வல்லபை நாதா! விக்ன வினாயகா வாழ்த்திப் பணிந்தேன் உன்பதமே: வல்வினை எல்லாம் வலிமை இழந்தே வாடிடச் செய்வாய் கணநாதா! தொல்வினை யாலிவன் துயருறும் அடியேன் துன்பமெலாம் நீ துடைத்திடுவாய்! அல்லொடு பகலும் அனவரதமும் உன் அடியினை தொழுவேன் கணநாதா!
வானொடு நீரும் வளியும் தீயும் வையகம் யாவும் உன் வடிவே! மானிட வாழ்வை மகிழ்வுறச் செய்வாய் மங்கலப் பொருளே கணநாதா தேனோடு பாலும் தெங்கோடு பழமும் தெவிட்டா அமுதம் தினம் படைப்பேன் ஊனொடு உயிரும் உணர்வும் புரப்பாய்! உன்னடி தொழுதேன் கணநாதா!
ஓமெனும் வடிவே உன் வடிவாமென உலகிற்கெல்லாம் நீ உணர்த்திடுவாய்! ஆம் எனச் சொல்வாய்!அன்னை குமாரா ஆதரித்தருள் வாய்! கணநாதா! ஓமெனும் ஒலியில் உன்குரல் கேட்டே உளமகிழ்ந்துள்ள புகழ் பாடிடுவேன் ஓமெனும் பொருளே உமையவள் பாலா! ஒரு பரம் பொருளே! கணநாதா