|
மதுரையை ஆட்சி செய்த கூன் பாண்டியன் ஒரு சமயம் வெப்பு நோயால் பாதிக்கப்பட்டுத் தவித்தான். அப்போது அவன் பின்பற்றிய சமண மதத்தினர் சொன்ன மந்திரங்களாலும் பலரும் அளித்த வைத்தியத்தாலும் பலன் எதுவும் கிட்டாது வருந்தினான். அந்த சமயத்தில் ஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகம் என்ற துதியைப்பாடி, சிவபெருமானின் திருநீற்றுப் பிரசாதத்தில் சிறிதினை மன்னனின் வயிற்றில் பூசினார். அடுத்த கணமே, அரசனின் வெப்புநோய் விலகி, வெம்மை தணிந்து, குளுமை நிறைந்தது. மகிழ்ந்த அம்மன்னன், உடனடியாக சைவத்திற்குத் திரும்பினான் என்கிறது வரலாறு.
உஷ்ணம் அதிகரிப்பதால் வரும் வயிற்று நோய், கொப்புளம் உள்ளிட்ட வெப்பநோய்களும், தொற்று நோய்களான காய்ச்சல் முதலியனவும் குணமாகச் சொல்ல வேண்டியது திருநீற்றுப் பதிகம். அதே சமயம், உயர்வான அந்த திருநீற்றுப் பதிகத்தைச் சொல்வதால் வாட்டும் பிணி எதுவானாலும் நிச்சயம் நீங்கும்.
முறையாக விபூதி தரித்து, பூரண நம்பிக்கையுடன் தினமும் இதைச் சொல்லிவந்தால் முழுமையான ஆரோக்யம் கிட்டும். பிணியால் பாதிக்கப் பட்டவருக்காக அவரது உறவினர்களும் சொல்லலாம். சிறிது விபூதியை சுவாமி முன் வைத்து, இந்தப் பதிகத்தை ஓதியபின் அந்த விபூதியை, பாதிக்கப்பட்டவர்க்குப் பூசிவிடுவதாலும் பலன் கிடைக்கும்.
திருநீற்றுப் பதிகம்:
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதம் தருவது நீறு புன்மை தீர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு சீதப் புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு பேச இனியது நீறு பெருந்தவத்தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருஆலவாயான் திருநீறே.
அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் திருஆலவாயான் திருநீறே.
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு அராவணங்கும் திரு மேனி ஆலவாயான் திருநீறே.
மாலொடு அயனறியாத வண்ணமும் <உள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு ஆலமது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக் கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆலவாயான் திருநீறே.
ஆற்றல் அடல்விடையேறும் ஆல வாயான் திரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றித் தென்னனுடல் உற்ற தீப்பிணியாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே! |
|
|