யம பயம் அற
தண்டமும் கயிறும் சூலமும் புகைந்த
தழல்உமிழ் கண்களும் வளைந்த
தந்தமும் சிவந்த குஞ்சியும் கரிய
சயிலமே அனையமே னியுமாய்
அண்டிய சமனைக் கண்டுள(ம்) மயங்கி
அறி(வு)அழிந்(து) இருவிழி களும்பஞ்(சு)
அடைந்துவாய் புலர்ந்து மெய்மந்து திடும்போ(து)
அம்பிகை தன்னுடன் வருவாய்!
வண்டுகள் முரன்று முகைகுறுக்(கு) உடைந்து
மதுமழை பொழிந்துதா(து) அளைந்து
மடல்விரிந்(து) அலர்ந்து பொன்நிறம் பொதிந்த
மன்றல்அம் கொன்றைவார் சடையாய்!
கண்டவர் உளமும் கண்ணுமே கவரும்
கநதந வநிதையர் நெருங்கும்
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
காலனைக் காய்ந்ததற் பரனே!
சம்சார துக்கம் அற
தந்தையை மனையை ஒக்கலைத் துணையைத்
தாயைமென் குதலைவாய்ச் சேயைத்
தனத்தையௌ வநத்தை இன்போ கனத்தைத்
தையல்நல் லார்பெருந் தனத்தை
அந்தியும் பகலும் விரும்பிமெய் சோம்பி
ஆழ்கடற் படுதுரும்(பு) ஆகி
அலக்கழிந் தேனைப் புலப்படத் திருத்தி
ஆட்கொள நினைத்திலாய்! அன்றோ?
சிந்தைநைந் துருக இன்னிசை படித்துச்
சிலம்(பு)ஒலி ஆரவே நடித்துச்
செழும்புனல் சடைமேல் கரந்தையை முடித்துத்
திருவெணீ(று) உடல்எலாம் வடித்துக்
கந்தைக்கோ வணம்தோல் பொக்கணம் தாங்கிக்
கபாலம்ஒன்(று) ஏந்திநின் றவனே!
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
காலனைக் காய்ந்ததற் பரனே!