|
மந்த்ரராசிஸ்து யோ தைத்யே பூர்வமாசீத் வராஹ்ருதஹ ஸ ஏவ தேஜோ ரூபேண தேவிதேஹே விவேச ஹ
சர்வ மந்த்ரமயீ தஸ்மாத் துர்கா தேவி பிரகீர்த்திதா துர்காமாசுர சம்ஹார காரணாத் யுதி ஸா சுரைஹி
பொழிப்புரை: முன்பு அசுரன் துர்கமனிடம் வரத்தால் சேர்க்கப்பட்ட மந்திரங்களின் கூட்டமே ஒளிமயமாக தேவியின் சரீரத்தில் பிரவேசித்தது. அதனால் சர்வ மந்த்ர மயீ எனவும் துர்கமனைக் கொன்று அனைவரின் துக்கத்தைப் போக்கியதால் துர்கை எனவும் தேவர்களால் புகழப்படுகிறாள்.
துர்கை என்ற பெயர் அம்பிகைக்கு ஏன் வந்தது? உருவம் அற்ற பரப்பிரமம் உயிர்களைக் காப்பாற்ற, அசுரர்களுடன் போரிட உருவத்துடன் வந்தாள். எப்படி? ருத்ராட்ச மாலை, கோடாலி, கதை, பாணம், வஜ்ரம், தாமரை மலர்... என பதினெட்டு கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து, அனைத்து தேவர்களின் சக்தியும் ஒருமித்த பராசக்தியாகத் தோன்றினாள்.
காரணம்- அசுரர், மனிதர், அந்தணர், மகரிஷிகள் மற்றும் எல்லோரிடத்திலும் உள்ள எல்லா மந்திரங்களும் என்னை வந்து அடையவேண்டும் என்ற வரம் பெற்றவன் துர்கமன். அதன் விளைவு, மந்திரங்களை மறந்து எல்லோரும் எல்லா கர்மாக்களையும் விட்டுவிட்டனர். ஜபம், ஹோமம் இவை இல்லாததால் தேவர்கள் வீரியம் இழந்தனர். வேள்விகள் இல்லாததால் உலகில் மழையில்லை. இதனால் பசுக்கள், கால்நடைகள் முதலியனவும் நசித்தன. காடும் காட்டு மிருகங்களும் குறைந்தன. நீர்நிலைகள் வறண்டன. இந்த பஞ்சம் நூறு ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.
எனவே, ஆபத்துகளைப் போக்கும் பரதேவதையான ஜகன்மாதாவைத் துதித்தனர். ஜகன்மாதா அவர்கள் முன் தோன்றினாள். பஞ்சத்தையும் தேவர்களின் நிலையையும் கண்டு வருந்திய தேவி, ஒன்பது இரவுகள் தன் கணக்கற்ற கண்களில் இருந்து இடைவிடாது கண்ணீர் சொரிந்தாள். கண்ணீர் தாரையினாலேயே உலகத்தை பஞ்சத்தில் இருந்து விடுவித்தாள். இதனால் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் எல்லாரும் இழந்த வீரியம், பலம், புஷ்டி இவற்றை திரும்பப் பெற்று மகிழ்ந்தனர். இவர்கள் பலம் விருந்தியானதை அறிந்தான் துர்கமன்.
சும்மா விடுவானா? தேவர்களையும் ரிஷிகளையும் கொல்லும் பொருட்டு ஆயிரம் அக்ரோணி சேனையுடன் பலம் மிக்க சேனாதிபதிகளுடன் படை எடுத்து வந்தான். தேவர்களோ அம்பிகையைச் சரண் அடைந்தனர். வஹ்னி மண்டலமான நெருப்புப் பிராகாரத்தை அன்னை அமைத்தாள். அதற்குள்ளே தேவர்களை சுகமாகத் தங்கச் செய்தாள். வெளியே தான் இருந்துகொண்டு துர்கமனுடன் அதிபயங்கரமாகப் போரிட்டாள். வில்லினின்றும் ஒரே சமயத்தில் ஐந்து பாணங்களை துர்கமன் மீது ஏவினாள். அதில் அவன் பஞ்சப் பிராணனையும் இழந்து பூமியில் விழுந்து மடிந்தான். அப்போது அவன் சரீரத்தில் இருந்து அவன் அடைந்திருந்த மந்திரங்கள் அனைத்தும் ஒரு பெரும் ஒளியாக வெளிப்பட்டு ஜகன்மாதாவின் சரீரத்தில் பிரவேசித்தன. இதனால், சர்வ மந்திரமயீ என்றும் போற்றப்பட்டாள் அம்பிகை.
துர்கம் என்றால் கோட்டை என்று அர்த்தம். நெருப்புக் கோட்டை அமைத்து தேவர்களைக் காத்தாள் அந்த தயாசாகரி! துர்கமாசுரனை அழித்து சகல ஜீவர்களின் துக்கத்தைப் போக்கிய அந்த ஆத்தாளை, அண்டம் எல்லாம் பூத்தாளை துர்கா என எல்லோரும் போற்றிக் கொண்டாடினர். |
|
|