|
மகாகவி காளிதாசர் இயற்றிய ஸ்ரீசியாமளா தண்டகம்
சம்ஸ்கிருதக் கவிஞர்களுள் மகாகவி காளிதாசர் முதலிடம் பெறுகிறார். காளிதேவியின் அருள்பெற்ற அவர் எழுதிய முதல்துதி ஸ்ரீசியாமளா தண்டகம் என்று கருதப்படுகிறது. சியாமளா தேவியைப் போற்றுகின்ற துதி இது. தண்டகம் என்ற கவிதை வடிவில் அவர் இந்தத் துதியை எழுதியுள்ளார். இருப்பத்தாறுக்கும் மேலான எழுத்துக்களைக் கொண்ட பத்திகளை உடைய கவிதை தண்டகம் எனப்படுகிறது. ஏறத்தாழ இது உரைநடை போலவே தோன்றும்.
சகல கலைகளிலும் தேர்ச்சி பெற
மாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி
மாணிக்கக் கற்கள் இழைத்த வீணையை மடியில் வைத்து வாசிப்பவளும், மதத்தால் சுறுசுறுப்பற்றவளும், இனிய சொல்லெழில் பெற்றவளும், மகேந்திர நீலமணியின் ஒளி வாய்ந்த மெல்லிய மேனி உடையவளும், மதங்க முனிவரின் திருமகளுமான தேவியை மனத்தால் நினைக்கிறேன்.
சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே குசோன்னதே குங்குமராகசோணே புண்ட்ரேக்ஷü பாசாங்குச புஷ்பபாண ஹஸ்தே நமஸ்தே ஜகதேகமாத:
நான்கு கைகள் உடையவளே! பிறை நிலவைத் தலையில் ஆரபணமாகச் சூடியவளே! உயர்ந்த கொங்கைகள் கொண்டவளே! குங்குமப் பூச்சால் சிவந்தவளே! கரும்பு வில், பாசம், அங்குசம், மலர்க்கணைகள் ஆகியவற்றைக் கரங்களில் கொண்டவளே! உலகின் ஒரே தாயே! உன்னை வணங்குகிறேன்.
மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்ப வனவாஸினீ
மரகதம் போல் கரிய நிறத்தினளும், மதங்க முனிவரின் மகளும் மதம் நிறைந்தவளும், மங்கள ரூபிணியும், கதம்பவனத்தில் உறைபவளும், அன்னை வடிவினளுமாகிய தேவி கடைக் கண்ணால் என்னைப் பார்த்தருள்வாளாக.
ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸூகப்ரியே
மதங்கரின் மகளே போற்றி! நீலோத்பல மலரின் ஒளி பெற்றவளே, போற்றி! இனிய இசையை ரசிப்பவளே, போற்றி! கொஞ்சும் கிளியிடம் மகிழ்பவளே போற்றி!
ச்யாமளா தண்டகம்
ஜய ஜனனீ ஸூதா ஸமுத்ராந்த ஹ்ருத்யன்மணி த்வீப ஸம்ரூட பில்வாடவீ மத்ய கல்பத்ருமாகல்ப காதம்ப காந்தார வாஸப்ரியே, க்ருத்தி வாஸப்ரியே, ஸர்வலோகப்ரியே!
அமுதக் கடலின் நடுவே மனத்தைக் கவரும் மணித்தீவில் செழித்தோங்கிய வில்வக் காட்டின் நடுவில் கற்பக மரங்களை அணியாகக் கொண்ட கதம்பவனத்தில் வசிப்பதை விரும்புபவளே! யானைத்தோல் உடுத்திய சிவபெருமானின் துணைவியே! எல்லா உயிர்களிடமும் அன்பு கொண்டவளே தாயே, போற்றி!
ஸாதராரப்த ஸங்கீத ஸம்ப்பாவனா ஸம்ப்ரமாலோல நீ பஸ்ர காபத்த சூளீஸநாத த்ரிகே, ஸானுமத் புத்ரிகே
மலைமகளே! பக்தியுடன் ஆரம்பிக்கப்பட்ட இசையை ஆமோதிப்பதற்காகத் தலையை அசைக்கும்போது, கூந்தலில் அணிந்துள்ள கதம்ப மாலை பின்கழுத்தில் மென்மையாக அசைகின்ற கழுத்தை உடையவளே!
சேகரீபூத சீதாம்சுரேகா மயூகாவளீபத்த ஸூஸ்நிக்த்த நீலாலகச்ரேணி ச்ருங்காரிதே, லோக ஸம்பாவிதே
தலையணியாக அமைந்த பிறை நிலவின் கதிர்க் கற்றையால் அழகுற்று விளங்கும் கரிய கூந்தலை உடையவளே! உலகோரால் வழிபடப் படுபவளே!
காமலீலா தனுஸ்ஸன்னிப ப்ரூலதா புஷ்பஸந்தோஹ ஸந்தேஹ க்ருல்லோசநே, வாக்ஸூதா ஸேசனே சாரு கோரோசனா பங்க கேளீலலாமாபிராமே ஸூராமே ரமே
மன்மதனின் கேளிக்கைகளுக்கான வில்லை ஒத்த புருவக்கொடியில் மலர்ந்த மலர்க் கொத்து தானோ என்ற சந்தேகம் கொள்ளச் செய்கின்ற விழிகளை உடையவளே! சொல்ல முதால் அன்பர்களை நனைப்பவளே! சிறந்த கோரோசனைக் கலவையால் பொட்டிட்டு அழகுடன் மிளிர்பவளே! மனத்தைக் களிப்புறச் செய்பவளே மகாலட்சுமித் தாயே!
வஸந்தா
ப்ரோல்ல ஸத்வாளிகா மௌக்தி கச்ரேணிகா சந்த்ரிகா மண்டலோத்பாஸி லாவண்ய கண்டஸ்த்த லந்யஸ்த கஸ்தூரிகா பத்ரரேகா ஸமுத்ப்பூத ஸெளரப்ய ஸம்ப்ராந்த ப்ருங்காங்கனாகீத ஸாந்த்ரீ பவன் மந்த்ர தந்த்ரீ ஸ்வரே. ஸூஸ்வரே பாஸ்வரே.
நன்றாக ஒளி வீசும் வாளி என்ற தோட்டிலுள்ள முத்து வரிசைகளின் ஒளிக்கற்றையால் உனது கன்னப்புறங்கள் ஒளி பெற்றுத் திகழ்கின்றன. அந்த அழகிய கன்னங்களின்மீது கஸ்தூரியால் தீட்டப்பட்ட சித்திரங்களிலிருந்து எழுந்த மணத்தில் மயங்கிய பெண் வண்டுகளின் ரீங்கார இசையால் ஒத்து ஓதப்படும். யாழின் மந்திர ஒலியைப் போன்ற குரல் உடையவளே! இனிய குரல் வாய்ந்தவளே! ஒளி பொருந்தியவேள!
வல்லகீ வாதன ப்ரக்ரியாலோல தாளீ தளா பத்த தாடங்க பூஷா விசேஷாந்விதேஸித்த ஸம்மானிதே.
யாழின் இசைக்கேற்ப அசைந்தாடுவதும், பனையோலையால் செய்யப்பட்டதுமான காதணியை அணிந்தவளே! சித்தர்களால் பூஜிக்கப்படுபவளே!
சிம்மேந்திர மத்யமம்
திவ்ய ஹாலாம தோத்வேல ஹேலால ஸச்சக்ஷüராந் தோளன ஸ்ரீ ஸமாக்ஷிப் தகர்ணைக நீலோத்பலே, ச்யாமலே பூரிதா சேஷலோகாபிவாஞ்சாபலே நிர்மலே.
தெய்வீக போதை மயக்கத்தால் விளையாட்டாய்ச் சுழலும் விழிகளின் ஒளியழகால் வெல்லப்பட்ட அழகுடைய குவளை மலரைக் காதில் அணிபவளே! சியாமளா தேவியே உலகோரின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவளே! செல்வத்தைத் தருபவளே!
ஸ்வேத பிந்தூல்லஸத் பால லாவண்ய நிஷ்யந்த ஸந்தோஹ ஸந்தேஹ க்ருந்நாஸிகா மௌக்திகே ஸர்வ மந்த்ராத்மிகே.
வேர்வைத் துளிகள் திகழும் நெற்றியை உடையவளே! எழில் மழையின் துளிகளோ என்று சந்தேகப்படச் செய்கின்ற முத்துக்களாலான மூக்குத்தியை அணிந்தவளே! அனைத்துலக உருவினளே காளி தேவியே!
அடாணா
ஸர்வ விச்வாத்மிகே காளிகே முக்த மந்தஸ் மிதோதார வக்த்ர ஸ்ப்புரத்பூக தாம்பூல கற்பூர கண்டோத் கரே ! ஜ்ஞான முத்ராகரே, ஸர்வ ஸம்பத்கரே பத்மபாஸ்வத்கரே, ஸ்ரீகரே !
அழகிய புன்சிரிப்பு மலர்கின்ற திருமுகத்தினளே! திருவாயில் பச்சைக் கர்ப்பூரத்துடன் வெற்றிலை பாக்கு தரித்தவளே! சின்முத்திரை மிளிரும் கரத்தினளே! எல்லாச் செல்வங்களையும் தருபவளே! தாமரைபோல் ஒளிரும் திருக்கரத்தினளே!
குந்த புஷ்ப த்யுதி ஸ்நிக்த தந்தாவலீ நிர்மலா லோல கல்லோல ஸம்மேளன ஸ்மேர சோணாதரே, சாருவீணாதரே, பக்வ பிம்பாதரே
முல்லை மலர்களைப்போல் ஒளிசிந்தும் அழகிய பற்களின் மாசற்ற ஒளித்திரளால் அழகுற்ற சிவந்த கீழுதட்டை உடையவளே! அழகிய வீணையைத் தாங்குபவளே! பழுத்த கோவைப் பழம் போன்ற உதட்டை உடையவளே!
கல்யாணி
ஸூலலித நவயௌவனாரம்ப சந்த்ரோதயோத்வேல லாவண்ய துக்த்தார்ணவா விர்ப்பவத் கம்பு பிப்வோக ப்ருத் கந்தரே, ஸத்கலா மந்திரே, மந்தரே !
மிகுந்த அழகு வாய்ந்த புதிய வாலிபத்தின் ஆரம்பமாகிய சந்திரோதயத்தால் கரைபுரண்ட அழகென்னும் பாற்கடலிலிருந்து தோன்றிய முப்புரிச் சங்கின் எழில் கொண்ட கழுத்தை உடையவளே! நற்கலைகளுக்கு உறைவிடமே! மெல்லியவளே!
திவ்ய ரத்னப்ரபா பந்துரச்சன்ன ஹாராதி பூஷா ஸமுத்யோதமானா நவத்யாம்சுசோபே சுபே
தெய்வீக மணிகளின் ஒளியால் நிறைந்துள்ள முத்துமாலை முதலிய அணிகளால் ஒளிர்கின்ற குறையற்ற திருமேனியெழில் கொண்டவளே! நன்மை செய்பவளே!
ரத்ன கேயூர ரச்மிச்சடா பல்லவப்ரோல்லஸத் தோர்வதா ராஜிதே, யோகிபி பூஜிதே:
தேவி, உன் கைகள் பூங்கொடிகள் போல் திகழ்கின்றன. கைகளில் அணிந்துள்ள மணிகள் பொருந்திய தோள்வளைகளிலிருந்து வீசும் ஒளிக் கதிர்க்கற்றைகள் அந்தக் கொடிகளின் தளிர்களாக மிளிர்கின்றன. யோகிகளால் அர்ச்சிக்கப்படுபவளே!
தன்யாசி
விச்வ திங்மண்டல வ்யாபி மாணிக்ய தேஜஸ் ஸ்ப்புரத் கங்கணா லங்க்ருதே, விப்ரமாலாங்க்ருதே, ஸாதுபிஸ்ஸத்க்ருதே !
எல்லாத் திசைகளிலும் ஒளி பரப்புகின்ற மாணிக்க வளையல்களை அணிந்தவளே! அனைவரையும் வசீகரிக்கும் எழில் வாய்ந்தவளே! சான்றோர்களால் வழிபடப்படுபவளே!
வாஸரா ரம்பவேளா ஸமுஜ்ரும்பமாணாரவிந்த ப்ரதித்வந்த்வி பாணித்வயே, ஸந்ததோத் யத்வயே, அத்வயே.
அதிகாலையில் மலரும் தாமரையைப் பழிக்கின்ற இரு கரங்களை உடையவளே! எப்போதும் கருணை நிறைந்தவளே! இரண்டற்றவளே!
பைரவி
திவ்ய ரத்னோர்மிகா தீதிதிஸ்தோம ஸந்த்யாய மானாங்குளீ பல்லவோத்யந்தகேந்து ப்ரபாமண்டலே ஸன்னுதா (ஆ) கண்டலே, சித்ப்ரபா மண்டலே ப்ரோல்லஸத் குண்டலே
தேவி, உன் திருக்கரங்கள் சந்தியா காலத்தின் குங்குமச் சிவப்பு வண்ணத்தில் திகழ்கின்றன. நகங்கள் நிலவொளித் திரள்களாக மிளிர்கின்றன. அந்தக் கரங்களில் அணிந்துள்ள மோதிரங்கள் பேரொளி வீசிப் பொலிகின்றன. இந்திரனால் சிறப்புடன் வழிபடப்பட்டவளே! ஞானப்பிழம்போ சிறப்பான குண்டலங்களை அணிந்தவளே!
தாரகா ராஜி நீகாச ஹாராவளி ஸ்மேர சாரஸ்தனா போக பாராநமன் மத்யவல்லீ ஸமுல்லாஸ, ஸந்தர்சிதாகார ஸெளந்தர்ய ரத்னாகரே, வல்லகீ ப்ருத்கரே கிங்கர ஸ்ரீ கரே.
தேவீ! கைகளில் யாழ் ஏந்தியவளே! பக்தர்களுக்குச் செல்வத்தை அளிப்பவளே! நட்சத்திர வரிசை போன்ற முத்தாரங்கள் அணிந்து தோன்றும் அழகிய பெரிய கொங்கைகளின் பளுவால் உன் கொடியிடை வளைந்து தோன்றுகிறது. அந்த வளைவினால் இடையெனும் அழகுக் கடலில் மூன்று மடிப்புகள் அலைபோல் எழுந்து காட்சியளிக்கின்றன.
நீலாம்பரி
ஹேம கும்போப மோத்துங்க வ÷க்ஷõஜ பாராவநம்ரே, த்ரிலோகாவநம்ரே
தங்கக் குடங்கள்போல் உயர்ந்த கொங்கைகளின் பாரத்தால் சற்று குனிந்திருப்பவளே! மூவுலகாலும் வணங்கப்படுபவளே!
லஸத் வ்ருத்தகம்பீரநாபீ ஸரஸ்தீர சைவால சங்காகர ச்யாமரோமாவளீ பூஷணே, மஞ்ஜூ ஸம்பாஷணே
வட்ட வடிவமான, ஆழ்ந்த தொப்புள் என்னும் குளக்கரையிலுள்ள பாசிக்கொத்தோ என்று சந்தேகத்தை விளைவிக்கும் கரிய ரோம வரிசையை அணியாகக் கொண்டவளே! மென் மொழியினளே!
சாவேரி
சாரு சிஞ்சத்கடீ ஸூத்ர நிர்ப்பர்த்ஸிதானங்க லீலாதனுச் சிஞ்ஜினீ டம்பரே, திவ்ய ரத்னாம்பரே
இனிமையாக ஒலிக்கும் அரைஞாணின் ஒலியால் மன்மதனுடைய அழகிய வில்லின் நாண் எழுப்புகின்ற ஒலியை வெல்பவளே! சிறந்த ரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆடையை அணிந்தவளே!
பத்ம ராகோல்லஸன் மேகலா பாஸ்வர ச்ரோணி சோபாஜித ஸ்வர்ண பூப்ருத்தலே, சந்த்ரிகா சீதலே.
தேவீ, உன் மேகலையில் பதிக்கப்பட்டுள்ள பத்மராகக் கற்கள் சிந்துகின்ற ஒளியால் உன் இடைப் பகுதி பொன்மயமான மேரு மலையின் தாழ்வரைபோல் பிரகாசிக்கிறது. நீயும் நிலவெனக் குளிர்ந்து தோன்றுகிறாய்.
விகஸித நவகிம்சுகாதாம்ர திவ்யாம்சு கச்சன்ன சாரு சோப பரா பூத ஸிந்தூர சோணாயமானேந்த்ர மாதங்க ஹஸ்தார்களே, வைபவாநர்களே ச்யாமளே.
சியாமளா தேவீ! மலர்ந்த புதிய பலாச மலர்போல் சிவந்த மெல்லிய பட்டால் உன் அழகிய கால்கள் மறைக்கப்பட்டுள்ளன. சிந்தூரத்தால் சிவந்திரக்கும் ஐராவதத்தின் சிறந்து துதிக்கையை வெல்பவைபோல் அவை தோன்றுகின்றன. இல்லையோ என்று சந்தேகப்படும் அளவிற்கு உன் இடை சிறுத்துள்ளது.
பிலஹரி
கோமலஸ் நிக்த்த நீலோத்பலோத் பாஸி தானங்க தூணீர சங்காகரோதார ஜங்க்காலதே, சாருலீலாகதே
மனத்தைக் கவர்கின்ற மெல்லிய குவளை மலர்களாகிய அம்புகள் நிறைந்த மன்மதனின் தூணியோ என்று சந்தேகப்படச் செய்கின்ற அழகிய கணுக்கால்களை உடையவளே! சிறந்த, மென்மையான நடை உடையவளே!
நம்ர திக்பால ஸீமந்தினீ குந்தள ஸ்நிக்த்த நீல ப்ரபாபுஞ்ஜ ஸஞ்ஜாத தூர்வாங்கு ராசங்க ஸாரங்கஸம்யோக ரிங்க்கன் நகேந்தூஜ்வலே, ப்ரோஜ்வலே.
மாசற்றவளே! உனது திருப்பாதங்களில் பணிகின்ற திசைநாயகர்களின் மனைவியருடைய மின்னித் திளைக்கின்ற கார்கூந்தலைக் கரும் புல்லாகக் கருதி, அவற்றை மேய எண்ணி விரைந்து சென்று இடறி வீழ்கின்ற புள்ளி மானைக் கையில் ஏந்திய சந்திரனோ என்று வியக்க வைக்கும் நகங்களாகிய சந்திரங்களைத் தாங்கியவளே! சிறந்து பொலிபவளே!
செஞ்சுருட்டி
நிர்மலே ப்ரஹ்வ தேவேச, லக்ஷ்மீச பூதேச தைத்யேச, ய÷க்ஷச, வாகீச, வாணேச, கோணேச வாய்வக்னி கோடீரமாணிக்ய ஸங்க்ருஷ்ட பாலா தபோத் தாமலாக்ஷõரஸாருண்ய தாருண்ய, லக்ஷ்மீ க்ருஹீதாங்க்ரி பத்மேஸூபத்மே உமே.
இந்திரன், விஷ்ணு, சிவன், வருணன், பிரம்மன், எமன், நிருதி, குபேரன், வாயு, அக்கினி போன்ற தேவர்கள் உன்னைப் பணிகின்றனர். அவர்களின் கிரீடங்களில் பதிக்கப்பட்டுள்ள மாணிக்க மணிகளிலிருந்து பொலிகின்ற ஒளி இளவெயிலெனத் திகழ்கிறது. உனது திருவடித்தாமரைகளில் தீட்டப்பட்டுள்ள செம்பஞ்சுக் குழம்பிலிருந்து எழுகின்ற செவ்வொளி அந்த இளவெயிலின் மெல்லொளியை வெல்வதுபோல திகழ்கிறது. இளமையெழிலும் பணிகின்ற திருவடித் தாமரைகளை உடையவளே! மகாலட்சுமியாகவும் பார்வதி தேவியாகவும் திகழ்பவளே!
மோகனம்
ஸூருசிர நவரத்ன பீடஸ்த்திதே, ஸூஸ்த்திதே, பேரெழில் பொலிகின்ற நவரத்தினங்கள் இழைத்த பீடத்தில் வீற்றிருப்பவளே! சிறப்பாக அமர்ந்தருள்பவளே!
ரத்னஸிம் ஹாஸனே, ரத்ன பத்மாஸனே, சங்க்க பத்மத்வயோபாச்ரிதே
ரத்தினக் கற்களால் அமைந்த தாமரை மலராசனத்தில் வீற்றிருப்பவளே! ரத்தின சிம்மாசனத்தில் எழுந்தருள்பவளே! சங்க நிதி, பத்ம நிதி என்ற இரண்டு பெரும் செல்வங்களாலும் சேவிக்கப்படுபவளே! புகழ் வாய்ந்தவளே!
தத்ரவிக்னேச தூர்வாவடு ÷க்ஷத்ரபாலைர் யுதே மத்தமாதங்க கன்யா ஸமூஹான் விதே, மஞ்ஜூலாமேனகாத்யங்க நாமானிதே, பைரவை ரஷ்டபிர் வேஷ்டிதே
அங்கே விநாயகர், துர்க்கா தேவி, வடுகர், க்ஷேத்ர பாலர் ஆகியோருடன் எழுந்தருள்பவளே! உல்லாசமாகத் திரிகின்ற மாதங்கன்னிகளால் சூழப்படுபவளே! மஞ்சுளா, மேனகா முதலிய அழகிய மங்கையரால் வணங்கப்படுபவளே எட்டு பைரவர்களால் சூழப்படுபவளே!
தேவி வாமாதிபிஸ் ஸம்ச்ரிதே, சக்திபிஸ்ஸேவிதே ! தாத்ரி லக்ஷ்ம்யாதி சக்த்யஷ்டகைஸ் ஸம்யுதே, மாத்ருகாமண்டலைர் மண்டிதே ! பைரவீஸம்வ்ருதே, யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலை ரர்ச்சிதே பஞ்சபாணாத் மிகே பஞ்சபாணேன ரத்யா ச ஸம்பாவிதே, ப்ரீதி பாஜாவஸந்தேன சாநந்திதே
வாமை முதலான தேவியரால் சேவிக்கப்படுபவளே! தேவீ! உலகிற்கு உணவளித்துக் காப்பவளே! மகாலட்சுமி முதலிய எட்டுசக்திகளுடன் கூடியிருப்பவளே! மாத்ருகா தேவியரால் சூழப்பட்டவளே! யட்சர், கந்தர்வர் மற்றும் சித்தர்களின் மனைவியரால் பூஜிக்கப்படுபவளே! பஞ்ச பாணங்களை உடையவளே! மன்மதனாலும் ரதியாலும் வணங்கப்படுபவளே! அன்புடையவனாகிய வசந்த கால தேவனால் மகிழ்பவளே!
கானடா
பக்தி பாஜாம் பரம் ச்ரேயஸே கல்பஸே, யோகினாம் மானஸே, த்யோதஸே, சந்தஸாமோஜஸா ப்ராஜஸே கீதவித்யா வினோதாதித்ருஷ்ணேன க்ருஷ்ணேன ஸம்பூஜ்யஸே பக்திமச் சேதஸா வேதஸா ஸ்த்தூயஸே, விச்வஹ்ருத்யேன, வாத்யேன வித்யாதரைர் கீயஸே
நீ பக்தியுடன் பணிபவர்களுக்கு மேலான செல்வத்தை அளிக்கிறாய். யோகிகளின் மனத்தில் ஒளிர்கிறாய்! உனது ஆற்றலால் வேதங்களுக்கு ஒளி கொடுக்கிறாய்! ஆடல், பாடல், கல்வி, குறும்பு இவற்றில் விருப்பம் கொண்ட கிருஷ்ணனால் சிறப்பாக வழிபடப்படுகிறாய்! பக்தி நிறைந்த மனத்துடன் பிரம்ம தேவனால் துதிக்கப்படுகிறாய்! உலகைக் களிக்கச் செய்கின்ற வாத்தியங்களை வாசித்து வித்யாதரர்களால் போற்றப்படுகிறாய்!
ச்ரவணஹரண தக்ஷிண க்வாணயா வீணயா கிந்நரைர் கீயஸே.
காதுகளைக் குளிரச் செய்கின்ற இசையை எழுப்புகின்ற வீணைகளை இசைத்து கின்னரர்களால் நீ புகழப்படுகிறாய்! யட்ச, கந்தர்வ, சித்த மங்கையரால் அர்ச்சிக்கப்படுகிறாய்! எல்லா நலன்களையும் அடைய விரும்புகின்ற தேவருலகப் பெண்களால் நன்றாக ஆராதிக்கப்படுகிறாய்.
சஹானா
யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலை ரர்ச்யஸே ஸர்வ ஸெளபாக்ய வாஞ்ச்சாவதீபிர் வதூபீஸ் ஸூராணாம் ஸமாராத் யஸே.
ஸர்வ வித்யா விசேஷாத்மகம் சாடு காதா ஸமுச்சாடனம் கண்ட மூலோல்லஸத் வர்ணராஜித்ரயம் கோமலம் ச்யாமளோதார பக்ஷத்வயம் துண்ட சோபாதி தூரீ பவத் கிம்சுகம்தம்சுகம் லாலயந்தீ பரிக்ரீடஸே.
அனைத்து அறிவு வடிவமாக, சிறந்த கதைகளை நன்றாகச் சொல்லக்கூடிய, கழுத்தின் அடிப்பகுதியில் மூன்று வண்ணக் கோடுகளை உடைய, இளம் பச்சை நிறத்தில் கம்பீரமான இரண்டு இறக்கைகளையுடைய, புரச மலரின் அழகைப் பழிக்கின்ற அழகான அலகையுடைய கிளியைக் கொஞ்சிக் களிக்கிறாய்!
நாதநாமக்கிரியை
பாணி பத்மத்வயேனாக்ஷமாலாமபி ஸ்ப்பாடிகீம் ஜ்ஞான ஸாராத்மகம் புஸ்தகம் சாங்குசம்பாஸமாபிப்ரதீயேன ஸஞ்சித்ன்த்யஸே தஸ்ய வக்த்õரந்தராத் கத்ய பத்யாத்மிகா பாரதீ நிஸ்ஸரேத்.
யேன வாயா வகாபாக்ருதிர் பாவ்யஸே தஸ்ய வச்யா பவந்தி ஸ்த்ரிய:பூருஷா: யேந வா சா தகும் பத்யுதிர் பாவ்யஸே ஸோ (அ) பிலக்ஷ்மீ ஸஹஸ்ரை: பரிக்ரீடதே.
தாமரை போன்ற இரண்டு கைகளில் ஸ்படிக மணிகளாலான ஜப மாøயும், அறிவின் சாரமான புத்தகத்தையும், மற்ற இரண்டு கைகளில் அங்குசம், பாசம் ஆகிய ஆயுதங்களையும் தரித்தவளே! இந்த உருவத்தில் உன்னை மனத்தால் தியானிப்பவனின் வாயிலிருந்து உரைநடையும் கவிதையும் சிறந்து விளங்குகின்ற வாக்குகள் வெளிப்படும். செவ்வொளி வீசும் திருமேனி உடையவளாக உன்னைத் தியானிப்பவனுக்குப் பெண்களும் ஆண்களும் வசப்படுவார்கள். பொன்னிறம் உடையவளாக உன்னைத் தியானிப்பவன் ஆயிரக்கணக்கான செல்வங்கள் பெற்று ஆனந்த வாழ்வு வாழ்வான்.
யதுகுலகாம் போதி
கிம் ந ஸித்யேத்வபு: ச்யாமலம் கோமலம் சந்த்ர சூடான்விதம்,தாவகம் த்யாயத: தஸ்ய லீலாஸரோவாரித: தஸ்ய கேளீவனம் நந்தனம் தஸ்ய பத்ராஸனம் பூதலம், தஸ்ய கீர்த்தேவதா கீங்கரீ, தஸ்யசாஜ்ஞாகரீ ஸ்ரீ: ஸ்வயம்
கரிய நிறத்தினளாக, மென்மை நிறைந்தவளாக, நிலவைத் தரித்தவளாக உனது திருமேனியைத் தியானிப்பவனுக்கு எதுதான் கைகூடாது! கடல் அவன் களிக்கின்ற குளமாகும்; விண்ணுலக நந்தவனம் அவன் விளையாடுகின்ற தோட்டமாகும்; பூமியே அவனது அரியணையாகிவிடும்; கலைமகளே அவனுக்கு அருள் செய்யக் காத்து நிற்பாள்; மகாலட்சுமி தானாகவே அவனது பணிப் பெண் ஆவாள்.
மத்மயாவதி
ஸர்வதீர்த்தாத்மிகே, ஸர்வமந்த்ராத்மிகே, ஸர்வ தந்த்ராத்மிகே, ஸர்வ யந்த்ராத்மிகே, ஸர்வபீடாத்மிகே, ஸர்வதத்வாத்மிகே, ஸர்வசக்த்யாத்மிகே, ஸர்வவித்யாத்மிகே ஸர்வயோகாத்மிகே, ஸர்வநாதாத்மிகே, ஸர்வசப்தாத்மிகே, ஸர்வவிச்வாத்மிகே, ஸர்வ தீக்ஷõத்மிகே, ஸர்வஸர்வாத்மிகே, ஸர்வகே ஹே ஜகன்மாத்ருகே பாஹி மாம் பாஹி மாம், பாஹி மாம், தேவி துப்யம் நமோ தேவீ துப்யம் நமோ தேவீ துப்யம் நம:
அனைத்து தீர்த்த வடிவினளே, அனைத்து மந்திர வடிவினளே, அனைத்து தந்திர வடிவினளே, அனைத்து யந்திர வடிவினளே, அனைத்து பீட வடிவினளே, அனைத்து தத்துவ வடிவினளே, அனைத்து ஆற்றல் வடிவினளே, அனைத்து அறிவு வடிவினளே, அனைத்து யோக வடிவினளே, அனைத்து ஒலி வடிவினளே, அனைத்து சொல் வடிவினளே, அனைத்து எழுத்து வடிவினளே, அனைத்து உலக வடிவினளே, எங்கும் நிறைந்தவளே, உலகின் தாயே, என்னைக் காப்பாய், என்னைக் காப்பாய், என்னைக் காப்பாய். தேவீ, உன்னை வணங்கிறேன். தேவீ, உன்னை வணங்குகிறேன். தேவீ, உன்னை வணங்குகிறேன்.
|
|
|