|
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்து உருகி நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின் அஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும், தொழாப் பிழையும், எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய்; கச்சி ஏகம்பனே! கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் கனிப்பே! காணார்க்கும் கண்டவர்க்கும் கண்அளிக்கும் கண்ணே! வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே! மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே! நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடுவே! நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே! எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே! என்னரசே! யான்புகலும் இசையும் அணிந்து அருளே! உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்; நிலவு உலாவிய நீர்மலி வேணியன்; அலகு இல் சோதியன்; இம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.
|
|
|