சத்தியவான், சாவித்திரி கதை அனைவருக்கும் தெரிந்ததே. தனது கணவர் சத்தியவானின் உயிரை யமனிடம் இருந்து மீட்பதற்காக சாவித்திரி சில கேள்விகளை அவரிடம் கேட்டார். யம தர்மராஜர் சாவித்திரியின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், பராசக்தியின் மகிமையைப் பற்றிக் கூறினார். அதைக் கேட்டுப் பரவசமான சாவித்திரி, குருவான தர்மராஜரைத் துதித்தாள்.
1. தபஸா தர்மமாராத்ய புஷ்கரே பாஸ்கர: புரா
தர்மம் ஸூர்ய ஸுதம் தர்மராஜம் நமாம்யஹம்
பொருள் : முன்பு ஒரு சமயம் புஷ்கர ÷க்ஷத்திரத்தில் சூரிய பகவான் தவத்தால் தர்மதேவதையை ஆராதித்து, தர்மன் என்ற மகனை அடைந்தார். அந்த தர்மராஜரை நமஸ்கரிக்கிறேன்.
2. ஸமதா ஸர்வபூதேஷு யஸ்ய ஸர்வஸ்ய ஸாக்ஷிண:
அதோ யந்நாம ஸமனம் இதி தம் ப்ரணமாம்யஹம்
பொருள் : எல்லாப் பிராணிகளின் இதயத்திலும் ஸாக்ஷியாக இருந்தபடி, பிராணிகளைச் சமமாக நினைப்பதால் சமனன் என்ற பெயருடைய யமராஜரை நமஸ்கரிக்கிறேன்.
3. யேனாந்தச்ச க்ருதோ விச்வே ஸர்வேஷாம் ஜீவினாம் பரம்
காமானுரூபம் காலேன தம் க்ருதாந்தம் நமாம்யஹம்
பொருள் : உலகிலுள்ள எல்லாப் பிராணிகளுக்கும் அவரவர்களுக்குரிய காலத்தை முடிவு செய்வதால் கிருதாந்தன் என்று பெயர் பெற்ற அவரை நமஸ்கரிக்கிறேன்.
4. பிபர்த்தி தண்டம் தண்டாய பாபிநாம் சுத்தி ஹேத வே
நமாமி தம் தண்டதரம் யச்சாஸ்தா ஸர்வஜீவினாம்
பொருள் : மனிதர்களுக்கு (சாஸ்தாவாக) யஜமானனாக இருந்து கொண்டு பாவம் செய்பவர்களுக்குப் பாவத்திலிருந்து விலகுவதற்காகத் தண்டனையைத் தருவதால் தண்டதரன் என்று பெயர் பெற்ற அவரை நமஸ்கரிக்கிறேன்.
5. விச்வம் ச கலயத்யேவ ய: ஸர்வேஷு ச ஸந்ததம்
அதீவ துர்நிவார்யம் சதம் காலம் ப்ரணமாம்யஹம்
பொருள் : காலரூபியாக இருந்து கொண்டு பிராணிகளின் காலத்தைக் கழிக்கின்றவரும், எவராலும் ஏமாற்ற முடியாதவருமான காலன் என்பவரை நமஸ்கரிக்கிறேன்.
6. தபஸ்வீ ப்ரஹ்மநிஷ்டோ ய: ஸம்யமீ ஸந் ஜிதேந்த்ரிய:
ஜீவானாம் கர்மபலத : தம் யமம் ப்ரணமாம்யஹம்
பொருள் : சிறந்த தபஸ்வி, பிரம்மநிஷ்டர், இந்திரிய, மன அடக்கமுள்ளவர், ஜீவர்களின் வினைக்குத் தகுந்த பயனை அளிப்பவர் ஆகிய குணங்களுள்ள யம ராஜரை நமஸ்கரிக்கிறேன்.
7. ஸ்வாத்மாராமச்ச ஸர்வக்ஞோ மித்ரம் புண்யக்ருதாம் பவேத்
பாபிநாம் க்லேசதோ நித்யம் புண்யமித்ரம் நமாம்யஹம்
பொருள் : ஆத்மாவில் ரமிப்பவரும், எல்லாம் அறிந்தவரும் புண்ணியம் செய்பவர்களுக்கு நண்பரும், பாவிகளுக்குத் துன்பம் அளிப்பவருமான புண்ணியமித்ரன் என்ற பெயருள்ளவரை வணங்குகிறேன்.
8. யஜ்ஜன்ம ப்ரஹ்மணோம்சேன ஜ்வலந்தம் ப்ரம்மதேஜஸா
யோ த்யாயதி பரம் ப்ரஹ்ம தமீசம் ப்ரணமாம்யஹம்
பொருள் : பிரம்மாவின் அம்சமாக அவதரித்தவரும் பிரம்மதேஜஸால் ஒளிர்பவரும், பரப்பிரம்ம ஸ்வரூபத்தை உபதேசிப்பவருமான ஈசன் என்பவரை நமஸ்கரிக்கிறேன்.
9. யமாஷ்டகமிதம் நித்யம் ப்ராதருத்தாய ய: படேத்
யமாத் தஸ்ய பயம் நாஸ்தி ஸர்வ பாபாத் விமுச்ய தே
பொருள் : (சாவித்திரி துதித்த) இந்த யமாஷ்டகத்தைத் தினமும் காலையில் படிப்பவர்கள் யமபயத்தை அடைய மாட்டார்கள். எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.