|
பொதுவாகவே அபிராமி அந்தாதி துதியினைச் சொல்வதும் கேட்பதும் கோரிய வரம் கிட்டச் செய்யும் என்பது ஆன்றோர் வாக்கு. நூறு பாடல்கள் உள்ள அந்த அந்தாதியில் ஒவ்வொரு குறிப்பிட்ட பதிகத்திற்கும் தனித்தனி பலன் உண்டு என்பார்கள். அந்த வகையில் அபிராமி அந்தாதியில் உள்ள ஆயுளும் ஆரோக்யமும் காத்திடும் அற்புத துதிகள் இவை.
மரணபயம் நீங்கிடச் சொல்ல வேண்டிய துதி:
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளி நிற்கவே.
உடலை வாட்டும் பிணிகள் விலகிட:
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப் பிணியே, பிணக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே. பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.
இனம்புரியாத மனநோய்கள் அகல:
உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கை யெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை, சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே.
பயணம் பத்திரமாக இருக்க, விபத்தினால் ஏற்பட்ட உடல் நலிவுகள் தீர:
அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய், கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.
அகால மரணம் தவிர்த்து ஆயுள் நீடிக்க:
ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர் பாகத்து நேரிழையே.
மரணபயம் நீங்கிட:
இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.
உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மருகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே |
|
|