|
தக்ஷப்ரஜாபதியின் யாகத்தை அழித்த சதிதேவி, பிறகு வேள்வி குண்டத்தில் தன் சரீரத்தை வீழ்த்தினாள். அதனால் அதற்கு கவுரி குண்டம் எனப்பெயர் ஏற்பட்டது. அந்த குண்டத்தினின்று எழுந்த புகை மண்டலமே தூமாவதீ என்ற சக்தியாய் உருவெடுத்தஐ என சாக்த தந்திரங்கள் கூறுகின்றன. இவள் தோன்றிய மாதம் பால்குனம், செவ்வாய்க்கிழமை, அட்சயதிரிதியை, ஸாயங்கால நேரம். இவள், ஸர்வ ஸம்ஹார சஞ்சலா-அனைத்தையும் சம்ஹாரம் செய்யக் கூடிய ஆற்றல் படைத்தவள் என்றும், கருத்த முகம் உடையவள் ஆனதால் காலமுகீ என்றும் போற்றப்படுகிறாள். இவளை ஜ்யேஷ்டா என்றும் கூறுவர். இதுகுறித்த தகவலை நேரடியாக அறிய முடியாவிட்டாலும், தூமாவதீ மந்திரத்தின் தேவதை ஜ்யேஷ்டா, ரிஷி பிப்பலாத மஹரிஷி என்ற தகவலில் இருந்து அனுமானிக்கலாம்.
ஜ்யேஷ்டா என்பவள் லட்சுமி தேவிக்கு முன்பு உதித்தவள். பாற்கடல் கடையும்போது விஷம் வெளிவர, அதை தேவர் வேண்டுகோளுக்கு இணங்கி பகவான் சாப்பிட்டவுடன் கடலிலிருந்து ஜ்யேஷ்டா தோன்றினாள். தேவர்களிடம் தான் என்ன செய்ய வேண்டும் என்று அவள் வினவ, அவர்கள் எவர் வீட்டில் சண்டை நடக்கின்றதோ, அங்கு நீ சுகமாக வாசம் செய். எவர் கொடூரமாய் பேசுகின்றாரோ, பொய் கூறுகிறாரோ, ஸந்த்யா காலத்தில் உணவு உண்ணுகிறார்களோ, அவர்களின் வீட்டில் அவர்களுக்கு துக்கம் கொடு. மண்டை ஓடு, கேசம், சாம்பல், எலும்பு, உமி, நெருப்பு உள்ள இடத்தில் நீ இரு.
பாதங்களைச் சுத்தி செய்து கொள்ளாமல் சாப்பிடுபவர் வீட்டில் துக்கத்தையும் வறுமையையும் கொடு. குரு, தேவர் அதிதிகளுக்கு எங்கு பூஜை நடைபெறவில்லையோ, வேத முழக்கம் எங்கு இல்லையோ அங்கு துக்கமாக நீ இரு. பிறர் மனைவியை விரும்புபவன், பிறர் பொருளை அபகரிப்பவன், நல்லோர்களை வருத்துபவன் இவர்கள் வீட்டில் பாபத்தையும், துன்பத்தையும் அளித்துக் கொண்டு இரு என்று கூறினர்.
இந்த ஜ்யேஷ்ட தேவியே லட்சுமிக்கு மூத்ததேவி. இவளை வழிபட்டால் லட்சுமிகடாட்சம் ஸித்திக்கும் என மஹா விஷ்ணுவானவர் கூறுகிறார்.
எனவே அருவருக்கத்தக்கதாக தோன்றும் இந்த தூமாவதியின் உருவமானது உபாசகர்களால், நல்ல வகையிலேயே நோக்கப்படுகிறது. இந்த தேவியை வழிபட்டால், தீயவர்களுக்கு தீயவை ஏற்படும். அப்படியாயின் தர்மம் நிலைநாட்டப்படும் என்பதை அறிந்து எல்லாம்வல்ல அன்னையை தூமாவதீயாக நினைத்து வழிபடுவோமாக.
ஸ்ரீதூமாவதீ காயத்ரி:
ஓம் தூமாவத்யை வித்மஹே ஸம்ஹாரின்யை தீமஹி தன்னோ தூமா ப்ரசோதயாத்
மூல மந்திரம்:
ஓம் தூமாவத்யை நம: |
|
|