|
எழுகதிர்போல் மனங்கவரும் ஏழுமலை யானே! இருள்நீக்கி அருள் ஒளியை வழங்கிடவந் தானே. கழுபிணியால் உழல்வோரின் கண்ணீரைத் துடைப்பான்; கனத்தோடு தனமீந்து கனிவாழ்வு கொடுப்பான்; எழுபிறவி எடுத்துழன்று இன்னலுற வேண்டாம்; ஏழுமலை இருக்கையிலே அஞ்சிடவும் வேண்டாம். எழுமலையே எழில்மலையே வாழ்விக்கும் மலையே. ஏழைபங்கி லிருப்பவனை வணங்கிடுவாய் தலையே.
தலையே நீ வணங்கிடவே அவன் எனக்குக் கொடுத்தான் தருமத்தைக் காத்திடவே அவதாரம் எடுத்தான் மலையே போல் வருந்துயரே பனிபோல நீங்கும்; மணிவண்ணா என அழைத்தால் அவன் கரங்கள் தாங்கும் அலையே போல் ஒன்றன்பின் ஒன்றாகச் சேரும்: அலைமகளே கண் திறப்பாள் உன்வறுமை தீரும் கலையே தான் அறுபத்து நான்கு கற்ற போதும் கமலபாதம் தொழவிலையேல் வினைவிடாதெப் போதும்.
ஏழுமலை யிருக்க எனக் கென்னமனக் கவலை எல்லாமே தந்தருள்வான் என்னையாட் கொள்வான். வாழுவழி காட்டிதிரு மலைக்குவழி காட்டி வாவென்றே அழைத்திடுவான் காட்சியும்தந் தருள்வான் ஊழைவெல்லும் பலம் தருவான்; உயர்கதியும் தருவான் உத்தமனே நித்தநித்தம் உளமிருக்க வருவான் வாழையடி வாழையென வாழ்விப்பான் குலத்தை வடமலையில் வாழ்பவனே வழங்கிடுவான் நலத்தை
ஏழுமலைக் கரசே என் விண்ணப்பம் கேட்பாய் எந்நாளும் உன்னெழிலைக் காணவரம் அருள்வாய், ஏழுபிற விஎடுத்தே இதயத்தில் வைத்தே இன்பகீதம் பாடிடுவேன் மனம் மலர்வேன் வருவாய் வாழவழி காட்டும் என் மலையப்பா, என்றும் வாடாத நிலைதந்து வளமெனும் தேன் தருவாய் பாழுமிந்தப் பிறவியெனும் பெருங்கடலைக் கடக்க பங்கயப்பூப் பதம் தாராய் நின் சரண் புகுந்தேன். |
|
|