SS நவராத்திரி வழிபாடு - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நவராத்திரி வழிபாடு
நவராத்திரி வழிபாடு
நவராத்திரி வழிபாடு

நவராத்ரீ வ்ரதப் பூமௌ குருதே யோ நரோத்தம
தஸ்ய புண்ய பலம் வக்தும் ஸக்தா ஸா பரமேஸ்வரீ!

இந்த ஒன்பது தினங்களில் தேவி ஒவ்வொரு ஸ்வரூபத்துடன் ஆராதிக்கப்படுகிறாள்.

முதல் தினத்தில் மூன்று வயதுள்ள பாலை
இரண்டாவது தினத்தில் ஒன்பது வயதுள்ள குமாரி என்ற நவாக்ஷரீ
மூன்றாவது நாள் 15வயதுள்ள தருணியாக பஞ்சதசாக்ஷரி
நான்காவது நாள் 16வயதுள்ள சுமங்கலி ÷ஷாடசாக்ஷரீ
ஐந்தாவது நாள் சதாக்ஷி என்ற பெயருடன் மாத்ருகா வர்ண ரூபிணி
ஆறாவது நாள் சகாம்பரி என்ற பெயருடன் ஸ்ரீவித்யா பீஜாக்ஷர ரூபிணி
ஏழாவது நாள் துர்க்கமாசுரனைக் கொன்ற மஹாதுர்க்கை
எட்டாம் நாள் மஹிஷாசுரனைக் கொன்ற மஹா லக்ஷ்மி
ஒன்பதாம் நாள் சும்பன் நிசும்பனை சம்ஹரித்த மஹா சரஸ்வதி
பத்தாவது நாள் சிவசக்தி ஐக்ய ஸ்வரூபிணி

ஆகவே தேவியை வழிபட நவராத்ரி மிகவும் விசேஷமானது.

ஒவ்வொரு ருது ஆரம்பத்திலும் ஒரு நவராத்திரியாக ஆறு நவராத்திரிகள் உண்டு. இவைகளில் வசந்த நவராத்திரியும் (ராம நவராத்திரியின் போது வருவது) சாரதா நவராத்திரியும் முக்கியமானவை. வாராகிக்கும் சியாமளாவுக்கும் நவராத்திரிகள் உண்டு. ராத்திரி என்ற பெயருடன் விளங்குபவை நவராத்திரியும் சிவராத்திரியுமே சிவராத்திரி சிவனைப் பற்றியது: நவராத்திரி சக்தியைப் பற்றியது. கிருஷ்ணாஷ்டமி ஸ்ரீராம நவமி, விநாயக சதுர்த்தி என்ற பல விரதங்களைக் கொண்டாடுகிறோம். கிருஷ்ணன் இரவில் தான் பிறந்தார். இருந்தும் கிருஷ்ண ராத்திரி என்று சொல்வதில்லை.

சிவனும் சிவையும்: இரவு போல ஜீவராசிகளுக்கு மனநிம்மதி ஓய்வு தருவது வேறு எதுவும் இல்லை. பகல் எல்லாம் அலைந்து திரிந்து களைத்து வரும் மகனை அன்னை அருகிலே அமர்த்தி உறங்க வைப்பாள். மறுநாள் அவன் சுறுசுறுப்பாகத் தன் வேலையை கவனிக்க முடிகிறது. இரவில் ஐம்புலன்களும் மனதில் ஒடுங்க, மனம் ஜீவனிடம் ஒடுங்க, ஜீவன் நம் உடம்பில் தூங்காமல் உண்ணாமல் ஸ்வயம் பிரகாசமாகவுள்ள ஸ்வரூபத்தையடைகிறது. தான் என்பதை சிவா ஸ்வரூபம். இதில் லயிக்காமல் சஞ்சரிப்பவனே நிசாசரன். உடல் நன்மைக்கு தூக்கம் அவசியம். உறக்கத்திற்கு இயற்கை உரம் அளிப்பவர்கள் சிவனும் சிவையும் அம்பிக்கைக்கு சிவை என்று பெயர் உண்டு. மங்களத்தைத் தருபவள் என்று அர்த்தம். ஆகையால் இவர்களை நாடிச் செய்யும் விரதத்தை ராத்திரி என்கிறோம். ஒன்பது ராத்திரிகள் என்ன கணக்கு? எண்ணிக்கையில் ஒன்பது தேவியின் ரூபமே, நவாக்ஷரி என்ற ஒன்பது அக்ஷரங்கள் கொண்டது சண்டிகா தேவியின் மூலமந்திரம். புரட்டாசி மாதம் சுக்ல பட்சத்து முதல் நாள் ஹஸ்த நக்ஷத்திரம் கூடும். அந்த நாள் தேவி பூஜைக்கு உகந்த நாள். நவராத்திரி முதல் மூன்று நாள் துர்க்கையினுடையது. பின் மூன்று நாள் லக்ஷ்மியும் கடைசி மூன்று நாள் சரஸ்வதியும் வழிபடப்படுகிறார்கள். நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் தேவியை வழிபட முடியாவிட்டாலும் அஷ்டமியன்று பத்ரகாளி தோன்றிய எட்டாவது நாள் விசேஷ பூஜை செய்தாலே போதுமானது. தேவி பாகவதத்தில் ராம சரிதமும் அடங்கியிருக்கிறது. ராமபிரான் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்த பின்பே இழந்த சீதையையும் ராஜ்யத்தையும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்தார். இதே நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்தே சிவபெருமான் திரிபுர தகனம் செய்தார். மது கைடபர்களை பராசக்தியின் அருளால்தான் மகாவிஷ்ணு கொன்று ஒழித்தார். விருத்திராசூரனை ஒழிக்க இந்திரனும் தேவி வழிபாடாகிய நவராத்திரி நோன்பையே அனுஷ்டித்தான்.

முதல் நாள் மதுகைடபர் அழிவுக்கு காரணமான தேவியை குமாரி வடிவமாக வழிபடவேண்டும். இரண்டாம் நாள் மகிஷாசுரனின் சேனைகளை வதம் செய்ய புறப்பட்ட ராஜராஜேஸ்வரியாக துர்க்கையின் வடிவத்தை அலங்கரித்துப் பூஜிக்க வேண்டும். மூன்றாம் நாள் மகிஷாசுரனை வதைத்த அம்பிகையை சூலத்துடன் மகிஷன் தலை மீது நிற்கும் கோலத்தில் வழிபட வேண்டும். நான்காம் நாள் அம்பிகையின் வெற்றித் திருக்கோலம். ஐந்தாம் நாள் அம்பிகை, சும்பன் என்ற அசுரனின் தூதன் வந்து பேசுவதை கேட்கும் கோலத்தில் பூஜிக்க வேண்டும். ஆறாம் நாள் அன்று சர்ப்ப ராஜா ஆசனத்தில் ஸ்ரீ சண்டிகாதேவி அமர்ந்திருக்கும் கோலம் பூஜைக்குரியதாயிற்று. ஏழாம் நாளில் சண்டமுண்டர்களை வதைத்த பின் பொன்பீடத்தில் அம்பிகை அமர்ந்து வீணை வாசிக்கும் கோலம். எட்டாம் நாளில் ரக்த பீஜன் வதமான பின் கருணை நிறைந்த தோற்றத்துடன் உள்ள அம்பிகையை பூஜிக்க வேண்டும். ஒன்பதாம் நாளில் வில், அம்பு, அங்குசம், சூலம் முதலியவைகளை தரித்த கோலத்தில் அம்பிகையை பூஜிக்க வேண்டும். பத்தாம் நாளன்று அம்பிகை லிங்கத்தைப் பூஜித்து சிவசக்தி ஐக்யரூபிணியாக விளங்குகிறாள். ஒவ்வொரு நாளும் 2வயதுப் பெண் குழந்தை முதல் முறையே பத்து வயது பெண் வரை ஒவ்வொன்றாகவோ அல்லது முதல் நாள் ஒன்று இரண்டாம் நாள் இரண்டு என்ற முறையாகவோ குமாரி பூஜை செய்ய வேண்டும்.

நாள்- வயது- பெயர்- பயன்
1     2  குமாரி தரித்திரி நாசம்
2     3  திரிமூர்த்தி தனதான்ய வளம்
3     4  கல்யாணி பகை ஒழித்தல்
4     5  ரோகினி கல்வி வளர்ச்சி
5     6  காளிகா துன்பம் நீங்குதல்
6     7  சண்டிகா செல்வ வளர்ச்சி
7     8  ஸாம்பவி ÷க்ஷம விருத்தி
8     9  துர்க்கா பயம் நீங்குதல்
9    10  ஸுபத்ரா ஸர்வமங்களம் உண்டாகுதல்

இந்த முறையில் பூஜை செய்ய வேண்டும்.

நவராத்திரி ஒன்பது நாட்களும் ஸ்ரீஅம்பிகையின் ஸன்னதியில் அரிசிமா, கோதுமைமா, முத்து, அட்சதை, கடலை, பருப்பு, மலர், காசு, கற்பூரம் ஆகிய ஒன்பது பொருட்களை வைக்க வேண்டும். பொட்டு, கட்டம், மலர், படிக்கட்டு, பறவையினம், தேவிநாமம், திட்டாணி, பத்மம், ஆயுதம் ஆகிய கோலங்களைப் போட வேண்டும். நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் சுமங்கலிக்கும் கன்னிப் பெண்களுக்கும் நீராடுவதக்காக. பச்சிலை, பூலாங்கிழங்கு சண்பகமொட்டு கஸ்தூரிமஞ்சள் திரவியப் பட்டை காசுக்கட்டி லாக்ஷõரம் கஸ்தூரிகாபத்ரம், கோரோசனம். எண்ணெய், மஞ்சள், குங்குமம், பன்னீர், சந்தனம், வாசனைத் தைலம், நலங்கு, மஞ்சள், மருதோன்றி, புஷ்பநீர் ஆகியவைகளை அளிக்க வேண்டும். நவராத்திரி நாட்களில் பெண்கள் எல்லோரையும் தேவியாகவே பாவித்து பாலா, குமாரி: கன்யா, வதூ, பிரௌடா, முத்து, ஸுமங்கலீ, தருணீ, மாதா என்றே பெயரிட்டு அழைத்து ப்ரார்த்திக்க வேண்டும். சக்தியுள்ளவர்கள் பல பெண்களை வீட்டுக்கு அழைத்து பொன், வெள்ளி, முத்து, பவளம், வைடூரியம், கோமேதகம், புஷ்பராகம், மரகதம். வைரம் என்னும் நவரத்தினங்களைக் கொடுக்கலாம். சக்தியில்லாதவர்கள் அவ்வாறு அழைக்கப்பட்ட பெண்களுக்கு சோழி, குன்றிமணி, தட்டைபவளம், கிளிஞ்சல், செப்பு, பதுமை, அம்மானை, பந்து சுழற்சிக்காய் ஆகிய விளையாட்டுப் பொருட்களை அளிக்கலாம்.

ஒவ்வொரு நாளும் வீடுதேடி வரும் குமரிகளுக்கும் சுமங்கலிகளுக்கும் தன் கையால் புனுகு, ஜவ்வாது கஸ்தூரி, அரகஜா, சந்தனம் குங்குமம் சாந்து, ஸ்ரீசூர்ணம் மை ஆகியவற்றை இடலாம். ஜகதன்னையின் ப்ரீதிக்காக காலை மாலை வேளைகளில் இசைப் பாடல்களைப் பாடலாம். அவை ஸ்ரீதேவி சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பாடல்களை தோடி, கல்யாணி, காம்போதி, பைரவி, பந்துவராளி, நீலாம்பரி, பிலஹரி, புன்னாகவராளி, வஸந்தா என்னும் ஒன்பது ராகங்களில் பாடலாம். மிருதங்கம், புல்லாங்குழல், வீணை, கோட்டு வாத்தியம், ஜல்லரி பேரி, படகம், கும்மி, கோலாட்டம் என்னும் வாத்தியப் பின்னணியுடன் ஸ்ரீதேவியின் பெருமையை ஆடிக்காட்டலாம். நவராத்திரி நாட்களில் ஸ்ரீ அம்பிக்கைக்கு அடியிற் காணும் மலர்களால் மாலைகளில் அணிவிக்கலாம். சுத்தமான தழைகளைக் கட்டு மாலையாகவும் சாத்தலாம். மல்லிகை, முல்லை, சம்பங்கி, ஜாதி, பாரிஜாதம், செம்பருத்தி, தாழம்பூ, ரோஜா, தாமரை ஆகிய மலர்களையும் வில்வம், துளசி, மரு, கதிர்பச்சை, விபூதிப்பச்சை, சந்தன இலை, தும்பை இலை, பன்னீர் இலை, மருக்கொழுந்து மாலைகளையும் சாத்தலாம். ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி தேவிக்கு ஒப்பான பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வாழை, மா, பலா, கொய்யா, மாதுளை, நாரத்தை, பேரீட்சை, திராட்சை, நாவல் பழங்களை அளிக்கலாம்.

பாலா என்ற பருவச் சிறுமியை அன்னையின் வளர்ப்புப் புதல்வி என்று பெரியோர்கள் கூறுவர். அத்தகைய சிறுமியின் மகிழ்ச்சிக்காக தினமும் சுண்டல் வறுவல் துவையில் பொறியல் அப்பளம் வடகம் சூரணம் முறுக்கு திரட்டுப்பால் ஆகிய பக்ஷணங்களை விநியோகம் செய்யலாம். ஒவ்வொரு நாளும் வெண்பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், கதம்பம், தத்தியோதனம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், பாயஸான்னம், அக்காரவடிசில் என்னும் பிரஸாதங்களை அம்பிகைக்கு நிவேதனம் செய்யநாள். கடைசிநாள் கடை பூஜைக்கு அம்பிக்கைக்கு சுத்தான்னம், இலைவடகம், வெண்ணை சுக்கு, வெந்நீர் ஆகியவைகளை நிவேதனம் செய்வது சம்பிரதாயம். நீலாயதாக்ஷி, காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி, ஜலஜாக்ஷி இந்திராக்ஷி, பத்மாக்ஷி, வனஜாக்ஷி, பங்கஜாக்ஷி என்னும் பெயர்களால் தியானிக்க வேண்டும். இப்படியாக நவராத்திரி ஒன்பது நாட்களிலும் நவமங்கள பாராயணம் செய்து ஒன்பது முறை அன்னையை நமஸ்கரிக்க வேண்டும். இனிப்புப் பக்ஷணம் ஒன்பது, அன்னையின் தாகம் தீர்க்கும். தீர்த்தம் ஒன்பது உபசாரப் பொருள் ஒன்பது. அன்னையின் பூஜாவின் பாகம் ஒன்பது என்று நவ நவமான முறைப்படி நவராத்திரி விழாவைக் கொண்டாடினால் ஸர்வ மங்களங்களையும் அடையலாம்.

நாடெங்கும் நவராத்திரி: காளி பூஜைக்கும் சக்தி உபாசனைக்கும் பிரசித்தி பெற்ற வங்காளத்தில் இந்த நவராத்திரியை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று பார்ப்போம். மழைக்காலத்தில் காரிருளும் அடைமழையும் மாறிச் சரத்காலம் பிறக்கிறது. மேகங்கள் அற்ற நீலவானத்தில் சந்திரன் மிதந்து வரும் காலம். தேவி பார்வதியின் கணவரின் வீடாகிய கைலாசத்திலிருந்து பிறந்தகம் வருகிறாள். ஹிமவானும் அவர் மனைவி மேனையும் செல்வப் புதல்வியைப் அன்போடும் ஆதரவோடும் சௌபாக்கியங்களை எல்லாம் அவள் மேல் அள்ளி வீசுகிறாள். இதையொட்டி எல்லாப் பெண்களும் வங்காளத்தில் நவராத்திரிக்குப் பிறந்தகம் வருவார்கள். பேரன், பேத்தி எடுத்த 50, 60 வயதுள்ள முதியோர்கள் கூட குதூகலமாக தங்கள் பிறந்தகம் வருவார்கள். வரமுடியாத பெண்களுக்கு அவர் தாய்வீட்டார் நவராத்திரி ஒன்பது நாளும் தினம் புதுப்புடவையும், ஏராளமான சங்கு வலையல்களும் மிட்டாய்களும் பூஜைக்கு வேண்டிய சாமான்களும் அனுப்பி வைப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் மாளிகை குடிசை பணக்காரன் ஏழை என்ற வேற்றுமையின்றி ஜகன்மாதா எழுந்தருள்வாள். சண்டி, காளி, தேவி, ஹைமவதி என்று அம்பிகையைக் கொண்டாடி நிவேதனம் சமர்ப்பிப்பார்கள். வீட்டின் மூலை முடுக்குகளில் ஒட்டடை, குப்பைகள் எல்லாம் ஒழியும். அதோடு அவரவர் மனத்திலும் அழுக்கு, மாசு, அசூயை குரோதம் எல்லாம் நீங்கும் என்று நம்புகிறார்கள். எல்லோரும் தேவியின் குழந்தைகள்: பரந்த மனத்துடன் தேவியைத் துதித்தால் அவள் நமக்கு ஒளியையும் சக்தியையும், செல்வத்தையும், தருவாள் என்று அனைவரும் துர்க்கையை வணங்குகிறார்கள். துர்க்கா பூஜா என்ற பெயரிட்டு இந்த பத்து நாட்களும் வீதிதோறும் முச்சந்திகள் நாற்சந்திகள் தோறும் அழகிய பந்தல் அமைத்து ஸிம்ஹவாஹினியான அம்பிகையைப் போருக்கு ஆயத்தமான வேகத்துடன் வடித்து அலங்கரித்து உற்சவம் கொண்டாடுவார்கள் வங்காளிகள்.

நலம் தரும் நவராத்ரி: உலகமனைத்தும் சக்திமயம் என்ற தத்துவத்தை விளக்க வந்ததே நவராத்திரி விழாவின் சிறப்பாகும். இதைச் சிறப்பிக்கவே இமயம் முதல் குமாரி வரையில் அன்னை கொலுவீற்றிருக்கும் காட்சி நவராத்திரியில் வீடுதோறும் காணப்படுகின்றது. தேவியானவள் உலகில் உள்ள உருவம் அனைத்திலும் உலவுகிறாள் என்பதை அறிந்து எல்லா உருவங்களிலும் அவளைப் பூஜிப்பதற்காகவே கொலு வைக்கப்படுகிறது.

யா தேவீ ஸர்வபூதேஷு மாத்ருரூபேண ஸம்ஸ்திதா!
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

என்ற தேவீ மஹா த்ம்ய சுலோகம் இதைத் தெளிவுபடுத்துகிறது. மஹாளய பக்ஷம் பதினைந்து நாட்களும் பித்ரு பூஜைக்கு முக்கியமானதாகும். இந்தக் காலத்தில் நமது வம்சபித்ருக்களும் காருணிகபித்ருக்களும் பரம திருப்தி அடைந்து ஆசி கூறுகிறார்கள். இதைத் தொடர்ந்து வரும் சுக்ல பக்ஷம் தேவதைகளின் பூஜைக்கு உரியதாகும். எல்லா தேவதைகளுக்கும் பராசக்தியிடம் அடங்குவதால் பராசக்தியைப் பூஜித்தால் எல்லா தெய்வங்களையும் பூஜித்ததாக ஆகிறது. ப்ரும்ம ஸ்வரூபியான பராசக்தி உலக நன்மைக்கு ஐந்து தடவை அவதரித்திருக்கிறாள். வயலில் இருக்கும் பயிரைக் காக்க களைகளைப் பிடுங்குவது குடியானவனின் கடமையாகும். அதே போல் மக்களுக்கு அல்லல் உண்டு பண்ணும் கொடியவர்களைக் களைதல் அன்னையின் கடமையாகும். திருப்பாற்கடலில் ஆலிலைமேல் ஸ்ரீ மஹாவிஷ்ணு சயனித்திருக்கும் போது அவரது நாபீ கமலத்திலிருந்து தோன்றிய ப்ரும்மா ஒன்றும் தோன்றாமல் மயங்கி நிற்க தேவீ பிரசன்னமாகி அவருக்குத் தெளிவையும் சிருஷ்டிக்கும் வல்லமையும் அளித்து விஷ்ணுவின் யோக நித்திரையைக் கலைத்து மது கைடபர்களைக் கொல்லும் உபாயமும், சக்தியும் கொடுத்து மறைந்தாள் அன்னை சக்தி. இது முதல் அவதாரம். மோஹினியாகத் தோன்றியது இரண்டாவது அவதாரம். தாக்ஷõயணியாகத் தோன்றியது மூன்றாவது அவதாரம். பார்வதியாக தோன்றியது நான்காவது அவதாரம். ஈசன் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனைச் சாம்பலாக்கின உடன் விச்வகர்மா அச் சாம்பலைப் பிசைந்து உருவாய் அமைக்க ஈசனின் கிருபா நோக்கினால் அவ்வுரு உயிர் பெற்றது. ருத்ர கோபாக்கினி பஸ்மத்தால் உண்டானதால் ஓர் அசுரனாகி பண்டாஸுரன் எனப் பெயர் பெற்றது. பண்டாஸுரனால் துன்பமடைந்த தேவர்கள் ஸ்ரீ வித்யா என்ற மந்திரத்தால் அம்பாளைப் பிரார்த்தித்து ஹோமம் செய்ய ஹோம குண்டலத்தின் மத்தியில் ஸ்ரீ சக்ரம் என்ற ரதத்தில் அம்பிகை பிரத்யக்ஷமாகி லலிதாம்பாள் என்ற நாமத்துடன் அநேக சக்திகளையும் உண்டுடண்ணி பண்டாஸுரனை ஸ்ம்ஹாரம் பண்ணி சிந்தாமணி கிருகத்தில் காமேச்வரருடன் சௌபாக்யவதியாய் இருந்தாள். இது தேவியின் ஐந்தாவது அவதாரம், இந்த அவதார மஹிமையை பற்றித்தான் லலிதா பாக்யானம், தேவீ மஹாத்மயம் கூறுகின்றது.

வழிபாட்டால் நன்மையடைந்தவர்கள்: நவராத்திரி விரத மஹிமையால் சிவன் முப்புரம் எரித்தார். இராமன் சீதையையும், இழந்த ராஜ்யத்தையும் பெற்றார். பராசக்தியின் அருளால் திருமால் மதுகைடபர்களைக் கொன்று அழித்தார். விருத்ராசுரனைக் கொல்ல இந்திரனும் நவராத்திரி பூஜையைக் கைக்கொண்டான். ஆதி சங்கரரும் சக்தியின்றி ஓர் அணுவும் அசையாது என்ற கருத்தடங்கிய ஸெளந்தர்யலஹரியில் முதல் சுலோகத்தில் அம்பாளின் மஹாத்ம்யத்தை விளக்கியுள்ளார். ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர் முதலியோர் பராசக்தி வழிபாட்டால் அன்னையின் அருள் பெற்று உலகுக்கு நன்மை விளைவித்தனர். நாமும் நவராத்திரியில் அன்னையை வழிபடுவோம். நவராத்திரியில் ஸ்ரீ சக்கரத்தை கல்பப்படி, பூஜை செய்து அஷ்டோத்திரம் த்ரிசதீ ஸஹஸ்ர நாமம் முதலிய அர்ச்சனைகள் செய்து தேவீ மஹாத்மியத்தைப் பாராயனம் செய்து ஸுவாஸிநிகளும் ப்ராமணர்களுக்கும் போஜனம் அளிக்கவும் இது இகபர சுகத்தை அளிக்கும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar