|
ஸ்ரீசைதன்ய மகாபிரபு அருளியது..
சேதோ தர்ப்பண மார்ஜனம் பவமஹாதாவாக்னி நிர்வாபணம் ச்ரேய: கைரவசந்த்ரிகா விதரணம் வித்யாவதூ ஜீவனம் ஆனந்தாம்புதி வர்த்தனம் ப்ரதிபதம் பூர்ணாம்ருதாஸ்வாதனம் ஸர்வாத்மஸ்னபனம் பரம் விஜயதே ஸ்ரீக்ருஷ்ண ஸங்கீர்த்தனம்
ஸ்ரீகிருஷ்ண நாம சங்கீர்த்தனம் மனமெனும் கண்ணாடியின் அழுக்கைத் துடைக்கிறது; சம்சார நெருப்பை அணைக்கிறது; நன்மைகள் நிறைந்த பூரணச் சந்திரனின் கிரணங்களை எல்லா உயிரினங்களின் மீதும் வீசுகிறது.
வித்யா என்ற மணமகளுக்கு வாழ்வளிக்கிறது (கல்விக்குச் சிறப்பைச் சேர்க்கிறது). ஒவ்வொருவரின் உள்ளே இருக்கும் ஆனந்த சாகரத்தை விரிவாக்குகிறது. நாமத்தின் ஒவ்வொரு சொல்லும் அமிர்தமாக நம் ஆன்மாவை நிறைக்கிறது.
நாம்னாமகாரி பஹுதா நிஜஸர்வ சக்தி: தத்ரார்ப்பிதா நியமித: ஸ்மரணே ந கால: ஏதாத்ருசீ தவ க்ருபா பகவன் மமாபி துர்தேவமீத்ருசம் இஹாஜனி நானுராக:
உன்னை அழைக்க தெய்விக சக்தியுள்ள பல நாமங்களை அருளியுள்ளாய். அந்த நாமங்க ளைக் கூற விதிமுறை என எதுவுமில்லை. குறிப்பிட்ட நேரம் என்றில்லை. உன் கருணை இவ்வாறிருக்க நானோ உன் நாமத்தை நினைக்கவும் ஜபிக்கவும் மறக்கும் துரதிர்ஷ்டசாலியாக உள்ளேன்.
த்ருணாதபி ஸுநீசேன தரோரபி ஸஹிஷ்ணுனா அமானினா மானதேன கீர்த்தனீய: ஸதாஹரி:
ஹரி நாமம் கூறும் பாகவதன் ஒரு புல்லைவிட எளியவனாகவும், மரத்தைவிட சகிப்புத் தன்மை கொண்டவனாகவும் இருக்க வேண்டும். அவன் புகழை விரும்பாதவனாக, எல்லா உயிர்களை யும் போற்றுபவனாக இருக்க வேண்டும்.
ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம் கவிதாம் வா ஜகதீச காமயே மம ஜன்மனி ஜன்மனீச்வரே பவதாத் பக்திரஹைதுகீ த்வயி
ஜகதீஸ்வரா! செல்வம், சீடர்கள், அழகிகள், கவிதைகள் என எதையும் நான் விரும்பவில்லை. எனது எல்லாப் பிறவிகளிலும், உன்னிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பக்தி கொண்டவனாக்குவாய். அயி நந்ததனுஜ கிங்கரம் பதிதம்
மாம் விஷமே பவாம்புதௌ க்ருபயா தவ பாதபஞ்கஜஸ்தித தூலீஸத்ருசம் விசிந்தய
நந்தகுமாரா, உங்களது சேவகனான நான் பயங்கர மான சம்சாரக் கடலில் விழுந்துவிட்டேன். உங்களது பாதத்தூசியாகக் கருதி என்னைக் காத்தருளுங்கள்.
நயனம் கலதச்ருதாரயா வதனம் கத்கதருத்தயா கிரா புலகைர்நிசிதம் வபு: கதா தவ நாமக்ரஹணே பவிஷ்யதி
உன் நாமத்தைச் சொன்னவுடன் எப்போது என் கண்களில் நீர் பெருகி முகத்தை நனைக்குமோ! பக்தியால் என் வார்த்தை தடுமாறி, உடம்பெங்கும் புளகாங்கிதம் அடையும் நிலைகளை நான் எப்போது அடைவேன்!
யுகாயிதம் நிமேஷேண சக்ஷுரப்ராவ்ருஷாயிதம் சூன்யாயிதம் ஜகத் ஸர்வம் கோவிந்த விரஹேணமே
உன்னைப் பிரிந்திருக்கும் ஒவ்வொரு கணமும் எனக்கு ஒரு யுகம்! என் கண்கள் கனத்த மழை மேகங்களாகி, நீரைப் பொழிகின்றனவே! உலகமே வெறுமையாய்த் தோன்றுகிறதே!
ஆசிலஷ்ய வா பாதரதாம் பிநஷ்டு மாம் அதர்சனான் மர்மஹதாம் கரோது வா யதா ததா வா விததாது லம்பட: மத் ப்ராண நாதஸ்து ஸ ஏவ நாபர: ஸ்ரீகிருஷ்ண கோவிந்த ஹரே முராரே ஹே நாத நாராயண வாஸுதேவ அவன் (பகவான்) என்னை அணைத்துக் கொண்டாலும், என்னிடமிருந்து விலகி எனக்குத் தீவிர துன்பத்தைத் தந்தாலும், எந்த விதமாக என்னை நடத்தினாலும், அவனே என் பிராணநாதன். அவனே என் உயிர், அவனைத் தவிர வேறு எவரும் இவ்வுலகில் எனக்கில்லை.
|
|
|