|
(சிரவையாதீனம் மூன்றாவது குருமகாசந்நிதானம் உலகப் பெருவேள்வி மாமுனிவர் தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளியது)
(எழுசீர் ஆசிரிய விருத்தம்)
1. திருவளர் கமலம் நிகர்மதி முகமும், செறி அருள் பொழிவிழி மலரும், உருவளர் படைக்கைத் தலங்களும், அடியார்க்கு உகந்தருள் பதமலர் இணையும், வருமயி டாசு ரன்றனைச் செருத்த வண்மையார் சூலமும் கொண்டென் பருவரல் தீரக் காட்சிதா - சிரவைப் பத்திர காளிஎம் தாயே!
2. விண்பர விடுசீர் விமலையே! கமலை விரும்பிநல்ப் பணிசெயும் தேவீ! கண்நுதல்ப் பெருமான் உள்நெகக் கண்டு களிப்புறப் புரிதிரு மயிலே! எண்ணுதல்க் கரிய புகழ்ச்சிறப் படியேன் ஏத்திடப் பாத்திரம் அமையப் பண்ணுவாய் - உனது சரண்சரண் சிரவைப் பத்திர காளிஎம் தாயே!
3. கற்றவர் போற்றும் கற்பகக் கனியே! கவின்திரு வருள்நிறை கடலே! நற்றவத் தினர்தம் அகத்தொளிர் விளக்கே! ஞானபோ னகம்கொள அருளி உற்ற இவ் உலகப் பற்றற உளத்தில் உபயதா மரைஅடி தமக்கே பற்றுறச் சற்றே தயைபுரி - சிரவைப் பத்திர காளிஎம் தாயே!
4. கூடவைத் தனைநல் அடியவர் கூட்டம்; கோயில்கள் தொறும்உனை நேடித் தேடவைத் தனை; உன் தெரிசனம் புறத்தே தெரியவைத் திலை; உன திருதாள் நாடவைத் திரவும் பகலும்நின் நாமம் நவிலவைத் துன்அருள்ப் புகழே பாடவைத் திடுவான் வேண்டினன்; சிரவைப் பத்திர காளி எம் தாயே!
5. வீரமாய் உன்முன வரும்மயி டனைக்கீழ் வீழ்த்தியே வெருண்டிடக் குத்தி கோரமாய்த் தடிந்த தேவி! நீ இன்று கொடுமைசெய் எமதுவல் வினையைத் தீரமாய் ஒடுங்கப் புரிந்திலை; கருணை செய்திலை; எங்களைக் காத்தல் பாரமா? அம்மா! பரிந்தருள்- சிரவைப் பத்திர காளி எம் தாயே!
6. விரிந்தபூஞ் சோலை மேவுசீ காழி மிளிர்திரு ஞானசம் பந்தர் தெரிந்திடத் தோன்றி ஞானம் ஆர் முலைப்பால் தெளிவுறத் தந்தனை; அதனில் வருந்திடும் அடியேம் துயர் அறச் சிறிது வழங்கி, நின் கருணைஅம் கடைக்கண் பரிந்தருள் புரிய வேண்டினன்; சிரவைப் பத்திர காளிஎம் தாயே!
7. சீத்தா மரையில் விளங்கிடும் செம்மைத் திருவுடன் பயில்கலை மாதும் ஆதரத் துடன்போற் றிடும் அடி அடியேன் அகத்தினில் கண்டு, பேர் இன்பம் நீதரப் பெற்றுள் உருகி, ஆ னந்த நிமலவாழ் வுறத்தயை புரிந்து பாததா மரையில் சேர்த்தருள் - சிரவைப் பத்திர காளிஎம் தாயே!
8. இச்சைநா யகன், எம் உளம்கவர் கள்வன், இகபர நலம்தரு குமரன், செச்சைஆர் புயத்துச் செயம்மிகு வேளைச் சேய்எனப் போற்றும்மா தேவி மொச்சைஊண் விரும்பும் விநாயகன் தாயே! முன்றுபட் டீச்சரர் இடம்ஆர் பச்சைநா யகியே! சோலைசூழ் சிரவைப் பத்திர காளிஎம் தாயே!
9. அத்திரம் தாங்கி அரக்கரை மடித்த அம்மையே! செம்மை ஆர் அடியார் துத்தியம் செய்யத் துலங்கிடும் அம்மே! தூயநின் கோயிலின் பணிகள் சித்தசுத் தியுடன் பத்தியாய்ப் புரிவோர் சிறப்பெலாம் பெறத்தயை புரிந்து பத்திரம் பெறக்காத் தாளுவாய் -சிரவைப் பத்திர காளிஎம் தாயே!
10. அணிபொலி கோயில்த் திருப்பணி புரிவோர், அலகொடு திருமெழுக் கிடுவோர், மணி அணிப் பணிகள் செய்தலங் கரிப்போர், மகிழ்வொடு திருவிழாப் புரிவோர், தணிவிலாப் பக்திப் பூசனை செய்வோர், தகுதியி னால்ப்பல வகைஆம் பணியவர்க் கருள்வாய்- தென்னை ஆர் சிரவைப் பத்திர காளிஎம் தாயே!
வாழ்த்து வெண்பா
வாழி சிரவை வளர்பத்ர காளிஉமை! வாழி திருக்கோயில் வண்பணிகள் ! -வாழியவே போற்றும் திருத்தொண்டர் பொற்புடனே பூசிப்போர் சாற்றும்நலம் பெற்றுத் தழைத்து. |
|
|