ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார் உறவுகல வாமை வேண்டும் பெருமைபெறும் நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை பேசாது இருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய் பிடியாது இருக்க வேண்டும் மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை மறவாது இருக்க வேண்டும் மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வில்நான் வாழ வேண்டும் தரும மிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் தளமோங்கு கந்த வேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார் யாவர்அவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெரு மான் நடம்புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன் சிந்தை மிக விழைந்த தாலோ