|
முதல் பக்கம்>
இறைவழிபாடு> வடிவுடை மாணிக்க மாலை
|
|
வடிவுடை மாணிக்க மாலை
|
|
காப்பு
விநாயகர் வணக்கம்
சீர்கொண்ட ஒற்றிப் பதிவுடையான் இடம் சேர்ந்தமணி வார்கொண்ட கொங்கை வடிவாம் பிகைதன் மலர் அடிக்குத் தார்கொண்ட செந்தமிழ்ப் பாமாலை சாத்தத் தமியனுக்கே ஏர்கொண்ட நல்அருள் ஈயும் குணாலய ஏரம்பனே
நூல்
1. கடல் அமுதே செங்கரும்பே அருள்கற்க கக்கனியே உடல் உயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே அடல் விடையார் ஒற்றியார் இடம் கொண்ட அருமருந்தே மடல்அவிழ் ஞான மலரே வடிவுடை மாணிக்கமே.
2. அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசத் குணியே எம் வாழ்க்கைக் குலதெய்வ மேமலைக் கோன் தவமே யணியேன் என் பிழைபொறுத்தாட்கொண்ட தெய்வப் பதிகொள் சிந்தா மணியே என் கண்ணுள் மணியே வடிவுடை மாணிக்கமே.
3. மானேர்-விழிமலை மானே எம்மான் இடம் வாழ்மயிலே வானேர் அளகப் பசுங்குயிலே அருள் கண்கரும்பே மானே திருவொற்றி மாநகர் வாழும் சிவசக்தியே வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே.
4. பொருளே அடியார் புகழ் இடமே ஒற்றிப் பூரணன்தன் அருளே எம்ஆர் உயிர்க்காம் துணையே விண்ணவர் புகழும் தெருளே மெய்ஞ்ஞானத் தெளிவே மறைமுடிச் செம்பொருளே மருளே தம்நீக்கும் ஒளியே வடிவுடை மாணிக்கமே.
5. திருமாலும் நான்முகத் தேவும்முன் நாள்மிகத் தேடிமனத் தருமால் உழக்க அனல்உருவாகி அமர்ந்தருளும் பெருமான் எம்மான் ஒற்றிப் பெம்மான்கைம் மான்கொளும் பித்தன்மலை மருமான் இடம்கொள்பெண் மானே வடிவுடை மாணிக்கமே.
6. உன்னேர் அருள்தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப் பொன்னேஅப் பொன்னற் புதஒளி யேமலர்ப் பொன்வணங்கும் அன்னேஎம் ஆருயிர்க் கோர்உயி ரேஒற்றி யம்பதிவாழ் மன்னே ரிடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே.
7. கண்ணே அக்கண்ணின் மணியில் கலந்தொளிசெய் விண்ணே வியன்ஒற்றியூர் அண்ணல் வாமத்தில்வீற்றிருக்கும் பெண்ணே மலைபெறும் பெண்மணியே தெய்வப் பெண்அமுதே கண்ணேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
8. மலையான் தவம்செய்து பெற்ற முத்தே ஒற்றி வாழ்கனகச் சிலையான் மணக்க மணக்கும் தெய்வீகத் திருமலரே அலையான் மலிகடல் பள்ளிகொண்டான் தொழும் ஆர்அமுதே வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே.
9. காமம் படர்நெஞ்சுடையார் கனவிலும் காணப்படாச் சேமம் படர்செல்வப் பொன்னே மதுரச் செழுங்கனியே தாமம் படர்ஒற்றியூர்வாழ் பவழத் தனிமலையின் வாமம் படர்பைங்கொடியே வடிவுடை மாணிக்கமே.
10. கோடா அருள்குணக்குன்றே சிவத்தில் குறிப்பிலரை நாடாத ஆனந்த நட்பே மெய் அன்பர் நயக்கும்இன்பே பீடார் திருஒற்றிப் பெம்மான் இடம்செய் பெருந்தவமே வாடா மணிமலர்க் கொம்பே வடிவுடை மாணிக்கமே.
11. நாலே எனும்மறை அந்தங்கள் இன்னும் நாடிஎனைப் போலே வருந்த வெளி ஒளியாய் ஒற்றிப் புண்ணியர்தம் பாலே இருந்த நினைத்தங்கை ஆகப் பகரப்பெற்ற மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை மாணிக்கமே.
12. கங்கைகொண்டோன் ஒற்றியூர் அண்ணல் வாமம் கலந்தருள்செய் நங்கை எல்லா உலகும் தந்த நின்னை அந்நாரணற்குத் தங்கைஎன்கோ அன்றித் தாயார்என்கோ செல் தழைக்குமலை மங்கைஅம் கோமள மானே வடிவுடை மாணிக்கமே.
13. சோலையிட்டார் வயலூர்ஒற்றி வைத்துத்தன் தொண்டர் அன்பின் வேலையிட்டால் செயும் பித்தனை மெய்யிடை மேவுகரித் தோலையிட்டாடும் தொழில் உடையோனைத் துணிந்து முன்னாள் மலையிட்டாய் இஃ தென்னே வடிவுடை மாணிக்கமே.
14. தனையான் பவர்இன்றி நிற்கும் பரமன் தனிஅருளாய் வினையாள் உயிர்மலம் நீக்கிமெய் வீட்டின் வித்திடும்நீ எனையாள் அருள்ஒற்றியூர்வாழ் அவன்தன் இடத்தும் ஒரு மனையாள் என நின்ற தென்னை வடிவுடை மாணிக்கமே.
15. பின்ஈன்ற பிள்ளையின் மேல்ஆர்வம் தாய்க்கெனப் பேசுவர் நீ முன்ஈன்ற பிள்ளையின் மேல்ஆசை உள்ளவர் மொய் அசுரர் கொல்ஈன்ற போர்க்கிளம் பிள்ளையை ஏவக்கொடுத்த தென்னே மன்ஈன்ற ஒற்றிமயிலே வடிவுடை மாணிக்கமே.
16. பையாளும் அல்குல் சுரர்மடவர்கள் பலருளும்இச் செய்யாளும் வெண்ணீற மெய்யாளும் எத்தவம் செய்தனரோ கையாளும் நின்அடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய் மையாளும் கண்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
17. இலையாற்று நீமலர்க் காலால் பணிக்குங்குற் றேவலெலாம் தலையால் செயும்பெண்கள் பல்லோரில் பூமகள் தன்னைத்தள்ளாய் நிலையால் பெரியநின் தொண்டர்தம் பக்க நிலாமையினால் மலையாற் கருளொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
18. கலை மகளோ நின் பணியை அன்போடும் கடைப்பிடித்தால் அலை மகளோ அன் பொடுபிடித்தாள் எற் கறைதிகண்டாய் தலைமகளே அருள்தாயே செவ்வாய்க்கரும் தாழ்குழல்பொன் மலை மகளே ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
19. பொன்னோடு வாணிஎன் போரிரு வோரும் பொருணற்கல் தன்னோ டருளுந் திறநின்குற் றேவலைத் தாங்கிநின்ற பின்னோ அலததன் முன்னோ தெளிந்திடப் பேசுகநீ மன்னோ டெழிலொற்றியூர்வாழ் வடிவுடை மாணிக்கமே.
20. காமட் டலர்திரு வொற்றிநின் னாயகன் கந்தைசுற்றி யேமட் டரையொடு நிற்பதுகண்டும் இரங்கலர்போல் நீமட்டு மேபட்டுக்கின்றனை உன்றன் நேயம் என்னோ மாமட் டலர்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
21. வீற்றார்நின் றன்மணத் தம்மியின் மேல்சிறு மெல்லனிச்சம் ஆற்றாநின் சிற்றடிப் போதினைத் தூக்கிவைத் தாரெனின்மால் ஏற்றார் திருவொற்றி யூரரர் களக்கறுப் பேற்றவரே மாற்றா இயல்கொண்ட மயிலே வடிவுடை மாணிக்கமே.
22. பொருப்புறு நீலியென் பார்நின்னை மெய்அது போ<லும்ஒற்றி விருப்புறு நாயகன் பாம்பா பரணமும் வெண்தலையும் நெருப்புறுங்கையும் கனல்மேனி யும்கண்டு நெஞ்சம் அஞ்சாய் மருப்புறு கொங்கை மயிலே வடிவுடை மாணிக்கமே.
23. அனம்பொறுத் தான்புகழ் ஒற்றிநின் நாயகன் அங்குமிழித் தனம்பொறுத் தாள்ஒரு மாற்றாளைத் தன்முடி தன்னில் வைத்தே தினம்பொறுத் தான்அது கண்டும் சினமின்றிச் சேர்ந்தநின்போல் மனம்பொறுத் தார்எவர் கண்டாய் வடிவுடை மாணிக்கமே.
24. ஓருரு வாய்ஒற்றி யூர்அமர்ந் தார்நின் னுடையவர்பெண் சீருரு வாகுநின் மாற்றாளை நீதெளி யாத்திறத்தில் நீருரு வாக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே வாருரு வார்கொங்கை நங்காய் வடிவுடை மாணிக்கமே.
25. சார்ந்தேநின் பால்ஒற்றி யூர்வாழும் நாயகர் தாமகிழ்வு கூர்ந்தேகுலாவும் அக்கொள்கையைக் காணில் கொதிப்பளென்று தேர்ந்தேஅக் கங்கையைச் செஞ்சடைமேல் சிறை செய்தனர் ஒண் வார்ந்தே குழைகொள்விழியாய் வடிவுடை மாணிக்கமே.
26. நீயே எனது பிழைகுறிப் பாயெனில் நின்னடிமைப் பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ண மோஎனைப் பெற்றளிக்கும் தாயே கருணைத் தடங்கட லேஒற்றிச் சார்குமுத வாயேர் சவுந்தர மானே வடிவுடை மாணிக்கமே.
27. முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ் ஒப்போ தருமலைப் பெண்ணமு தேஎன்று வந்துநினை எப்போதும் சிந்தித் திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய் மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே.
28. மீதலத் தோர்களுள் யார்வணங் காதவர் மேவுநடுப் பூதலத் தோர்களுள் யார்புக ழாதவர் போற்றிநிதம் பாதலத் தோர்களுள் யார்பணி யாதவர் பற்றி நின்றாள் மாதலத் தோங்கொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
29. சேய்க்குற்றம் தாய்பொறுத் தேடா வருகெனச் செப்புவள்இந் நாய்க்குற்றம் நீபொறுத் தாளுதல் வேண்டும் நவின்மதியின் தேய்க்குற்ற மாற்றும் திருவொற்றி நாதர்தந் தேவிஅன்பர் வாய்க்குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை மாணிக்கமே.
30. செங்கம லாசனன் தேவிபொன் நாணும் திருமுதலோர் சங்கம தாமிடற் றோங்குபொன் நாணும் தலைகுனித்துத் துங்கமு றாதுளம் நாணத் திருவொற்றித் தோன்றல்புளை மங்கல நாணுடை யாளே வடிவுடை மாணிக்கமே.
31. சேடா ரியன்மணம் வீசச் செயன்மணம் சேர்ந்துபொங்க ஏடார் பொழிலொற்றி யூரண்ணல் நெஞ்சம் இருந்துவக்க வீடா இருளும் முகிலும்பின் னிட்டு வெருவவைத்த வாடா மலர்க்குழ லாளே வடிவுடை மாணிக்கமே.
32. புரநோக்கி னால்பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர்களைக் கரனோக்கி நல்லமு தாக்கிநிற் போற்றுங் கருத்தினர்ஆ தரநோக்கி உள்ளிருள் நீக்கிமெய்ஞ் ஞானத் தனிச்சுகந்தான் வரநோக்கி ஆள்விழி மானே வடிவுடை மாணிக்கமே.
33. உன்னும் திருவொற்றி யூருடை யார்நெஞ் சுவப்பஎழில் துன்னும் உயிர்ப்பயிர் எல்லாந் தழைக்கச் சுகக்கருணை என்னும் திருவமு தோயாமல் ஊற்றி எமதுளத்தின் மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
34. வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன் உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத் தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ் வாய்க்குமுத வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே.
35. மாநந்த மார்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன் றாநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே காநந்த வோங்கும் எழிலொற்றி யார்உட் களித்தியலும் வாநந் தருமிடை மானே வடிவுடை மாணிக்கமே.
36. வான்தேட நான்கு மறைதேட மாலுடன் வாரிசமே லான்தேட மற்றை அருந்தவர் தேடஎன் அன்பின்மையால் யான்தேட என்னுளம் சேர்ஒற்றி யூர்எம் இருநிதியே மான்தேடும் வாட்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
37. முத்தேவர் விண்ணன் முதல்தேவர் சித்தர் முனிவர்மற்றை எத்தே வருநின் அடிநினை வார்நினைக் கின்றிலர்தாம் செத்தே பிறக்கும் சிறியர்அன் றோஒற்றித் தேவர் நற்றா மத்தேவர் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
38. திருநாள் நினைத்தொழும் நன்னாள் தொழாமல் செலு<த்தியநாள் கருநாள் எனமறை எல்லாம் புகலும் கருத்தறிந்தே ஒருநா ளினுநின் றனைமற வார்அன்பர் ஒற்றியில்வாழ் மருநாண் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
39. வாணாள் அடைவர் மறுமை யுறார்நன் மனைமக்கள் பொன் பூணாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும் காணார்நின் நாமம்கருதுகின் றோர்ஒற்றிக் கண்ணுதல்பால் மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே.
40. சீரறி வாய்த்திரு வொற்றிப் பரம சிவத்தைநினைப் போரறி வாய்அவ் அறிவாம் வெளிக்கப் புறத்துநின்றாய் யாரறி வார்நின்னை நாயேன் அறிவ தழகுடைத்தே வாரெறி பூண்முலை மானே வடிவுடை மாணிக்கமே.
41. போற்றிடு வோர்தம் பிழைஆ யிரமும் பொருத்தருள்செய் வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார்இடத்தில் இலங்கும்உயர் மாற்றொளி ரும்பசும் பொன்னே வடிவுடை மாணிக்கமே.
42. ஆசைஉள் ளார்அயன் மால்ஆதி தேவர்கள் யாரும்நின்தாள் பூசையுள் ளார்எனில் எங்கே உலகர்செய் பூசைகொள்வார் தேசையுள் ளார்ஒற்றி யூருடை யார்இடஞ் சேர்மயிலே மாசையுள் ளார்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
43. அண்டாரை வென்றுலகாண்டு மெய்ஞ்ஞானமடைந்து விண்ணில் பண்டாரை சூழ்மதி போலிருப் போர்கள்நின் பத்தர்பதம் கண்டாரைக் கண்டவர் அன்றோ திருவொற்றிக் கண்ணுதல்சேர் வண்டாரை வேலன்ன மானே வடிவுடை மாணிக்கமே.
44. அடியார் தொழுநின் அடிப்பொடி தான்சற் றணியப்பெற்ற முடியால் அடிக்குப் பெருமைபெற் றார்அம் முகுந்தன்சந்தக் கடியார் மலர்அயன் முன்னோர்தென் ஒற்றிக் கடவுட்செம்பால் வடியாக் கருணைக் கடலே வடிவுடை மாணிக்கமே.
45. ஓவா தயன்முத லோர்முடி கோடி உறழ்ந்துபடில் ஆவா அனிச்சம் பொறாமலர்ச் சிற்றடி ஆற்றுங்கொலோ காவாய் இமயப்பொற் பாவாய் அருளொற்றிக் காமர்வல்லி வாவா எனும்அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
46. இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னுஞ்சற்றும் எட்டாநின் பொன்னடிப் போதெளி யேன்தலைக்கெட் டுங்கொலோ கட்டார் சபைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச சுத்தமர்ந்த மட்டார் குழன்மட மானே வடிவுடை மாணிக்கமே.
47. வெளியாய் வெளிக்குள் வெறுவெளி யாய்ச்சிவ மேநிறைந்த ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரைநினை ஒப்பவரார் எளியார்க் கெளியர் திருவொற்றி யார்மெய் இனிதுபரி மளியாநின் றோங்கு மருவே வடிவுடை மாணிக்கமே.
48. விணங்காத லன்பர்தம் அன்பிற்கும் நின்புல விக்கும்அன்றி வணங்கா மதிமுடி எங்கள் பிரான் ஒற்றி வாணனும்நின் குணங்கா தலித்துமெய்க் கூறுதந் தான்எனக் கூறுவர்உன் மணங்கா தலித்த தறியார் வடிவுடை மாணிக்கமே.
49. பன்னும் பல்வேறண்டம் எல்லாம்அவ் அண்டப் பரப்பினின் துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும் உன்னை இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பதென்னே மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
50. சினங்கடந் தோர்உள்ளச் செந்தா மரையில் செழித்து மற்றை மனங்கடந் தோதும்அவ் வாக்கும்கடந்த மறைஅன்னமே தினங்கடந் தோர்புகழ் ஒற்றிஎம் மானிடம் சேரமுதே வனங்கடந் தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
51. வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர்முதல் எல்லாரும் நின்செயல் அல்லா தணுவும் இயக்கிலரேல் இல்லாமை யாழ்உழல் புல்லேன்செய் குற்றங்கள் ஏதுகண்டாய் மல்லார் வயல்ஒற்றி நல்லாய் வடிவுடை மாணிக்கமே.
52. எழுதா எழில்உயிர்ச் சித்திர மேஇன் இசைப்பயனே தொழுதாடும் அன்பர்தம் உட்களிப் பேசிற் சுகக்கடலே செழுவார் மலர்ப்பொழில் ஒற்றிஎம் மான் தன்திருத்துணையே வழுவா மறையின் பொருளே வடிவுடை மாணிக்கமே.
53. தெருட்பாலுறும் ஐங்கைச் செல்வர்க்கும் நல்லிளஞ்சேய்க்குமகிழ்ந் தருட்பால் அளிக்கும் தனத்தன மேஎம் அகங்கலந்த இருட்பால் அகற்றும் இருஞ்சுட ரேஒற்றி எந்தைஉள்ளம் மருட்பால் பயி<லு மயிலே வடிவுடை மாணிக்கமே.
54. அயிலேந்தும் பிள்ளைநற் றாயே திருவொற்றி ஐயர்மலர்க் கயிலேந் தரும்பெறல் முத்தே இடையில் கனிந்தகுரல் குயிலே குயின்மென் குழற்பிடி யேமலைக் கோன்பயந்த மயிலே மதிமுக மானே வடிவுடை மாணிக்கமே.
55. செய்யகம் ஓங்கும் திருவொற்றி யூரில்சிவபெருமான் மெய்யகம் ஓங்குநல் அன்பேநின் பால்அன்பு மேவுகின்றோர் கையகம் ஓங்கும் கனியே தனிமெய்க் கதிநெறியே வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை மாணிக்கமே.
56. தரும்பேர் அருளொற்றி யூருடை யான்இடஞ் சார்ந்தபசுங் கரும்பே இனியகற் கண்டே மதுரக் கனிநறவே இரும்பேய் மனத்தினர் பால்இசை யாதஇளங்கினியே வரும்பேர் ஒளிச்செஞ் சுடரே வடிவுடை மாணிக்கமே.
57. சேலேர் விழியருள் தேனே அடியருள் தித்திக்கும்செம் பாலே மதுரச்செம் பாகேசொல் வேதப் பனுவல்முடி மேலே விளங்கும் விளக்கே அருளொற்றி வித்தகனார் மாலே கொளும்எழில் மானே வடிவுடை மாணிக்கமே.
58. எம்பால் அருள்வைத் தெழிலொற்றியூர்கொண் டிருக்கும்இறைச் செம்பால் கலந்தபைந் தேனே கதலிச் செழுங்கனியே வெம்பாலை நெஞ்சருள் மேவா மலர்ப்பத மென் கொடியே வம்பால் அணிமுலை மானே வடிவுடை மாணிக்கமே.
59. ஏமமுய்ப் போர்எமக் கென்றே இளைக்கில் எடுக்கவைத்த சேமவைப் பேஅன்பர் தேடுமெய்ஞ் ஞானத் திரவியமே தாமமைக் கார்மலர்க் கூந்தல் பிடிமென் தனிநடையாய் வாமநற் சீர்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
60. மன்னேர் மலையன் மனையும்நற் காஞ்சன மாலையும்நீ அன்னே எனத்திரு வாயால் அழைக்கப் பெற் றார்அவர்தாம் முன்னே அருந்தவம் என்னே முயன்றனர் முன்னும்ஒற்றி வன்னேர் இளமுலை மின்னே வடிவுடை மாணிக்கமே.
61. கணமொன்றி லேனும்என் உள்ளக் கவலைக் கடல்கடந்தே குணமொன்றி லேன்எது செய்கேன்நின் உள்ளக் குறிப்பறியேன் பணமொன்று பாம்பணி ஒற்றிஎம் மானிடப் பாலில்தெய்வ மணமொன்று பச்சைக் கொடியே வடிவுடை மாணிக்கமே.
62. கருவே தனையற என்னெஞ் சகத்தில் களிப்பொடொற்றிக் குருவே எனும்நின் கணவனும் நீயும்குலவும் அந்தத் திருவே அருள்செந் திருவே முதற்பணி செய்யத்தந்த மருவே மருவு மலரே வடிவுடை மாணிக்கமே.
63. எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குள் அருள் பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும் புண்ணிய மல்லிகைப் போதே எழில்ஒற்றிப் பூரணர்பால் மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே.
64. தீதுசெய் தாலும்நின் அன்பர்கள் தம்முன் செருக்கிநின்று வாதுசெய் தாலும்நின் தாள்மறந் தாலும் மதியிலியேன் ஏதுசெய் தாலும் பொறுத்தருள் வாய்ஒற்றி யின்னிடைப்பூ மாதுசெய் தாழ்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
65. மருந்தினின் றான்ஒற்றி யூர்வாழும் நின்றன் மகிழ்நன்முன்னும் திருந்திநின் றார்புகழ் நின்முன்னும் நல்லருள் தேன்விழைந்தே விருந்தினின் றேன்சற்றும் உள்ளிரங் காத விதத்தைக்கண்டு வருந்திநின் றேன்இது நன்றோ வடிவுடை மாணிக்கமே.
66. என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைஎப் போதும்எங்கும் நின்போல் அருளில் சிறந்தவர் இல்லைஇந் நீர்மையினால் பொன்போலு<ம் நின்னருள் அன்னே எனக்கும் புரிதிகண்டாய் மன்போல் உயர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
67. துன்பே மிகும்இவ் அடியேன் மனத்தில்நின் துய்யஅருள் இன்ப மிகுவதெந் நாளோ எழிலொற்றி எந்தைஉயிர்க் கன்பேமெய்த் தொண்டர் அறிவே சிவநெறிக்கன்பிலர்பால் வன்பேமெய்ப் போத வடிவே வடிவுடை மாணிக்கமே.
68. சற்றே யெனினும்என் நெஞ்சத் துயரம் தவிரவும்நின் பொற்றே மலர்ப்பதம் போற்றவும் உள்ளம் புரிதிகண்டாய் சொற்றேர் அறிஞர் புகழ்ஒற்றி மேவும் துணைவர்தஞ்செம் மற்றேர் புயத்தணை மானே வடிவுடை மாணிக்கமே.
69. சந்தோட மாப்பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால் அந்தோ ஒருதமி யேன்மட்டும் வாடல் அருட்கழகோ நந்தோட நீக்கிய நங்காய் எனத்திரு நான்முகன்மால் வந்தோதும் ஒற்றிமயிலே வடிவுடை மாணிக்கமே.
70. அடியேன் மிசைஎப் பிழையிருந் தாலும் அவைபொறுத்துச் செடியேதம் நீக்கிநற் சீரருள் வாய்திகழ் தெய்வமறைக் கொடியே மரகதக் கொம்பே எழில்ஒற்றிக் கோமளமே வடியேர் அயில்வழி மானே வடிவுடை மாணிக்கமே.
71. கண்ணப்பன் ஏத்துநற் காளத்தி யார்மங் கலங்கொள் ஒற்றி நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நன்னறவே எண்ணப் படாஎழில் ஓவிய மேஎமை ஏன்று கொண்ட வண்ணப் பசும்பொன் வடிவே வடிவுடை மாணிக்கமே.
72. கற்பே விகற்பம் கடியும்ஒன் றேஎங்கள் கண்நிறைந்த பொற்பேமெய்த் தொண்டர்தம் புண்ணிய மேஅருட்போத இன்பே சொற்பேர் அறிவுட் சுகப்பொரு ளேமெய்ச் சுயஞ்சுடரே மற்பேர் பெறும் ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
73. மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனை நீக்க விடுதலருள் தகவே எனக்குநற் றாயே அகில சராசரமும் சுகவேலை மூழ்கத் திருவொற்றி யூரிடந் துன்னிப்பெற்ற மகவே எனப்புரக் கின்றோய் வடிவுடை மாணிக்கமே.
74. வேதங்க ளாய்ஒற்றி மேவும் சிவத்தின் விளைவருளாய்ப் பூதங்க ளாய்ப்பொறி யாய்ப்புல னாகிப் புகல்கரண பேதங்க ளாய்உயிர் ஆகிய நின்னைஇப் பேதைஎன்வாய் வாதங்க ளால்அறி வேனோ வடிவுடை மாணிக்கமே.
75. மதியே மதிமுக மானே அடியர் மனத்துவைத்த நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள்நிலையே கதியே கதிவழி காட்டுங்கண் ணேஒற்றிக் காவலர்பால் வதியேர் இளமட மானே வடிவுடை மாணிக்கமே.
76. ஆறாத் துயரத் தழுந்துகின் றேனைஇங் கஞ்சல்என்றே கூறாக் குறைஎன் குறையே இனிநின் குறிப்பறியேன் தேறாச் சிறியர்க் கரிதாம் திருவொற்றித் தேவர்மகிழ் மாறாக் கருணை மழையே வடிவுடை மாணிக்கமே.
77. எற்றே நிலைஒன்றும் இல்லா துயங்கும் எனக்கருளச் சற்றேநின் உள்ளம் திரும்பிலை யான்செயத் தக்கதென்ன சொற்றேன் நிறைமறைக் கொம்பேமெய்ஞ் ஞானச் சுடர்க் கொழுந்தே மற்றேர் அணியொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
78. செவ்வேலை வென்றகண் மின்னேநின் சித்தம் திரும்பி எனக் கெவ்வேலை செய்என் றிடினும்அவ் வேலை இயற்றுவல்காண் தெவ்வேலை வற்றச்செய் அவ்வேலை யீன்றொற்றித் தேவர் நெஞ்சை வவ்வேல வார்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
79. தாயே மிகவும் தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச் சேயேன் படுந்துயர் நீக்கஎன் னேஉளம் செய்திலையே நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு வாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
80. நானே நினைக்கடி யேன்என் பிழைகளை நாடியநீ தானே எனைவிடில் அந்தோ இனிஎவர் தாங்குகின்றோர் தேனேநல் வேதத் தெளிவே கதிக்குச் செ<லுநெறியே வானேர் பொழில்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
81. கல்லா ரிடத்தில்என் இல்லாமை சொல்லிக் கலங்கிஇடர் நல்லாண்மை உண்டருள் வல்லாண்மை உண்டெனின் நல்குவையோ வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி வாணரொடு மல்லார் பொழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
82. சுந்தர வாண்முகத் தோகாய் மறைகள் சொலும் பைங்கிள்ளாய் சுந்தர வார்குழற் பூவாய் கருணைக் கடைக்கண் நங்காய் அந்தர நேரிடைப் பாவாய் அருளொற்றி அண்ணல்மகிழ் மந்தர நேர்கொங்கை மங்காய் வடிவுடை மாணிக்கமே.
83. பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே சுத்தமெய்ஞ் ஞான ஒளிப்பிழம்பே சிற் சுகாநந்தமே நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன் மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
84. பூவாய் மலர்க்குழல் பூவாய்மெய் அன்பர் புனைந்ததமிழ்ப் பாவாய் நிறைந்தபொற் பாவாய்செந் தேனிற் பகர்மொழியாய் காவாய் எனஅயன்காவாய் பவனும் கருதுமலர் மாவாய் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
85. தாதா உணவுடை தாதா எனப்புல்லர் தம்மிடைப்போய் மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில் நின்அடி வைகுங்கொலோ காதார் நெடுங்கட் கரும்பேநல் ஒற்றிக் கருத்தர்நட வாதா ரிடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே.
86. களந்திரும் பாஇக் கடையேனை ஆளக் கருணைகொண்டுன் உளந்திரும் பாமைக்கென் செய்கேன் துயர்க்கட, லூடலைந்தேன் குளந்திரும் பாவிழிக் கோமா னொடுந்தொண்டர் கூட்டமுற வளந்திரும் பாஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
87. ஆரணம் பூத்த அருட்கோ மளக்கொடி அந்தரிபூந் தோரணம் பூத்த எழில்ஒற்றி யூர்மகிழ் சுந்தரிசற் காரணம் பூத்த சிவைபார்ப் பதிநங் கவுரிஎன்னும் வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை மாணிக்கமே.
88. திருவல்லி ஏத்தும் அபிடேக வல்லிஎஞ் சென்னியிடை வருவல்லி கற்பக வல்லிஒண் பச்சை மணிவல்லிஎம் கருவல்லி நீக்கும் கருணாம் பகவல்லி கண்கொள்ஒற்றி மருவல்லி என்று மறைதேர் வடிவுடை மாணிக்கமே.
89. உடையென்ன ஒண்புலித் தோல்உடை யார்கண் டுவக்குமிள நடையன்ன மேமலர்ப் பொன்முத லாம்பெண்கள் நாயகமே படையன்ன நீள்விழி மின்னேர் இடைபொற் பசுங்கிளியே மடைமன்னு நீர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
90. கற்பதும் கேட்பதும் எல்லாம்நின் அற்புதக் கஞ்சமலர்ப் பொற்பதம் காணும் பொருட்டென எண்ணுவர் புண்ணியரே சொற்பத மாய்அவைக் கப்புற மாய்நின்ற தூய்ச்சுடரே மற்பதம் சேரொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
91. நின்னால் எனக்குள எல்லா நலனும் நினைஅடைந்த என்னால் உனக்குள தென்னைகண் டாய்எமை ஈன்றவளே முன்னால் வருக்கருள் ஒற்றிஎம் மான்கண் முழுமணியே மன்னான் மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே.
92. நன்றே சிவநெறி நாடுமெய்த் தொண்டர்க்கு நன்மைசெய்து நின்றேநின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன்ஈ தென்றே முடிகுவ தின்றே முடியில் இனிதுகண்டாய் மன்றேர் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
93. அத்தனை ஒற்றிக் கிறைவனை அம்பலத் தாடுகின்ற முத்தனைச் சேர்ந்தஒண் முத்தே மதிய முகவமுதே இத்தனை என்றள வேலாத குற்றம் இழைத்திடும்இம் மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை மாணிக்கமே.
94. கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோக்கிக் குறித்திடும்என் தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திருச்செவியில் ஏறாத வண்ணம்என் ஒற்றித் தியாகர் இடப்புறத்தின் மாறா தமர்ந்த மயிலே வடிவுடை மாணிக்கமே.
95. ஓயா இடர் கொண் டுலைவேனுக் கன்பர்க் குதவுதல்போல் ஈயா விடினும் ஓர் எள்ளள வேனும் இரங்குகண்டாய் சாயா அருள்தரும் தாயே எழில்ஒற்றித் தற்பரையே மாயா நலம்அருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
96. பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையில் துரும்பே எனஅலை கின்றேன் புணைநின் துணைப்பதமே கரும்பே கருணைக் கடலே அருண்முக் கனிநறவே வரும்பேர் அருள்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
97. காதர வால்உட் கலங்கிநின் றேன்நின் கடைக்கண்அருள் ஆதர வால்மகிழ் கின்றேன் இனிஉன் அடைக்கலமே சீதரன் ஏத்தும் திருவொற்றி நாதர்தம் தேவிஎழில் மாதர சேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
98. பொன்னுடை யார்அன்றிப் போற்றுநற் கல்விப் பொருளுடையார் என்னுடையார்என ஏசுகின்றார் இஃதென்னை அன்னே மின்னுடை யாய்மின்னல் துன்னிடை யாய்ஒற்றி மேவுமுக்கண் மன்னுடை யாய்என் னுடையாய் வடிவுடை மாணிக்கமே.
99. பொய்விட்டி டாதவன் நெஞ்சகத் தேனைப் புலம்பும் வண்ணம் கைவிட்டி டாதின்னும் காப்பாய் அதுநின் கடன்கரும்பே மெய்விட்டி டாருள் விளை இன்ப மேஒற்றி வித்தகமே மைவிட்டி டாவிழி மானே வடிவுடை மாணிக்கமே.
100.நேயானு கூல மனமுடை யாய்இனி நீயும்என்றன் தாயாகில் யார்உன் தனயனும் ஆகில்என் தன்உளத்தில் ஓயா துறந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ் வாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே.
101. வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள் வாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர் வாழிஎன் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்நரும் நீடு வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே!
வடிவுடை மாணிக்கமாலை முற்றும்
|
|
|
|
|