|
அருணகிரிநாத சுவாமிகள் அருளிய வேல் வகுப்புப் பாடலை வள்ளிமலை சுவாமிகள் வேல் மாறலாக அமைத்துள்ளார். வேல் வகுப்பு (வேல் மாறல்) வேல் வகுப்பின் அடிகளை மாறி மாறிப் பாடுதல் என்பது நோய் தீர்க்கும் மணி மந்திர ஒளடதங்களில் மந்திரம் போன்றது என வள்ளிமலை சுவாமிகள் கூறியுள்ளார். வேல் தெய்வத்தைப் பாடிப் பரவித் தியானித்துப் பெரியோர் பலர் சித்திகளைப் பெற்றுள்ளனர். சிவமஞ்செழுத்து பஞ்சாக்கரத்தின் ஆற்றலுக்குச் சமமானது. பஞ்சகிருத்திய ஆற்றலும் உடையது. வள்ளியம்மையின் விழிக்கு நிகரானது என அருணகிரிநாதர் போற்றிப் பாடுகிறார். இவ்வேல் மாறல் மனக்கோளாறு, உடற்கோளாறு மற்றும் துன்பங்கள் எல்லாவற்றையும் நீக்கவல்ல அற்புத மந்திரம். சனிக்கிழமை, அமாவாசை, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி முதலிய தினங்களில் இதனைப் பாராயணம் செய்தல் மிகவும் விசேஷமாகும். தனியே இதனைப் பாராயணம் செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட கந்தரலங்காரப் பாடல்களை முதலில் ஓதியபின்னரே, வேல் மாறலைப் பாராயணம் செய்ய ஆரம்பிக்க வேண்டுமென்பது நியமம்.
தரிசனப் பாடல்
ஓலையும் தூதரும் கண்டுதிண் டாடல் ஒழித்தெனக்குக் காலையும் மாலையும் முன்னிற்கு மேகந்த வேள் மருங்கிற் சேலையும் கட்டிய சீராவும் கையிற் சிவந்தசெச்சை மாலையும் சேவற் பதாகையும் தோகையும் வாகையுமே. - கந்தரலங்காரம்
முருகன் பெருமை - உலகுக்கு உபதேசம்
விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காஎனும் நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலும்செங் கோடன் மயூரமுமே. - கந்தரலங்காரம்
வேலின் ஆற்றல்
தேரணி யிட்டு புரம்எரித் தான்மகன் செங்கையில்வேற் கூரணி யிட்டணு வாகிச் கிரௌஞ்சங் குலைந்தரக்கர் நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்ததுசூர்ப் பேரணி கெட்டது வேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே. -கந்தரலங்காரம்
|
|
|