பாற்கட லிடைப் பிறந்தாள் - அது பயந்தநல் லமுதத்தின் பான்மை கொண்டாள் ஏற்குமோர் தாமரைப் பூ - அதில் இணைமலர்த் திருவடி இசைத்திருப்பாள் நாற்கரத் தானுடையாள் - அந்த நான்கினும் பலவகைத் திருவுடையாள் வேற்கரு விழியுடையாள் - செய்ய மேனியர் பசுமையை விரும்பிடுவாள்
நாரணன் மார்பினிலே - அன்பு நலமுற நித்தமும் இணைந்திருப்பாள் தோரணப் பந்தலிலும் - பசுத் தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும் வீரர்தன் தோளிலும் - உடல் வெயர்ந்திட உழைப்பவர் தொழில்களிலும் பாரதி சிரத்தினிலும் - ஒளி பரவிட வீற்றிருந் தருள் புரிவாள்
பொன்னிலும் மணிகளிலும் - நறும் பூவிலும் சாந்திலும் விளக்கினிலும் கன்னியர் நகைப்பினிலும் - செழுங் காட்டிலும் பொழிவிலும் கழனியிலும் முன்னிய துணிவினிலும் - மன்னர் முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப் பன்னிநற் புகழ்பாடி - அவள் பதமலர் வாழ்த்திநற் பதம் பெறுவோம்.
மண்ணினுட் கனிகளிலும் - மலை வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும் புண்ணிய வேள்வியிலும் - உயர் புகழிலும் மதியிலும் புதுமையிலும் பண்ணுநற் பாவையிலும் - நல்ல பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும் நண்ணிய தேவிதனை - எங்கள் நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்.
வெற்றி கொள் படையினிலும் -பல விநயங்கள் அறிந்தவர் கடையினிலும் நற்றவ நடையினிலும் - நல்ல நாவலர் தேமொழித் தொடரினிலும் உற்றசெந் திருத்தாயை - நித்தம் உவகையிற் போற்றியிங் குயர்த்திடுவோம் கற்றபல் கலைகளெல்லாம் - அவள் கருணைநல் லொளிபெறக் கலிதவிர்ப்போம். |