மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி. அவரின் தோற்றம் பற்றிக் கூறுவது இதுவரை கேள்விப்பட்டிராத தகவலாக இருக்கக்கூடும்!
வால்மீகி, தர்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது, ராமாயணத் தகவல், தர்ப்பையில் பிறந்த கருப்பசாமி குறித்த பாடல் வரி, இதற்குச் சான்று பகரும். ஸ்ரீவீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழந்தை கருப்பசாமி என்றும் சொல்வார்கள். கருப்பன், கருப்பசாமி எனும் பெயர் கொண்ட மனிதர்களின் தலை வெட்டப்பட்ட புதைக்கப்பட்ட இடத்தில். கருப்பசாமி கோயில் ஏற்பட்டது என்றொரு ஆய்வுத் தகவலும் உண்டு. நின்ற கோலம், அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி புறப்படும் கோலம்.... இப்படி பல்வேறு நிலைகளில் பல கோயில்களில் காட்சி தருகிறார் கருப்பசாமி. கம்பீர உருவம் தலைப்பாகை, இடையில் கச்சை, மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை மற்றும் கையில் அரிவாளுடன் கோயில்கொண்டிருப்பார். பெரும்பாலும் கையில் சுக்குமாந்தடியுடன் அவர் அருள்வதை தரிசிக்கலாம். கருப்பசாமியின் மனைவி கருப்பழகி(கருப்பாயி); மகன்- கண்டன்; அண்ணன்-முத்தண்ண கருப்பசாமி; தம்பி- இளைய கருப்பு; தங்கை-ராக்காயி.
ஐயன் ஐயப்பனும் கருப்பரும்
ஸ்ரீஐயப்பனுக்கும் கருப்பசாமிக்குமான தொடர்பை, ராங்கியம் கருப்பர் திருத்தாண்டகத் தின் முதல் பாடல் சொல்கிறது.
மலையாளத் துரையானை என்னுள்ளத்தில்
வந்தானைக் கண்டடியேன் வணங்கி வேண்டினேனே!
என்கிறது அந்தப் பாடல் வரி.
கத்தப்பட்டு அருள்மிகு சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் தொட்டியத்து கருப்பையா போற்றிப் பாடலின் இரு வரிகள்....
மலையாள நாட்டில் மலர்ந்தாய் போற்றி
மக்கள் போற்றிடும் மன்னவா போற்றி.. எனப் போற்றுகின்றன!
பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் மெய்சிலிர்த்துப் பாடும் பாடல்களிலும் கருப்பசாமி வருவார்!
பிறந்தாய் மலையாளம் கருப்பன் பேருகொண்டாய் கீழ்நாடு
வளர்ந்தாய் மலையாளம் கருப்பன் வந்துதித்தாய் கீழ்நாடு
எனத் துவங்கி கருப்பரைப் போற்றுகிறது, மொட்டையக்கோனார் என்பவர் எழுதிய... பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு பாடல்!
ஸ்ரீதச மகாவித்யா எனும் நூலாசிரியர் திருவெண்காடு ஏ.கே.முத்துசாமி சாஸ்திரிகள். மகா காளன் என்ற கருப்பண்ண சுவாமி, பூதநாதனாகிய மகா சாஸ்தாவின் அன்புக்குரிய கணநாதன். சாஸ்தாவின் ஆணையை சிரமேற்கொண்டு, அவரது எண்ணங்களைப் பூர்த்தி செய்பவர் என்கிறார்.
பதினெட்டாம்படி கருப்பர்
சபரிமலை ஐயனுக்குத் துணையாகத் திகழ்கிறார் கருப்பசாமி என்ற தகவல் புõரணங்களில் உண்டு. சுவாமி ஐயப்பன், மகிஷியை வதம் செய்யப் புறப்பட்ட போது சிவபெருமான் தனது அம்சமாகிய கருப்பசாமியை அழைத்து ஐயப்பன் சிறு வயதினன். அவனது படைக்கு நீ சேனாதிபதியாக இருந்து, அவன் வெற்றிபெற உதவி செய் எனக் கட்டளை இட்டாராம். அவ்வாறே ஐயன் ஐயப்பனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கருப்பசாமி, சபரிமலையில் 18 ஆம் படியின் அருகே வலப்புறத்தில், பதினெட்டாம்படி கருப்பராக சன்னதி கொண்டிருக்கிறார், முந்திரி நைவேத்தியமும் கற்பூர வழிபாடும் இவருக்கு விசேஷம் ஐயனைத் தரிசிக்கச் செல்பவர்கள் கன்னிமூல கணபதியை வழிபட்டு, வாவர் மற்றும் கருப்பசாமியிடம் அனுமதி பெற்றுவிட்டே, 18 ஆம் படிகளில் ஏறுவார்கள். சரி சாஸ்தாவின் சித்தத்தை ஆணையை நிறைவேற்றும் இவரை சித்தங்காத்தான், பீடாபஹன் என்றெல்லாம் போற்றுவர்.
காவல் தெய்வம் கருப்பண்ண சாமி!
கண்கண்ட தெய்வமாம் கருப்பர் பூஜைக்குச் சுத்தமான நபர்களையே அனுமதிக்க வேண்டும். பூஜையில் அமர்ந்ததும் திருவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பிறகு சங்கல்பம்; நாள் நட்சத்திரம், திதி, யோகம், பெயர், கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி வணங்குவதுடன், எந்தக் காரியத்துக்காக பூஜை செய்கிறோமோ, அதைச் சிந்தித்துப் பூஜையைத் தொடங்க வேண்டும், முன்னதாக சற்குருவை நமஸ்கரிப்பது அவசியம். கருப்பசாமி தெய்வத்தை புஷ்பங்களால் அர்ச்சிக்கலாம், ஓம் நமோ பகவதே ஸ்ரீஏகமுக கருப்பசாமியே நமஹ எனக் கூறி வழிபடலாம் நிறைவாக நைவேத்திய சமர்ப்பணம்.
இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும் ஸ்ரீமந் நாராயணனும் சிவபெருமானும் பரம்பொருள். சுத்த தெய்வம். சம்ஹார ஆகாரங்கள் வைத்து பூஜிக்கவே கூடாது. மது-மாமிசம் அனைத்தும் காமியார்த்தத்தில் உள்ளவை. துன்பம் கொடுப்பவை. உதாரணமாக ஓர் ஆட்டையோ, மாட்டையோ, கோழியையோ வெட்டினால் அந்த உடலிலிருந்து உயிர் பிரிகிறது. எந்த அளவுக்கு துன்பப்பட்டு அந்த ஜீவன் பிரிகிறதோ, அதைப் போன்று இரண்டு அல்லது மூன்று மடங்கு துன்பம் கொலை செய்தவனுக்கு வந்து சேரும். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. கருப்பணசாமிக்கு உகந்த படையல் பொருட்கள்-சர்க்கரைப் பொங்கல், அவல், பொரிகடலை, மாம்பழம், வாழை, பலா, கொய்யாப் பழம் மற்றும் இளநீர் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம். கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தைக் கூறி கருப்பசாமியை மனதார தரிசிக்கலாம்.
தியான ஸ்லோகம்
த்விபுஜம் பீன க்ருஷ்ணாங்கம் பப்ருச்மச்ரு சிரோருஹம்
கதாம் கட்கம்ச பிப்ராணம் மஹாகாலம் வயம் நும: