|
திருவள்ளூரில் எம்பிரான் வைத்தியவீரராகவப் பெருமாள் என்ற திருநாமத்துடனேயே எழுந்தருளி இருக்கிறார். வைத்திய வீரராகவரை தரிசிப்பது எல்லா பிணிகளையும் தீர்க்கும் என்பது அனுபவ பூர்வமான உண்மை. ராமலிங்க வள்ளலார், தீராத வயிற்று நோயால் வாடியபோது, இங்கேவந்து எம்பெருமானை தரிசித்தே தமது நோய் நீங்கப்பெற்றார். அப்போது அவர் பாடிய இந்தத் துதியைச் சொல்வதால், எத்தகைய பிணியும் தீரும். குறிப்பாக வெப்பநோய்களும், வயிற்று உபாதைகளும் விலகி ஓடி, உடல்நலம் சீராகும் என்பது நிச்சயம்.
திருஎவ்வுளூர் வீரராகவன் போற்றிப் பஞ்சகம்:
தண்ணமர் மதியே சாந்தந் தழைத்த சத்துவனே போற்றி
வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி
அண்ணலே எவ்வுள்ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
விண்ணவர் முதல்வா போற்றி வீர ராகவனே போற்றி
பாண்டவர் தூதனாகப் பலித்தருள் பரனே போற்றி
நீண்டவனேன்ன வேதம் நிகழ்த்தும் மாநிதியே போற்றி
தூண்டலில்லாமல் ஓங்கும் ஜோதிநல் விளக்கே போற்றி
வேண்டவர் எவ்வுள்ளூவர்வாழ் வீர ராகவனே போற்றி
மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி
கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
ஓதிய எவ்வுள்ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி
வேதியன் தன்னை ஈன்ற வீர ராகவனே போற்றி!
இளங்கொடி தனைக்கொண்டேகும் இராவணன் தனையழித்தே
களங்கமில் விபீடணர்க்குக் கனவரசளித்தாய் போற்றி
துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி
விளங்குநல் எவ்வுள்ளூர்வாழ் வீர ராகவனே போற்றி
அற்புதத் திருவை மார்பில் அணைத்த பேரழகா போற்றி!
பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி!
வற்புறு பிணிதீர்த்து என்னை மகிழ்வித்த வரதா போற்றி
வெற்புயர் எவ்வுள்ளூர்வாழ் வீர ராகவனே போற்றி |
|
|