|
(சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளியது)
காப்பு வெண்பா
சிரவை நகர்ப் பத்திரகாளித் தாய்கண் பரவை முழுக்காடப் பண்ணும் -வரவை- பவத் துதிப்பாட்டு ஓதிடநாம் பற்றுதுணை உண்மைத் தவத்து உதிப்பாட்டு ஆற்றுகுரு தாள்.
நூல்
எழுசீர் விருத்தம்
1. சிலைபொலி நுதல்மத் தியில் அவிர் செங்கேழ்த் திலகம் உற்று அணிபரந்து அமைவான் கலைபொலி முகமும், கருணைதோய் விழியும், கவின்றமே கலைகொள் சிற்றிடையும் நிலைபொலி உள்ளம் உருக்கி, ஆனந்தம் நிறைபதத்து அணிந்தநூ புரக்கம்- பலைபொலி காட்சி அருள்! சிர வணவூர்ப் பத்திர காளிஎம் தாயே!
2. சூத்திரம் கோள்மாற் சரியம் ஆதிய துற் குணம் பொலி துட்டர்தம் பாவ வத்திரம் தனைநேர் நோக்கிடாது, உனது மங்கள வடிவம் உள்க் கருதி, சித்திரம் என்ன அசைகிலாது அமைமெய்த் தியான மாதவப்பயன் பொருத்திப் பத்திரப் படுத்தி ஆள்! சிர வணவூர்ப் பத்திர காளிஎம் தாயே!
3. பூத்திரள் எடுத்துத் தொடையல்செய்து அன்பில் புனைந்து நின் தெய்விகக்கோலம் நேத்திரம் கண்டுஉள் உருகி ஆனந்த நீர்ப்பெருக்கு அமைந்துநின் புகழைத் தோத்திரம் புரிந்துஇவ் வுலகுஉளார் தம்மைத் தொண்டு உவந் தியற்றிடும் நிலைச்சற் பாத்திரர் ஆகப் புரி! சிர வணவூர்ப் பத்திர காளிஎம் தாயே!
4. சீவர்கள் தம்மைப் பிணம்எனப் புரிந்தும், திருவருள் வடிவம்ஏற்று அமைந்த தேவரைப் பேய்கள் ஆக்கியும், சாந்நித்- தியம்பெறு புண்ணியக் கோயில் ஆவதை இடுகாடாச் செயற்கு ஒரு சற்று அஞ்சிடா அரக்கரை நமன்ஊர்ப் பாவம் ஆர் நரகு ஆழ்த்துதி! சிர வணவூர்ப் பத்திர காளிஎம் தாயே!
5. வந்தனை புரியும் தொண்டர்கள் காண வந்தனை மனம்பொலி வாஞ்சை தந்தனை என முன்பு உற்றவர் ஓதும் சரிதை கேட்டு உன்சரண் ஆவேன் சிந்தனை களிப்ப உன் அருள் மகிமைத் தெரிசனம் அளித்துஉயர் பேர் இன்- பம்தனை அருள்வாய்! சரண்! சிர வண்வூர்ப் பத்திர காளிஎம் தாயே!
6. தாய்க்குஉப சாரம் புரிந்திடல் உலக சரித்திரத்து இல்லை; நின் அடிமைச் சேய்க்கு உப கரிக்க வேண்டும் என்று உனக்குத் தெரிவித்த லோ அறி யாமை- யாய்க் குல விடும் இங்கு; ஆதலின் உன்னை அன்பில் ஏத் தினன்; அருள்க் குணநீர் பாய்க்குதி தருணம் இதில்! சிர வணவூர்ப் பத்திர காளிஎம் தாயே!
7. சாரம் அற்று, உலகம் தனக்கு உப கரிக்கும் தன்மை அற்று, இயற்கைதோய் புருட தீரம் அற்று, உளத்துஆம் வீரம் அற்று, அவமே திரிந்திட வெட்குவேற்கு இரங்கித் தூரம் அற்று அதிசீக் கிரத்தில் உன் கருணை தோய்ந்திட அருளி, என் போதப் பாரம்அற் றிடச் செய்து ஆள்! சிர வணவூர்ப் பத்திர காளிஎம் தாயே!
8. எள்ளை ஒத்து எனினும் என்நலம் கருதாது, இகத்துஅமை உயிர்த்திரள் ஆம் உன் பிள்ளைகட்கு உள்ளக் கவலை முற்று ஒழித்து உள்ப் பெரிது உவந்து இச்சைதோய் பொருள்கள் கொள்ளை கொள் ளையதாய்க் கொடுத்திட விழைந்தேன்; குணம் எனத் தோன்றில் எற்கு அருள்வாய்! பள்ளையப் பூசை பொலிசிர வணவூர்ப் பத்திர காளிஎம் தாயே!
9. மெச்சு அணி மதுரப் பாக்களால் உன்சீர் வியந்துதுத் தியம்புரி வேற்கு உன் கச்சுஅணி ஞான கனதனத்து உறுபால் களித்துஅளித்து அருள்வையேல் உலகை நச்சுஅணி என்ன வருந்திடும் தீமை நாசம் ஆகிவிடும்; நலம் அனைத்தும் பச்சணி பெற்று ஓங்கிடும்! சிர வணவூர்ப் பத்திர காளிஎம் தாயே!
10. காப்பு உனை அல்லால் மற்றுஇலேன்; என்னைக் கைவிடேல்; கால்மலர் சென்னி மீப்புனைந்து அருள்வாய்; அடைக்கலம்; இன்ப வேலையில் அமைத்தனை ஆள்வாய்; மாப்புனை துவசத் தோடுமிக்கு அன்பில் வாழ்த்திடு கந்தசாமிச்சேய் பாப்புனை அணித்தோ ளாய்! சிர வணவூர்ப் பத்திர காளிஎம் தாயே! |
|
|