ஐயப்பன் தரிசனம் முடிந்தபின் கன்னிமூலை கணபதியையும் , நாகரையும் தரிசித்துவிட்டு திருமுற்றத்திலிருந்து இறங்க வேண்டும். குருசாமியுடன் இருமுடி கட்டுகளை பூஜித்து, பூஜைப் பொருட்கள் அடங்கிய முடியினை திறந்து நெய் தேங்காயை உடைக்க வேண்டும். அந்த நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்ய கொடுக்க வேண்டும். பின் அபிஷேகம் செய்த நெய்யையும், நெய தேங்காயின் ஒரு முடியையும் சுவாமியின் பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து செல்லலாம். இன்னொரு முடியை பதினெட்டுப்படிகளின் முன் உள்ள அங்கினிகுண்டத்தில் எறிந்து விட வேண்டும்.
நெய் தேங்காய் : தனிநெய்யையோ, தேங்காயையோ நிவேதனமாக்காது. நெய் தேங்காயை நிவேதனமாக்கியது ஏன்? முக்கண் கொண்ட தேங்காய் சிவனை உருவகப்படுத்தும். பசு நெய் கோபாலனாகிய மகா விஷ்ணுவை உருவகப்படுத்தும். சிவன் விஷ்ணு இருவருடைய அருள் கதிரொளியின் கூட்டு சக்தியே சாஸ்தாவாகிய ஐயப்பனாதலால் நெய் தேங்காயும் சேர்த்து அவருக்கு நிவேதனப் பொருளாகின்றன.