|
ஸ்ரீ ஜெயந்தி ஸ்தல புராணத்தில் பிரதி தினமும் ஒவ்வொரு யாமத்திலும் ( ஒரு யாமம் என்பது ஏழரை நாளிகை அல்லது 3மணி நேரம் கொண்டது) இந்த ஸ்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ முருகப் பெருமானை ப்ரம்மா முதலிய தேவர்கள் வந்து பூஜித்துச் செல்வதாகக் கூறப்படுகிறது. அதாவது பகலின் முதல் யாமத்தில் பிரம்மாவும், இரண்டாம் யாமத்தில் முனீஸ்வரர்களும், மூன்றாவது யாமத்தில் சித்த, கந்தர்வர்களும், நான்காவது யாமத்தில் திக்பாலர்களும், இரவில் முதல் யாமத்தில் லக்ஷ்மி முதலிய சக்திகளும், இரண்டாவது யாமத்தில் குஹ்யர்களும், பன்னர்களும், தேவர்களும், மூன்றாவது யாமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனையும், நான்காவது யாமத்தில் கங்காதிசகல தீர்த்தங்களுடன் ஸ்ரீ மகா விஷ்ணுவும் பூஜை செய்வதாக சொல்லப்படுகிறது. ஆகையால் விஸ்வரூப தரிசனம் செய்வதனால் நமக்குச் சகல தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்த பலனும், ஸ்திதி கர்த்தாவாகிய ஸ்ரீமந் நாராயணனைத் தரிசித்த பலனும், ஸ்ரீ முருகப் பெருமானை விஸ்வரூபமாக தரிசிப்பதால் பதினான்கு உலகங்களையும் தரிசித்த பலனும் சித்திக்கின்றது. ஸ்ரீ விஸ்வரூப தரிசன மகிமையினால் சர்வார்த்த சித்திகளும் அடையலாம் என்பது சர்வ நிச்சயம். |
|
|