|
முதல் பக்கம்>
இறைவழிபாடு> நவக்கிரக வழிபாடு
|
|
நவக்கிரக வழிபாடு
|
|
 |
சூரியன்
காசினி இருளை நீக்கும் கதிரொளி யாகி எங்கும் பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும் வாசியே ழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த தேசிகா எனைரட் சிப்பாய் செங்கதி ரவனே போற்றி.
சந்திரன்
அலைகடல் அமுதங் தன்னோ டன்றுவந் துதித்து மிக்க கலைவளர் திங்க ளாகிக் கடவுளோர்க்கு அமுதம் ஈயும் சிலைநுதல் உமையாள் பாகன் செஞ்சடைப் பிறையாய் மேரு மலைவல மாக வந்த மதியமே போற்றி போற்றி.
செவ்வாய்
வசனம்நல் தைரி யந்தான் மன்னவர் சபையில் வார்த்தை புசபல பராக்ர மங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை நிசமுடன் அவர வர்க்கு நீள்நிலம் தன்னில் நல்கும் குசன்நில மகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி.
புதன்
மதனநூல் முதலா உள்ள மறைகளும் கல்வி ஞானம் விதமுடன் அவர வர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள் சுதன்பவிசு பாக்கி யங்கள் சுகம்பல கொடுக்க வல்லான் புதன்கவிப் புலவன் சீர்சால் பூங்கழல் போற்றி போற்றி.
பிரகஸ்பதி
மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி நறைசொரி கற்ப கப்பொன் நாட்டினுக் கதிபனாக்கி நிறைதனம் சிவிகை மன்றல நீடுபோ கத்தை நல்கும் இறையவன் குருவி யாழன் இணையடி போற்றி போற்றி.
சுக்கிரன்
மூர்க்காவன் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம் காக்கவான் மழைபெய் விக்கும் கவிமான் கனகம் ஈவோன் தீர்க்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பும் பார்க்கவன் சுக்ராச் சாரி பாதபங் கயமே போற்றி.
சனி
முனிவர்கள் தேவர் ஏனை மூர்த்திகள் முதலானோர்கள் மனிதர்கள் சகல வாழ்வுன் மகிமை அல்லால்வே றுண்டோ கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகம் ஏறும் சனிபக வானே போற்றி தமியனேற் கருள்செய் வாயே.
ராகு
வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க் கமுதம் ஈய ஏகிநீ நடுவி ருக்க எழில்சிரம் அற்றுப் பின்னர் நாகத்தின் உடலோ டுன்றன் நற்சிரம் வாய்க்கப் பெற்ற ராகுவே போற்றி போற்றி ரட்சிப்பாய் ரட்சிப் பாயே.
கேது
மாதுரு நெடுமால் முன்னம் வானவர்க் கமுதம் ஈயும் போது நீ நடுவிருக்கப் புகழ்சிரம் அற்றுப் பின்னர் ஓதுறும் அரச நாகத் துயர்சிரம் ஐந்து பெற்ற கேதுவே போற்றி போற்றி கீர்த்தியாய் ரட்சிப் பாயே. |
|
|
|