கோடல் எளிதாகலான் என்க. காமமானது மலரும்பொழுது அந்திமாலைப் பொழுதேயாகலின் அச்சிறப்புப்பற்றி அப்பெயர் பெற்றது இக்காதை; இது, சுருங்கக் கூறி விளங்கவைக்கும் ஓர் அழகாம் என்றுணர்க.

விரிகதிர் பரப்பி உலகம்முழுது ஆண்ட
ஒருதனித் திகிரி உரவோன் காணேன்
அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும்
திங்கள்அம் செல்வன் யாண்டுஉளன் கொல்எனத்
திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள்  5

முழுநீர் வார முழுமெயும் பனித்துத்
திரைநீர் ஆடை இருநில மடந்தை
அரைசுகெடுத்து அலம்வரும் அல்லற் காலை,
கறைகெழு குடிகள் கைதலை வைப்ப
அறைபோகு குடிகளொடு ஒருதிறம் பற்றி  10

வலம்படு தானை மன்னர் இல்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்
தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்தக்
காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ்வு எய்தக்
குழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு  15

மழலைத் தும்பி வாய்வைத்து ஊத
அறுகால் குறும்புஎறிந்து அரும்புபொதி வாசம்
சிறுகால் செல்வன் மறுகில் தூற்ற
எல்வளை மகளிர் மணிவிளக்கு எடுப்ப
மல்லல் மூதூர் மாலைவந்து இருத்தென  20

இளையர் ஆயினும் பகைஅரசு கடியும்
செருமாண் தென்னர் குலமுதல் ஆகலின்
அந்திவா னத்து வெண்பிறை தோன்றிப்
புன்கண் மாலைக் குறும்புஎறிந்து ஓட்டிப்
பான்மையில் திரியாது பால்கதிர் பரப்பி  25

மீன்அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து,
இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ் சேக்கைப் பள்ளியுள் பொலிந்து
செந்துகிர்க் கோவை சென்றுஏந்து அல்குல்
அம்துகில் மேகலை அசைந்தன வருந்த  30

நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்துஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்
கோலம் கொண்ட மாதவி அன்றியும்,
குடதிசை மருங்கின் வெள்அயிர் தன்னொடு  35

குணதிசை மருங்கின் கார்அகில் துறந்து
வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத்
தென்மலைப் பிறந்த சந்தனம் மறுகத்
தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க்
காமரு குவளைக் கழுநீர் மாமலர்ப்  40

பைந்தளிர்ப் படலை பருஉக்காழ் ஆரம்
சுந்தரச் சுண்ணத் துகளொடு அளைஇச்
சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை
மந்தமா ருதத்து மயங்கினர் மலிந்துஆங்கு
ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கிக்  45

காவிஅம் கண்ணார் களித்துயில் எய்த
அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதுஅணி மகிழாள்  50

கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறுவியர்ப்பு இரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்நுதல் திலகம் இழப்பத்
தவள வாள்நகை கோவலன் இழப்ப  55

மைஇருங் கூந்தல் நெய்அணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும்,
காதலர்ப் பிரிந்த மாதர் நோதக
ஊதுஉலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி
வேனில் பள்ளி மேவாது கழிந்து  60

கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து
மலயத்து ஆரமும் மணிமுத்து ஆரமும்
அலர்முலை ஆகத்து அடையாது வருந்தத்
தாழிக் குவளையொடு தண்செங் கழுநீர்
வீழ்பூஞ் சேக்கை மேவாது கழியத்  65

துணைபுணர் அன்னத் தூவியிற் செறித்த
இணைஅணை மேம்படத் திருந்துதுயில் பெறாஅது
உடைப்பெருங் கொழுநரோடு ஊடல் காலத்து
இடைக்குமிழ் எறிந்து கடைக்குழை ஓட்டிக்
கலங்கா உள்ளம் கலங்கக் கடைசிவந்து  70

விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்புமுத்து உறைப்ப,
அன்னம் மெல்நடை நன்னீர்ப் பொய்கை
ஆம்பல் நாறும் தேம்பொதி நறுவிரைத்
தாமரைச் செவ்வாய்த் தண்அறல் கூந்தல்
பாண்வாய் வண்டு நோதிறம் பாடக்  75

காண்வரு குவளைக் கண்மலர் விழிப்பப்
புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து
முள்வாய்ச் சங்கம் முறைமுறை ஆர்ப்ப
உரவுநீர்ப் பரப்பின் ஊர்த்துயில் எடுப்பி
இரவுத் தலைப்பெயரும் வைகறை காறும்  80

அரைஇருள் யாமத்தும் பகலும் துஞ்சான்
விரைமலர் வாளியொடு கருப்புவில் ஏந்தி
மகர வெல்கொடி மைந்தன் திரிதர
நகரம் காவல் நனிசிறந் ததுஎன்.

(வெண்பா)

கூடினார் பால்நிழலாய்க் கூடார்ப்பால் வெய்தாய்க்
காவலன் வெண்குடைபோல் காட்டிற்றே - கூடிய
மாதவிக்கும் கண்ணகிக்கும் வான்ஊர் மதிவிரிந்து
போதுஅவிழ்க்கும் கங்குல் பொழுது.

உரை

1-8: விரிகதிர் ............ அல்லற் காலை

(இதன்பொருள்) திரை நீர் ஆடை இருநில மடந்தை - அலையெறிகின்ற நீர்ப்பரப்பாகிய கடலை ஆடையாக உடுத்துள்ள பெரிய நிலமாகிய தெய்வ நங்கையானவள்; அரைசு கெடுத்து - தன் கொழுநனாகிய ஞாயிற்றுத் தேவனைக் காணப்பெறாமையாலே; திசைமுகம் பசந்து - திசைகளாகிய தனது நான்கு முகமும் பச்சை வெயிலாகிய பசப்பூரப்பெற்று; செம் மலர்க்கண்கள் முழு நீர் வார முழுமெயும் பனித்து - சிவந்த மலர்களாகிய தனது எண்ணிறந்த கண்களினெல்லாம் உள்ள நீர் முழுதும் சோரா நிற்பவும் தனது மெய்முழுதும் பனிப்பவும்; விரிகதிர் பரப்பி உலகம் முழுது ஆண்ட ஒருதனித்திகிரி உரவோன் காணேன்-ஐயகோ! விரிகின்ற ஒளியாகிய தனது புகழை யாண்டும் பரப்பி உலக மனத்தையும் எஞ்சாது ஆட்சிசெய்தற்குக் காரணமான ஒற்றையாழியையுடைய ஆற்றல்மிக்க என் தலைவனைக் காண்கிலேனே; அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும் திங்கள் அம்செல்வன் யாண்டு உளன் கொல் - அதுவேயுமன்றி, அழகிய வான வெளியிலே அழகிய நிலவொளியை விரித்து விளையாட்டயருமியல்புடையவனும் இளவரசனும் ஆகிய திங்கள் என்னும் என் திருமகன்றானும் யாண்டிருக்கின்றனன் என்றும் அறிகின்றிலேனே என்று புலம்பி; அலம் வரும் அல்லல்காலை - மனஞ்சுழலா நின்ற இடுக்கட் பொழுதிலே, என்க.

(விளக்கம்) இருநிலமடந்தையானவள் கெடுத்துப் பசந்து வாரப் பனிப்பக் காணேன் யாண்டுளன் கொல்லோ என அலம் வரும் அல்லற் காலை என்று இயைத்திடுக.

இனி, (1-8:) ஈண்டு அடிகளார், நிலத்தை, மடந்தை யாகவும் ஞாயிற்றை அவள் கணவனாகவும், திங்களை அவள் மகனாகவும், உருவகித்துக் கூறுகின்றார் என்றுணர்க.

இக்காதையில் கண்ணகியார் கணவனைக் காணப்பெறாது அலம் வந்து அல்லலுறுகின்ற நிலையினை ஓதுதற்குப்புகுந்த அடிகளார் கருப் பொருளாகிய நிலம் ஞாயிறு முதலியவற்றினும் அப்பிரிவினையும் ஆற்றாமையையும் அவலச்சுவை கெழுமப் பாடுகின்ற நுணுக்கம் பெரிதும் உணர்ந்து மகிழற் பாலதாம்.

1. அரசன் என்பதற்கேற்ப - கதிர் என்பதனை - (ஒளி;) புகழ் எனவும் கூறிக்கொள்க. உலகம்; குறிஞ்சி முதலிய உலகங்கள் என்க. என்னை? அவற்றைக் காடுறையுலகமும் மைவரையுலகமும் எனத் தனித்தனி உலகம் என்றே வழங்குதல் உண்மையின் ஏழுலங்களையும் என்பர் பழைய உரையாசிரியர். இனி உலகம் முழுதும் ஆண்ட என்புழி முழுதும் என்பது எஞ்சாமைப் பொருட்டெனினுமாம். மேலே மெய்ம் முழுதும் பனிப்ப என்றாற்போல, முழுதும் என்பதன்கண் முற்றும்மை தொக்கது.

2. ஒரு தனித்திகிரி-ஒப்பற்ற ஒற்றைத்தேராழி, எனவும் ஆணைச் சக்கரம் எனவும் இருபொருளும் பயந்து நின்றது. உரவோன் - ஆற்றலோன், ஞாயிறும் மன்னனும் என இரு பொருளுங் கொள்க. விரிகதிர் என்பது தொடங்கி யாண்டுளன் என்னுந் துணையும் நிலமடந்தை கூற்று, 3-4; திங்களாகிய என்மகன் என்க. செல்வன்-மகன். அவன் இளைஞனாதலின் வானத்து அணி நிலா விரித்து விளையாடும் திங்கட் செல்வன் என விரித்தோதுக. 5-6. திசைமுகம் என்றமையான் நான்கு முகம் என்க. பசத்தல் - மகட்குப் பசலைபூத்தலும் நிலத்திற்கு பச்சை வெயிலால் பசுமையுறுதலும் ஆகும். செம்மலர் - செந்தாமரை முதலிய மலர்கள் - அல்லலுறுதல் பற்றி செம்மலர் என அடைபெய்தனர். மலர் என்பதற் கியைய, கள்+நீர்வார எனவும் மடந்தை என்பதற்கியைய, கண்கள்+நீர்வார எனவும் கண்ணழித்து இருபொருளும் கொள்க முழு நீர் வார நீர் முழுதும் சொரிந்து வறள என்க. இது கடைகுறைந்து நின்றது. பனித்தல் என்பதற்கும், பனிபெய்யப் பெறுதல்; நடுங்குதல் என இருபொருளும் காண்க. 7. திரைநீர்; அன்மொழித் தொகை; கடல். 8. அரைசு போலி. இதுவும் கொழுநன் எனவும் ஞாயிறு எனவும் இருபொருள் பயக்கும். இப்பகுதியில் வருகின்ற உருவகஅணி சிலேடையணி முதலியன உணர்ந்து மகிழ்க.

9-12 : கறைகெழுகுடி மன்னரின்

(இதன்பொருள்) வலம்படு தானே மன்னர் இல் வழி - வெற்றி விளைக்கும் படைகளையுடைய முடிவேந்தர் இல்லாத அற்றம் பார்த்து; கறை கெழுகுடிகள் கைதலை வைப்ப - அந்நிலத்திலே தமக்குரிய கடமைப் பொருளை இறுத்தற்குப் பெரிதும் மனம் பொருந்தி வாழ்ந்த நற்குடிமக்கள் தமது கொடுங்கோன்மைக்கு ஆற்றாமல் கண்கலங்கி அழுது தலைமேலே கைவைத்து வருந்தும் படி; அறைபோகு குடிகளொடு ஒரு திறம்பற்றி - தம்மாற் கீழறுக்கப்பட்டுத் தமக்குத் துணையாகிய புன்குடிமக்களோடு ஒரு பகுதியைக் கைப்பற்றி அதுவழியாகப் புகுந்து; புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின் - அந்நாட்டு விளைநிலனெல்லாம் அழிந்து படும்படி தங்கிய புதுவோராகிய குறுநில மன்னர்களைப்போன்று என்க.

(விளக்கம்) 9. கறை கெழுகுடிகள் இறை செலுத்துதற்குப் பொருந்திய நற்குடி மக்கள், கைதலைவைப்ப - வருந்த - காரணத்தைக் காரியமாக உபசரித்தார். என்னை? வருத்தமுறுவோர் தலையிலடித்துக் கோடல் இயல்பாகலின் என்க. இதற்குத் துயர் உறுதல் என்னும் பொருள் நிகழ்ச்சியைத் தலைமேல் கைவைக்க வென்னும் தொழில் நிகழ்ச்சியாற் கூறினார் என்பர் (பழையவுரை) யாசிரியர், 10-அறைபோகு குடிகள் பகை மன்னரால் கீழறுக்கப்பட்டு அவர் வயப்பட்ட புன்குடிகள், ஒரு திறம் - ஒரு திசை. மாலைப்பொழுது மேற்றிசையினின்று உலகிற்புகுதலும் குறுநில மன்னர் யாதானுமோர் உபாயம்பற்றிப் புகுதலும் பற்றிப் பொதுவாக ஒருதிறம்பற்றி என்றார். புலம்-ஈண்டு விளைநிலம்: இறுத்தல்-வந்து கால் கொள்ளுதல். வலம்படுதானை மன்னர் இல்வழி என்றமையால் ஈண்டு விருந்தின் மன்னர் என்றது அந்நாட்டிற்குப் புதியவராகிய குறுநில மன்னர் என்பது பெற்றாம். மன்னரின் - என்புழி ஐந்தனுருபு உறழ்பொருட்டு.

13-20: தாழ்துணை துறந்தோர் .............. இறுத்தென

(இதன்பொருள்) தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்த - தம் மனத்தே தங்கியிருக்கின்ற கொழுநரைப் பிரிந்திருக்கின்ற மகளிர் கறைகெழு குடிகள் போன்று ஒடுங்கித் தனிமையினால் வருந் துயரத்தை எய்தா நிற்பவும்; காதலர்ப் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த - தங்காதலரைப் புணர்ந்திருக்கின்ற மகளிர் அறை போகுகுடிகள் போன்று தருக்கி மகிழ்ந்து இன்பமெய்தா நிற்பவும்; குழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு மழலைத் தும்பி வாய்வைத்து ஊத-வேய்ங்குழலிலே வளர்கின்ற முல்லை என்னும் பண்ணிலே ஆயரும், மகளிர் கூந்தலிலே வளர்கின்ற முல்லை மலரிலே இனிதாக முரலுகின்ற தும்பியும் வாய்வைத்து ஊதா நிற்பவும்; சிறுகால் செல்வன் அரும்பு பொதிவாசம் அறுகால் குறும்பு எறிந்து மறுகில்தூற்ற - இளைய தென்றலாகிய செல்வன் முல்லை மல்லிகை இவற்றின் நாளரும்புகள் தம்மகத்தே பொதிந்து வைத்துள்ள நறுமணத்தை அவை முகமலர்ந்து ஈதற்கு முன்னே தாமே கால்களாற் கிண்டிக் கவராநின்ற வண்டுகளாகிய பகையைக் கடிந்தோட்டி அளந்து கொடுபோய் நகர மறுகுகள் எங்கும் பரப்பா நிற்பவும்; எல்வளை மகளிர் மணிவிளக்கு எடுப்ப-ஒளியுடைய வளையலணிந்த மகளிர்கள் இல்லங்கள்தோறும் அழகிய விளக்குகளை ஏற்றித் தொழா நிற்பவும்; மல்லல்மூதூர் மாலை வந்து இறுத்தென - வளமிக்க பழைமையான அப் புகார் நகரத்தே அந்திமாலைப் பொழுது என்னும் குறும்பு வந்துவிட்டதாக என்க.

(விளக்கம்) 13 - தாழ்துணை: வினைத்தொகை. தாழ்தல் - தங்கியிருத்தல். துணை-கொழுநர். களி மகிழ்வு - வினைத்தொகை. களித்து மகிழ. அஃதாவது தருக்கி மகிழவென்க. 15-16 குழல்-வேய்ங்குழல்; கூந்தல். இரட்டுற மொழிதல் என்னும் உத்திபற்றிக் கோவலர்க்கு வேய்ங்குழல் என்றும் தும்பிக்கு மகளிர் கூந்தல் என்றும், நிரலே வளர் முல்லை என்பதற்கு ஆரோசையாக வளர்கின்ற முல்லைப்பண் என்றும் வளர்கின்ற முல்லையினது மலர் என்றும் ஏற்ற பெற்றி பொருள் கூறிக் கொள்க. மழலைத் துபி இன்னிசை முரல்கின்ற தும்பி என்க. தும்பி-வண்டுவகையினுள் ஒன்று.

இனி, வேய்ங்குழலினும் முல்லையினும் கோவலரொடு தும்பி வாய் வைத்தூத என நிரனிறையாகக் கோடலுமாம் 16. அறுகால் : அன் மொழித் தொகை; வண்டு. வண்டைக் குறும்பென்றார் தென்றலால் தளிர்ப்பித்தும் பூப்பித்தும் செய்யப்பட்ட அரும்பு பொதிவாசத்தைக் கொள்ளை கொள்ளுதலால்; அரும்பு - ஈண்டு அப்பொழுது மலர்தற்கியன்ற நாளரும்பு. 18. சிறுகால் - இளந்தென்றல், இஃதஃறிணைச் சொல்லாயினும் உயர்திணைமேற்று, ஆகலின் செல்வன் என்றார். எல்-ஒளி. மகளிர் விளக்கெடுப்ப என்றமையால் இனஞ்செப்புமாற்றால் நெல்லும் மலருந் தூவித் தொழுதென்க. என்னை? அங்ஙனம் தொழுதல் மரபாகலின்; மணி - மாணிக்க மணியுமாம்.

அல்லற்காலை விருந்தின் மன்னரின் தனித்துயர் எய்தவும் களி மகிழ் வெய்தவும் ஊதவும் தூற்றவும் விளக்கெடுப்பவும் மாலை வந்திறுத்தது என வியையும்.

பிறை தோன்றுதல்

21-26: இளையராயினும் ......... விளக்கத்து

(இதன்பொருள்) இளையர் ஆயினும் பகையரசு கடியும் செருமாண் தென்னர் குலமுதல் ஆதலின் - தாம் ஆண்டினால் இளைமையுடையோராய விடத்தும் தம்மோடெதிரும் பகைவராகிய பேரரசரையும் எதிர்ந்து புறமிடச்செய்தற் கியன்ற போர் ஆற்றலால் மாட்சிமையுடைய பாண்டிய மன்னருடைய குலத்திற்கு முதலிற்றோன்றுதலாலே; அந்திவானத்து வெண்பிறை தோன்றி-அந்திமாலைக் கண்ணதாகிய செக்கர் வானத்தின்கண் வெள்ளிய இளம்பிறையானது தோன்றி; புன்கண் மாலைக் குறும்பு எறிந்து ஓட்டி - உயிர்கட்குத் துன்பத்தைச் செய்கின்ற அம்மாலையாகிய குறும்பைப் பொருது புறமிட்டோடச் செய்து; பான்மையில் திரியாது - தனக்குரிய பண்பாகிய செங்கோன்மையிற் பிறழாமல்; பாற்கதிர் பரப்பி-பால்போலும் தனது ஒளியாகிய அளியை உலகெலாம் பரப்பி; மீன் அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து - அவ்விண்மீன் வேந்தனாகிய திங்கள் ஆட்சிசெய்த வெண்மையான விளக்கத்திலே, என்க.

(விளக்கம்) 21-22. தென்னர் ஆண்டிளைமையுடையராயினும் வலிய பகையரசரையும் கடியும் பேராற்றல் வாய்ந்தவர் அல்லரோ! அப்பண்பு அவர் குலத்திற்கு முதல்வனாகக் கூறப்படுகின்ற திங்களிடத்தும் இருப்பது இயல்பு. ஆதலால் திங்கள் இளம்பிறையாயவிடத்தும் அந்திப் பொழுதில் வந்து உலகைக் கௌவிய இருளாகிய பகையைக் கடிந் தோட்டலாயிற்று என்பது கருத்து. இளையராயினும் என்றதனால் பகையரசு என்றது போர்ப் பயிற்சி மிக்க வல்லரசர் என்பது குறிப்பாற் பெற்றாம். பாண்டியர் இளையராயினும் பகையரசு கடியும் செருமாண் புடையர் என்புழி அடிகளார் இடைக்குன்றூர்க் கிழாஅர் என்னும் புலவர் பெருமான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிய அரசவாகைத்துறைச் செய்யுளையும் அப்பாண்டியன் சூண்மொழிந்த செய்யுளையும் நினைவு கூர்ந்திருத்தல் கூடும் அவை புறநானூற்றில் 71,72 -ஆம் செய்யுள்களாம். அவற்றை நோக்கியுணர்க.

33. அந்திவானம் - செக்கர்வானம், புன்கண் - துன்பம். குறும்பு - செவ்வி நேர்ந்துழி வேந்தலைக்கும் குறும்பர்; இவர் குறுநில மன்னர் ஆசிரியர் வள்ளுவனார் இவரை வேந்தலைக்கும் கொல் குறும்பு என வழங்குவர். 25. பான்மை - செங்கோன்மை கதிர் ஈண்டு அரசர்க்குரிய அளி என்க. மீனரசு திங்கள். விண்மீன்களுக்குத் தலைவன் என்பது பற்றி அங்ஙனம் ஒரு பெயர் கூறினர். 26. வெள்ளி விளக்கம் என்றது நிலவொளியினை.

27-34 : இல்வளர் ...... மாதவியன்றியும்

(இதன்பொருள்) ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி - தனது மாலையை ஆயிரத் தெண்கழஞ்சு பொன் கொடுத்து வாங்கிக் கூனியொடு தன் மனைபுக்க கோவலனைப் பேரார்வத்தோடு எதிர் கொண்டு மணவாளனாக ஏற்றுக் கொண்டு; இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த பல் பூஞ்சேக்கைப் பள்ளியுள் பொலிந்து - இல்லத்திலே நட்டு நீர்கால் யாத்து எருப்பெய்து வளர்க்கப் பட்டமையாலே செழித்து வளர்கின்ற முல்லையோடு மல்லிகையும் ஏனைய தாழிக்குவளை முதலிய பல்வேறு மலர்களும் மலர்ந்து மணம் பரப்பாநின்ற மலர்ப்பாயலையுடைய பள்ளியிடத்தே தங்கிக் காதலனை எய்தினமையாலே புதுப்பொலிவு பெற்று; சென்று ஏந்து அல்குல் - உயர்ந்து பூரித்துள்ள தனது அல்குலிடத்தே அணியப்பெற்ற; செந்துகிர்க் கோவை -செவ்விய பவளத்தாலியன்ற கோவையும்; அந்துகில் மேகலை- அழகிய புடைவை மேற் சூழ்ந்த மேகலையும் ஆகிய பேரணிகலன்கள்; அசைந்தன வருந்த - தந்நிலைகுலைந்து வருந்தாநிற்ப; நிலவுப் பயன்கொள்ளும் நெடுநிலா முற்றத்து - நிலவினது பயனை நுகர்தற்கியன்ற நெடிய நிலாமுற்றத்தின்கண்; கலவியும் புலவியும் காதலற்கு அளித்து-ஒருகாற் கலவியையும் மறுகால் புலவியையும் தன் காதலனாகிய கோவலனுக்கு வழங்கி; ஆங்கு - அவ்விடத்தே; கோலங்கொண்ட மாதவியன்றியும்-கலவியாலும் புலவியாலும் குலைந்த ஒப்பனைகளை மீண்டும் வேட்கை விளைக்கும் கோலமாகத் திருத்திய அம்மாதவியே யன்றியும்; என்க.

(விளக்கம்) 3-4 : மலரின் செழுமைக்கும் மணமிகுதிக்கும் இல்வளர் முல்லையும் மல்லிகையும் கூறப்பட்டன. என்னை? அவை பொழுதறிந்து நீர்கால்யாத்து எருப்பெய்து வளர்க்கப்படுமாதலின் அவற்றின் மலரும் மணமும் சிறப்புடையனவாதலியல்பாகலின். தாழியில் நட்டுக் குவளைமலர்களும் உண்டாக்குவர் ஆதலின் பழைய உரையாசிரியர் ஒழிந்த தாழிக்குவளை முதலிய பல பூவும் என்றார். இம்மலர்கள் மாலைப் பொழுதில் மலரும் இயல்பின ஆதலின் அவிழ்ந்த பூஞ்சேக்கைப் பள்ளி என்றார். சேக்கைப்பள்ளி-கருத்தொத்து ஆதரவுபட்ட காதலர் சேர்ந்து துயிலும் படுக்கை. சேர்க்கப்பள்ளி எனவும் பாடம் பொலிவு. புதியபொலிவு. காதலர் இருவரும் கூடியிருத்தலால் உண்டாய பொலிவென்றபடி. கோவை மேகலை என்பன அணிகலன்கள். அவற்றை எண் கோவை மேகலை காஞ்சி யெழுகோவை என்பதனாலறிக துகிர் - பவளம் - கோவை மேகலை என்னும் அணிகள் அசைந்தன வருந்த நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலாமுற்றம் என்றது இடக்கரடக்கிக் கூறியவாறாம். ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் என்பது பற்றிக்கலவியும் புலவியும் காதலற்கு அளித்துஎன்றார்.

35-46 : குடதிசை ......... களித்துயிலெய்த

(இதன்பொருள்) காவியம் கண்ணார் - அப் பூம்புகார் நகரத்தே காதலரைப் புணர்ந்திருக்கும் வாய்ப்புடைய நீல மலர்போன்ற அழகிய கண்களையுடைய ஏனைய மகளிர்களுட் சிலர் தத்தம் பள்ளிகளிடத்தே; குடதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு குணதிசை மருங்கின் கார் அகில் துறந்து - மேற்றிசையிடத் துண்டான வெள்ளிய கண்டு சருக்கரையோடு கீழ்த்திசையிடத்தே தோன்றிய அகில் முதலியவற்றால் புகைக்கும் புகையைத் துறந்து தங் கணவரோடு கூடுதற்கு விரும்பி; வடமலைப் பிறந்த வான் கேழ் வட்டத்து - வடதிசைக் கண்ணதாகிய இமயமலைக்கட் பிறந்த ஒளிமிக்க வட்டக்கல்லிலே; தென்மலைப் பிறந்த சந்தனம் மறுக-பொதிய மலையிலே பிறந்த சந்தனக் குறட்டைச் சுழற்றித் தேய்ப்பவும்; வேறுசிலர் தங் கணவரோடு கலவிப்போர் செய்தமையாலே, தாமரைக் கொழுமுறி தாதுபடு செழுமலர் காமரு குவளை கழுநீர் மாமலர் பைந்தளிர் படலை-தாமரையினது கொழுவிய இளந்தளிரையும் அதன் பூந்தாதுமிக்க வளமான மலரினையும் கண்டார்க்கு விருப்பம் வருதற்குக் காரணமான நீல மலரினையும் கழுநீர் மலரினையும் பச்சிலையுடனே கலந்து தொடுத்த படலை மாலையுடனே; பரூஉக்காழ் ஆரம் - பருத்து கோவையுற்ற முத்துக்களும்; சுந்தர சுண்ணத்துகளொடும் - நிறந்திகழுகின்ற சுண்ணத்தோடு; சிந்துபு அளைஇப் பரிந்த - சிந்திக் கலந்து கிடந்த; செழும்பூஞ்சேக்கை - வளவிய மலர்ப்பாயலிலே; மயங்கினர் - கூட்டத்தால் அவசமுற்றுப் பின்னர்; மந்தமாருதத்து மலிந்து - இளந்தென்றலாலே தெளிவுற்று; ஆவியங் கொழுநர் அகலத் தொடுங்கி - தம் காதன்மிகுதியால் தமது ஆவிபோலும் தங்கணவருடைய மார்பினிடத்தே பொருந்தி; காவி அம் கண் ஆர் - தங்கள் நீல மலர்போன்ற கண்ணிமைகள் பொருந்துதற்குக் காரணமான; களித் துயில் எய்த - இன்றுயில் கொள்ளா நிற்பவும்; என்க.

(விளக்கம்) 35-6 : குடதிசை அயிர் என்பதற்கு யவனதேசத்து அயிர் என்றார் அடியார்க்கு நல்லார். அயிர் - கண்டு சருக்கரை. அகிலோடு கண்டு சருக்கரையை விரவிப்புகைப்பது மரபு. இதனை, இருங்கா ழகிலொடு வெள்ளயிர் புகைப்ப எனவரும் நெடுநல்வாடையானும் (56) உணர்க.

35-8. குடைதிசை. குணதிசை, வெள்ளயிர், காரகில், வடமலை தென்மலை, என்னும் சொற்களில் முரணணி தோன்றிச் செய்யுளின்பம் மிகுவித்தலுணர்க. 37 வடமலை - இமயமலை; 38 - தென்மலை - பொதியமலை. மறுகுதல் - சுழலுதல். சந்தனக் குறட்டைத் தேய்த்துச் சாந்து செய்தலின் சந்தனம் மறுக என்றார். வேனிற் பருவமாகலின் சந்தனம் அரைத்துத் திமிர்ந்துகொள்ளல் வேண்டிற்று. படலைமாலையும் குளிர் வேண்டிப் புனைந்தபடியாம். படலைமாலையும் பரூஉக் காழ் ஆரமும் சுந்தரச் சுண்ணத்துகளொடும் அளைஇப் பரிந்த பூஞ்சேக்கை என்றது அம்மகளிர் தத்தம் கணவரொடு கலவி நிகழ்த்தியமை குறிப்பாற் றோன்றுமாறு இடக்கரடக்கிக் கூறியபடியாம். இவ்வாறு இடக்கரடக்கிக்கூறுதல் அடிகளார் இயல்பென்பது முன்னும்கண்டாம். இப்பகுதிக்குப் பழைய வுரையாசிரியர் உரைகள் பொருந்தாமையை அவர் உரை நோக்கி யுணர்க.

45-6. ஆவியங்கொழுநர் ....... களித்துயிலெய்த எனவரும் அடிகள் பன்முறை ஓதி இன்புறத்தகுந்த தமிழ்ச்சுவை கெழுமிய வாதலை நுண்ணுணர்வாலுணர்ந்து மகிழ்க.

34. மாதவியன்றியும் அந்நகரத்துப் பல்வேறிடங்களிலே காவியங்கண்ணார் பலரும் சந்தனந்திமிர்ந்து தங்கொழுநரொடு கூடிக்களித்தலாலே படலையும் ஆரமும் தாம் திமிர்ந்த சுண்ணத்தோடு அளைஇ அறுந்துகிடந்த சேக்கைக்கண் மந்தமாருதத்தால் மயக்கந் தீர்ந்து பின்னும் காதன் மிகுதியாலே கொழுநர் அகலத்து ஒடுங்கித் துயிலெய்தா நிற்ப என இயைபு காண்க.

கண்ணகியின் நிலைமை

47-57 : அஞ்செஞ்சீறடி ......... கண்ணகியன்றியும்

(இதன்பொருள்) அம் செஞ்சீறடி அணி சிலம்பு ஒழிய - ஊழ்வினை காரணமாக அப்புகார் நகரத்தே தாழ்துணை துறந்த தையலருள் வைத்துக் கண்ணகியினுடைய அழகிய சிறிய அடிகள் தமக்கு அழகு செய்யும் சிறப்பைச் சிலம்புகள் பெறாதொழியவும்; மெல்துகில் அல்குல் மேகலை நீங்க - மெல்லிய துகிலையுடைய அல்குல் தன்னை அழகு செய்யும் சிறப்பை மேகலை பெறாதொழியவும்; திங்கள் வாள் முகம் சிறு வியர் பிரிய - நிறைமதி போலும் ஒளியுடைய முகம் தன்னையணியும் சிறப்பைச் சிறுவியர்வை நீர் பெறாது பிரியவும்; செங் கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப - சிவந்து நெடிதான கயல்மீன் போலும் கண் தன்னை அணிசெய்யுஞ் சிறப்பை அஞ்சனம் பெறாது மறந்தொழியவும்; பவள வாள்நுதல் திலகம் இழப்ப - பவளம் போன்று சிவந்த ஒளியுடைய நுதல் தன்னை அணியுஞ் சிறப்பைத் திலகம் பெறாதொழியவும்; தவள வாள் நகை கோவலன் இழப்ப-தன்னைக் கூடினாற் பெறுகின்ற வெள்ளிய ஒளி தவழும் புன்முறுவலைக் கோவலன் பெறாதொழியவும்; மை இருங் கூந்தல் நெய் அணி மறப்ப-தன்னையணிந்தால் தான்பெறும் கூந்தலின் மணத்தைப் புழுகு நெய் பெறாதொழியவும் இவை இங்ஙனம் ஆகும்படி; கொங்கை முன்றிலில் குங்குமம் எழுதாள் - அவள்தானும் தன்முலை முற்றத்தே குங்குமக் குழம்பு கொண்டு எழுதாளாய்; மங்கல அணியிற் பிறிது அணி மகிழாள் - மங்கல அணியை அன்றிப் பிறிதோர் அணிகலனையும் அணிந்து மகிழாளாய்; கொடுங் குழை துறந்து வடிந்து வீழ்காதினள்-வளைந்த குழையை அணியாது துறந்தமையாலே ஒடுங்கித் தாழ்ந்த செவியினையுடையளாகிய; கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும் - கையற்ற நெஞ்சத்தையுடைய அக்கண்ணகியை யல்லாமலும் என்க.

(விளக்கம்) ஊழ்காரணமாகக் கோவலனைப் பிரிந்த கண்ணகி சிலம்பு முதலிய அணிகலன்களை அணிதலின்றிக் குங்குமம் எழுதாமலும் கூந்தலில் புழுகு முதலியன அணியாமலும் அஞ்சனம் எழுதாமலும் ஆற்றாமையால் செயலற்றுத் திகைத்திருந்தாள் என்றவாறு.

கண்ணகியின் சீறடி முதலிய உறுப்புகளில் அணியப்பெறும் சிலம்பு முதலிய அணிகலன் தாமே அழகுபெற்றுத் திகழ்வனவாம். அந்தச் சிறப்பினை இப்பொழுது அவை பெறாதொழிந்தன எனப் பொருள் கூறுக. என்னை? அவள்தான் எல்லையற்ற பேரழகு படைத்தவள் ஆதலான் இவ்வணிகலன் அவட்குப் பொறையாகி அவள் இயற்கையழகை மறைத்துச் சிறுமைசெய்யுமாகலான் இவ்வாறு பொருள் விரிக்கப்பட்டது. அவை அவ்வாறாதலை மனையறம் படுத்த காதையில் கோவலன் கண்ணகியை நலம் பாராட்டுபவன்.

62. நறுமலர்க் கோதை நின்நலம் பாராட்டுநர் மங்கல அணியே அன்றியும் பிறிதணியணியப் பெற்றதை எவன் கொல்..... 72 இங்கிவை அணிந்தனர் என்னுற்றனர் கொல் எனப் பாராட்டு மாற்றானும் உணர்க.

இனி, சீறடி முதலியன சிலம்பு முதலிய அணிகளை அணியாதொழியவும் எனப் பொருள் கூறலுமாம்.

48. துகிலல்குல் என்புழித் துகில் அல்குலுக்கு வாளாது அடைமொழி மாத்திரையாய் நின்றது. மேகலை - எண்கோவை. கொங்கை முற்றம் என்றது அவற்றின் மருங்கமைந்த மார்பிடத்தை. பிறிதணி - வேறு அணிகலன். 51. கொடுங்குழை என்புழி கொடுமை - வளைவு என்னும் பொருட்டு. வடிந்து வீழ்காதினள் என்பது அணியாமையினும் பிறந்த அழகு கூறிற்று. 52. வியர் - வியர்வை; ஈறுகெட்டது. இனி வியர்ப்பு+இரிய, எனக் கண்ணழித்தலுமாம். கூட்டமின்மையால் வியர்வை இலதாயிற்றென்க.

53. அழுதழுது கண் சிவந்திருத்தலின் கருங்கயல் என்னாது செங்கயல் நெடுங்கண் என்றார். மற்று இவரே விலங்கு நிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண் எனக் (13: 166) கருங்கயலை உவமை கூறுதலும் உணர்க. இவ்வாறு பொருட்கேற்ற உவமை தேர்ந்தோதுவது அடிகளார்க் கியல்பு என்க. 55 தவள வாணகை கோவல னிழப்ப என்னுமிடத்து அடிகளார் கருத்து விளக்கமுறுதலால் சிலம்பு முதலியனவும் தாம் பெறும் அழகை இழப்ப என்பதே அடிகளார் கருத்தாதல் பெற்றாம்.

56. நெய்-புழுகு. கையறுதல் - செய்வதின்னது என்று தெரியாமற்றிகைத்தல். இஃதொரு மெய்ப்பாடு. இஃது அகத்திற்கும் புறத்திற்கும் பொது. (தொல் - மெய்ப் - 12.)

58-72 : காதலர் ......... புலம்புமுத்துறைப்ப

(இதன்பொருள்) காதலர்ப் பிரிந்த மாதர் - கண்ணகியைப்போல அந்நகரத்தே காதலரைப் பிரிந்து தனித்துறைய நேர்ந்த மகளிர் தாமும் பிரிவாற்றாமையாலே; நோதக ஊது உலைக்குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி - தம்மைக் கண்டோர் வருந்துமாறு கொல்லுலைக் களத்தின்கண் ஊதுகின்ற துருத்தியின் உலைமூக்குப் போல அழலெழ உயிர்த்தனராய்ச் செருக்கடங்கி; வேனில் பள்ளி மேவாது கழிந்து - இவ்விளவேனிற் காலத்திற்கென அமைந்த நிலாமுற்றத்திற் செல்லாதொழிந்து; கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து - கூதிர்க் காலத்திற்கென வமைந்த இடைநிலை மாடத்தே ஒடுங்கி அவ்விடத்தும் தென்றலும் நிலாவொளியும் புகுதாவண்ணம் சாளரங்களின் குறிய கண்களைச் சிக்கென வடைத்து; மலயத்து ஆரமும் மணிமுத்து ஆரமும் அலர் முலை ஆகத்து அடையாது வருந்த பொதியின் மலைப்பிறந்த சந்தனமும் கொற்கையிற் பிறந்த மணியாகிய முத்துமாலையும் தம் பரந்த மார்பிடத்தே முலையில் மேவப் பெறாமல் வருந்தவும்; வீழ் பூஞ் சேக்கை தாழிக் குவளையொடு தண்செங்கழுநீர் மேவாது கழிய - தாம் பெரிதும் விரும்புதற்குக் காரணமான சேக்கைப் பள்ளியிடத்தே தாழிக்குவளையும் தண்ணிய செங்கழுநீரும் இன்னோரன்ன பிறவுமாகிய குளிர்ந்த மலர்கள் பள்ளித்தாமமாய் மேவப் பெறாமையாலே வருந்தி யொழியவும்; துணைபுணர் அன்னத் தூவியில் செறித்த இணையணை மேம்பட - தன் சேவலொடு புணர்ந்த பெடையன்னம் அப்புணர்ச்சி யின்பத்தால் உருகி யுதிர்த்த வயிற்றின் மயிரை எஃகிப் பெய்த பல்வகை அணைகள்மீதே மேன்மையுண்டாக; உடைப்பெருங் கொழுநரோடு திருந்து துயில் பெறாஅது - தம்மையுடைய கொழுநரோடு நெஞ்சம் திருந்துதற்குக் காரணமான களித்துயில் எய்தப்பெறாமல்; ஊடற்காலத்து இடைக் குமிழ் எறிந்து கடைக்குழை யோட்டி - அவரோடு முன்பு ஊட்டியபொழுது இடைநின்ற குமிழை வீசிக் கடைநின்ற குழையை ஓடச்செய்து; கலங்கா உள்ளமும் கலங்கக் கடை சிவந்து விலங்கி நிமிர் நெடுங்கண்கள் - போர்க்களத்தினும் கலங்காத திண்மையுடைய அவர்தம் நெஞ்சம் கலங்குமாறு கடைசிவந்து குறுக்கிட்டுப் பிறழ்ந்து வாகைசூடி உவகைக் கண்ணீர் உகுத்த தம்முடைய நெடிய கண்கள் தாமும் அற்றைநாள்; புலம்பு முத்து உறைப்ப - அக்கண்ணகி கண்கள் போன்றே கையறவு கொண்டு துன்பக் கண்ணீரைச் சொரியா நிற்பவும் என்க.

(விளக்கம்) கண்ணகியன்றியும் அந்நகரத்தே தாழ்துணைதுறந்த மாதர் பலரும் அக்கண்ணகியைப்போலவே ஒடுங்கிக் கழிந்து அடைத்து வருந்தக் கழியப் பெறாது - தம்கண் முத்துறைப்ப என இயையும்.

59. ஊதுலைக்குருகு - துருத்தி; வெளிப்படை. அலர் ஆகம் முலையாகம் எனத் தனித்தனி இயையும். ஆகம் - மார்பு. 64. தாழிக் குவளை. இல்லத்தே தாழியில் நட்டு வளர்த்த குவளை மலர்; குவளை செங்கழுநீர் மலர்கட்கு ஆகுபெயர். 65. வீழ்தல் - விரும்புதல். கழிய என்றது வருந்தஎன்னும் பொருட்டாய் நின்றது. 66. மென்மை மிகுதிக்குத் துணைபுணர் அன்னத் தூவியிற் செறித்த இணையணை கூறப்பட்டது. தூவி -மயிர். இணையணை - இரட்டைப் படுக்கையுமாம். இணைதற்கியன்ற அணையுமாம். இணைதல் - கூடுதல். மேம்பாடு - ஈண்டு அன்பு பெருக்கமடைதல். திருந்துதுயில் - அழகிய துயிலுமாம். உடைப்பெருங் கொழுநர் - தம்மையுடைய கணவர். கொழுநரிற் சிறந்த கேளிர் இன்மையால் பெருங்கொழுநர் என்றார்.

69. இடைக்குமிழ் என்றது இரண்டு கண்களுக்கும் நடுவில்நின்ற குமிழமலர் போன்ற மூக்கினை. குழை - காதணி ஊடற்காலத்தே கண்கள் அங்குமிங்கும் பாயும்பொழுது ஒருகால் நாசியைக் குத்தியும் ஒருகால் காதினைக் குத்தியும் பாயும் என்பது கருத்து. அங்ஙனம் பாய்ந்து சினத்தின் அறிகுறியாகச் சிறிது கடைக்கண் சிவக்குமானால் அவருடைய கணவர் நெஞ்சு கலங்குவர் என்றவாறு.

70. கலங்காவுள்ளம் என்றது போர்க்களத்தே பகைவர் முன்னனரும் கலங்காத உள்ளம் என்பதுபடநின்றது. என்னை? ஒண்ணுதற் கோஓ வுடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரு முட்குமென் பீடு எனவரும் திருக்குறளும் நோக்குக. 71. புலம்புமுத்து - துன்பத்தால் உகுகின்ற முத்துப் போன்ற கண்ணீர்த்துளி. புலம்பு முத்து என்றதனால் அடியார்க்கு நல்லார் இன்பக் கண்ணீரை உவகைமுத்து என இனிதின் ஓதுவர். உறைத்தல் - துளித்தல்.

72-76 : அன்னமென் .......... மலர்விழிப்ப

(இதன்பொருள்) (இனி, இருவகை வினைவயத்தராய் இன்பமும் துன்பமும் எய்திய மாதவியும் கண்ணகியும் பிறமகளிரும் போலாது) அன்ன மெல் நடை - தன்னகத்தே வதியும் அன்னங்களின் நடையாகிய நடையினையும்; தேம் பொதி நறுவிரை நாறும் தாமரை - தேன் பொதிந்துள்ள நறிய மணங்கமழும் தாமரையாகிய; ஆம்பல் நாறும் செவ்வாய் - ஆம்பல் மணநாறும் சிவந்த வாயினையும்; தண் அறல் கூந்தல் - குளிர்ந்த கருமணலாகிய கூந்தலையும் உடைய; நன்னீர்ப் பொய்கை - நல்ல நீராகிய பண்பினையும் உடைய பொய்கையாகிய நங்கை; அவ்விரவெல்லாம் இனிதே துயின்று; பாண் வாய் வண்டு - பாண்தொழில் வாய்க்கப்பெற்ற வண்டுகளாகிய பள்ளியுணர்த்துவார்; நோதிறம் பாட-புறநீர்மை என்னும் திறத்தாலே வைகறைப் பொழுதிலே பள்ளி எழுச்சி பாட; காண்வரு குவளை கண்மலர் விழிப்ப - துயிலுணர்ந்து அழகு வருகின்ற குவளையாகிய தன்னுடைய கண்மலர்களை விழித்து நோக்காநிற்ப வென்க.

(விளக்கம்) தனக்கென வாழாப் பிறர்க்கென முயலும் பெருந்தகைப் பெண்ணாதலின் பொய்கை நங்கை இன்பமும் துன்பமும் இன்றி அமைதியான துயிலில் ஆழ்ந்திருந்தவள் வண்டு பள்ளி எழுச்சி பாடத் தனது குவளைக்கண் மலர்ந்து துயில் நீத்தனள் என்க. இஃது உருவக அணி.

ஆம்பல் - வாளா வாய்க்கு அடைமொழி மாத்திரையாய் நின்றது; துப்புறழ் தொண்டைச் செவ்வாய் என்புழிப் போல. ஆம்பற்பண் எனினுமாம். 75. பாண்-பாண் தொழில். வாய் வண்டு: வினைத் தொகை. வண்டாகிய பள்ளி எழுச்சி பாடுவார் என்க. நோதிறம் பாலைப்பண்ணின் திறங்கள் ஐந்தனுள் ஒன்று. அதனை,

தக்கராக நோதிறங் காந்தார பஞ்சமமே
துக்கங் கழிசோம ராகமே - மிக்க திறற்
காந்தார மென்றைந்தும் பாலைத்திறம் என்றார்
பூந்தா ரகத்தியனார் போந்து

எனவரும் வெண்பாவான் உணர்க.

76. குவளைக் கள்மலர் - குவளையாகிய கள்ளையுடைய மலர்; குவளைக்கண் மலருமாயிற்று. விழித்தல் - மலர்தல்; கண்விழித்தலுமாயிற்று.

77-84 : புள்வாய் ...... தனிசிறந்ததுவென்

(இதன்பொருள்) புள் வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து முள் வாய்ச் சங்கம் முறை முறை ஆர்ப்ப - பறவைகளின் ஆரவாரமாகிய முரசுடனே புள்ளிகளையுடைய தூவியையுடைய கோழிச் சேவலாகிய முள்வாய்த்தலையுடைய சங்கும் முறைமுறையாக முழங்கவும்; உரவு நீர்ப்பரப்பின் ஊர் துயில் எடுப்பி - கடல் போலும் பரப்பையும் ஒலியையும் உடைய அம்மூதூரின் வாழ்வோரைத் துயிலுணர்த்தி; இரவுத்தலைப் பெயரும் வைகறை காறும் - முன்னர் நிலமடந்தை அலம்வரும் அல்லற் காலை வந்து புக்க இருள் இவ்விடத்தினின்று நீங்கும் வைகறை யாமமளவும்; மகர வெல் கொடி மைந்தன் - மகரமீன் வரைந்த வெல்லும் கொடியினையுடைய காமன்; விரைமலர் வாளியொடு கருப்பு வில் ஏந்தி - மணமுடைய மலரம்புகளோடே கரும்பாகிய வில்லையும் ஏந்தியவனாய்; அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சான் - முன் சென்ற நள்ளியாமத்தும் ஒருநொடிப் பொழுதும் துயிலாதவனாய்; திரிதர - திரிதலானே; நகரம் - அந்தப் பூம்புகார் நகரமானது; நனி காவல் சிறந்தது - நன்கு காவலாலே சிறப்பெய்துவதாயிற்று என்பதாம்.

(விளக்கம்) புள்வாயாகிய முரசுடனே என்க. புள்ளொலியாகிய முரசுடன் என்பது பொருந்தாது; பொறிமயிர் வாரணமாகிய முள் வாய்க்கப்பெற்ற சங்கம் என்க. என்னை? கோழிச் சேவலுக்குக் காலில் முள்ளுண்மையின் என்க. 79. ஈண்டு அடிகளார் இரவினது இயற்கை நிகழ்ச்சிகளை மட்டுமே கூறுதலின் புள்வாயாகிய முரசமும் வாரணமாகிய சங்கமும் ஆர்ப்ப என்பதே நேரிய பொருளாம். வாரணத்துச் சங்கம் முள்வாய்ச் சங்கம் எனத் தனித்தனி இயையும். இக்கருவிகள் ஆர்ப்பக் காமன் வைகறை காறும் ஊர்துயிலெடுப்பிப் படைக்கலம் ஏந்தி நனிகாத்தனன் என்பதே அடிகளார் கருத்து: உரவுநீர் - அன் மொழித்தொகை. கடல் - கடல்போன்ற பரப்பையுடைய ஊர் என்க. பிரிந்தார்க்கும் புணர்ந்தார்க்கும் துயிலின்மை காமனால் வருதலின், ஊர் துயில் எடுப்பி என்றார். இரவுத்தலை-என்புழி தகரவொற்று விரித்தல் விகாரம். அரும்பதவுரையாசிரியர் துஞ்சான் எனப் பாடங்கொண்டனர். அடியார்க்கு நல்லார் துஞ்சார் எனப் பாடங் கொண்டனர். பகல் - நள்ளீரவு. பகுக்கப்படுதலின் பகல். இனி, நொடிப்பொழுதும் எனலே சிறப்பு. நொடி காலத்தைப் பகுக்குமொரு கருவி ஆகலின் அதற்கும் அது பெயராம்.

ஆர்ப்ப எடுப்பித் தலைப்பெயரும் வைகறைகாறும் துஞ்சானாய்த் திரிதருதலால் நகரங்காவல் நனி சிறந்தது; என்க.

இனி, இக்காதையை மாதவியன்றியும் காவியங்கண்ணார் களித் துயிலெய்தவும், கண்ணகியன்றியும் பிரிந்த மாதர் உயிர்த்து ஒடுங்கிக் கழிந்து குறுங்கண் அடைத்து ஆரம் முலைக்கண் அடையாது வருந்த, கழுநீர் சேக்கையிலே மேவாது கழிய கண்டுயில் பெறாமல் முத்துறைப்ப வண்டு பாடக் குவளை விழிப்ப ஆர்ப்ப இரவுபோம் வைகறை யளவும் யாமத்தும் பகலுந் துஞ்சானாகி மகரக்கொடி மைந்தன் வாளியொடு வில்லை யேந்தித் திரிதலான் நகரங் காவல் சிறந்தது என முடிக்க.

பா: நிலைமண்டிலம்

வெண்பா வுரை

கூடினார் .......... பொழுது

(இதன்பொருள்) விரிந்து போது அவிழ்க்கும் கங்குல் பொழுது - யாண்டும் பரவி முல்லை மல்லிகை முதலிய மலர்களை மலர்விக்கின்ற இரவுப்பொழுதிலே; வானூர் மதி-விண்ணிலே இயங்குகின்ற திங்கள்; கூடினார்பால் நிழலாய் - தன்னிழலில் எய்தி அடங்குபவர்க் கெல்லாம் குளிர்ந்த நிழலாகியும்; கூடார்பால் - அடங்காது விலகியவர்க் கெல்லாம்; வெய்யதாய் - வெம்மை செய்வதாகியும் தன்னைக் காட்டுகின்ற; காவலன் வெள் குடைபோல் - சோழமன்னனுடைய வெண்கொற்றக் குடைபோன்று: கூடிய மாதவிக்கும் கண்ணகிக்கும் - கோவலனோடு கூடிய மாதவிக்கும் அவனைக் கூடாது தனித் துறைந்த கண்ணகிக்கும் நிரலே நிழலாகவும் வெய்யதாகவும்; காட்டிற்று - தன்னைக் காட்டிற்று என்க.

(விளக்கம்) காட்டும் வெண்குடைபோல் எனவும், கூடாது பிரிந்துறையும் கண்ணகிக்கும் எனவும் வருவித்துக் கூறுக.

அந்திமாலைச் சிறப்புச் செய்காதை முற்றிற்று.

 
மேலும் சிலப்பதிகாரம் »
temple news
தமிழில் முதலில் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேரன் ... மேலும்
 
temple news
1. மங்கல வாழ்த்துப் பாடல் (சிந்தியல் வெண்பாக்கள்) திங்களைப் போற்றுதும் திங்களைப் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்முழங்குகடல் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கண்ணகியும் கோவலனும் இல்லறம் நிகழ்த்தி வருங்காலத்தே புகார் நகரத்தே ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது புகார் நகரத்தே இந்திரனுக்கு விழா நிகழ்த்திய செய்தியும் பிறவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar