|
விலங்குகளில் ராஜா சிங்கம். அதைக்கண்டு அச்சம் கொள்ளாத விலங்குகளும், ஏன் மனிதரும் கூட உண்டோ? தன் பக்தன் பிரகலாதனுக்காக, சிங்க முகமும், மனித உடலும் கொண்டு சந்தியா காலத்தில் அவன் சுட்டிக் காட்டிய தூணில் அவதரித்த பெருமான் நரசிங்கப்பிரான். உக்ரரூபியாய் ஹிரணியன் வயிற்றைக் கிழித்து, அவனை சம்ஹரித்த நரசிம்மப்பெருமானைக் கண்டு தேவர்களும் அங்கிருந்தோரும் அஞ்சி நடுங்கினர். ஆனால், அவர் முன் தைரியத்துடனும் வாஞ்சையுடனும் முன் நின்றான் பக்த பிரகலாதன். பிரகலாதனைக் கண்ட உடன் அவரின் உக்ரம் தணிந்தது.
ஆம்! உக்ரம் வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வேதாமுகம்; ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யோர் ம்ருத்யும் நமாம்யஹம் என்று அவரைத் துதித்துப் போற்றினால் நம்மில் இருக்கும் பயம் நீங்கும். அபயம் அளிப்பார் சிங்கப்பெருமான். சிங்கப்பெருமானின் பன்னிரு நாமங்கள் அடங்கிய த்வாதச நாம ஸ்தோத்திரம், பெருமாளின் அருளை பூரணமாகத் தர வல்லது. அந்த சுலோகம் இதுதான்..
ப்ரதமஸ்து மஹாஜ்வாலோ த்வதீயஸ்து உக்ரகேஸரீ த்ரிதீயாது வஜ்ர தம்ஷ்ட்ரா சதுர்தோது விசாரதா பஞ்சமம் ந்ருஸிம்ஹச்ச ஷஷ்டகாஸ்ய மர்தன ஸப்தமோயாது ஹந்தாச அஷ்டபோ தேவவல்லபோ நவம ப்ரஹ்லாத வரதோ தசமோ அனந்த ஹஸ்தக ஏகாதசோ மஹாரௌத்ரோ தசமோ தருணஸ்ததா
இதே ச்லோகத்தை சுலபமாக மனனம் செய்து கீழ்க்காணும் வகையிலும் சொல்லலாம்.
மஹா ஜ்வாலோ, உக்ர கேஸரீ, வஜ்ர தம்ஷ்ட்ரா, விசாரதா, நாரஸிம் ஹம்ச, காஸ்யப மர்தன, யாது ஹந்தாச, தேவ வல்லபோ, ப்ரஹ்லாத வரதோ, அனந்த ஹஸ்தகோ, மஹா ரௌத்ரோ, தருணஸ்ததா.
இதன் பொருள் முறையே:
1. ஒளிப் பிழம்பானவர், 2. சீறும் சிங்கம், 3. வைரம் போன்ற பளிரீடும் பற்கள், 4. எல்லாம் வல்ல இறைவன், 5. மனிதனும் சிங்கமுமானவர், 6. காச்யப முனிவரின் மகன் ஹிரண்ய கசிபுவைக் கொன்றவர். 7. அரக்கர்களை மாய்த்தவர், 8. தேவர்களுக்கெல்லாம் அதிபதி, 9. ப்ரஹ்லாதனுக்கு பிரத்யக்ஷமானவர், 10. முடிவில்லாத கைகளை உடையவர், 11. கோபமுள்ள குணக்குன்று, 12. எல்லாவற்றிலும் மேலாக கண நேரத்தில் (நொடியில்) வந்து உதவுபவர். |
|
|