|
பார்கவியின் அருள் இருந்தாலே, பாரினில் செல்வம் சேரும். இதனை உணர்ந்துதான் ,பார் புகழும் கவியான பாரதியும், திருமகளைப் போற்றிப் பாடியுள்ளார்.
பாற்கடல்நாதன் பத்தினியின் பார்வைபட்டால், பஞ்சம் யாவும் நீங்கி பாரினில் செல்வம் சேரும் என்று புராணங்களும் புகழ்கின்றன. எங்கெங்கெல்லாம் இருப்பாள் செல்வமகள் என்று, பட்டியல் இட்டிருக்கிறார், இப்பாடலில் பாரதி அங்கெல்லாம் இருப்பதோடு, இந்தத் துதி எங்கெல்லாம் பாடப்படுகிறதோ அங்கேயும் எழுந்தருள்வாள் திருமகள்.
பூமகள் அருள் வேண்டி, புகழ்க்கவி பாடிய இத்துதியை, பொன்மகளை நினைத்தபடி, விளக்கேற்றி வைத்துச் சொல்லுங்கள்...அலைமகள் அருளால் நிலையான செல்வம் சேரும்.
நித்தமுனை வேண்டி மனம் நினைப் தெல்லாம் நீயாய்ப் பித்தனைப்போல் வாழ்வதிலே பெருமையுண்டோ? திருவே! சித்தவுறுதி கொண்டிருந்தார் செய்கை யெல்லாம் வெற்றிகொண்டே உத்தமநிலை சேர்வ ரென்றே உயர்ந்த வேதமுரைப்பதெல்லாம் சுத்த வெறும் பொய்யோடீ? சுடர் மணியே! திருவே! மெத்த மையல் கொண்டு விட்டேன் மேவிடுவாய், திருவே!
உன்னையன்றி இன்ப முண்டோ உலகமிசை வேறே? பொன்னை வடிவென் றுடையாய் புத்தமுதே, திருவே! மின்னொளி தருநன் மணிகள் மேடை யுயர்ந்த மாளிகைகள் வண்ண முடைய தாமரைப் பூ மணிக்குள முள்ள சோலைகளும் அன்னம் நறுநெய் பாலும் அதிசயமாய்த் தருவாய்! நின்னருளை வாழ்த்தி என்றும் நினைத்திருப்பேன், திருவே!
ஆடுகளும் மாடுகளும் அழகுடைய பரியும் வீடுகளும் நெடுநிலமும் விரைவினிலே தருவாய் ஈடு நினக்கோர் தெய்வமுண்டோ? எனக்குனை யன்றிச் சரணுமுண்டோ? வாடு நிலத்தைக் கண்டிரங்கா மழையினைப் போல் உள்ள முண்டோ? நாடு மணிச் செல்வ மெல்லாம் நன்கருள்வாய், திருவே! பீடுடைய வான் பொருளே பெருங்களியே திருவே! |
|
|