|
வைணவர்கள் போற்றுகின்ற தமிழின் வேதம் வகையுடனே நாதமுனிப் பெரியார் ஈந்தார் கணவரையே தொழுகின்ற மனையாள் போன்று கவனமுடன் வைணவர்கள் தொழுவர் நாளும் மணமான பின்னர்தான் மங்கைக் கேற்றம் மண்தன்னில் பிறந்தாலே வைணவன் ஏற்றம் வணங்கியேதான் கற்கின்றார் ஆழ்வார் பாடல் வான்புகழும் பெறுகின்றார் அதனால் தானே!
வான்புகழைத் தருகின்ற நூலைத் தந்த வன்தொண்டர் நாதமுனி உள்ளத் தாசை தேனான அவர்சீடர் மணக்கால் நம்பி தம் மனதில் உறுதியுடன் ஏற்றார் நன்கு கோன்வாழ்வு வாழ்கின்ற அவரின் பேரன் கோதிலாத யாமுனரின் இல்லம் சென்றார் தானாக நாள்தோறும் உண்ணும் கீரை தூதுளங்கீ ரையாலே அவரை ஈர்த்தார்.
பாட்டனாரின் சொத்தான திருமால் பற்றை பாங்குடனே அவரேற்கச் செய்தார் பாரீர்! வேட்கையுடன் திருவரங்கம் வந்த வள்ளல் வேதநிகர் பிரபந்தம் வளர்த்தார் நன்கு தேட்டமுடன் காஞ்சிக்குச் சென்ற நாளில் தேர்ந்திட்டார் ஆம்முதல்வன் இவரே யென்று கோட்டமிலா உடையவரை: அதனால் இன்று கொடிகட்டிப் பறக்கிறது கருடக் கொடியே!
பங்கமிலா இராமானநு ஜரையே தந்து பாரதமே மேன்மையுறச் செய்தார் காணீர்! தங்கமான யாமுனரை, சோழ நாட்டின் தாய்போன்ற கோப்பெருந்தே விசொன்ன வார்த்தை
எங்களையே ஆளவந்தார் என்ற தாலே ஏற்றமிகு வைணவரும் அதனை யேற்று பொங்குகின்ற பரிவுடனே நாளும் சொல்வர் புனிதமான வைணவத்தை ஆளவந்தீரே! |
|
|