SS திருவருட்பா(பாராயணத் திரட்டு) - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> திருவருட்பா(பாராயணத் திரட்டு)
திருவருட்பா(பாராயணத் திரட்டு)
திருவருட்பா(பாராயணத் திரட்டு)

1. மகாதேவ மாலை (முதல் திருமுறை- பாடல் 112)

கருணை நிறைந்து அகம்புறமும் துளும்பி
வழிந்து உயிர்க்கெல்லாம் களைகணாகித்
தெருள் நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற
கண்ணுடையோய் சிதையா ஞானப்
பொருள் நிறைந்த மறையமுதம் பொழிகின்ற
மலர்வாயோய்! பொய்யனேன்தன்
மருள் நிறைந்த மனக்கருங்கற் பாறையும் உட்
கசிந்து உருக்கும் வடிவத் தோயே.

2. மகாதேவ மாலை (முதல் திருமுறை- பாடல் 160)

பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்
புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்க நிழல் பரப்பிமயல் சோடை யெல்லாம்
தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே எல்லாம்
செய்ய வல்ல கடவுளே தேவ தேவே.

3. நம்ச்சிவாய சங்கீர்த்தன லகிரி (இரண்டாவது திருமுறை- பாடல் 750)

பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல் மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிரும் தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மற வேனே.

4. கணசேத் திரு அருள்மாலை (ஐந்தாவது திருமுறை- பாடல் 2416)

திருவும் கல்வியும் சீரும்சிறப்பும் உன்
திருவ டிப்புகழ் பாடுந்தி றமும் நல்
உருவும் சீலமும் ஊக்கமும் துள்ளத்து அமர்ந்தவா
குருவும் தெய்வமும் ஆதி அன் பாளர்தம்
குறை தவிர்க்கும் குணப்பெருங் குன்றமே
வெருவும் சிந்தைவி லகக்க ஜானனம்
விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.

5. தெய்வமணி மாலை (ஐந்தாவது திருமுறை-பாடல் 2938)

ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மத மானபேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்வளர்
தலம் ஓங்கு கந்தவேளை
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

6. பரசிவ வணக்கம் (ஆறாம் திருமுறை-பாடல் 2)

திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளக்கு திருத்தில்லைத் திருச்சிற்றம்பலத்தே
திருக்கூத்து விளங்க ஒளிசிறந்த திருவிளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்க அருள் உதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்து ஒருபால் விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்த சிவக் கொழுந்தே.

7. பரசிவ வணக்கம் (ஆறாந் திருமுறை பாடல்-3)

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படும்பரம்பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தயே ரொளியே
அன்புருவாம் பரசிவமே!

8. அருட் பெருஞ்ஜோதி அகவல் (ஆறாந்திருமுறை-பாடல்-4)

(1596 வரிகள் கொண்ட அகவலில் முதல் 30 வரிகள் மட்டும்)
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி
அருட்சிவ நெறிசார் அருட்பெருநிø வாழ்
அருட்சிவ பதியாம் அருட்பெருஞ்ஜோதி
ஆகமமுடிமேல் ஆரண முடிமேல்
ஆகநின்று ஓங்கிய அருட்பெஞ்ஜோதி
இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய அருட்பெருஞ்ஜோதி
ஈனம் இன் நிகபரத்து இரண்டின்மேற் பொருளாய்
ஆனலின்(று) ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி

உரை மனம் கந்த ஒருபெரு வெளிமேல்
அரைசு செய்து ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி
ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்
ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்ஜோதி
எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்தி என்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி
ஏறா நிலைமிசை ஏற்றி என்தனக்கே
ஆறாறு காட்டிய அருட்பெருஞ்ஜோதி
ஐயமும் திரிபும் அறுத்து எனது உம்பினுள்
ஐயமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி

ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை
அன்றென விளங்கிய அருட்பெருஞ்ஜோதி
ஓதாது உணர்ந்திட ஒளிஅளித்து எனக்கே
ஆதாரமாகிய அருட்பெருஞ்ஜோதி
ஒளிவியம் ஆதிஓர் ஆறுந் தவிர்த்தபேர்
அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி
திருநிலைத் தனிவெளி சிவவெளி எனும்ஓர்
அருள்வெளிப் பதிவளர் அருட்பெருஞ்ஜோதி
சுத்த சன்மார்க்க சுகத்தனி வெளிஎனும்
அத்தகைச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

(அகவல் தொடரும்)

9. நான் என் பிறந்தேன் (ஆறாந்திருமுறை-பாடல் 47)

விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது
விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்
அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்
அலைந்தலைந்து மெலிந்துரும் பதனின் மிகத் துரும்பேன்
கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்
கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
களக்கறியாய் புவியிடைநான் ஏன் பிறந்தேன் அந்தோ
கருணைநடத் தரசேநின் கருத்தைஅறி யேனே.

10. தற்சுதந்தரம் இன்மை:(ஆறாந்திருமுறை பாடல் 162)

பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால்!
பணிகின்றேன் பதியே நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால்!
குழைகின்றேன் குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால்!
உறங்குகின்றேன் உறங்கா தென்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச்!
சிறியேனால் ஆவதென்னே!

11. பிள்ளைப் பெருவிண்ணப்பம் (ஆறாந்திருமுறை பாடல் 234)

எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே
இலகிய இறைவனே உலகில்
பட்டினி உற்றோர் பசித்தனர் களையால்
பரதவித் கின்றனர் என்றே
ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம்
உளம்பகீர் எனநடுக் குற்றேன்
இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய்
என்னுளம் நடுங்குவ தியல்பே

12. பிள்ளைப் பெருவிண்ணப்பம் (ஆறாந்திருமுறை பாடல் 264)

கையுற வீசி நடப்பதை நாணிக்
கைகளைக் கட்டியே நடந்தேன்
மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால்
மெய்எலாம் ஐயகோ மறைத்தேன்
வையமேல் பிறர்தங் கோலமும் நடையும்
வண்ணமும் அண்ணலே சிறிதும்
பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப்
பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்.

13. பிள்ளைப் பெருவிண்ணப்பம் (ஆறாந்திருமுறை பாடல்-274)

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துநின் றோர்என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்
சிளைத்தவர் துமைக் கண்டே இளைத்தேன்.

14. சுத்த சன்மார்க்க வேண்டுகோள் (ஆறாந்திருமுறை-பாடல் 346)

அப்பாநான் வேண்டுதல் கேட் டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே!

15. அபயத்திறன் (ஆறாந்திருமுறை பாடல்-431)

புண்படா உடம்பும் புரைபடா மனமும்
பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
கண்படா திரவும் பகலும் நின் தனையே
கருத்தில் வைத் தேத்து தற் கிசைந்தேன்
உண்பனே எனினும் உடுப்பனே எனினும்
உலகரை நம்பிலேன் எனது
நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே
நம்பிலோன் கைவிடல் எனையே.

16. அருள் விளக்க மாலை (ஆறாந்திருமுறை பாடல் 538)

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்த தண்ணீ ரிடைமலர்ந்த சுகந்த மண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங் காற்றே
மென்காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும்பயனே
ஆடையிலே யெனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே

17. அருள்விளக்க மாலை (ஆறாந்திருமுறை பாடல் 553)

தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
தனித்த நறுந் தேன்பெய்து பசும்பாலுந் தேங்கின்
தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
இனித்த நறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே
அனித்தமறத் திருப்பொதுவில் விளங்கு நடத் தரசே
அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல் அணிந் தருளே.

18. அருட்ஜோதி நிலை (ஆறாந்திருமுறை பாடல்- 737)

அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்டுபாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்

19. திருநடப் புகழ்ச்சி (ஆறாந்திருமுறை -பாடல் 785)

பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில் பூ மாலை
அணிந்தறியேன் மனம்உருகக் கண்களின்நீர் பெருக
அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும்
தான் அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
துணிந்தெனக்கும் கருணை செய்த துரையேஎன் உளத்தே
சுத்த நடம் புரிகின்ற சித்தசிகா மணியே.

20. சன்மார்க்க நிலை (ஆறாந்திருமுறை பாடல் 1019-1023)

கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக
அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க-தெருள்நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்
தெல்லோரும் வாழ்க இசைந்து...... (1019)

நல் லாரும் என்னை நயந்தாரும் நன்மைசொல
வல்லாரும் என்னை வளர்த் தாரும் எல்லாரும்
நீஎன் றிருக்கின்றேன் நின்மலனே நீ பெற்ற
சேய் என் றிருக்கின்றேன் சேர்ந்து...... (1023)

21. உற்றது உரைத்தல் (ஆறாந்திருமுறை பாடல் 1273)

அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து
இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்
தடைவித் திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்
திடுதற் கென்றே எனை இந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன்
அருளைப் பெற்றேனே.

22. சற்குருமணி மாலை (ஆறாந்திருமுறை பாடல் 1376)

மாற்றறி யாதசெ ழும்பசும் பொன்னே
மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே
கூற்றறி யாதபெ ருந்தவர் உள்ளக்
கோயில் இருந்த குணம்பெருங் குன்றே
வேற்றறி யாத சிற் றம்பலக் கனியே
விச்சையில் வல்லவர் மெச்சுவி ருந்தே
சாற்றறி யாதஎன் சாற்றுங் களித்தாய்
தனிநட ராஜன்என் சற்குரு மணியே.

23. தத்துவ வெற்றி (ஆறாந்திருமுறை-பாடல் 1402)

மனம் எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
மற்றவர்போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
இருந்திடு நீ என்சொல்வழி ஏற்றிலை ஆ னாலோ
தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
நனவில் எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.

24. புனித குலம் பெறுமாறு புகலல் (ஆறாந்திருமுறை பாடல் 1473)

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சத் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலை கின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழு கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே ஞான
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.

25. ஞானசரியை (ஆறாந்திருமுறை பாடல் 1530)

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந் தன்யே
நிறைந்து நிறைந்து ஊற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு
நனைந்து நனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத் தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும் நாம் வம்யின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.

26. தனித்திரு அலங்கல் (ஆறாந்திருமுறை பாடல் 1616)

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தைமிக விழைந்த தாலோ

27. தனித்திரு அலங்கல் (ஆறாந்திருமுறை பாடல் 1737)

தூக்கமும் துயரமும் அச்சமும் இடரும்
தெலைந்தன தொலைந்தன எனைவிட்டே
ஏக்கமும் வினையும் மாயையும் இருளும்
இரிந்தன ஒழிந்தன முழுதும்
ஆக்கமும் அருளும் அறிவும்மெய் அன்பும்
அழிவுறா உடம்பும்மெய் இன்ப
ஊக்கமும் எனையே உற்றன உலகீர்
உண்மை இவ் வாசகம் உணர்மின்.

28. அக்கச்சி (ஆறாந்திருமுறை பாடல்கள் 2211-2214)

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில்குயில் ஆச்சுதடி-அக்கச்சி
மயில்குயில் ஆச்சுதடி 2211

துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
வள்ளலைக் கண்டேன டி அக்கச்சி
வள்ளலைக் கண்டேன டி 2212

சாதி சமயச் சழக்கைவிட் டேன் அருட்
ஜோதியைக் கண்டேன டி அக்கச்சி
ஜோதியைக் கண்டேன டி 2213

பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும்
ஐயரைக் கண்டேன டி அக்கச்சி
ஐயரைக் கண்டேன டி 2214

29 அனுபவ மாலை (ஆறாந்திருமுறை பாடல் 2537)

சரியை நிலை நான்கும் ஒரு கிரியை நிலை நான்கும்
தனியோக நிலைநான்கும் தனித்தனி கண் டறிந்தேன்
உரியசிவ ஞானநிலை நான்கும் அருள் ஒளியால்
ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
ஆறந்த நிலை அறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
பெற்றேன் இங் கிறவாமை உற்றேன் காண் தோழி.

30. ஜோதி ஜோதி ஜோதி (ஆறாந்திருமுறை பாடல்கள் 2551-2553)

ஜோதி ஜோதி ஜோதி சுயம்
ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்
வாம ஜோதி  சோம  ஜோதி
வான ஜோதி ஞான ஜோதி
மாக ஜோதி யோக ஜோதி
வாத ஜோதி நாத ஜோதி
ஏம ஜோதி வியோம ஜோதி
ஏறு ஜோதி வீறு ஜோதி
ஏக ஜோதி ஏக ஜோதி
ஏக ஜோதி ஏக ஜோதி

ஆதி நீதி வேத னே
ஆடல் நீடு பாத   னே
வாதி ஞான போத னே
வாழ்க வாழ்க நாத னே!

சுத்த சன்மார்க்க விண்ணப்பம்

எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!
இது தொடங்கிய எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின்
முக்கிய தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள்
என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம்,
ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள்
மனதில் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியாமகிய ஆன்ம
நேய ஒருமைப் பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும்
எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் விலகாமல் நிறைந்து
விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும்.

எல்லாமாகிய தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவரே! தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு
வந்தனம்! வந்தனம்!

மகாமந்திரம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar